அம்மா காலையிலேயே மதிய உணவுக்குத் தயார் செய்யத் துவங்கியிருந்தாள். கிராமம் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநகரமாய் மாறிக் கொண்டிருக்கும் இது போன்ற ஊர் ப்ரியாவுக்குப் புதிது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவள். நகரத்திலிருக்கும் எல்லாமும் இங்கேயும் வரத் துவங்கி விட்டாலும் ஒரு மெல்லிய இழையில் இரண்டும் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பது இயல்புதான்.
அதன் பல சாட்சிகளுள் ஒன்றாய் சின்னச் சின்னக் கூரை வேய்ந்த வீடுகளையும், மாலையானால் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்கும் சனங்களும், வழியில் தென்படும் எல்லா வீடுகளிலிருந்தும் உணவுண்ண அழைப்பும் என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ப்ரியா.
மெல்ல வெளியிறங்கிப் படலைத் திறந்து கொண்டு நடக்கத் துவங்கினோம். முந்தைய நாளின் கோடை மழை இலை செடி கொடிகளைத் துடைத்து வைத்திருந்தது. பச்சை மணம் வீசிக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற சாலையை ப்ரியா வெகுவாக ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது கடக்கும் எக்ஸல் சூப்பர் அல்லது எம் 80 யின் ஒலிகள் தவிர காற்று அமைதியாயிருந்தது.
பத்து நிமிட நடையில்தானிருந்தது கோவில். திடீரென்று வெயில் காணாமல் போய் மேகம் மூட்டம் போட்டது. சட்டென்று சுதாரிப்பதற்குள் சடசடவெனத் தூறல் விழத் துவங்கியது. வேகமாய் அருகிலிருந்த மரத்தடிக்கு ஓடி நின்றேன். ப்ரியாவும் பின்னோடு ஓடி வந்தாள்.
“ மழை பெய்யும்போது மரத்தடில நிக்கக் கூடாது தெரியும்ல. சய்ன்ஸ்” என்றாள் மூச்சு வாங்கலின் நடுவே சிரித்துக் கொண்டே. அவள் நெற்றியிலிருந்து பிரிந்திருந்த ஒற்றை முடியின் நுனியில் அமர்ந்திருந்த மழைத்துளி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக் கூடும்.
“ இது பாஸிங் க்ளவுட்தான். உடனே நின்னுரும் பாரு மழை,” என்று நான் சொல்லி முடிக்கச் சட்டென்று தூறல் நின்றது. அசட்டுப் பெருமையாயிருந்தது எனக்கு. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். வழியில் கோமதியக்காள் எதிர்ப்பட்டாள். இதான் சம்சாரமா, என்றாள். ப்ரியாவின் கன்னத்தை வருடினாள். குசல விசாரிப்புகள் முடிந்து “தம்பி வூட்டுக்கு எப்ப சாப்புட வர்ற? ந்தா இன்னிக்குதான் வர்றது” என்றாள்.
எனக்குப் பிறக்கும் குழந்தையின் சிரிப்பு இப்படி இருந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று சட்டென்று தோன்றியது கோமதியக்காவின் சிரிப்பைப் பார்த்து. அவ்வளவு துலக்கம். சிரித்துச் சமாதானம் சொல்லிக் கடந்தேன்.
பத்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தோம். “இந்த ஊர்ல இவ்ளோ பெரிய கோவிலா?” என்றாள் வியப்பாய், செருப்பைக் கழற்றியபடியே. பிரதான சன்னிதி கூட்டமின்றி இருந்தது. ஓரிருவர் நின்றிருந்தனர். ஒரு சிறுவன் அவனைவிடச் சின்னப் பெண் ஒன்றை சிரமப்பட்டுத் தூக்கி மணி அடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அர்ச்சகர் தரிசனம் செய்வித்துவிட்டு பிரசாதம் கொடுக்கையில் கல்யாணம் பற்றி விசாரித்தார். நல்லபடியாய் முடிந்தது சந்தோஷம், என்றார். பிரசாதம் வாங்கிக் கொண்டு அகன்றோம். கோவிலைச் சுற்றி வரும்போது பின்புறமிருந்த அரச மரத்தடி நாகரை வணங்கிக் கொண்டோம். அவ்வளவு பெரிய அரசமரத்தை விடுத்துச் சற்றுத் தொலைவில் சுவர் விரிசலில் லேசாய்க் கீறிக் கொண்டு முளைத்திருந்த அரசஞ்செடி மீது கவனம் பதிந்தது. அது லேசான காற்றில் சிலிர்ப்பது போல் அசைந்தது முதல் துளி மழை உடம்பில் பட்டதும் வரும் சிலிர்ப்புக்கொப்பாயிருந்தது.
அரச மரத்தின் பின்புறம் எங்கிருந்தோ வந்திருந்த ஒற்றை ஆடு முன்னங்கால்களில் எக்கித் தழை தின்ன முயன்று கொண்டிருந்தது. மெல்லப் பிரகாரச் சுற்றை முடித்து விட்டுக் கோவில் வாசலுக்கு வந்தோம். கோவிலின் அகன்ற திண்ணையைப் பார்த்ததும், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போவோம்” என்றேன். திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்காராமல் உட்தள்ளிச் சுவரில் சாய்ந்து சப்பணங்காலிட்டு அமர்ந்தோம். வெயில் தெரியவில்லையென்றாலும் திண்ணைக்கென வேயப்பட்டிருந்த கூரையின் நிழல் அலாதியாயிருந்தது.
சற்றைக்கெல்லாம் மீண்டும் சடசடவெனத் தூறல். “இதுவும் உங்க ஊர் மழை தானே? இது எப்ப நிக்கும்னு சொல்லு” என்றாள் ப்ரியா என்னைப் பார்த்துக் குறும்பாக. அவள் “உங்க ஊரு மழை” என்று சொன்ன பதம் பிடித்திருந்தது. தூறல் கோடுகளினூடே மெதுவாக ஒரு எக்ஸல் சூப்பர் கடப்பது தெரிந்தது. கோவிலைக் கடக்காமல் நின்றது. வண்டியிலிருந்து இறங்கி வரும் வெள்ளை வேட்டி மனிதரின் நடையை எங்கோ பார்த்தது போலிருந்தது.
அருகில் வர வர நீர்க் கோடுகளை மீறி ஆள் அடையாளம் தெரிந்தது. ரங்கன் பெரியப்பாதான். என்னைப் பார்த்து விட்டிருக்கிறார். புன்னகையுடன் வந்தார். மழை அவரை ஒன்றும் செய்யவில்லை. திடீரென்று அவர் அருகில் வருவதற்குள் கோவிலுக்குள்ளே தரையில் நீர்த் துளிகள் விழுந்து தெறிப்பதைக் காண வேண்டும் என்று ஆவல் எழுந்தது. திரும்பி உள்ளே பார்ப்போமா என்று யோசனையினூடே பெரியப்பா வந்து சேர்ந்து விட்டார்.
“என்னாடா எப்பிடி கீற” என்றார். சங்கடமாய் நெளிந்தேன். “நல்லாருக்கேன் பெரிப்பா” என்றேன். ப்ரியாவிடம் “என் பெரிப்பா” என்றேன். அவள் புருவம் சுருக்குதலில் “இவர் கல்யாணத்துக்கு வரலியே?” என்ற கேள்வி தெரிந்தது.
“இதான் உன் சம்சாரமா. வணக்கம்மா. நல்லாக்கீரியா?” என்றார் நிறைவாக. “நல்லாருக்கேங்க” என்றாள், என்ன சொல்லி அழைக்க வேண்டுமென்ற குழப்பத்தில் எந்த உறவு முறையும் கூறாமல். மழை விட்டிருந்தது. கூரையின் நுனியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
“செரி நட வீட்டுக்கு போவலாம்” என்றார். திடுக்கிட்டேன். “அது… வந்து… பெரிப்பா” என்று இழுத்தேன். “என்னாடா இழுக்குற. உங்கப்பன் என்னிய கல்யாணத்துக்கு கூப்புடலன்னு எனக்கு வருத்தம்தான். அதுக்கு நீ என்னா செய்வ. பெரிம்மா பாத்தா சந்தோசப்படுவாடா. என்னா வரியா” என்றார்.
அவர் அழைப்பின் தொனியில் “தயவு செய்து வாயேன்” என்ற விண்ணப்பமிருந்தது. ”சரி பெரிப்பா போலாம்… ஆனா சாப்பாட்டுக்கு….” என்றேன்.
“அது தெரியும். உங்கம்மா ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. நீ அங்கயே சாப்புடு. நம்மூட்ல எதுனா கலரு கிலரு முறுக்கு சாப்புட்டு போ. இல்ல காப்பித் தண்ணிதான் குடிச்சிட்டுப் போ. இன்னொரு நாளிக்கி சாப்டுக்கலாம். என்னா ஓகேதான” என்றார். என்ன ஒரு புரிதல். அந்த நொடி பெரியப்பாவைத் தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
“செரி. உனுக்குதான் வீடு தெரியும்ல. ந்தா அஞ்சு நிமிசம் நடந்தா வருது. நீ நடந்து வந்துர்றியா. நான் மருமவளக் கூட்டிகினு வண்டில போறன் முன்னாடி. என்னாமா வரியா” என்றார். ப்ரியா என்னைப் பார்த்தாள். மெல்லக் கண் காட்டினேன்.
“சரிங்க போலாம்” என்று வெகு இலகுவாகக் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் வண்டியில் ஏறிக் கோவில் முனை தாண்டி மறைந்ததும் நடக்கத் துவங்கினேன். இப்படி மழை அவ்வப்போது நீர் தெளித்து இந்தச் செடிகளையெல்லாம் மேலும் மேலும் பச்சையாக்கிக் கொண்டிருக்கிறதே, ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செடியில் பச்சைக்கு இடமில்லை என்று செடியில் பட்டு வழியும் நீரெல்லாம் பச்சையாய் வழியப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.
நினைத்தவுடன் திரும்பி சாலையோரச் செடியைப் பார்த்தேன். அமைதியாயிருந்தது. பெரியப்பா இந்த ஐந்து நிமிட வண்டிப் பயணத்திலேயே ப்ரியாவுக்கு எங்கள் குடும்பக் கதையையும் அப்பாவுக்கும் அவருக்குமான உப்பு பெறாத ஏதோ ஒரு கவுரவச் சண்டை பற்றியும் அதனால் உண்டான பத்து வருஷப் பகை பற்றியும், ஆடு பகை குட்டி உறவு கணக்காகப் பெரியப்பா என்னையும் என் தம்பிகளையும் உறவாடுவதைப் பற்றியும் என் அப்பாவும் பெரியப்பாவின் பெண் மீது பாசமாயிருப்பதைப் பற்றியும் விவரித்திருக்கக் கூடும்.
பெரியப்பா வீட்டுக்குப் போனால் தெரியும். பெரிய்ப்பா வீடு கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிஷ தூரம். இவ்வளவு அருகருகே இருந்து கொண்டு எப்படி பகையை தினந்தோறும் காலையில் எழுந்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறதென்று ஆச்சரியமாயிருந்தது. யோசனையினூடே நடந்ததில் பெரியப்பாவின் வீடு வந்து விட்டது.
பால்யத்தில் நான் பார்த்த பெரியப்பா வீட்டின் வாசல் வேலிப் படல் இரும்பு கேட்டாக மாறியிருந்தது. உள்ளே வீட்டுக்குச் செல்லும் வழிகூட சிமெண்ட் வேயப்பட்டிருந்தது. கூடையைத் திறந்து விட்டிருப்பார்கள் போல. கோழிகள் ஆங்காங்கே சிதறிச் சுற்றிக் கொண்டிருந்தன. ப்ரியா பெரியப்பாவுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.
கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாக பெரியம்மா வெளியே வந்தார். முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. பாதி வழியிலேயே மறித்தார். வாடா இப்பதான் இந்த கெழவிய பாக்கறதுக்கு வழி தெரிஞ்சிதா, என்று என் கன்னம் வழித்தார். பின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போனார். பெரியம்மா கொஞ்சம்கூட மாறவில்லை. வாசலுக்குச் சென்றதும் நிப்பாட்டினார்.
“இங்கயே நில்லு வரேன். இது யாரு உன் சம்சாரமா. அழகா இருக்கா. நல்லாருங்க ரெண்டு பேரும். இந்தா வந்துர்றேன்,” என்று உள்ளே போனார். லேசான பரபரப்பு இருந்தது அவர் நடையில். உள்ளிருந்து இன்னதென்று இனம் பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு உணவு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வாசனை வந்தது.
ஆரத்தித் தட்டுடன் வந்து வரவேற்றார் பெரியம்மா. “கல்யாணம்லா நல்லபடியா நடந்துச்சா” என்றார். “போயி அவங்களுக்கு காப்பி போடு”, என்று பெரியம்மாவிடம் சொன்ன பெரியப்பா, “காப்பி குடிக்கிறிங்கள்ல?” என்றார் எங்களைப் பார்த்து. தலையசைத்தோம். “இந்தா போறேன் இருங்க. பையன் வந்துகுறான் வூட்டுக்கு. இன்னா அவசரம்” என்று என் அருகில் வந்து கன்னத்தை வழித்தாள்.
சிறு வயதில் மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிய பெரியம்மாவின் சேலை வாடை மீண்டும் இத்தனை வருடங்களுக்குப் பின் இவ்வளவு அருகே. நிமிர்ந்து பெரியம்மாவைப் பார்த்தேன். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இவ்வளவு சந்தோஷம் தாங்காது என்பது போல இருந்தது அவளின் செய்கைகள்.
வீட்டின் பின்புறம் ரயிலின் ஓசை கேட்டது. பெரியம்மா விலகி சமையலறைக்குள் நுழைந்தார். “சின்ன வயசுல இங்க பெரியப்பா வீட்டுக்குப் பின்னால இருக்கற காம்பவுண்டு செவுரு எகிறி குதிச்சிதான் நானு பாஸ்கரெல்லாம் ரயில்வே கிரவுண்டுல போயி விளையாடுவோம்,” என்றேன் ப்ரியாவிடம்.
“அந்த செவுரெல்லாம் இப்ப ரொம்ப பெருசா கட்டிட்டானுக. அப்புறம் அந்த ரயில்வே ஸ்டேசன் வாசல்லருந்து பாய்ஸ் ஸ்கூலு போவோமுல்ல. அந்த ரோட்டையும் ரயில்வே பிராப்பர்டினு சொல்லி கேட்டு போட்டு அந்த பக்கம் போவ முடியாம செஞ்சிட்டானுங்க. இப்ப மெயின் ரோடுல சுத்திகினு ஆனந்தா ஓட்டலாண்ட போயிதான் பாய்ஸ் ஸ்கூல் போவணும். இல்லனா ட்ராக்குலயே நடந்து போவணும்,“ என்றார் பெரியப்பா.
ஏனோ ஊரின் முகம் பெரியப்பா சொன்ன ஒரு வாக்கியத்தில் சட்டென்று மாறி விட்டது போலிருந்தது. “ பாஸ்கர் எங்க?” என்றேன். இன்னும் சகஜமாய்ப் பெரியப்பா என்று அழைக்க வாய் வரவில்லை. “அவன் நால் ரோடு வரைக்கிம் போயிருக்கறான். வந்துருவான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம் 80 சத்தம் கேட்டது.
வ்ண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென்று நின்று விட்டான். சூழலை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. எழுந்து அவனை நெருங்கினேன். தோள் மேல் கை போட்டு அணைத்தேன். “எப்படி இருக்க பாஸ்கரு” என்றேன். தயங்கிப் பின் அவனும் அணைத்தான். “டேய் எப்பிட்றாகீற. நான் நல்லாகுறன். என்றவன் இயல்பாய் ப்ரியாவைப் பார்த்து, “இன்னாமா நல்லாகுறியா” என்று புன்னகைத்தான்.
“பெரியப்பா பையன். எனக்கு அண்ணன். ஆனா பெஸ்டு ப்ரெண்டு,” என்று ப்ரியாவிடம் அறிமுகம் செய்தேன்.
பெரியம்மா காபிக் கோப்பைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து கூட பிஸ்கட், சீடை, முறுக்கு என்று எதையெதையோ கொண்டு வந்தார். கவனிப்பும் அனுசரிப்பும் பேச்சுகளும் விசாரணைகளும் நீண்டபடியிருந்தன. கவனமாய் அப்பா பற்றிய பேச்சு மட்டும் எழாமல் பார்த்துக் கொண்டார் பெரியப்பா.
நேரமாகி விட்டதென்று சொல்லிக் கொண்டே கிளம்புவதற்கு எழுந்தேன். பெரியப்பா “எப்படி போற?” என்றார். “ நடந்துதான் “ என்றேன்.
“இரு நான் கொண்டு வுடறேன்,” என்றார். திடுக்கென்றது. இதென்ன தர்ம சங்கடம்? “இல்ல… நாங்க ரெண்டு பேரு… நடந்தே….” என்றேன். “அட அதுக்கென்ன. என் வண்டி கீது. பாஸ்கர் வண்டி கீது. போலாம் வா,” என்றார். பாஸ்கரும் குழம்பினான். ஆனால் தயாரானான். விஷயத்தின் வீரியம் புரியாததால் ப்ரியா வேடிக்கை மட்டும் பார்த்தாள்.
“என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் கிளம்பினேன். பெரியப்பா வண்டியில் ப்ரியா ஏறிக் கொள்ள, பாஸ்கருடன் நான் கிளம்பினேன். வீடு நெருங்க நெருங்க குழப்பம் அதிகரித்தது. ஒன்றிரண்டாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. போகும்போது இருந்த தூறலை ரசிக்கிற மனநிலை இப்போது இல்லை.
யோசித்து முடியாமல் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் மௌனமாய்த் தலையாட்டினேன். அவர்களைக் கிளம்பச் சொல்லி நேரிடையாய்ச் சொல்ல முடியாது. அப்பா வெளியே வந்து விடக் கூடாதென்பதே என் வேண்டுதலாயிருந்தது.
சட்டென்று ப்ரியா, “ உள்ள வாங்க பெரியப்பா,” என்றாள். சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்து விட்டாள். ஒரு நொடி என்னைப் பார்த்த பெரியப்பா பின் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உயிர் போய் விடும் போலிருந்தது. இந்த ரயில் வேறு நேரம் காலம் தெரியாது கூவித் திரிந்து கொண்டிருந்தது.
வாசலில் அரவம் கேட்டு அம்மா தான் முதலில் வந்தாள். அதிர்ச்சியை மெல்ல மென்று முழுங்கியவள் “ வாங்கணா. வா பாஸ்கரு,” என்றாள் மெல்லிய குரலில். படி வரை வந்தவரை எப்படி வர வேண்டாமென்று சொல்வது என்பது தவிர அவள் வரவேற்க வேறு காரணங்களில்லை. பயம் அப்பிக் கிடந்தது அவள் கண்ணில்.
“தம்பி நடந்து வர்றன்னு சொன்னான். அதான் எதுக்கு நடக்கணும்னு நாங்க கூட்டினு வந்தோம். கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா?” என்றார்.
“ஆங்… நல்லா… நடந்துச்சு,” என்றாள் அம்மா. குக்கர் விசிலடித்தது. இப்போது இந்த நொடி சோவென்று பெருமழை பெய்யத் துவங்கி பேச்சுக் குரல்களை அமுக்கி விடாதா என்றிருந்தது எனக்கு.
அப்பா வெளியில் வந்தார். நின்றிருப்பவர்கள் எல்லாரையும் பார்த்தார். பின் அப்பாவின் பார்வை பெரியப்பா மீது நிலை கொண்டது. சில நொடிகள். யுகங்களுக்கான மௌனங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருந்த நொடிகள். மீண்டும் குக்கர் கத்தியது. “வா. எப்படிகீற” என்றார் அப்பா பெரியப்பாவைப் பார்த்து.
“ நல்லாகுறன். நீயி?” என்றார் பெரியப்பா.
“ நல்லாதான் இருக்குறன். வா வந்து உக்காரு,” என்றார். பெரியப்பா சுவாதீனமாய் அமர்ந்து கொண்டார். “கல்யாணத்துக்கு கூப்புட…” என்று தொடங்கிய அப்பாவை அவசரமாய் இடை மறித்து “அது பரவால்ல” என்றார் பெரியப்பா.
“எப்படிகிற பாஸ்கரு” என்றார் அப்போதுதான் பாஸ்கரைப் பார்த்த அப்பா.
“நல்லாகுறன் சித்தப்பா” என்றான் பணிவாய்.
பின் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு “புள்ளைக்கி கல்யாணம் ஆகிருக்குது. அதான் நம்ம வூட்டுக்கு சாப்புட கூப்புடலாம்னு. நாளைக்கி அனுப்பி வெக்கிறியா?” என்றார். இத்தனை உரையாடல்களின் இடையேயும் இருவரும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் கொள்ள தவிர்த்தனர்.
“அதுக்கென்னா. வருவான்” என்றார் அப்பா.
“செரி அப்ப நான் கெளம்பறேன்” என்று திரும்பியவர் மீண்டும் ஒரு முறை தயங்கி நின்றார். சட்டென்று அப்பாவின் பக்கம் திரும்பி அவர் தோளைத் தொட்டு, “நீயும் வாயேன். சம்சாரத்தையும் கூட்டினு வா. எல்லாரும் வாங்க. ரெம்ப நாளாச்சி” என்றார். இப்போது அப்பாவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தார்.
“செரி என்னா வேல கீதுன்னு பாத்துகினு நாளிக்கி எல்லாரும் வந்துர்றோம். அண்ணியாண்ட சொல்லிரு,” என்றார் அப்பா. மெல்லத் தலையசைத்த பெரியப்பா வாசலை நோக்கி பாஸ்கருடன் நடந்தார்.
நான் பின்னாலேயே சென்றேன். திரும்பி, “வரேன் தம்பி. நாளிக்கி அப்பா அம்மா எல்லாரையும் இட்டுகுனு வந்துரு” என்றார். “சரிங்க பெரியப்பா” என்றேன். மஹை பெருந்தூறலாய் விழத் துவங்கியிருந்தது. கோவில் மணிச் சத்தம் தீனமாய்க் கேட்டது. குக்கர் மீண்டும் சத்தம் போட்டது. பெரியப்பாவின் வண்டி கிளம்பித் தெருமுனை சென்று திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். ரயில் சத்தம் கேட்கத் துவங்கியது.