எண்ணங்கள் செய்கைகள் – காலத்துகள்

காலத்துகள்

‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்று பாடும் டீச்சருடன் நானும் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தேன். டீச்சர் லயத்தோடு தாளம் போட்டுக் கொண்டிருக்க, நான் தோசையை திருப்பிப் போடுவது போல் உள்ளங்கையையும் பின்னங்கையையும் மாற்றி மாற்றி தொடையில் தட்டிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேர க்ளாஸ், ஆரம்பித்து எவ்வளவு நேரமாயிற்றோ, என்னிடம் வாட்ச்சோ, அறையில் கடிகாரமோ இல்லை, பெரும் பாரத்தை சுமந்தபடி ஊர்ந்து செல்லும் கணங்கள். டீச்சர் சொல்லும்வரை ‘ஸ ரி க ம,’ தான்.

‘கொஞ்சம் வாயத் தொறந்து பாடு, அப்போதான் உச்சரிப்பு ஸ்பஷ்டமா வரும்,’ என்றார் டீச்சர். டீச்சர் குடியிருக்கும் வீட்டின் நான்கு போர்ஷன்களில், முதலாவது மு. முத்து அல்லது முசுட்டு முத்து என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் டாக்டர் முத்துகிருஷ்ணனின் ஒற்றையறை க்ளினிக். செங்கல்பட்டுக்கு குடி வந்த புதிதில் ஓரிரு முறை மு. முத்துவிடம் சென்றிருக்கிறோம். நோயாளி கிளம்பினால் போதும் என்று சலிப்பும் முகச்சுளிப்புமாக வைத்தியம் பார்ப்பார் என்றாலும் தினமும் மாலை கூட்டம் இருந்தபடிதான் இருக்கும். நான் மெல்லிய குரலில் பாட முயற்சிப்பது நோயாளிகளின் உடல் நலம் பற்றிய கவலையால் மட்டும் அல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கக்கூடும்.

டீச்சர் மிகவும் அமைதியானவர், பொறுமை மிக அதிகம், ஒரே விஷயத்தை சலிப்பில்லாமல் சொல்லித் தருவார், கற்கும் நான்தான் வெறுப்படைவேன். நோட்டை மூடிவைத்து, ‘நாளான்னிக்கு பாக்கலாம்,’ என்றவர், அவசரமாகக் கிளம்பியவனை நிறுத்தி ‘வீட்ல ப்ராக்டிஸ் பண்றியோ’ என்று கேட்டார்.

மூன்று வாரங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன், என் சங்கீத ஞானத்தில் எந்த சிறிய முன்னேற்றமும் இதுவரை இல்லை, ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதை உணர்ந்ததைப் போன்று டீச்சரின் முகபாவம்.

‘இல்ல டீச்சர், ஹோம் வர்க்லாம் இருக்கு டைம் கெடக்க மாட்டேங்குது’

‘நேரங் கெடக்கும்போது பண்ணு, சாங்காலம் முடியலனா காத்தால. அப்பத்தான் ….’ என்று கர்நாடக இசை தொடர்பான, எனக்கு புரியவே புரியாத சில பிரத்யேக வார்த்தைகளுடன் அவர் பேச ஆரம்பிக்க எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘சரி டீச்சர்’ என்றேன்.

வெளியே மு. முத்து அறைக்கு முன் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் பார்வையைத் தவிர்த்து வழக்கம் போல் விரைவாக கடந்து செல்ல முயன்ற என் முழங்கையை தொட்டு நிறுத்தினார் ஒருவர். அறிமுகமில்லாதவர்தான், நிம்மதி.

‘தம்பி நீதான் பாடிந்தியாப்பா இவ்ளோ நேரம்’ என்றார். தலையாட்டினேன்.

‘எவ்ளோ நாளா கத்துக்கற’

‘இப்போதான்’ என்று சொல்லி விட்டு அவர் வேறேதும் கேட்பதற்கு முன் வெளியேறினேன்.

மூன்று வார நாட்கள் மாலையில், சனி அன்று மட்டும் காலை என நான்கு நாட்கள் வகுப்பு. தெரிந்தவர்கள், கூடப் படிப்பவர்கள் யாரும் பார்த்து விடக் கூடாது என்று ஓட்டமும் நடையுமாக ஆறரை மணிக்கு க்ளாசுக்கு வருவேன், ஒரு மணி நேரம் கழித்து திரும்பும்போது இருட்டில் செல்வது கொஞ்சம் வசதி. ஆனாலும்கூட ஒரு நாள் எதிரே ஸ்ரீதர் வந்துவிட்டான். எவ்வளவோ ஜாக்கிரதையாக அவனைத் தாண்டிச் செல்லப் பார்த்தபோதும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் என்னை கவனித்து விட்டான்.

‘என்னடா இங்க’

‘டாக்டர்ட்ட வந்தேண்டா, இப்போதான் பாத்துட்டு கெளம்பறேன்’

‘ஒடம்பு சரில்லையா, க்ளாஸ்ல நல்லாத்தான இருந்த’

‘திடீர்னுதான், சாங்காலம் வீட்டுக்கு வந்தப்பறம் ஒரு மாறி இருந்துச்சு அதான்’

‘கொரல் கட்டிருக்கான்ன, ஒரு மாதிரி இருக்கு. தொண்டவலி வந்தா அப்பறம் சளிதாண்டா’

‘ஆமாம்டா வரேன், வெளில நிக்க வேணாம்’

காலையில் குளித்து முடித்து ஸ்லோகங்களை ராகத்தோடு சொல்வதைத் தவிர என் பாட்டி பாடியதோ இசை குறித்து வேறெந்த ஆர்வமும் காட்டியதோ இல்லை. புதனன்று, சென்னை தொலைகாட்சி முதல் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர கர்நாடக இசை நிகழ்ச்சியை, ஒலியை முற்றிலும் மட்டுப்படுத்தி, பாடுபவர் வாயசைப்பதையும், முகத்தை அஷ்டகோணலாக்குவதையும், தொடையை ஆக்ரோஷமாக தட்டுவதையும், கைகளை வீசுவதையும் கொஞ்ச நேரம் பார்த்து ரசிப்பதைத் தவிர எனக்கு சுத்தமாக கர்நாடக இசையில் ஆர்வம் கிடையாது. படிப்பை தவிர வேறேதாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம். எனக்கு எண்ணற்ற திறமைகள் இருப்பதாகவும் பெரும் நம்பிக்கை.

‘இன்னும் ரெண்டு வர்ஷத்ல டென்த் போய்டுவான், அப்பறம் டைம் எங்க கெடக்க போகுது, ஏதோ இப்போதைக்கு ரெண்டு வர்ஷம் கத்துக்கட்டும்’ என்று ஆரம்பித்தார்

‘ஐயே என்னால முடியாது தாத்தி, ஆள விடு’

‘நீ இந்தி கத்துக்கலையா அது மாறி பழகிடும்’

‘நார்த்துக்குலாம் வேலைக்கு போனா ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்’ என்பதற்காகவே நான் ஹிந்தி கற்றுக்கொள்ள சேர்க்கப்பட்டாலும், திரையிசை பாடல்கள் மீதுள்ள ஆர்வம்தான் ஹிந்தி கற்றுக்கொள்வதின் மீதான விருப்பாக மாறியது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. டீச்சரிடம் கற்றுக்கொள்வதைவிட, ஹிந்தி திரையிசை பாடல்கள் வழியாகவே அதிகம் கற்று எளிதில் தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் அனைத்து தேர்வுகளையும் பாஸ் செய்திருந்தேன். பாடல் காட்சிகளில் எந்தக் கூச்சமும் கட்டுப்பாடுமின்றி குதித்துத் திரியும் ஷம்மி கப்பூர் என் விருப்ப நாயகர்களில் ஒருவரானார். பனியில் ‘யாஹூ’ என்று கத்தும் அவரைப் போலவே நானும் ‘யாஹூ’ என்று என் வீட்டின் பின்னால் இருந்த காலி மனையில் வியர்த்து தள்ளிக்கொண்டு ஊளையிட்டேன். வீட்டிலிருந்த கேசட்களிலிருந்து ஹேமந்த் குமாரின் குரலும் ,ஆர்.டி.பர்மனின் இசையும் என்னை வசீகரித்தன. ‘ஒத்தனும் இப்போலாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க’ என்று ஆர்.டி குறித்த அப்பாவின் ஆதங்கத்தை நானும் உணர்ந்தேன். வானொலியில் வரும் ஹிந்தி திரையிசை பாடல் நிகழ்ச்சி எதையும் தவற விடுவதில்லை. ‘ஹை மேரே ஹம்சபர்’, ‘பாப்பா கெஹ்தே ஹெய்ன்’ போன்ற அப்போதைய மிகப் புகழ் பெற்ற புதிய பாடல்களை வகுப்பில் நண்பர்களுக்கு பாடிக் காட்டியதோடு மொழிபெயர்க்கவும் செய்தேன். குரல் வளம், இசையோடு ஒத்து பாடுவது போன்றவற்றை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.

நிஜத்தில் இசை சம்பந்தமான குறைந்தபட்ச திறமையோ, அப்படியே இருந்திருந்தாலும் மிகவும் நெருங்கியவர்களைத் தவிர பிறர் முன் அதை வெளிப்படுத்தும் தைரியமோ இல்லாவிட்டாலும் கிடாரையோ, மவுத் ஆர்கனையோ, பியானோவையோ பலர் வியந்து ரசிக்கும்படி வாசிக்க மன உலகில் எந்த தடையும் இருந்ததில்லை. அங்குகூட கச்சேரி, ராகம், தாளத்தை எல்லாம் அனுமதிக்க என்னால் இயவில்லை. ஆண்கள் கர்நாடக சங்கீதம் பாடுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை, அதைக் கற்றுக்கொள்ள ஆர்வமில்லை, ஏன் ஒட்டுமொத்தமாக இசை, பாடல் இவற்றின் மேல் எந்த விருப்பமுமில்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்கக் பார்த்தேன்.

‘பொய்லாம் சொல்லாதே, ஹிந்தி பாட்டெல்லாம் எப்பவும் முணுமுணுக்கறல, இதுவும் பாட்டுதான், இதையும் கத்துப்பே, குரல் நல்லாத்தானே இருக்கு. பொம்மனாட்டி மட்டும்தான் பாடணும்னு யார்டா சொன்னா.’ அவர் முடிவு செய்திருந்தபடி, பெரியமணிக்காரத் தெருவிலேயே என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்த டீச்சரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளச் சேர்த்து விட்டார். டீச்சர் தொழில் முறையாக சொல்லித் தருபவர் அல்ல. அவருடைய ஒரே மகன் அந்த வருடம் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தான், கணவர் வீடு வர எட்டு மணிக்கு மேலாகி விடும். நேரத்தைக் கடத்த எனக்கு சொல்லித் தருவது என அவர் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் அவருக்கு இந்நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நான் வீட்டுக்குப் போகும்போது வாசலில் வெள்ளை அம்பாஸிடர் கார் நின்றிருந்தது. ‘உள்ளதான் போனாங்க’ என்று சந்தைச் சுட்டியபடி ராட்சஸி சொன்னார். தலையாட்டி விட்டு சந்தினுள் நுழைந்து, முன்பைப் போல் சந்தின் இருட்டை விழுந்தடித்துக் கொண்டு கடக்காமல், பயத்தை அடிக்கியபடி, சாதாரணமாக நடந்து சென்று என் போர்ஷனை அடைந்தேன்.

‘என்னைப் பார்த்ததும், ‘தோ வந்துட்டானே. வாடா நாங்க யாருன்னு தெரியுதா’ என்று கேட்டார் வீட்டுக்கு வந்திருந்தவர்களில் வயதான பெண். மூக்கில் இரு பக்கமும் மூக்குத்திகள், தடிமனான தோடுகள்.

‘எப்பவோ பாத்தது எப்படி தெரியும்மா. இவதான் வரவே மாட்டேங்கறாளே’ என்றுகூட இருந்தவர் சொல்ல, ‘என்னடி எங்கள பத்திலாம் சொல்றதில்லையா, நான் ஒங்கம்மாவோட அத்த’ என்று சொன்னார் அவர்.

அத்தையின் தோளுடன் ஒட்டி அமர்ந்து, அவர் கைகளை பற்றிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தில் பூரிப்பு. காஞ்சீபுரம் சென்றிருவர் தன் நேசத்திற்குரிய அண்ணன் மகளைப் பார்க்க, மகள் மற்றும் பேத்தியோடு செங்கல்பட்டிற்கு வந்திருக்கிறார். பேத்திக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கக்கூடும். தலையாட்டி விட்டு உள்ளே சென்றேன்.

‘என்னடீது பொம்மனாட்டி கணக்கா வெக்கப்படறான்’

உள்ளறையில் அப்பா இல்லை, பாட்டி மட்டும் வார இதழொன்றில் இருந்து கோலப் புள்ளிகளை தன் கோல நோட்டில் பிரதி எடுத்துக் கொண்டிருந்தாள். ‘நீ வெளில வரல தாத்தி’ என்று கேட்டதற்கு பதில் எதுவும் இல்லை. என் அப்பா வழி பாட்டியைத் தவிர எங்கள் வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருவது அரிதினும் அரிது. அம்மா அழைக்க வெளியே வந்தேன்.

‘ஏன்டா ஒளிஞ்சிண்டு இருக்க, ஒங்க அம்மா எப்படி பேசுவா தெரியுமா’ படிப்பு சம்பந்தமான வழக்கமான கேள்விகளை எப்போதும் போல் புதியவர்களை கண்டால் உண்டாகும் அசௌகரிய உணர்வோடும் ஒட்ட வைத்துக் கொண்ட காரணமில்லாத அசட்டு புன்சிரிப்போடும் எதிர்கொண்டேன். ‘நீயும் பாட்டு கத்துகறியாமே, என் டாட்டரும் கத்துகறா’ என்றார் என் அம்மாவின் அத்தை மகள்.

‘இப்போத்தான் ரெண்டு மூணு வாரமா போறான், இவ எத்தன நாளா கத்துகறா’ என்று சொன்னார் அம்மா.

‘இவளும் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கா, என்னடி படிச்சிருக்க’ என்று கேட்க அவர் மகள் அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். சரளி வரிசை, கமகம் போன்ற கேள்விப்பட்டது போலவும் படாததும் போலவும் இருந்த வார்த்தைகள்.

‘நீ எதுவரைக்கும் வந்திருக்க, பாடிக் காட்டேன். இங்க ஒக்காரு, அவளும் சேந்து பாடட்டும்’

‘என்னடீது ஒன்னையே பாத்துண்டு நிக்கறான். ரிஷ்யசிருங்கர் மாதிரி வளத்துருக்க போ, எதுவும் பேசவே மாட்டேங்கறானே’

அம்மாவின் வற்புறுத்தல்களுக்குப் பின் சப்பளமிட்டு அமர்ந்து எனக்குத் தெரிந்ததை பாட ஆரம்பித்தேன். அத்தையின் பேத்தி எந்த ஆர்வமும் இல்லாமல் என் பாட்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.

‘நல்லாத்தான் பாடறான், இதெல்லாம் ஒனக்கு தெரியுமாடி’

‘தெரியும் பாட்டி,’ புத்தகத்தை நீட்டினாள்.

‘சரி கெளம்பறோம்டீ, அவர கேட்டதா சொல்லு’ என்று கூறிவிட்டு, ‘மாமியார் எங்க உள்ளயா,’ என்று மெல்லிய குரலில் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்து ‘வரேன் மாமி’ என்றார். ‘ஏன் கெளம்பிட்டீங்க சாப்ட்டு போலாமே’. பாட்டியின் உபசரிப்பை நாசூக்காக மறுத்து விட்டு கிளம்பினார்கள்.

‘இவ்ளோ இருட்டா இருக்கு வாடா ரிஷ்யசிருங்கா தொணைக்கு. யாராச்சும் திருட வந்தாக்கூட தெரியாது போலிருக்கே, கடசில வேற இருக்க’

‘இங்க யாரு திருடவரப் போறாங்கத்த. மத்த ரெண்டு போர்ஷன்லையும் ஆளுங்க எப்படியும் இருப்பாங்க பழகிடுச்சு.’

காரினுள் அமர்ந்தவர் நீட்டிய கைகளைப் பிடித்தபடி அம்மா. இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. ராட்சஸியின் பார்வை இங்குதான். பர்ஸிலிருந்து எடுத்ததை வாங்க மறுத்த அம்மாவின் உள்ளங்கையைப் பிரித்து திணித்தார் அத்தை.

இரவுணவின்போது அம்மா சாப்பிட்டதைவிட பேசியதுதான் அதிகம். அத்தை வீட்டில் தங்கி எஸ்.ஐ.டியில் படித்தது, கல்லூரியின் நீச்சல் குளத்தில் இருந்த க்ளோரின் சிலிண்டர்கள் வெடித்து அதை சுவாசித்தபின் தனக்கு வர ஆரம்பித்த ஆஸ்த்மா, அத்தை மற்றும் அவர் பெண்ணுடன் புராண படம் பார்க்க தாமதமாக சென்று அவசரமாக ஏதோவொரு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தால் தற்கொலை செய்ய முயலும் நாயகன் குளத்தில் விழ நாயகியின் பேச்சைக் கேட்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நீச்சலடித்தபடி பாடும் முதல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க அத்தை அப்போதே இவர்களை அழைத்துக் கொண்டு திட்டியபடியே வீட்டுக்குத் திரும்பியது என முன்பே கேட்டிருந்த நினைவுகள். இப்போது அவற்றினுள் இரு முகங்களை பொருத்திப் பார்க்க முடிந்தது. அப்பாவும் பாட்டியும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சந்துருவிடம் மறுநாள் இதை பற்றி பள்ளியில் சொன்னதற்கு ‘வெக்கமில்லாம அந்தப் பொண்ணு முன்னாடி பாடிருக்க பாரு, எப்டிடா பாடுன’ என்றான்.

‘ஏதோ ரொம்ப கெஞ்சிக் கேட்டாங்கன்னு பாடினேன்’

‘சும்மா, இம்ப்ரஸ் பண்ணப் பாத்துருப்ப. ஒனக்கு ஒரு எழவும் தெரியலங்கறது அந்தப் பொண்ணுக்கு புரிஞ்சிருக்கும்’

அடுத்த வார இறுதியில் க்ளாஸ் முடித்து கிளம்பும்போது ‘இரு இரு, ஒண்ணு சொல்லணும். நாங்க அண்ணா நகர்க்கு அடுத்த மாசம் குடி போறோம். நோக்கு அவ்ளோ தூரம் வர்து கஷ்டம் இல்லையா, நடந்து வேற வரணும், சைக்கிள் இல்லல’ என்றார் டீச்சர். என்னுள் பரவிய விடுதலை உணர்வு டீச்சருக்கும் ஏற்பட்டிருக்கும்.

‘ஆமா டீச்சர், தூரம் அதிகம். அண்ணா நகர்ல எங்க போறீங்க’

‘செவன்த் க்ராஸ். வீடு மாத்தறத பாட்டிட்ட சொல்லுன்ன’

டீச்சர் காலி செய்வதைப் பற்றி சொன்னதற்கு பாட்டி ‘அதெங்கருக்கு, போய் வரலாமில்லையோ’ என்று கேட்டார்.

‘ரொம்ப தூரம் தாத்தி, எப்படி நடந்து போறது. ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கு அண்ணா நகர், அதுவும் இது செவன்த் க்ராஸ் உள்ள போணும்’

‘சைக்கிள் வாங்கிட்டா போலாமில்லையா’

‘அப்போ போலாம்’. இப்போதைக்கு கண்டிப்பாக வாங்க முடியாது.

‘ஒன் இம்ச தாங்க முடியாமையே வீட்ட மாத்திருப்பாங்கடா’ என்பது சந்துருவின் அபிப்ராயம்.

ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடை தட்ட வேண்டியதாகிவிட்டது. வீட்டிற்கு இன்னும் அருகில், இரண்டு நிமிடங்கள்கூட ஆகாத தொலைவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாட்டி. திண்மையான கருப்பு பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி, கழுத்தில் கருப்பு மணி, ஒற்றை மூக்குத்தி, டீச்சர் வயது அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடிய பெண். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை பாடினார் என்று நான் படித்திருந்த செய்திக் கட்டுரையில் இருந்த, அந்த புகழ் பெற்ற பாடகியின் புகைப்படத்தை நினைவூட்டும் முகம். அம்மாவுடன் வேலை செய்பவர் மூலமாக இவர் குறித்து தெரிந்து கொண்டு, முதலில் சென்று பார்த்து பேசி முடித்து இப்போது என்னை சேர்க்க வந்திருக்கிறார். முதல் பார்வைக்கு கடினமானவராக தோன்றினாலும் பேச்சு மென்மையாகவே இருந்தது. நாலைந்து பூனைகள் வீட்டினுள் சுவாதீனமாக சுற்றிக்கொண்டிருந்தன. இங்கும் சனி தவிர வாரம் மூன்று நாட்கள், அதே நேரம்.

‘நாளெக்கு வந்துடு நல்ல நாள்’

‘டீச்சர்னு சொல்லாண்டாம், மாமினே கூப்டு’. என்று முதல் க்ளாஸிலேயே டீச்சர் சொல்லி விட்டார். இங்கும் நாம் மட்டும்தான் கற்றுக் கொண்டிருந்தேன். வீட்டில் மாமியும் அவர் கணவரும், கொழுத்த பூனைகளும் மட்டும்தான். நான் உள்ளே நுழையும்போது பெரும்பாலும் இரண்டு மூன்று பூனைகளை மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருப்பார் மாமி. அதன்பின் இரண்டு கிண்ணங்களில் பாலோ, தயிர் சாதமோ தந்துவிட்டு பாடத்தை ஆரம்பிப்பார்.
வீடெங்கும் எப்போதும் ஈர வாசத்தை நுகர முடியும் பல்ப் உமிழும் மங்கலான மஞ்சள் ஒளியுடன், தரையின் அரக்கு நிறமும், இரு உள் தூண்களின் அடர் பச்சை வண்ணமும், சுவர்களின் சாயம் போன க்ரீம் நிற வண்ணமும் கலைந்து சிதறி ஹாலே பல வண்ணக் கலவையாக மினுங்கிக் கொண்டிருக்கும். பார்வை அந்தப் நிறப்பிரிகை மேலும், மனம் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களுக்கான இராணுவ வீர்களின் நேயர் விருப்பத்தை எதிர்நோக்கியபடியும் இருக்க, நான் கர்நாடக இசையுடன், தோல்வியைத் தவிர வேறு எந்த முடிவும் இருக்க முடியாத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன். வானொலியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் வரும் அலைவரிசையையும், நேரங்களையும் மாமி என்னிடம் சொன்னதை நான் மனதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. புதிய நோட், அதில் மாமி எழுதித் தருவது என்று மீண்டும் ஆரம்பித்தாலும் என் சங்கீத ஞானம் கொஞ்சம் கூட விருத்தியடையவில்லை. மாறாக மாமி வீட்டுப் பூனைகளுடன் நல்லுறவு ஏற்பட்டது.

சமையல் முடியாததால் பாடம் ஆரம்பிக்க தாமதமாகும் வேளைகளில் அவற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அலமேலுவின் நினைவு வரும். என் வீட்டிற்கு தினமும் இரண்டு மூன்று முறையாவது, வெள்ளை ரோமம் மண்டிய, பருத்த உடல் கொண்ட அலமேலு வந்து செல்லும். தெருவில் அதை எப்படி அழைத்தாலும், என்னளவில் அவளை அலமேலு என்றே கூப்பிட்டு வந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் சிறு ஒலியை எழுப்பி விட்டு படுத்துக் கொள்ளும் அலமேலு, நாங்களாக கிண்ணத்தில் எதாவது வைத்தால் மட்டும் அதை சாப்பிடும். எங்கள் வீட்டில் சில காலம் வளர்த்து வந்த நாய் ‘ஐவனுடனும்’ நல்லுறவை பேணியது அலமேலு. போர்ஷன் வாசலில் இரண்டும் அருகருகில் படுத்தபடி தத்தம் உலகங்களில் ஆழ்ந்திருக்கும். விடுமுறை நாட்களின் மதிய பொழுதுகளை எலிலுமிச்சை மரத்தடியில் உட்கார்ந்தபடி கழிக்கும் எனக்கு, தூக்கத்தினூடே அரைக்கண்ணை அவ்வப்போது திறந்து பார்க்கும் அலமேலுதான் துணை. ஒருநாளேனும் அலமேலுவை இங்கு அழைத்து வர வேண்டுமென்றும் எண்ணினாலும் அதைச் செய்யவில்லை. தன் பூனைகள் சிறிது நேரம் வெளியே சென்று தெருவுக்குப் போய்விட்டு வருவதைக்கூட விரும்பாதவர் மாமி.

மாமி வீட்டுப் பூனைகள், பாடம் நடக்கும்போது வீட்டினுள் திரிந்தபடியோ அல்லது எங்கள் அருகில் படுத்துக் கொண்டோ இருக்கும். சில நேரங்களில் மெல்லிய குரலில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்போது, புன்சிரிப்புடன் தடவிக் கொடுத்தபடியே மாமி தொடர்வார். என்னைவிட அவை சங்கீதத்தை குறித்து அதிகம் அறிந்து கொண்டிருந்தால் வியப்படைந்திருக்க மாட்டேன். பாடத்தின் நடுவே மாமி சில பாடல்களை பாடுவது உண்டு, சில சமயம் முணுமுணுப்பாய், சில சமயம் சன்னமான ஆனால் தெளிவாக புரியும் வகையில். லயித்து பாடிக்கொண்டே தூணிலோ, சுவற்றிலோ சாய்ந்து விடுவார். குறிப்பாக கண்ணன் குறித்த பாடல்களை பாடும்போது அவர் முகம் மிக நெகிழ்வாக இருக்கும், பூனையை மடியில் வைத்துக் கொண்டு அதை வருடியபடி பாடிக் கொண்டிருப்பார்.

க்ளாஸ் முடிந்து வெளியே வந்ததும் பரக்க பரக்க நடக்கத் துவங்கினேன். ஐம்பதடி நடந்து திரும்பினால் என் தெரு, அதன் பின் சமாளித்து விடலாம். என் பின்புற காலி மனை வழியாக மாமி வீட்டு கொல்லையை இன்னும் விரைவாக நொடிகளில் அடைந்து விடலாம். பாட்டுக் கற்றுக் கொள்ளச் செல்வதை யாரும் பார்க்காமல் இருக்க இருட்டில் செடி புதர்களின் நடுவே சென்று சுவரேறி குதிக்கக்கூட தயாராக இருந்தேன். ஆனால் மாமி வீட்டை அடுத்திருந்த பழைய திருமண மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் பார்த்து கையசைத்து கூப்பிட்டு விட்டார். மனையில் கிரிக்கெட் விளையாடும்போது மண்டபத்தினுள் சென்று விழும் பந்தைப் பொறுக்கச் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம். மாமி வீட்டு கொல்லையில்கூட பந்து விழுந்து விடும். எந்த பயமும் இல்லாமல் எடுத்து வருவோம், பின் பக்க கதவு திறந்து பார்த்ததில்லை. பெரியவர் அருகே சென்றேன்.

‘என்னடா இங்க, கொஞ்ச நாளா இங்க பாக்கறேன் கூப்டலாம்னு பாத்தா அதுக்குள்ள குடுகுடுன்னு ஓடிட்ற’ வெள்ளை கதர் சட்டை, வேட்டிதான் எப்போதும் பெரியவர் அணிவார். மூக்குக் கண்ணாடிக்கு பின் சேதமடைந்த வலது கண்.

‘இல்ல பாட்டு கத்துக்கறேன் மாமிட்ட, இப்போ ஸ்கூல் வர்க் வேற இருக்கு போய் பண்ணனும்’

‘அதுக்கு ஏன்டா திருடன் மாறி வர போற, அப்டி என்ன அவசரம்’ என்று சொல்லியபடி அவர் கண்ணாடியை கழற்ற பார்வையை அவர் முகத்திலிருந்து விலக்கினேன். ‘பசங்க பாத்தா அசிங்கமா இருக்கும், செமத்தியா கிண்டல் பண்ணி ஓட்டுவாங்க’ தெருவில் வந்துகொண்டிருப்பவர்களை பார்த்தபடி சொன்னேன். பெரியவர் பார்ப்பது பிரச்சனை இல்லை, மாமி வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடு தள்ளிதான் கஞ்சாவின் வீடு. அவனைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நான் ஒளிந்து மறைந்து சென்று வந்துகொண்டிருந்தேன்.

‘ஏண்டா கிண்டல் பண்றாங்க, பண்ணா பண்ணிட்டு போட்டும். நானும்தான் கத்துக்க ஆசப்ட்டேன் முடில’ சொல்லிவிட்டு ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். சாதாரணமாக அமர்ந்திருப்பதால் முட்டி மேல் அவர் தாளம் போடுவதில் உள்ள லயம் எனக்கு எப்போதும் வாய்க்காது.

‘நீங்க அப்பறம் ஏன் கத்துக்கல என்னாச்சு’

‘ம், இதுவரக்கும் நீ என்ன கத்துண்ட்ருக்க. என்ன பாட்டு முழுசா தெரியும்’. பெரியவர் தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இந்த மண்டபத்தில் வசிக்கிறார். சொத்தில் பங்காக பெரியவருக்கு இதை அவர் குடும்பத்தினர் தந்து ஏமாற்றி விட்டனர் என்றும் இல்லை அவராக கேட்டு வாங்கியதுதான் என்றும் தெருவில் பேச்சு உண்டு.

‘முழு பாட்டா, இன்னும் அதே ‘ஸ நி த’தான் அதையே தாண்ட மாட்டேன்னு நெனக்கறேன். பசங்க கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க’ என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கஞ்சா வந்து விட்டான். பீடா சாப்பிட வேண்டும் என்று பல காலமாக பயலுக்கு ஆசை. இந்த கோடை விடுமுறையின்போது செட்டித் தெரு ‘சேட்’ கடையில் ஜர்தா பீடா வாங்கி குதப்பிக் கொண்டிருந்தவனை அவன் தந்தை பார்த்து விட்டு அடித்து புரட்டியபடி வீட்டிற்கு அழைத்து வந்தது முதல் ராஜாராமன் கஞ்சாவாகிவிட்டான்.

‘என்னடா நிக்கற இந்த நேரத்துல, என்ன புக்’ என அவன் கை நீட்ட ‘நாடார் கடல பாத்தேன், பேசிட்டே வந்தோம்’ என்றார் பெரியவர்.

‘ரப் நோட்டா, கடேல வாங்கினேன், அப்டியே இப்டி வந்துட்டேன், கெளம்பறேன்’

மாமா உள்ளறையில் இருந்து வெளியே வந்து, எங்கள் பக்கம் திரும்பாமல் புழக்கடைக்குச் சென்றார். ஒல்லியான தேகம், கை வைத்த பனியன், வேஷ்டி. நான் க்ளாஸ்சிறகு வருவதற்கு முன்பே அலுவகத்தில் இருந்து திரும்பி வந்து விடுபவர் எப்போதும் உள்ளறையில்தான் அமர்ந்திருப்பார். தண்ணீர் குடிக்க நான் சமையலறைக்குச் செல்லும்போதெல்லாம் விளக்கு போடப்படாத ஹாலின் வெளிச்சம் மட்டுமே ஊடுருவி இருக்கும் அறையில் ஈஸி சேரில் சுவற்றில் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருப்பதை கவனிப்பேன். வீட்டில் பேப்பர் வாங்குவது இல்லை, தொலைக்காட்சி கிடையாது. ரேடியோ எப்போதும் ஹாலில் தான் இருக்கும்.

எங்களருகில் அமர்ந்திருந்த பூனைகளில் ஒன்று சோம்பல் முறித்து எழுந்தது. ‘உள் ரூம்க்கு போது மாமி’ என்றேன் நான், ‘குருவாயூரப்பா’ என்றபடி எழ முயன்றவர், ‘கண்ணா நீ போய் கூட்டிண்டு வாடா, அவர் வந்துரப் போறார்’ என்று சொல்லி முடிக்கும்போது மாமா திரும்பிக் கொண்டிருந்தார். எழுந்து சென்றேன். அறையின் மூலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த பூனையில் அருகில் சென்று காலை ஓங்கினார் மாமா.

‘மாமி இங்கதானுருக்கு உள்ரூம்ல,’ திரும்பியவரை காலில் பூனை வந்து உரசி ஒலியெழுப்பும் வரை பார்த்தபடியே நின்றிருந்தேன். பூனையை தூக்கிக் கொண்டு நிமிரும் போதும் மாமாவின் பார்வை என்னிடமே இருந்தது.

‘உள்ள ரூம்ல லைட் போடல மாமி ‘ என்றேன் வந்தவுடன்.

‘தோ வரேன், மறந்துர்றார். குருவாயூரப்பா ‘ முனகியபடி எழுந்து ‘நாம என்ன பண்றது’ என்று சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்தார். எதுவும் சொல்லாமல் பூனையை வருடியபடியிருந்தவரிடம் ‘நீங்க ஸ்டேஜ்ல பாடிருக்கீங்களா மாமி’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் எங்க கண்ணா, ஏதோ சின்ன வயஸ்ல கத்துண்டதே பெரிய விஷயம்,’ என்றவரிடம் ‘நீங்க சொல்லிக் குடுப்பீங்கன்னு இங்க யாருக்குமே தெரில. நாங்கள்லாம் ஒங்க வீட்டுப் பின்னாடிதான் கிரிக்கெட் ஆடுவோம்’ என்றேன்.

‘முன்னாடிலாம் அவர்க்கும் புடிக்கும், அதுவும் சில பாட்னா கேட்டுண்டே இருப்பார்.’ என்று சொல்லிவிட்டு மெதுவாக பாட ஆரம்பித்தார். க்ளாஸ் முடியும்வரை அவர் பாடிக்கொண்டிருக்க நான் பூனைகளைக் கொஞ்சியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கத்தைவிட பெரிய கிண்ணத்தில் பால் சாதத்தை தனியாக ஒரு பூனைக்கு வைத்து விட்டு, அதனருகே வந்த மற்ற பூனைகளை இன்னொரு வழக்கமான பாத்திரத்தில் இருந்து உண்ணச் செய்தார்.

‘என்ன மாமி அதுக்கு மட்டும் ஸ்பெஷல்’

‘உண்டாயிருக்காடா’

வயிறு சற்று பெரிதாகத்தான் தெரிந்தது. அதன் பின் அதற்கு விசேஷ கவனிப்பு, அதற்கேற்ப வயிறும் பெரிதாகிக் கொண்டிருந்தது.

‘மாமி, அந்த ரூம் பக்கமே போகுது. குட்டி போட எடம் தேடுதுன்னு நெனக்கறேன்’

‘குருவாயூரப்பா, குட்டி போட்டா மத்த பூனைங்க கிட்டலேந்து கண்கொத்தி பாம்பா காப்பத்தணும். இதுல அந்த ரூம்னா.. நீ கெளம்பு, வெள்ளிக்கெழமே பாக்கலாம். வீட்ல பிராக்டிஸ் பண்றியோ’

‘பாக்கறேன் மாமி, ஹோம் வர்க்லாம் இருக்கு. வரேன் மாமி’

கிளம்பி வெளியே வந்தால் எதிரே கஞ்சா வருகிறான்.

‘என்னடா மாமி வீட்லேந்து வர, புக்க காட்டு’ என்று பிடுங்கி பார்த்து ‘நீதானா அது எங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க மாமி பாட்டு சொல்லித் தராங்க போலன்னு. அதான் அன்னிக்கும் இங்க பேசிட்டிருந்தியா’

அடுத்த நாள் வகுப்பறையில் ‘சாஆஅ, ற்ற்றீரீஈ, காஆஆ’ ‘குடுமி வெச்சுப்பியா இல்ல இல்ல பாகவதறு ஸ்டைல்லா. டோப்பா தான் பெஸ்ட்டு’

‘எப்போ ஸ்டேஜ்ல பாடப்போற, இதுக்கெல்லாம் அரங்கேற்றம் உண்டா. நா துந்தணா ஒண்ணு இருக்குமே அத வாசிக்கறேன், இவன் பீப்பி, நீ பாடு’

‘நா பாடினாலே தாங்காது, இதுல நாம எல்லாரும் ஸ்டேஜ்ல இருந்தா இடிஞ்சே விழுந்துறும்’

வெள்ளியன்று சென்றபோது பூனை குட்டி ஈன்று விட்டிருந்தது.

‘உள்ள போய் பாரு. ரொம்ப கிட்டக்க போகாத, கடிச்சு விட்றும்’ என்ற மாமி, அறை மூலையில் இன்னும் கண் சரியாக திறக்காமல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொண்டு பால் குடிக்கப் பாயும் ஏழு குட்டிகள். ரோமமில்லாத உடல்களின் தோல் சொரசொரவென இருப்பது போல் பார்ப்பதற்கு தெரிந்தது. எங்கள் வீட்டில் உள்ள முயல்கள் போடும் குட்டிகள் முற்றிலும் ரோஸ் நிறத்தில் மிருதுவான சருமத்துடன் இருக்கும், முதற் பார்வைக்கு அணில் குட்டிகளோ அல்லது எலிகளோ என்றுதான் தோன்றும். குட்டிகளைத் தொட நெருங்கி, தாய் பூனையின் பார்வையில் இருந்த நட்பின்மையை கண்டு சற்று விலகி நின்றேன்.

‘தோல தொடலாம்னா மொறச்சு பாக்குது மாமி’ என்றேன்

‘கடசில இந்த ரூம்லதான் குட்டி போட்டுடுச்சு. ஹால்லதான் படுக்க வேண்டிருக்கு’

‘மாமா எங்கருக்கா இப்போ.’

‘சாங்காலமானா கோவிலுக்குப் போய் ஒக்கந்துக்கறார்’

மற்ற பூனைகள் உள்ளறையை நெருங்குகின்றனவா என்பதில்தான் அவருடைய கவனம் அன்று இருந்தது. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, ஹாலில் அமர்ந்தபடி இருவரும் குட்டிகளுக்கு காவலிருந்தோம். ‘துணி எடுத்துண்டு வரேன்’ என்று தூணைப் பிடித்தபடி மெதுவாக எழுந்தார். உள்ளறைக்குச் சென்று மீண்டும் குட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த மாமா பெட்டியில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு கிளம்பினார். குட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை. வெளியே மாமி அவரிடம் ஏதோ கேட்கும் ஒலி மட்டும், மாமாவிடமிருந்து பதில் வந்தாற்போல் தெரியவில்லை. உள்ளே வந்த மாமியின் கையில் மூன்று நான்கு துண்டுகளாக கிழிக்கப்பட்ட பழைய புடவை.

‘சாப்டாம அங்க போய் ஒக்காந்துக்கறார் வரத்துக்கு ஒன்போது பத்தாயிடுது. குட்டிகள தொரத்தி விடுங்கறார், எப்டி அனுப்பற்து சொல்லு’ என்றார்.

‘நா வேணா கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குட்டி எடுத்தக்றேன், என் பிரெண்ட்ஸ்டயும் சொல்றேன்’

அடுத்த சில நாட்களில் நன்றாக கண் திறந்த குட்டிகள் மெல்ல நடந்து வெளியே உலவ ஆரம்பித்தன. மாமா மீண்டும் உள்ளறையின் இருளில்.இ ன்னும் சந்தேகப் பார்வை நீங்கவில்லை என்றாலும் மாமியையும் என்னையும் குட்டிகளை தூக்க தாய் பூனை அனுமதித்தது. தண்ணீர் குடிக்க வெளியே வந்தவரிடம் ‘தோ பாருங்கோ, எப்படி தவழற்து’ என்று மாமி சொன்னதை அவர் கண்டு கொள்ளவில்லை. வெள்ளி மாலை மாமியின் வீட்டினுள் நுழையும்போது உள்ளறையில் சத்தம், இருவர் குரலும் உயர்ந்திருந்தது. சில கணங்கள் தயங்கி நின்று பின் ஹாலில் குட்டிகளுடன் விளையாட ஆரம்பித்தேன். வெளியே வந்த மாமி என்னைக் கண்டதும், உள்ளே பார்வையை செலுத்தி விட்டு ‘எப்போ வந்தே’ என்றார்

‘இப்போத்தான் மாமி, சும்மா வெளயாடிட்டிருந்தேன்’

மீண்டும் உள்ளே பார்த்துக் கொண்டே ‘பத்து நிமிஷம் பொறுத்துக்கோ, வரேன்’ என்றார்.

‘வேணா மண்டே வரேன் மாமி’

‘வேணாம் கண்ணா தாளிச்சுட்டு மட்டும் வந்துர்றேன், நீ குட்டிகள பாத்துட்டிரு’

வந்தமர்ந்தவர் சுவற்றில் சாய்ந்து இமைகள் மூடியபடி பாட ஆரம்பித்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அருகில் சுற்றிக் கொண்டிருந்த குட்டிகளில் ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது உள்ளறை பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மெலிதாக கத்த ஆரம்பித்த குட்டியொன்றை மற்றவை தொடர்ந்தன. சீரற்று வெளிவந்த அவற்றின் பலவீனமான குரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் சிதறியும், மாமியின் பாட்டோடு இணைந்து பிரிந்தன. கண்ணைத் திறந்த மாமி பாட்டுப் புத்தகத்தை குட்டிகளின் மீது வீசினார். ‘வத வதனனு பன்னி மாறி பெத்து போடறா, எழவ கொட்றதுகள்’

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.