சிகந்தர்வாசி
மதியம் மூன்று மணிவாக்கில் 500Aவில் ஏறினேன். ஏ.சி. பஸ் அது. மதிய வேலை என்பதால் டிரைவர், கண்டக்டர் தவிர கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். நான் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கதவுகள் மூடியவுடன் அவள் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்தது.
“.. அவா ரெண்டு பேரும் மீட் பண்ணிண்டா. தீபக் நல்லா பேசினான்னு சொன்னா. ரொம்ப நேரம் பேசினாப் போல இருக்கு. அவளுக்கு ஓகேன்னு சொன்னா. அவனும் ஓகே சொல்லியிருப்பான்னு நெனைக்கறேன்” தமிழில் பேசினாள். உரக்க பேசினாள். வேறு மனிதர்கள் பஸ்ஸில் இருப்பதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
சற்று நேரம் மௌனத்துக்கு பின், “அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவ ரொம்ப கான்பிடண்டா இருந்தா. ஆனா இப்போ அவன் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறான்”
“…”
“சார், உங்களுக்கு இது பத்தி தெரியாதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா நீங்க அவனோட மேனேஜர். நீங்க ஒரு வார்த்த அவன கேக்கலாம்”
“…”
“அது கரெக்ட்தான் சார். இது பர்சனல் விஷயம்தான். ஆனா நாங்க என் கசினுக்கு கல்யாணம் ஆகணும்னு ரொம்ப டென்ஷனா இருக்கோம். அதுக்குதான் உங்கள கேக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட்தான்.”
“…”
“இல்ல சார். நீங்க அவன போர்ஸ் பண்ண வேணாம். ஆனா ஏன் அவன் வேணாம்ன்னு சொல்றான்னு கேளுங்களேன்?”
“…”
“அவளுக்கு இப்போ முப்பது வயசாச்சு சார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்னு என் சித்தி சித்தப்பா பாக்கறா. இவ்வளவு நாள் அவ வேண்டாம்ன்னு இருந்தா. இவனதான் மொதல்ல சரின்னு சொல்லியிருக்கா. இந்த சந்தர்ப்பத்த விட முடியாது சார். நீங்கதான் எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணனும்”
“…”
“சார் நான் சொல்லறத கேளுங்க சார். ப்ளீஸ்.” அவள் குரல் உயர்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். “மனை அனுக்கொண்டிதாரே” என்றார் என்னிடம். பஸ் ஸ்டாப்பில் நின்றது. ஒருவர் ஏறிக்கொண்டார்.
கதவு மூடியபின் மறுபடியும் அவள் குரல். “…இருக்கலாம் சார். இல்லேன்னு சொல்லல. நீங்க இவள உங்க தங்கையா நினைச்சுக்கோங்க. ஒரு சிஸ்டருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஹெல்ப் பண்ணுங்கோன்னு கேக்கறேன்”
“…”
“இல்ல சார். அவருக்கு நீங்க மேனேஜர். நீங்க மனசு வெச்சா அவன கன்வின்ஸ் பண்ணலாம் சார். ஒரு தங்கைக்கு …”
“…”
“உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்த காலத்துல கல்யாணம் பண்ணி வெக்கறது எவ்வளவு கஷ்டம்னு. அதுவும் பொண்ணும் பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பற மாதிரி இருக்கறது இன்னும் கஷ்டம். அதுனாலதான் இது கை நழுவக்கூடாதுன்னு பாக்கறேன்”
“…”
“அவளுக்கு அவன பிடிச்சிருக்கு சார். அதுனாலதான் அவனுக்கு அடிக்கடி போன் பண்றா. இத ஏன் அவன் தப்பா எடுத்துக்கறான்? அடிக்கடி போன் பண்றதுல என்ன சார் தப்பு இருக்கு?”
“…”
“ஓகே சார். ஐ அண்டர்ஸ்டான்ட். நான் அப்புறம் போன் பண்றேன்”
அடுத்த ஸ்டாப் வரை நிசப்தமாக இருந்தது. ஸ்டாப்பில் பஸ் நின்றவுடன் அந்த பெண் இறங்க வந்தாள்.
பஸ்ஸில் இருந்த மற்றொருவரும் எழுந்து, “நீங்க தமிழ் போல இருக்கு. நீங்க பேசறத நான் கேட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அந்த பெண்ணுடன் பஸ்ஸைவிட்டு இறங்கினார்.
பஸ் கதவு காற்றை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மெல்லிய சப்தத்துடன் மூடிக் கொண்டது.
Like this:
Like Loading...