இலைகள் விழுந்து சருகாவதிலும் சருகாகி காற்றில் வீழ்வதிலும் நியதிகள் எங்கும் மீறப்படாதபோது கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து சுடர் அடங்கி அணைந்தாலும் ஒற்றை விளக்கின் திரியிழுத்து இருளின் கருமையில் இணைந்தாலும் புலரியின் பொலிவு குறைபடாதபோது சொற்களின் குறைவில் பிறந்தாலும் மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் கவிகளின் வீச்சு கறைபடாதபோது அலை வீசி ஆர்ப்பரித்து கரை தாண்டி சென்றாலும் கால்தடவி கலம்தாங்கி கட்டுக்குள் நின்றாலும் ஆழியின் அற்புதம் புரிபடாதபோது அனைத்தும் ருசிக்க அனைத்தும் புரிய அனைத்திலும் இழுபட அனைத்திலும் இழிபட நான் காத்திருப்பதில் தவறென்ன?
கவிதை
நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – ஜிஃப்ரி ஹாசன்
ஞாபகங்களால் நிரம்பியுள்ளது எனது வீடு. வெறுமையான சுவர்களில் ஒட்டி இருக்கின்றன நினைவுகள். என்னை மெளனம் போர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் இதயத்தை நிரப்புகின்றன ஞாபகங்கள். வாழ்வு பற்றிய ஞாபகங்களுக்கு அஞ்சி ஒரு குழந்தையைப் போல் வீட்டின் மூலைகளில் பதுங்கிக் கொள்கிறேன். யன்னலின் வழியே யாரோ அழைக்கும் குரலுக்கு செவிசாய்த்தலின்றி என்னைக் கள்ளத்தனமாய் மூடுகிறது மௌனம். ஞாபகங்களின் கரங்கள் கதவில் பயங்கர இரைச்சலுடன் தட்டத் தொடங்குகையில் மௌனத்தின் ஆமை ஓட்டுக்குள் பதுங்குகிறது மனம். இந்தப் பொழுதும் ஞாபகமாய் நெஞ்சில் அறையுமுன் அதன் கனவுகள் இதயத்தில் இடறு முன் என் கதாபாத்திரத்தை நான் மாற்றிக் கொண்டு வருகிறேன். ஏனெனில், ஞாபகங்களால் நிரம்பியுள்ளது என் வீடு.
ஆனந்த அருவியின் இனிய இசை – பாவண்ணனின் கவிதைத் தொகுப்பு
ஊரும் சேரியும், கவர்ன்மென்ட் பிராமணன் ஆகிய மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக பாவண்ணனின் ‘குழந்தையைப் பின்தொடரும் காலம்’ கவிதைத்தொகுதி வெளிவந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதுதான் நான் கவிதைகள் வழியாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நிலையானதொரு பணியில் நான் அமர்ந்திருந்தேன். பாவண்ணனின் முதல் சிறுகதைத் தொகுதி 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு மேலும் பத்தாண்டுகள் 1997 வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது.
‘குழந்தையைப் பின்தொடரும் காலம்’ தொகுதியில் பல கவிதைகள் இன்னும் என் நினைவில் பதிந்திருக்கின்றன. அத்தொகுதியின் முதல் கவிதை பாவண்ணன் தன் அம்மாவைப்பற்றி எழுதியிருக்கும் கவிதை. கிட்டத்தட்ட சுயசரிதையின் சாயல் உள்ள கவிதை. ‘அன்புதான் முதல்படிப்பு, அதுக்கப்புறம்தான் பட்டப்படிப்பு’ என முடிவடையும் அக்கவிதையை பல முறை திரும்பத்திரும்ப படித்திருக்கிறேன். அந்த வரிகள் ஒரு ஆப்த வாக்கியம்போல மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.
இன்னொரு கவிதையும் நினைவில் இருக்கிறது. ஒரு பெட்டிக்கடையில் கடைக்காரர் ஒலிபெருக்கியெல்லாம் வைத்து நல்ல நல்ல பாட்டுகளை வைத்து ஒலிக்க வைத்தபடி இருப்பார். வாடிக்கையாளர்கள் வருவார்கள், போவார்கள். அந்தக் கடைக்கு அருகில்தான் பேருந்து நிலையம் இருக்கும். பல பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும். நிறைய மனிதர்களின் நடமாட்டம். இரைச்சல். வேறொரு பக்கம் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் மக்களின் பேச்சுச்சத்தம். பழவண்டிக்கடைகள். மிதிவண்டியில் இளநீர்க்குலைகளைச் சாய்த்துவைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் இளைஞன். அங்குமிங்கும் நடக்கும் பெண்கள். கையேந்தித் திரியும் பிச்சைக்காரர்கள். ஏராளமானவர்கள் நடமாடுகிறார்கள். அவர்களில் யாருக்கும் அந்தப் பாட்டை காதுகொடுத்துக் கேட்கும் பொறுமையோ, விருப்பமோ, நேரமோ இல்லை. கடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். கடைக்காரர் அதைப் பற்றியெல்லாம் நினைத்துச் சோர்வடைவதே இல்லை. பாடல்களை மாற்றிமாற்றி வைத்தபடியே இருப்பார்.
முதல் வாசிப்பிலேயே எனக்கு அந்தச் சித்திரம் பிடிபட்டுவிட்டது. அச்சுஅசலாக எங்கள் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் சித்திரம் அது. அந்த நிறுத்தத்தில் நானும் நின்றிருக்கிறேன். அந்தப் பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். அதை நினைத்துநினைத்து மகிழ்ந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அத்தொகுதியை மறுபடியும் வாசித்தபோதுதான், அது வெறும் கிராமத்துச்சித்திரம் மட்டுமல்ல என்பது புரிந்தது. தன் பாட்டை ஒருவரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றபோதும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதுபோல, அவன் தன் போக்கில் பாடல்களை பாடவைத்தபடி இருக்கிறான் என வேறொரு கோணத்தில் புரிந்துகொண்டேன். அந்த வெளிச்சம் கிடைத்த பிறகு எனக்கு அந்தக் கவிதை மனசுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. முதல் கவிதையில் தன் அம்மாவின் சித்திரத்தைத் தீட்டிய பாவண்ணன், அடுத்தடுத்த கவிதைகளில் தன் சித்திரத்தை தானே தீட்டிவைத்திருக்கிறாரோ என நினைக்கத் தோன்றியது. மூன்று கவிதைத்தொகுதிகள், கிட்டத்தட்ட நூறு கவிதைகளின் பிரசுரத்துக்குப் பிறகும்கூட பெட்டிக்கடைப் பாடல்கள்போல பாவண்ணனின் கவிதைகள் கவனம் பெறாமலேயே போயிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருக்கிறது.
பல கவிதைகளில் தன் கண்களால் காண நேர்ந்த காட்சிகளையே பாவண்ணன் கவிதையாக்குகிறார். காட்சியை முதற்பொருளாகவும் திரைக்குப் பின்னால் வேறொரு அம்சத்தை மறைபொருளாகவும் இணைத்து அவர் நெய்திருக்கும் விதம் வசீகரமாக இருக்கிறது. அடைமழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல், நனையும் தன் குழந்தையின் தலையை முந்தானையால் மறைக்கும் பிச்சைக்காரி, கடலில் அகப்பட்ட மீன்களை வலையிலிருந்து உதறும் மீனவர்கள், பிழைப்பதற்காக புதிய ஊருக்கு திருட்டு ரயில் ஏறிவரும் புதியவனை சந்தேக வழக்கில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் காவல் வாகனம், மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்காத மாணவிக்கு முட்டிப் போடும் தண்டனையைக் கொடுக்கும் ஆசிரியை, அந்த ஆசிரியை அடுத்த பிறவியில் கழுதையாகவோ நாயாகவோ பிறந்து தெருத்தெருவாக அலைந்து திரிய வேண்டும் என மனத்துக்குள் சாபமிடும் மாணவி, கோபம் கொண்ட அந்த மாணவியை அமைதிப்படுத்தியபடி மதில்மேல் ஓடும் அணில், ஆலமர விழுதில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இளம்பெண், கூடு கட்டுவதற்காக கவ்விச்சென்ற குச்சியை தவறவிடும் காகம், ஆறுநாட்கள் தொடர்மழையால் அலங்கோலமாகும் நகரம், உயர்ந்த மரத்தின் உலர்ந்த கிளையில் உட்கார்ந்து குதிரையோட்டும் சுள்ளி பொறுக்கும் சிறுமி, ஒற்றைக்கால் பந்தலென நிற்கும் வேப்பமரம், விண்ணையும் மண்ணையும் தொட்டபடி விஸ்வரூபமெடுக்கும் குற்றாலத்துத் தேனருவி, நகரத்தெருக்களில் இரவு வேளைகளில் நாய்கள் உறங்கும் அழகு, ஐயனாரின் வாளிலிருந்து மரத்துக்கும் மரத்திலிருந்து வாளுக்கும் மாறிமாறிப் பயணித்து நிலைகொள்ளாமல் தவிக்கும் சுடுகாட்டுக் குருவி, நடைப்பயிற்சியில் நாயைத் தொலைக்கும் முதியவர், காக்கைக்கு வைத்த படையல் சோறென காட்சியளிக்கும் அருவியில் மாண்டவனின் உடல் என பாவண்ணன் கவிதையுலகில் ஏராளமான காட்சிகள். அவற்றை மீண்டும் மீண்டும் மனத்துக்குள் மீட்டிமீட்டி மறைபொருளைக் கண்டறிந்து சுவைக்கும்போது கவிதைகளை மிகவும் நெருக்கமாக உணரமுடிகிறது.
கண்முன் விரியும் காட்சிகளை கவிஞரின் மனம் புகைப்படங்களாகச் சேமித்துக்கொள்கிறது. மனத்துக்குள் அவற்றை அசைபோடுகிறது. துல்லியமான அவதானிப்பும், காட்சிகள் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்களும் தங்குதடையற்ற மொழியின் ஆற்றொழுக்கும் சொல்லாமல் சொன்னபடி விலகியோடும் மறைபொருளும் கவிதை ஓவியங்களாக விரிகின்றன என பாவண்ணனின் கவிதைகளின் சூத்திரமாக பொதுவாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் இந்த எளிய சூத்திரத்தில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் அடக்கிவிடமுடியாது என்பதையும் உணரமுடிகிறது. எடுத்துக்காட்டாக ‘அணில்’ கவிதை. அதன் மையப்பொருள் மரணம். மரணம் அதிர்ச்சியடைகிறது. காரணம், வாழ்க்கை தன்னை கைவிட்ட அதிர்ச்சி.
வாழ்க்கையின் முகத்தில் துளிர்த்திருக்கிறது
மரணம் தூவிய விதை
உறக்கத்தில் ஏதாவது
ஒரு வாசல் வழியே நுழைந்து
ஏதாவது ஒரு வாசல் வழியே
வெளியேறுகிறது மரணம்
நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்
பாதங்களுக்குக் கீழே
நிழல்போல ஒட்டிக்கிடக்கிறது மரணம்
கவித்துவம் வாய்ந்த இறுதி வரிகள் மிகமுக்கியமானவை: மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது / பழங்கள் தொங்கும் / கிளைக்குக் கிளை நகரும் அணில்போல. அணில் மரணத்திற்கான மிக இயல்பான படிமமாக வந்துள்ளது. பாவண்ணனின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக ‘அணில்’ கவிதையைச் சொல்லமுடியும்.
பாவண்ணனின் கவிதைகளில் சிறுமிகளும் பெண்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். ‘பூ’ கவிதையில் வரும் சிறுமி தன் கனவில் பூ விழுகிறது என்று சொல்கிறாள். ஆனால், அடுத்தவர் கனவிலும் பூ விழுகிறது என்று சொன்னால் அது கனவாகவே இருக்காது, ஏதேனும் கதையின் நினைவாக இருக்கலாம் என கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடி விடுகிறாள். ’புன்னகையின் வெளிச்சம்’ கவிதையில் ஒரு சிறுமி இடம்பெற்றிருக்கிறாள். அவளுக்கு இறவாணத்து மூலையில் கையுடைந்த மரப்பாச்சிப் பொம்மையொன்று கிடைக்கிறது. அதைக் கழுவித் துடைக்கிறாள். ஆனந்தச் சிரிப்போடும் அளவற்ற ஆசைகளோடும் பாட்டுத்துணுக்குகளோடும் பரிகாசப் பேச்சுகளோடும் ஓர் ஊஞ்சல் அசைகிறது. சூரியனைப் பற்றும் விருப்போடு விண்ணைத் தொட ஊஞ்சல் காற்றில் பறக்கிறது. குழலாட, குழையாட, குட்டைப்பாவாடை சரசரக்க, இன்னொரு சிறுமி ஊஞ்சலாடுகிறாள். அவளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுமிகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து நிற்பவளிடம் ஒரு புன்னகையைப் பரிசாக அளிக்கிறார்கள். இருண்ட சமையலறையின் மூலையில் தன் வெளிச்சத்தைப் படரவிட்டது அந்தப் புன்னகை. கையொடிந்த மரப்பாச்சிப் பொம்மை நிறைவேறாத கனவுகளைக் கொண்ட சிறுமிகளுக்குப் படிமமாவது மிகச்சிறப்பானது. சமையலறை மூலையை அவர்களுடைய புன்னகை வெளிச்சமூட்டுவது குறியீட்டுத் தன்மை வாய்ந்தது. இன்னொரு பெண்குழந்தை ‘வழிபாடு’ கவிதையில் வருகிறாள். குழந்தையும் தெய்வமும் இணையும் புள்ளியை சாதாரண வரிகளின்மூலம் அசாதாரண கவித்துவத்தை பாவண்ணன் வெளிப்படுத்துகிறார். கருவறைக்கு பொற்பாதம் காட்டி/ சட்டென்று விழுந்து சிரிக்கிறது குழந்தை.
சிறுமிகள் அடிக்கடி வருவதுபோல கவிதைகளில் அருவிகளும் அடிக்கடி இடம்பெறுகின்றன. மழை மீண்டும் மீண்டும் வருகிறது. (குறைந்தபட்சமாக பதினைந்து கவிதைகள்) பல கவிதைகளில் பட்டங்கள் பறக்கின்றன. மலர்கள் மலர்கின்றன. நாய்கள் உலவுகின்றன. காக்கைகள் கரைகின்றன. கனவுகள் மீண்டும் மீண்டும் விரிகின்றன. இப்படி திரும்பத் திரும்ப வந்தாலும்கூட அவை ஒற்றைப்பொருளை உணர்த்துவதில்லை. வெவ்வேறு வகைகளில் படிமமாகவோ, உருவகமாகவோ, குறியீடாகவோ மாறிமாறி வரிகளுக்கு வலிமையூட்டுகின்றன.
‘பயணம்’ கவிதை நல்லதொரு சிறுகதைபோல உள்ளது. ‘இளமை’ கவிதையின் இறுதிப்பகுதியில் உள்ள ஆறேழு வரிகள் அதிகப்படியாக நீட்டப்பட்டவையாக உள்ளன. கவிதை, அவ்வரிகளுக்கு முன்பேயே முடிவடைந்துவிட்டதுபோல இருக்கிறது. பொதுவாக பாவண்ணனின் கவிதைகள் அளவில் சிறியவை. ஆனால், ‘ஆதிக்காதலியின் அழுகுரல்’ (நான்கு பக்கங்கள்) ‘உயிரின் இசை’(பத்து பக்கங்கள்) இரண்டும் மிக நீண்டவையாக உள்ளன. எனினும் சற்றும் நெருடாமல் இயல்பாக ஒரு நதியோட்டம்போல விரிந்து செல்கின்றன.
எளிய சொற்கள், நேரடியான வருணனைகள், ஒரு தளத்திலிருந்து சட்டென்று அடுத்த தளத்துக்கு தாவும் தன்மை, சாதாரண உருவில் இடம்பெறும் அசாதாரணமான படிமங்கள், முத்தாய்ப்பான உச்சம், காட்சிகளை படிப்பவர் மனத்தில் ஆணியாக அறையும் சித்தரிப்பு என பாவண்ணனின் கவிதைகளில் தனித்துவம் மிளிர்கிறது. ஒருவகையில் அவருடைய சிறுகதை மற்றும் புனைவு எழுத்துகளின் நீட்சியே அவருடைய கவிதைகள் என்று சொல்லலாம். கவிதைகள் நவீன வடிவில் இருந்தாலும் இரண்டாயிரமாண்டு தமிழ்க்கவிதைகளின் தொடர்ச்சியாக அவற்றைக் கருதத் தோன்றுகிறது. விழுமியங்களும் கருப்பொருட்களும் எடுத்துரைக்கும் விதமும் ஒருவேளை காரணங்களாக இருக்கக்கூடும். நவீன இலக்கியச்சூழலில் பாவண்ணன் ஒரு கவிஞராக மிகுதியும் அடையாளம் காணப்படாதது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக கடந்த சில நாட்களாக நான் படித்த பாவண்ணனின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் நினைத்துக்கொள்ளும் இத்தருணத்தில் (அவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும்) அருவிகளும் இசையும் என் நெஞ்சில் எழுகின்றன. அவர் மொழியிலேயே சொன்னால் ஆனந்த அருவி மற்றும் இனிய இசை. ஒருவகையில் , இவை இரண்டுமே பாவண்ணனின் கவிதைகளுக்கு உருவகங்களாக கொள்ளத்தக்க இரு பாடுபொருட்கள். ‘இருள்’ என்றொரு கவிதை. நடைபாதையில் தன் ஐந்து குழந்தைகளோடு உறங்கும் பிச்சைக்காரியின் தூக்கத்தைக்கூட கலைக்காமல் இருள் பயணிக்கிறது. இருள் எத்தனை கருணையோடு இருக்கிறது! ஆதரவற்றவர்களுக்குக்கூட அது ஆதரவளிக்கிறது. ஏனெனில் அது பாவண்ணன் படைக்கும் இருள். கருணையோடுதான் இருக்கும். இனிமையைத்தான் கொடுக்கும்.
‘நிறைதல்’ என்னும் பாவண்ணனின் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
மொழி புரியாத கடற்கரை ஊரில்
தென்னந்தோப்போரம் நடந்து செல்கிறேன்
கொட்டாங்குச்சி மேளத்தை
குச்சியால் தட்டியபடி
காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரே ஒரு சிறுமி
அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது
ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்
அருகில் நிற்பதை உணராமல்
அவளது விரல் குச்சியை இயக்குகிறது
அவள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு
குரங்குக்குட்டிகள் போல
உருண்டும் புரண்டும்
எம்பியும் தவழ்ந்தும்
நாடகமாடுகின்றன அலைகள்
கீற்றுகளின் கைத்தட்டல் ஓசை
கிறுகிறுக்க வைக்கின்றன அவற்றை
உச்சத்தை நோக்கித் தாவுகிறது ஆட்டம்
தற்செயலாக திரும்புகிறது சிறுமியின் பார்வை
தெத்துப்பல் காட்டிச் சிரிக்கிறாள்
தொடரும்படி அவளிடம் சைகை காட்டுகிறேன்
கரையெங்கும் பரவி
நிறைகிறது மேள இசை
**
சுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி
சித்தார்த்தனின் சொப்பனத்தில்
எப்போதும் போல இன்றும்
மாறாமல் வந்துவிட்டது
அந்தக்காட்சி,
என்றும் ஈரம் தாங்கிய
பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.
மழைக்கு பிந்தைய
அதிகாலைப் பொழுதொன்றில்
வீட்டின் அருகிருந்த
புல்வெளிக்காட்டில்
சிறு சிறு
வெண்குடைக்காளான்களை
ஓடி ஓடித்தேடி
மண்ணைத் தோண்டி
அடித்தண்டு வேர்முறியாமல்
பறித்ததில் சிதறிய
அவளுடைய கொலுசின்
சிணுங்கல்கள் மீட்டும்
வெள்ளி மணிகளின்
சமிக்ஞையை போல.
இருமொழிக் கவிதைகள் 1- ஒரு இடையன்
– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்) –
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று.
௦௦௦
One goatherd
Ten twelve goats
One goatherd
Ten twelve goats
But
Countless pails
Countless rainfalls
Countless turbans
Countless winds
Countless herding crooks
Countless days
One goatherd
Ten twelve goats
Beside a railway gate
Wondering when the hell it would open.
000
ஒரு தேர்ந்த சிறுகதையின் வடிவம் கொண்ட கவிதை இது. துவக்கத்தையும் அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் முடிவையும் இடையில் உள்ள பகுதி இணைத்து சிறுகதைக்கு ஒருமையும் வடிவமும் தருகிறது. இணைப்பாக மட்டும் இயங்காமல் இடைப்பகுதிகள் துவக்கமும் முடிவும் கூடும் புள்ளியாகி சிறுகதைக்கு செறிவும் ஆழமும் சேர்கிறது, நல்ல ஒரு சிறுகதையில் சொற்திரள் கூடி இறுக்கமான ஒரு பொருள் தருவதுபோல் இந்தக் கவிதையும், தனக்கேயுரிய மொழியில், எதிரொலிப்புகளின் மூலம் இதைச் சாதிக்கிறது.
இங்கு “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்பது மும்முறையும், “எண்ணிலிறந்த” என்ற சொல் ஆறு முறையும் வருகின்றன. “ஒரு இடையன்/ பத்துப் பனிரெண்டு ஆடுகள்” என்று மீண்டும் மீண்டும் ஒலிப்பது இந்தக் கணம் தொடர்ந்து நிகழ்வதைச் சுட்டுகிறது.. அதை, “ரயில்வே கேட் அருகில்/ எப்படா திறக்குமென்று” என்ற சொற்கள் நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு இடையில்தான் எண்ணிலிறந்த விஷயங்கள் வருகின்றன- ஒலியளவில் அவை ஒற்றைக் காட்சிகளால் நிறைவு செய்யப்படுகின்றன- எண்ணிலிறந்த – தூக்குவாளிகள், மழைகள், தலைப்பாகைகள், காற்றுகள், தொரட்டிகள், பகல்கள். எண்ணிலறந்த எனிலும் மீண்டும் மீண்டும் அச்சொல் ஒலிப்பதில் அத்தனை தூக்குவாளிகளும் மழைகளும் தலைப்பாகைகளும் காற்றுகளும் தொரட்டிகளும் பகல்களும் ஒன்றேயாகி ரயில்வே கேட்டின் இக்கணத்தின் நிரந்தரமாய் நிற்கின்றன. இங்கு, சிறு கற்பனைத் தாவலில் நாம் ஒரு சிறுகதை போல் துவக்கமும் முடிவும் நெருங்கி இணைந்து விடுவதைப் பார்க்கிறோம்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஒரு எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தூக்கு வாளிகள், தலைப் பாகைகள்- இரு சொற்கள் என்றாலும், ஒரு பொருளைச் சுட்டுகின்றன. இந்தக் கவிதையில் உள்ள எண்ணிலிறந்தவை அனைத்தும் வெவ்வேறு வஸ்துக்கள், விவரணைகளுக்கு அவசியமில்லாத புறப்பொருட்கள். இங்கு ஆங்கிலத்தில் தலைப்பாகைகள் என்பதை turbans என்றும் தொரட்டி என்பதை herding crooks என்றும் மொழிபெயர்க்க வேண்டியதாகிறது. ஆனால் தமிழ் வாசகர்கள் countless turbans என்ற இடத்தில் சீக்கியர்களையும் countless crooks என்ற இடத்தில் அரசியல்வாதிகளையும் காணும் சாத்தியத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. countless turbans என்ற இடத்தில் தலைப்பாகைகளை நினைத்துப் பார்த்தாலும் countless crooks என்பதை தொரட்டியாய் புரிந்து கொள்ள இடமில்லை என்று தோன்றுகிறது- எனவேதான் herding crooks என்ற விளக்கம் தேவைப்படுகிறது. countless days என்பதற்கும் countless summer days என்பதற்கும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. countless days என்பதில் எல்லா நாட்களும் தொகுக்கப்பட்டு விடுகின்றன, ஆனால் countless summer days பிற பருவங்களை நினைத்துப் பார்க்கவும் இடம் கொடுக்கிறது.
மொழிபெயர்ப்பில் சாத்தியப்படாத விஷயம் அது என்றால் pails, rains, winds, days என்று எண்ணிலிறந்தவற்றை ஏறத்தாழ ஒற்றை அசைகளில் மொழிபெயர்க்க முடிந்தது ஒரு நல்ல விஷயம். கவிதையில் சொல்லப்படுவது போலவே இங்கு எண்ணிலிறந்தவை ஒருமையைச் சேர்கின்றனவல்லவா? அது பொருத்தம். உருமாற்றம் மொழியின் இயல்பு. மொழியாக்கம், நகலெடுக்கும் பணியல்ல என்பதால் சில திரிபுகளைத் தவிர்க்க முடியாது. அவை இழப்பா செறிவா என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும்.


