Kjell Eriksson

தி பிரின்செஸ் ஆஃப் புருண்டி – ஷெல் எரிக்ஸோன்

– ஆர். அஜய்-

‘லிட்டில்’ ஜான் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு காவல்துறை உயரதிகாரி வருகிறார். அவர் அங்கு வருமளவிற்கு இந்தக் கொலை பரபரப்பான நிகழ்வு இல்லையென்றாலும் ஜானின் பதினாறாவது வயதில் அவனை முதன்முதலாக கைது செய்தவர் என்பதால் இந்த வருகை. பேருந்தில் தன் பள்ளிக்கால வகுப்பறை கனவுக்கன்னியை காண்பவனுக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறு திருப்தியை அளிக்கின்றன. ஆனால் பள்ளி நாட்களைப் போலவே இப்போதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது, அவனை அடையாளம்கூட காணாதது அவன் மறக்க நினைப்பவற்றை மீண்டும் கிளர்த்தி, அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை குலைக்கிறது. வெளியில் பாதுகாப்பாக நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்ப்பது போல் உள்ள குற்றப்புனைவுகளில் இருந்து மாறுபட்டு அச்சமும், துன்பமும், இருளும் நிறைந்த தங்கள் புனைவுலகுகளுக்கு வாசகனை இட்டுச் சென்று, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளி, புலனாய்வு செய்பவர்கள் என அனைவருக்கும் மனிதத்தன்மையை அளித்து வாசகனை சலனப்படுத்தும் நுட்பங்கள் மோஸ்தராகி விட்டாலும், ஷெல் எரிக்ஸோனின் (Kjell Eriksson) ‘The Princess of Burundi’ நாவலில் விரவியுள்ள, எந்தக் கணத்திலும் உடையக் கூடிய மனங்கள், முறியக் கூடிய உறவுகள் நிறைந்திருக்கும் அதன் நொய்மைத்தன்மை அதனளவில் தனித்துவம் கொண்டதாக ஆக்குகிறது.

காலத்தின் நிறுத்தவியலா பயணம், அப்பயணத்தில் எதிர்பட்ட திருப்பங்களில், வேறொன்றை தேர்வு செய்திருக்கலாமோ என்று ஜானின் நினைவுகள் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சிந்தனையை கிளர்த்துகின்றன. ஜானின் மரணத்தை பற்றிய செய்தியைப் படிக்கும் சக மாணவி அவன் மேல் தனக்கிருந்த ஈர்ப்பை நினைத்துப் பார்க்கிறாள். எரிக்ஸோன் இத்துடன் இதை விட்டிருந்தால் ஒரு வழமையான நிகழ்வாக மட்டும் இருந்திருக்கும். இந்தப் பெண்ணும் தனியாகதான் வசிக்கிறார் என்று நமக்குத் தெரிய வருகிறது. இப்போது காப்பகத்தில் உள்ள தன் பெற்றோரின் மனம் தெளிவாக இருந்த காலத்தில் அவர்களைச் சந்தித்த ஒரு சிலரில் ஜானும் ஒருவன் என்பதை நினைத்துப் பார்க்கிறார். ஜான் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவனிடமிருந்து விலகியதும் தெரியவருகிறது. அந்த முடிவு சரியே என்றுதான் இப்போதும் அவர் நினைக்கிறார், ஆனால் அவருடைய இப்போதைய தனிமையும் பதின்பருவத்தில் இருந்த கனவுகளும், இன்றைய நிஜமும் முரண்படும் இடம் தரும் வலி அவருள் தன் முடிவு குறித்த சந்தேகத்தின் விதையை விதைக்கிறது. தாங்கள் பிறந்து வளர்ந்த நகரின் தெருக்களின் பெயர்கள் மாறுவது, தன் கண்முன்னே அந்நகரம் வேறுருவம் கொண்டு அடையாளம் தெரியாமலாவது குறித்து ஜானின் நண்பனும், வழக்கை விசாரிக்கும் அதிகாரியிடம் அங்கலாய்க்கின்றான்.

பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பிழைப்புக்காக விலகி வாழ்தல் துயரமானது என்பது உண்மையே. அதே நேரம் சொந்த ஊரிலேயே வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதும் இல்லை. தங்களை அறியாமல் மனதளவில் அங்கிருந்து விலக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு அந்நியமாகிப் போவதிலும், அவர்களை அவ்விடத்துடன் பிணைக்கும் இறுதிக் கண்ணியான நினைவுகளும் துன்பம் நிறைந்ததாக மாறுவதிலும் உள்ள நகைமுரணை நாவலினூடே உணர முடிகிறது.

தம்பியின் மரணத்தால் தன்னிலை இழந்து பழிக்குப் பழி வாங்க அலையும், குற்ற வாழ்கையில் இருந்து வெளிவராத முரடனான ஜானின் அண்ணன் தம்பியின் நண்பன் மேல் சந்தேகம் கொள்கிறான். பேச்சுவாக்கில் தம்பி மனைவியின் நடத்தை குறித்து யாரோ சொல்ல, பற்றிக் கொள்ள வேறெதுவும் இல்லாததால் அதை நம்பி அவளிடம் சண்டை பிடிக்கிறான். இதுவரை ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருந்தவர்கள்தான் என்றாலும், ஜான் மீதுள்ள பாசத்தினால் மட்டும் இணைக்கப்பட்டவர்கள். இந்த துர்மரணத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஜானின் மகனை, தந்தை இறந்த அதிர்ச்சியோடு தாயின் நடத்தை குறித்து பெரியப்பாவின் குற்றச்சாட்டும் சேர்ந்து தாக்க, எந்த முடிவுக்கும் வர முடியாமல் தத்தளிக்கிறான். சிக்கலான பருவத்தை கடந்து கொண்டிருக்கும் அவன் வேறேதேனும் மோசமான முடிவை எடுக்கக் கூடும்.

தொலைகாட்சிகளில் வரும் புலனாய்வு அதிகாரிகள் போல் கிரேக்க தொன்மத்தில் ஆர்வம் கொண்டவர்களாக, ஒபேரா கேட்பவர்களாக இல்லாமல், பேருந்து ஒட்டுதல், தோட்ட வேலை செய்தல் போன்றவற்றை தேர்வு செய்யாமல், காவல்துறையை தேர்வு செய்த சாதாரணமானவள் நான், என்று ஜானின் கொலையை விசாரிக்கும் பெண் அதிகாரி தன்னை வரையறை செய்து கொள்கிறார். புலனாய்வில் ஈடுபடுபவர்களும் மிக நொய்மையானவர்களாகத்தான் உள்ளார்கள். திருமணமான சக அதிகாரி மீது ஈர்ப்பு கொள்ளும், தனி ஆளாக கைக்குழந்தையை வளர்க்கும் அதிகாரி, அது இட்டுச் செல்லக் கூடிய உறவின் அறம் குறித்து இரட்டை மனநிலையில் உள்ளார். வெறும் உடல் சார்ந்த தற்காலிக உறவை பேணலாமா என்று யோசிக்கிறார். அந்த ஆண் அதிகாரிக்கும் சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே பேச்சு வார்த்தை குறைந்து விட்டது, ஒருவரையொருவர் சீண்டக் கூடாது என்ற பயத்தில்/ விலகல் மனநிலையில் ஒன்றாக வசிக்கிறார்கள். குழந்தைப் பேறு உருவாக்கக்கூடிய மனச் சோர்வு, அது உருவாகக்கூடிய உளவியல் சிக்கல்கள் பற்றிய நுட்பமான சுட்டுதல் நாவலில் உள்ளது. வேறு மனித உடலின் அருகாமையை உணர்ந்து பல காலமாகி விட்டது என்பது மட்டுமே இந்த ஈர்ப்பிற்கான காரணமாக இருக்கக் கூடும். பெண் அதிகாரியும் இவ்வாறு தன்னைச் சமாதானம் செய்து கொள்ள முயல்கிறார். ஆண் அதிகாரி தான் பெண்களால் விரும்பப்படுபவனாக உணர்ந்து பல காலம் ஆகி விட்டதால், அப்படி விரும்பப்படுவதே, புதிய உறவில் ஈடுபடுவதைவிட அவரை அதிகம் கிளர்த்துவதாக இருக்கிறது.

நாவலின் இருண்மையான தொனியை உருவாக்குவதில் இத்தகைய உறவுச் சிக்கல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில கொலைகள், வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றன என்றாலும், அவற்றை, அவற்றில் உள்ள ரத்த விரயத்தை விட, எந்த பெரிய காரணமும் இல்லாமல் அவை நிகழ்த்தப்படுவதே கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஒருவனின் நடத்தை, ஜானின் அண்ணன் எடுக்கும் முடிவு – வாசகனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் போதும் அதன் அர்த்தமின்மையை, அது மிக எளிதில் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய ஒன்று என்பதை வாசகன் உணர்கிறான்.

ஜானின் கொலை துப்புத் துலக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்படுவதுடன் வாசகனுக்கு முடிவு கிடைப்பதில்லை. ஜானின் மகன் மனதில் தாய் குறித்து எழுந்துள்ள சந்தேகம் தீருமா என்ற கேள்வி எழுகிறது. பதின் பருவத்தில் சின்ன குற்றச் செயல்கள்செய்ய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தன் பாதையை மாற்றி நாற்பத்திரெண்டாவது வயதில் கொல்லப்படும் ஜான், அந்தப் பருவத்திலேயே தன் வழியைச் சரியாக தேர்ந்தெடுத்திருந்தால் அவனுக்கு இந்த துர்மரணம் சம்பவித்திருந்திருக்குமா என்றும் வாசகன் யோசிக்கலாம். இத்தனைக்கும் பெரும்பாலானோரைப் போல சராசரி மத்தியத் தர குடும்பத்தின் குழந்தைப் பருவம்தான் அவனுடையது, மற்றொரு திருப்பத்தில் அவன் சென்றிருந்தால், வேலை, குடும்பம், குழந்தை, வேலையிலிருந்து ஓய்வு, முதுமை, மரணம் என பெரும்பாலானோருக்கு கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கும் அமைந்திருக்கக் கூடும். ‘இவ்வாறு நிகழ்வதை தவிர்க்க நாம் என்ன செய்திருக்கக்கூடும் என்ற கேள்வியை அனைவரும் தம்முள் எழுப்ப வேண்டும்’ என்று நாவலில் ஒரு இடத்தில் காவல்துறை அதிகாரி கூறுவது தன் சக ஊழியரைப் பார்த்து மட்டுமல்ல, இதே கேள்வியை வேறு வேறு வடிவங்களில் தன் வாழ்வில் ஒரு சில முறையேனும் எதிர்கொண்டிருக்கும் வாசகனிடமும்தான்.

நாவலின் இறுதியில் அதிகாரி ஒருவர் சொல்லும் யோசனையின் தார்மீகமும்- கனவுகள் கலையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமா அல்லது அது எவ்வாறு நிறைவேறுகிறது என்பது முக்கியமா- விவாதத்துக்குரியதே. புலம் பெயர்ந்தவர்கள் அதிகரிப்பதற்கும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, நிறவெறி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரின் இந்த எண்ணம் அவரை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

‘இப்போதுதானே எல்லாம் நடந்தது போல் உள்ளது, பின் எப்படி காலம் அவ்வளவு தூரத்திற்கு பின்னால் சென்றது’ என்று மத்திய வயதுடைய ஒருவர் தன் நினைவுகளினூடே அங்கலாய்த்தபடி அலைகிறார். ஜானின் கொலை நடந்து சில நாட்கள் கழித்து அது பற்றிய விசாரணை வளையத்தில் வரும் சில பதின் பருவத்தினர் ‘அது எப்போதோ நடந்தது அல்லவா’ என்று அந்த நிகழ்வை பற்றி அசட்டையாக குறிப்பிடுகின்றனர். ஒருவர் கை தவறிவிட்ட காலத்தை மீண்டும் சிறைப்படுத்த நினைக்கிறார், மற்றொருவர் அதை விசிறி எறிகிறார். காலத்தின் பெறுமானம் நம் வயதிற்கேற்ப மாறுகிறது, ஆரம்பத்தில் அதன் இருப்பையே உணராமல் இருக்கும் நாம் பின்னர் அதன் பின் ஓட வியர்த்தமாக ஓட ஆரம்பிக்கிறோம். இந்த பதின்பருவ குழுவிலும் ஒரு ஜானும் அவன் அண்ணனும், தோழர்களும் இருக்கக்கூடும், ஓரிரு பத்தாண்டுகள் கழித்து இதே கதை மீண்டும் நிகழக்கூடும்.ஆனால் காலம் அப்போதும் தன்னுடைய வழமையான தாள கதியில் முன் சென்று கொண்டிருக்கும், அதன் பயணத்தில் விட்டுச் செல்லும் சக யாத்திரீகர்களின் முகங்களும், பெயர்களும் மட்டுமே மாறுகின்றன, உணர்வுகள் அல்ல.

ஒளிப்பட உதவி – Reader. Writer. Nerd.