அதிகாரநந்தி

கவிதைகள் வேண்டி…

-அதிகாரநந்தி – 

எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை

ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?

துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது

சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்

சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது

விசாரம்

நில்லாது தொடர்ந்து
கொண்டேயிருக்கின்றன
கேள்விகள்

மெளனம் நிலைத்துவிடக் கூடாதென்ற
அதீத சிரத்தையுடன்
இடைவெளியின்றி
ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று
 
எந்த பதிலையும் எதிர்பாராது
எந்த சமாதானத்தையும்
லட்சியம் செய்யாது
 
தேய்ந்து போன குழாயிலிருந்து
சொட்டிக் கொண்டேயிருக்கும்
நீரைப் போல்
 
ஆதியில்லை
அந்தம் இல்லை
இலக்குகளும் இல்லை

நீர் வற்றிய குழாய்களுக்கு
என்ன மிச்சமிருக்கும்?
                                            – அதிகாரநந்தி

காலத்தின் முன்னே

 

Stained Glass, Berne, Switzerland,

 

மனிதரின் அன்புக்கு பாத்திரமாக
இருக்க ஆசைப்படாதீர்கள்

அவர்கள் எத்தனை மோசமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று குத்திக்காட்டுங்கள்

அவர்களுடைய உழைப்பைத்
திருடிக் கொள்ளுங்கள்
முடியுமானால்
அவர்தம் கரங்களை முறித்துவிடுங்கள்

வருடங்கள் கடந்து சந்திக்கும் போது
உங்கள் அல்ப அதிர்ஷ்டங்களையும்
அவர்களின் புதைக்கப்பட்ட ஆசைகளையும்
நினைவுபடுத்துங்கள்

காலம் வழக்கம் போல்
நம்மிடம் வேறுபாடு காட்டாது
போகட்டும்

நம் நண்பர்கள் தங்கள் பெயர்த்திகளுக்குச்
சொல்லும் கதைகளில் ராக்‌ஷதர்களாய்
எஞ்ஞான்றும் வாழ்வோம்!

–  அதிகாரநந்தி

Image credit : Mememto Mori, Catholic Eye Candy

 

நாள்

பகல் முடிகிறது
இரவு கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வருகிறது

பகலில் நகரெங்கும்
அலைந்து திரிந்த பேருந்து
தான் சேகரித்த
​வெப்ப​​த்தை
தன் பயணிகள் மீது கொட்டுகிறது

பள்ளியில் நடந்த கதைகளைச்
சொல்வதற்காக குட்டிக் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றன

அலுவலகத்தில் தொடங்கிய கணக்குகள்
கர்த்தாவின் மீது நம்பிக்கையிழந்து
தங்களைத் தீர்க்க சுயமாக
முயன்றுகொண்டிருக்கின்றன

எத்தனை விரட்டினாலும் பின்னாலேயே
வந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்
கோவில் பிச்சைக்காரியைப் போல
நாள் நம்மை
துரத்திக் கொண்டேயிருக்கிறது.

காத்திருத்தல்

-அதிகாரநந்தி-

பொறுப்புகள் எல்லம் முடிந்தாயிற்று

பேரன் பேத்திகள் பார்த்தாயிற்று
அவளும் போய்ச் சேர்ந்தாயிற்று
போதும் போதும்
மானசீகமாக ஒரு நன்றி
இதுவரை பலம் கொடுத்ததற்கு

பெரியவர் கண் மூடி
இருந்தார்

மறுபிறப்பு பயம் மட்டும்
அடி ஆழத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது

*************

எத்தனையோ
பேருந்து நிறுத்தங்களில்
தெரு முனைகளில்
தேர்வு மையங்களில்
அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்

தாமதத்தை அவன் கொள்கையாகவே
வைத்துக் கொண்டிருந்தான்

நாங்கள் மீண்டும் சந்திக்கும்போது
அவன் கேட்கக்கூடும்
“கொங்கப்பன்மவனே! உனக்காக எத்தன
நாள்தான் காத்துக்கிட்டிருக்கிறது”