சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும்

(பகடி)

இலவசக் கொத்தனார்

உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிறது. இருப்பினைப் பற்றியும் உறுப்பினைப் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைகளுக்கெதிராக குரலெழுப்பி தற்கால மொழிக்கலாச்சாரத்தின் அகப்புற எல்லைகளை மீறி இயங்குவது மட்டுமே நல்ல கவிதை என்ற பொதுப்புத்தியினுக்குள் பொருந்த நினைத்திடாத சராசரி மொழியிலும் மனதுக்கு அந்தரங்கமான மொழியிலும் கூட ஒரு மனிதனின் ஆழ்மனத்துடன் பேசும் உரையாடலை பொதுவிற்குக் கொண்டு வரமுடியும் என்பதில் வெற்றி பெற்று இருக்கிறார் சுரேஷ்.

கவிதைகள் நெகிழ்வற்றவை. அவற்றினுள் இருக்கும் அடுக்குகளை நாம் அத்துணை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. கவிதைகள் பல நுற்றாண்டு மரபின் பாரத்தைச் சுமந்து கொண்டிருப்பவை. அவை காலத்தின் எச்சங்கள் என்றெல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ள விகாரங்களைத் தாண்டி வர என்னவெல்லாம் வேண்டுமோ அவை அத்துணையும் செய்திருக்கிறார் சுரேஷ். கவிதைகள் எல்லையற்றவை என்பதை கவிதைகள் எழுதியேக் காட்டுகிறார். கவிதைகளின் தளைகளை உடைத்து அவற்றின் மீதான இலக்கண இறுக்கங்களைக் களைய அவற்றின் முரண்களான கட்டுடைத்தலைச் செய்ய முயன்று இருக்கிறார். கவிதை தன்னிலே சீரான ஓட்டம், ஒரு ஒழுங்கமைதி இருக்க வேண்டும் என்ற பொதுவிதியை பிரக்ஞை கொண்டும் பிரக்ஞையை மீறியும் தொடர்ந்து ஒரு மாற்றுவெளியில் தனது கவிதைகளை வைக்கின்றார். விமர்சகர்களுக்கு சுரேஷ் கவிதை மாதிரியான ஒன்றில் வேலை இல்லை என்றே நினைக்கிறேன். இப்பொழுதே இது விமர்சனம் அல்ல, நான் விமர்சகனும் அல்ல எனச் சொல்லிவிட்டு விடுப்பட வேண்டியிருக்கிறது.

அவரின் ரன்னிங் யோகா என்ற கவிதை வெளி வந்த பொழுது அவரின் கவிதைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வார்த்தைகளாகக் கொட்டி இருக்க வேண்டும். படைப்பூக்கத்தில் பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சிகளின் கொண்டாட்டத்தை என் ஒற்றைப் பார்வையினால் அளவிடுவதின் அபத்தத்தை உணர்ந்ததால் அந்த கணநேரப்பித்தம் கலைவதற்கு காத்திருந்து கடந்துவிட்டேன். ஆனால் இந்தக் கவிதை என் ஆழ்மனத்தில் ஏற்படுத்திய சஞ்சலம் அதையும் மீறி என்னை எழுத வைத்துவிட்டது.

இனி இந்தக் கவிதை.

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது

காத்திரமான ஆரம்பம். இரண்டு வரிகளில் பூகம்பம். மனிதக்குரங்கு கதவை திறக்கிறது என்பதை அகக்கண்ணால் பார்க்கிற பொழுது தோன்றும் புன்னகை, மனிதனைத்தான் குரங்கெனச் சொல்கிறார் எனப் புரிய வரும் பொழுது ஏற்படும் கோபம், கேவலம் வயிற்றுப்பிழைப்பிற்காக குரங்காட்டியிடம் பணியும் குரங்கினைப் போல தொப்பி அணியச் சொன்னால் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கு உழைக்கும் வர்க்கத் தோழரின் இயலாமை கண்டு ஆதங்கம், தொப்பி அணிய வேண்டி இருந்தால் அணிய வேண்டியதுதானே, விழுமியங்கள் என நமக்கு நாமே போட்டு கொண்டிருக்கும் விலங்குகளை உடைத்து கதவுகளைத் திறந்து விட்ட அந்த பெயர் தெரியாத தோழரின் ஜென் நிலை கண்ட பரவசம் என பல அடுக்குகளில் பல வித தரிசனங்களைத் தரும் வரிகள். மனிதக்குரங்கு என எழுதாமல் மனித குரங்கு என எழுதி நாம் நினைப்பதற்கு மாறாக தோழரின் வாழ்வில் வலி இல்லை என்ற குறியீடு இவ்வரிகளின் சிறப்பம்சம்.

உள்ளே நுழைந்து ஒரு அறைக்குள் சென்றேன்
இரண்டு சிறுத்தைகள் மான் கறி தின்று கொண்டிருந்தன

இவ்வரிகள் தரும் பிம்பம் அலாதியானது. சிறுத்தைகள் தனித்து வாழும் பிராணிகள். இங்கே இரு சிறுத்தைகள் அருகே அமர்ந்து உண்டு கொண்டிருக்கின்றன. அதுவும் ஓர் அறைக்குள். ஆனால் உண்பதென்னவோ மான் கறி. தனது இடமான காட்டினை விடுத்து வந்திருக்கும் அம்மிருகங்கள் தமக்கான இயல்புகளை மாற்றிக் கொள்ளத் தயங்கவில்லை. அதற்காக மொத்தமாகவும் மாறி விடவில்லை. தனது பாரம்பரிய உணவான மான்கறியைத்தான் உண்கின்றன. தாயகம் விடுத்து புலம் பெயர்ந்தால் அங்குள்ள சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதே சமயம் நம் வாழ்வின் ஆதாரங்களான மொழி, உணவு போன்றவற்றின் பாரம்பரிய பெருமைகளை போற்றிப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒரு பாடத்தினை அழகாக சொல்லி இருக்கிறார்.

வேறு ஒரு கோணத்தில் நம் எண்ணங்களைச் செலுத்தினால் இந்தச் சூழல் நாம் வேலையிடங்களைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். தமக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் இரு மேலதிகாரிகளை சிறுத்தைகளாகக் கொண்டு, அச்சூழலின் காரணமாக அவர்கள் இணைந்திருக்க வேண்டிய கட்டாயங்களைக் கோடி காட்டி, தம்முன் வரும் வலிமையில் குறைந்த தம்கீழ் பணிபுரியும் தோழர்களின் மீது இவர்கள் கட்டவிழ்த்து விடும் வன்முறையை கவிஞர் இவ்வாறு உருவகப்படுத்துவதாகவும் கொள்ளலாம். மானாக இருந்தால் கறியாக வேண்டியதுதான் இது சிறுத்தைகளுக்கான களம் என்பதையும் இக்குறியீட்டின் மூலம் உணர்த்துகிறார்.

ஓர் அறை என்ற இலக்கணக்கட்டுப்பாட்டுக்கு ஒரு அறை என எழுதி இவர் தந்திருக்கும் அறை அதியற்புதம். இது கவிதைக்கான தளம் இங்கே கட்டுப்பாடில்லை என்ற சுதந்தரத்தை விட்டுத் தராத கவித்துவ ஆணவம் வரிக்கு வரி பரவி இருக்கின்றது.

கோட் சூட் அணிந்த ஒரு யானை என்னிடம் வந்து
“நீங்க வெஜ்ஜா நான்-வெஜ்ஜா” என்று கேட்டது
“இன்றைக்கு நான் வெஜ்” என்றேன்
“இங்கே வாருங்கள்” என்று வேறொரு அறைக்கு அழைத்து சென்றது

கடந்த காலத்தை சுமந்து திரியாதே. நிகழ்காலத்தில் வாழ். அதுவே சிறந்த எதிர்காலத்தை அமைக்கும் என்பார் ஓஷோ. இதைத்தான் நீங்க வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்ற கேள்விக்கு இன்றைக்கு நான் வெஜ் என்ற பதிலின் மூலம் வலியுறுத்தி இருக்கிறார். நேற்று நான் என்னவாக இருந்தேன் என்பது தேவையற்றது. நாளை நான் என்னவாக இருப்பேன் என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை இன்று நான் வெஜ் என்று சொல்வதில் மூலம் மனித வாழ்வின் அநித்தியத்தை அழகாக சொல்கிறார்.

வேலையிட உருவகம் என நாம் பார்த்ததை இங்கும் தொடர்ந்தோமானால் கோட்டு சூட்டு மாட்டிக் கொண்டவரை மேலாளராகவும் பொருளாதாரரீதியாக பெரும் பணம் படைத்திருப்பதை பெரும் உடல் கொண்ட மிருகமாகவும் அந்நிலையில் அத்தனை அடிதடி தேவை இல்லை என்பதால் தினமும் உணவுக்கு அடித்துக் கொள்ளும் சிறுத்தைகள் போலில்லாது அரவணைத்துச் செல்லும் யானையாக, தேவையென்றால் மதம்பிடித்து பெரும் அழிவை உருவாக்கவல்ல யானையாக உருவகப்படுத்தி இருப்பது அழகு. எந்த நிலையில் இருந்தாலும் புதியவர் வருகையால் தமக்கு ஆபத்து உண்டாகுமா என்ற அடிமனக்குழப்பத்தையே நீ வெஜ்ஜா நான் வெஜ்ஜா எனக் கேட்பதன் மூலம் இங்கு நீ மானா இல்லை உன் முன் நான் மானாக வேண்டுமா எனக் கேட்டு தனக்கான எல்லைக்கோடுகளைத் தீர்மானம் செய்து கொள்ள எத்தினிக்கும், புதியதைப் பற்றிப் பயம் கொண்டிருக்கும் சராசரியாகவும் அவனைக் காட்டிவிடுகிறார்.

என் பக்கத்து மேஜையில் ஒரு பூனையும் நாயும்
கோப்பையிலிருந்த பாலை நக்கிக்கொண்டிருந்தன
“ஏன் நீங்கள் நான்-வெஜ் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்
பூனை என்னை மெளனமாய் முறைத்தது
“இன்றைக்கு சனிக்கிழமை” என்று நாய் கூறியது

பூனைகளும் நாய்களும் வீட்டில் வளர்ந்திடும் செல்லப்பிராணிகள். ஆனால் அவற்றின் குணாதியசங்களின் முரண்பாட்டினை நாம் எல்லோரும் அறிவோம். காட்டில் இருக்க வேண்டிய சிறுத்தைகள் மட்டுமே கூடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இல்லை. நாட்டில் இருக்கும் விலங்கினங்களும் கூட தத்தம் குணாதியசங்களை விட்டுத் தர வேண்டிய தற்காலச் சமுதாய அவலத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரிகள் இவை. அப்படி இருந்தாலும் வேண்டியது கிடைத்து விடுமா என்றால் இல்லை. பால் இருக்கிறது. அதனை ஒரு தட்டில் ஊற்றி இருந்தால் நாயும் பூனையும் நக்கிக் குடிக்க முடியும். ஆனால் பாலோ கோப்பையில். நாயும் பூனையும் நக்கிப் பார்த்தாலும் நாலு சொட்டுக்கு மேல் வருமா? சமகால நகைச்சுவை நடிகரின் பிரபல வசனம் போல இங்கு பால் இருக்கு ஆனா இல்ல என்பதே நிதர்சனம். அந்தப் பால் நமக்கு கிடைக்கலாம் என்ற எண்ணத்திலேதான் நாயும் பூனையும் அருகருகே அமர்ந்திருக்கின்றன.

அது மட்டுமில்லாது இன்று ஏன் நான்வெஜ் சாப்பிடவில்லை என்பதற்கு சனிக்கிழமை என்ற பதில் மிகப் பொருத்தமானது. வேலை நாட்களும் அடித்துக் கொண்டாலும் வேலை முடிந்த பின்னரும் வாரயிறுதியிலும் எந்த விதமான வித்தியாசங்களும் பாராட்டப்படாமல் நண்பர்களாக தொடர்ந்த் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை கவிஞர் இந்த வரிகளின் மூலம் வெளிபடுத்துகிறார். அந்த நட்பானது எல்லாருக்கும் இயல்பாக வந்துவிடாது என்பதையே பூனையின் மௌனத்தை முன் வைப்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார். பால் என்றாலும் பால் நிறத்தில் இருக்கும் கள்ளாக இருக்குமோ என்ற ஐயப்பாட்டினை நமக்குள் விதைப்பதன் மூலம் எப்படி நாம் இன்றைய முதலாளித்துவ பொருளீட்டல் என்ற போதைக்கு அடிமையாக இருக்கிறோம் என்ற சாட்டையடியையும் வீசி இருக்கிறார்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது
தொப்பி அணிந்திருந்த மனித குரங்கிற்கு
பத்து ரூபாய் டிப்ஸ்ஸாகக் கொடுத்தேன்
உடனே அது “சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு”
என்று ஒரு முறை குதித்துப் பாடி பணத்தை பெற்றுக்கொண்டு
சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைத்தது.

இப்படி மனிதர்களின் முகமூடிகளை கிழித்துத் தோரணமாகத் தொங்கவிடும் கவிஞரும் கூடத் தனக்காக கதவைத் திறந்து விடும் உழைக்கும் வர்க்கத் தோழரை சமுதாயத்தின் சகப்பிரதிநிதியாக நோக்காமல், தன்னிடம் பணம் அதிகம் இருப்பதாகவும் அது தேவையானவர் அப்பணத்துக்காக ஜனரஞ்சகச் சினிமாப் பாடலுக்குக் கவர்ச்சி நடனம் ஆடவும் தயங்க மாட்டார் என்பது போலவும் சித்தரித்து வலதுசாரி பொதுப்புத்திக்குத் தன் தொப்பியை சரித்திருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இக்கவிதை சென்று கொண்டிருந்த பாதையே மாறி இருப்பதன் காரணம் தான் வெளியில் இல்லாமல் உள்ளே சென்று விருந்தில் பங்கேற்றதன் மூலம் இடதுசாரி கோட்பாடுகளை கழட்டி எறிந்து முதலாளித்துவத்திற்கு அடிமையாகிவிட்டதாக கவிஞர் பிரக்ஞை எழுப்பிடும் கோஷமாக இவ்வரிகள் எனக்குத் தோன்றுகின்றன.

சுரேஷ் தனது கவிதைகளுக்குள் சொற்களை அடைத்து வைக்கவும் இல்லை, அல்லது தான் பயன்படுத்திய சொற்களுக்குள் கவிதையையும் ஒளித்து வைக்கவில்லை. இவையனைத்தையும் மீறி சொற்களுக்காகக் கவிதையோ அல்லது கவிதைக்காகச் சொற்களையோ அவர் தேர்ந்தெடுக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது. கதிரவன் கண்விழிக்குமுன் ஒரு கணநேரத்திற்கு நம் கவனத்தை ஈர்த்திடும் பனித்துளியைப் போல சொற்கள் சட்டென கரைந்துவிடுகின்றன அல்லது திடீரென கவிதை காணாமல் போய்விடுகிறது. கவிதைக்கு வெளியில் சொற்களை அனுப்பிவிடுவதும் சொற்களுக்குள் வைத்த கவிதையை உடனே அவிழ்த்துவிடுவதும் அவருக்குக் கைவந்திருக்கிறது. ஒருவேளை இப்படிப் பேசுவதே அல்லது ஒரு கவிதையை இப்படிப் புரிந்து கொள்வதே விநோதமாக இருக்கக்கூடும். இது சுரேஷின் கவிதையைப் புரிந்துகொள்ள நான் உருவாக்கிய மதிப்பீட்டு அரசியல். இதனைக் கடந்தும் நீங்கள் அவருடைய கவிதையை அடையலாம். வெளியே தூக்கியெறியப்பட்டால் நான் பொறுப்பல்ல.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.