நம் வீட்டு மனிதர்கள் – வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” வாசிப்பனுபவம். -வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

நான் பிலோமி அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். அல்லது, பிலோமி அக்காவைப் போன்ற வேறொரு அக்காவை. முட்டத்தில், என் பதின்ம வயதுகளில். அப்பா கூடப் பிறந்த அத்தை, அப்போது முட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராயிருந்தார். மருத்துவமனை அருகிலேயே வீடு. பள்ளி விடுமுறைகளில் சில வாரங்கள் முட்டத்தில் அத்தையின் குட்டிக் குழந்தைகள் சாய், வித்யாவுடன் விளையாட்டுகளில் கழியும்.

வீட்டிற்கு முன்னால் ஒரு மரமல்லி இருந்தது. எப்போதும் மல்லிகள் மரத்தினடியில் சிதறிக் கிடக்கும். ஒரு விடுமுறையில், சாய், வித்யாவுடன் சிறிய மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் மீன் கூடையுடன் ஒரு அக்கா வாசலுக்கு வந்து நின்று “டாக்டரம்மா” என்று அத்தையைக் கூப்பிட்டார். திரும்பி எங்களைப் பார்த்து சிரித்தார். அத்தை உள்ளிருந்து வந்து, அந்த அக்காவை பேர் சொல்லி கூப்பிட்டு “வந்துட்டியா? உள்ள வா” என்று கூப்பிட்டுப் போனார். அக்கா அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் போல; சாயிக்கும், வித்யாவிற்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. நானும், சாய், வித்யாவும் மீன்களை வேடிக்கை பார்க்க உள்ளே ஓடினோம். “இது விஜயன்; அண்ணன் பையன். லீவுக்கு வந்துருக்கான்” என்று என்னைக்காட்டி சொன்னார் அத்தை. அக்கா கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தார்.

எனக்கு இப்போது முட்டம் நிகழ்வுகள் பெரும்பாலும் கலங்கலாய்த்தான் நினைவிலிருக்கின்றன (ஒருவேளை ஜெனிஃபர் டீச்சரும் கண்ணில் விழுந்திருப்பார்களோ!). அத்தையும், மாமாவும்கூட வெகுநாட்கள் முட்டத்திலில்லை. அத்தை அங்கிருந்து வெள்ளலூருக்கும், நத்தத்திற்கும், அலங்காநல்லூருக்கும் வேலை மாற்றலாகிக் கொண்டிருந்ததால், என் விடுமுறை நாட்களும் அங்கங்கு மாறிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் எந்தப் புத்தகம் படித்தாலும் மனது பின்னோக்கித் திரும்பி, நினைவுகளில் மூழ்கி, வாசிக்கப்படும் வாழ்வுடன் நோஸ்டால்ஜியாவையும் பின்னிவிடுகிறது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருந்த பாமயனின் அபுனைவு நூலான “வேளாண்மையின் விடுதலை” படிக்கும்போதுகூட, மனம் தாத்தாவின் வேளாண்மை கொழித்த கிராமத்து வீட்டிலேயே இருந்தது. கமலையும், மாடுகளும், வேர்க்கடலைக் குவியலும் மனதை நிரப்பித் தளும்பின.

நெய்தலின் நான் படித்த முதல் புத்தகம் குரூஸின் “ஆழி சூழ் உலகு”. அவ்வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமாய் அறிமுகப்படுத்தியிருந்தது. “கடல்புரத்தில்” குறுநாவல்தான்; ஆனால் அந்த மனிதர்கள், அவர்களின் உலகம், அவர்களின் குணம், அவர்களின் பேச்சு… அச்சு அசலானதாய், நானே அருகிலிருந்து பார்ப்பதைப் போலிருந்தது; அதனால்தான் பிலோமி அக்காவைப் பார்த்திருப்பேனோ என்ற பிரமையுண்டானது. இப்புனைவு ஆரம்பமும், முடிவுமில்லாதது; ஆம் அவ்வாழ்வின், அம்மனிதர்களின் ஒரு குறுக்குவெட்டு, 112 பக்கங்களில். சாரத்தைப் பிழிந்து கொடுத்தது மாதிரி; பெரும் புனைவாக விரித்தெடுக்க எல்லாச் சாத்தியங்களும் கொண்ட நறுக்கான, செறிவான குறுநாவல். முன்னுரையில் வண்ணநிலவன் சொன்னதுபோல், ஓரத்தில் ஒதுங்கி நின்று, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய கலைஞனின் மொழி. எழுத்தாளன் அவ்வாழ்க்கையினூடே பார்வையாளனாக மட்டுமே இருக்கிறான்; கிஞ்சித்தும் ”தன்”-னை வெளிக்காட்டிக் கொள்ளாமல். பெரும் ஆசுவாசம். ஆனால் ஒட்டுமொத்தப் புனைவின் வழியே எழுத்தாளனின் அகம் வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு விமர்சனம் படித்தேன்; இக்குறுநாவலில் எல்லோருமே அதீத நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனாலேயே செயற்கையாகத் தெரிகிறதென்று. என்னுள் புன்னகை எழுந்தது. என்னவொரு மனநிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்! நல்லது ஏதும் கண்ணில் பட்டால், அல்லது நல்லதாகவே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், ”ஏதோ சரியில்லை” என்று நமக்குத் தோன்றுகிறது; கூடவே ஒரு ஐயமும் இது மிகுகற்பனை கொண்ட மெலோடிராமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. எனக்கென்னவோ படிக்கும்போது இந்நாவல் மிகுகற்பனையாகவே தெரியவில்லை. நாடகத்தனமாயும் உணரவில்லை.

*

வல்லத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு செபஸ்தி, அப்பச்சி குரூஸிடம் சொல்கிறான்; அவனுக்கு அந்தப் பணம் வேண்டும், சாயபுவுடன் சேர்ந்து சைக்கிள் கடை வைக்க; குரூஸ் உயிரே போனாலும் மணப்பாட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார். செபஸ்தியின் அம்மை மரியம்மைக்கு மகனுடன் செல்ல விருப்பம்தான். மரியம்மைக்கும் வாத்திக்கும் ஸ்நேகம்; அது குரூஸிற்கும் தெரியும்தான். செபஸ்தியின் தங்கை பிலோமிக்கு சாமிதாஸின் மேல் காதல்; சாமிதாஸூம் பிலோமியை விரும்புகிறான்.

பக்கத்து வீட்டில் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக்; அவனின் நோயாளி மனைவி கேதரின். ஐஸக்கிற்கு கேதரினை அடித்து விரட்டிவிட்டு, பிலோமியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை.

பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்தாலும், உவரியூர் மாப்பிள்ளைக்கு வல்லத்துடன் வாக்கப்படும், பிலோமியின் நெருங்கிய ஸ்நேகிதி ரஞ்சி. ரஞ்சியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருக்கும் ரஞ்சியின் கொழுந்தன்.

குரூஸின் வல்லத்தில் உடன்வரும் சிலுவை. சிலுவைக்கும் பிலோமியின் மேல் ஒரு கண் உண்டு. சிலுவையின் மனைவி இன்னாசி.

குரூஸின் குடும்பத்திற்கு உதவும், குரூஸின் மீன்களை வாங்கிக்கொள்ளும், பிலோமியுடன் சகஜமாய்ப் பேசும் தரகனார்.

லாஞ்சிக்காரர்களுக்கும், வல்லத்துக்காரர்களுக்குமான பகைமையும், உரசல்களும். பாதிரியாருக்குப் பிரியமான ரோசாரியாவும் லாஞ்சி ஓட்டுகிறான். பிலோமியும் சாமிதாஸூம் ஒருநாள் உடலால் இணைகிறார்கள்.

மணப்பாட்டின் ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது, கள் குடித்த மரியம்மை தூக்கக் கலக்கத்தில் வீட்டுப்படியில் தவறி விழுந்து இறந்து போகிறாள். குரூஸ் நடைபிணமாகிறான். காரியங்கள் முடிந்து செபஸ்தியின் மனைவி போகும்போது பிலோமியிடம், “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்,” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

ஐஸக்கிற்கும், ரோசாரியாவிற்கும் சண்டை வருகிறது. ரோசாரியாவின் மனைவிக்கும், பாதிரியாருக்கும் தொடர்பிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் ஐஸக்கின் லாஞ்சியில் தீப்பிடிக்க, ரோசாரியாதான் வைத்திருப்பான் என்று கோபத்தில் கள்ளுக்கடையில் ரோசாரியாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான் ஐஸக். ஐஸக்கிற்கு பைத்தியம் பிடிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. பிலோமிக்கும், மரியம்மையின் வாத்திக்கும் இடையே நட்புண்டாகிறது. மணப்பாட்டில் அறுப்பின் பண்டிகை வருகிறது. ஊர் விழாக்கோலம் பூணுகிறது. குரூஸ் வல்லத்தையும், வீட்டையும் விற்க முடிவு செய்கிறான். வல்லம் பிரிவதை தாங்கமுடியாமல் மனம் பேதலித்து குழந்தையாகி விடுகிறான்.

*

நான் நெகிழ்ந்த இடங்கள் பல.

பிலோமிக்கு தாத்தா தாசையாவை ரொம்பப் பிடிக்கும்; தாத்தா இறப்பதற்கு முந்தைய டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து வருகிறார். வரும்போதே அடிக்கொருதரம் “பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கஸ்டமில்லையே?” என்கிறார். “அதெல்லாங் கிடையாது தாத்தா” பிலோமி பதில் சொன்னதும் “நீ மவராசியா இருப்பே…” என்கிறார் தாத்தா.

*

”பிலோமி உள் நடைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மடியில் செபஸ்தியுடைய இரண்டு பையன்களும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பிரியமான அத்தையை விட்டுப்போகக் கொஞ்சங்கூட மனசில்லை.

“லே கீழ இறங்கி உட்கார்ந்தா என்ன? அவ பாவம், நோஞ்ச ஒடம்புக்காரி…” என்று செபஸ்தி அதட்டல் போட்டான்.”

*

”கிறிஸ்துமஸூடன் பனியும் வந்துவிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகைத் தருவதே இந்தப் பனிதான். பனியினூடே கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகிறதும், பனியைப் பிளந்துகொண்டு கேட்கிற கோயில் மணியோசையும் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

இரவு பதினொன்றரை மணிக்கு எல்லோரும் ஆராதனைக்குப் புறப்பட்டார்கள். கோயிலில் குலசேகரப்பட்டினத்திலிருந்து வந்திருந்த ரேடியோ, கிறிஸ்தவ கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. தெருவில் போகும் அந்தப் பிள்ளைகளுக்குள் யார் பிலோமியுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு போவது என்பதில் சிறு சச்சரவு மூண்டது. அமலோற்பவத்துடைய புருஷன் தன் பிள்ளைகளைப் பார்த்து சத்தம் போட்டான். அதிலே ஆசிர் மட்டும் அரைகுறை மனசுடன் தன் அப்பச்சியுடைய கையைப் பிடித்துக்கொண்டான். மெர்ஸி கேட்கவில்லை. அவள் பிலோமியுடைய கையைத்தான் பிடிப்பேன் என்றாள்.”

*

சாய்-ம், வித்யாவும் இப்போது டாக்டர்களாகி விட்டார்கள். மரமல்லி எனக்குப் பிடித்த மரமாகி விட்டது. மரமல்லியும், கீழே மண் தரையில் சிதறிக் கிடக்கும் நீண்ட வெண்பூக்களும், அந்தக்காட்சி அப்படியே மனதில் பதிந்துவிட்டது. பத்து வயதில் பிடித்துப்போன மரமல்லிகளின் வாசம் இப்போதும் மனதில். அதன்பின் பள்ளி முடித்து, தோட்டக்கலை இளங்கலையில் சேர்ந்தபோதும், அந்த நான்கு வருடங்களில் நிறைய பூமரங்கள் அறிமுகம் ஆனாலும், பிடித்த பூமரமாக மரமல்லியே இருந்தது.

பிலோமி அக்காவுடன் பயணிக்கையில் மனது மேல் கொண்டு வந்த இன்னொருவர் ஓடைப்பட்டியில் சின்னக் குடிசையில் கடை வைத்திருந்த காமாட்சி பாட்டி. காமாட்சி பாட்டி தடிமனான கண்ணாடி போட்டிருப்பார்; காதுகளில் கனமான தண்டட்டி. அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் இருந்தேன். உணவில் கருவாட்டின் மணத்துக்கும், சுவைக்கும் பழகி எந்த சாப்பாடாயிருந்தாலும் தட்டில் ஒரு கருவாட்டு துண்டிருந்தால் மனம் சந்தோஷம் கொள்ளும். அப்பாவிற்கும் கருவாடு பிடிக்கும். காய்கறி ஏதும் சமைக்காதபோது, அம்மா பாட்டி கடையில் கருவாட்டு துண்டுகள் வாங்கிவரச் சொல்லுவார். ஊரிலேயே காமாட்சி பாட்டி கடையில் மட்டும்தான் கருவாடு கிடைக்கும். எங்கள் கிராமத்து வீட்டிலேயே, வீட்டினுள் கொடியில், பண்டிகைக்கு எடுத்த இறைச்சியின் மிச்சங்கள், உப்புக்கண்டமாய் காய்ந்துகொண்டிருக்கும். அம்மா அதைப் பண்ணித் தருகிறேன் என்றாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாட்டி கடைக்குத்தான் ஓடுவேன்.

முன்னுரையில் வண்ணநிலவன் “மனம் உய்ய வேண்டும்; அதற்குத்தான் இலக்கியம்” என்கிறார். கடல்புரத்தில் எல்லோரும் முழுமையான அன்பும், கோபமும் ஒருங்கே கொண்ட மனிதர்களாயிருக்கிறார்கள்; செபஸ்தி அப்பாவின் மீது அன்பாகவும் இருக்கிறான்; கோபப்படவும் செய்கிறான். குரூஸிற்கு, மரியம்மையின் மேல் வெறுப்பும் இருக்கிறது; அன்பும் இருக்கிறது. பிலோமிக்கு, சாமிதாஸின் மேல் அன்பு துளியும் குறையவில்லை, அவன் பிரிந்தபோதிலும்.

*

பிலோமியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறான் சாமிதாஸ். இன்னும் சில நாட்களில் அவனுக்கு திருமணம் உவரியூர் பெண்ணுடன்.

”அவன் மெதுவாகக் குனிந்துகொண்டே வீட்டினுள் வந்தான். அந்தக் கால்களுக்கு அந்த வீட்டினுள் நுழைய அதற்குள் எப்படி இவ்வளவு தயக்கம் வந்தது.

“சும்மா உள்ளே வாங்க. இது அசல் மனுஷர் வூடு இல்ல. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“பிலோமிக்கு நா பண்ணியிருக்க பாவத்துக்கு ஆண்டவர் என்னயத் தண்டிக்காம வுடமாட்டார்”

அவள் மௌனித்திருந்தாள். மீண்டும் அவனே பேசினான்.

“நீ என்னய மன்னிக்கணும்…எனக்கு மாப்பு தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளச்செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சு. அதான் வந்தேன். நீயும் கண்டிஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரொம்ப நெனச்சுக்கிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

“ம்…”

பிலோமி சிரித்தாள்.

“என்ன சிரிக்கா? வருவியா?”

“வாரேன்…” என்று சிரிப்பினூடே சொன்னாள் .”

அந்தச் சிரிப்பின் முதிர்ச்சியையும், அன்பின் தளும்பலையும் அடைந்துவிட்டால் இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?

2 comments

 1. வெங்கி,
  நாவல் முழுவதையும் சுருக்கிக் கொடுத்துவிட்டீர்கள்.உங்கள் -முட்டம்-ஊர் வாழ்க்கைப் பரிச்சயம் தான் இவ்வளவு ஆழ்ந்து ரசிக்க வைக்கிறதென்று நினைக்கிறேன். அதிகமான வட்டார மொழிப் பிரயோகத்தினால் என்னால்
  ஆழ்ந்து உட்புக இயலவில்லை.மீண்டும் மிக மெதுவாக வாசிக்க முயற்சி
  செய்கிறேன்.வண்ணநிலவன் எனக்கு மிகவும் பிடிடித்தமான எழுத்தாளர்தான்.
  நன்றி

 2. வெங்கி,
  நாவல் முழுவதையும் சுருக்கிக் கொடுத்துவிட்டீர்கள்.உங்கள் -முட்டம்-ஊர் வாழ்க்கைப் பரிச்சயம் தான் இவ்வளவு ஆழ்ந்து ரசிக்க வைக்கிறதென்று நினைக்கிறேன். அதிகமான வட்டார மொழிப் பிரயோகத்தினால் என்னால்
  ஆழ்ந்து உட்புக இயலவில்லை.மீண்டும் மிக மெதுவாக வாசிக்க முயற்சி
  செய்கிறேன்.வண்ணநிலவன் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்தான்.
  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.