துருவேறிக் கொண்டிருக்கும் அமெரிக்க சிறுநகரங்களும் அவற்றின் சாதாரணர்களும்

அஜய். ஆர்

சீபால்டின் ‘The Rings Of Saturn’ நூலில், கதைசொல்லி தன் பயணங்களின்போது ஒரு காலத்தில் ஒளிமிக்க சிறு நகரங்களாக இருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கிக் கொண்டிருக்கும் இடங்களூடே பயணிக்கிறார். பரபரப்பான துறைமுகமாக இருந்து இப்போது அந்த பரபரப்பின் சுவடே இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தைப் பார்க்கிறார், இன்னொரு இடத்தில் வெறிச்சோடி இருக்கும் உணவகத்தில் உணவருந்தும்போது, சென்ற தலைமுறை உடையணிந்து ஒருவர் பரிமாறுகிறார். இந்த இடங்களும் சரி, அதில் வாழும் மனிதர்களும் சரி காலத்தில் உறைந்துள்ளார்கள். யுவான் ருல்போவின் (Juan Rulfo) ஆக்கங்களிலும் இதைவிட பாழடைந்த, நினைவுகள் ஆவிகளாக உலவும் நிலவெளிகளை பார்க்கலாம். இவை பெரிதும் வெளியாள் ஒருவர் இந்த இடங்களைப் பார்க்கும் கோணத்தில் உள்ளன. இதை கொஞ்சம் மாற்றி, அந்த சிறு நகரங்களில் இருப்பவர்களின் பார்வையில், அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதுதான் ரிச்சர்ட் ரூஸோ (Richard Russo) தன் ஆக்கங்களுக்காகத் தேர்வுசெய்யும் களன்.

அமெரிக்கா என்றவுடன் ஒளி பொருந்திய நகரங்கள், பணம் கொழிக்கும் சூழல் என்ற பொதுபிம்பத்துக்கு மாறாக, அங்குள்ள வறுமை, இனவெறி, கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் விட்டுச் செல்லப்படும் நகரங்கள்/ மக்கள், என அதன் பல்வேறு பக்கங்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள். அவர்களில், ரூஸோ அமெரிக்காவின் சிறு நகரங்களைப் பற்றி எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். 7 நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதியுள்ள ரூஸோ ‘Empire Falls’ என்ற நாவலுக்காக புலிட்சர் விருது பெற்றவர்.

ரூஸோ காட்டும் சிறு நகரங்கள் துருபிடிக்க ஆரம்பித்திருந்தாலும் முற்றிலும் நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாழடைந்த இடங்களாக (Ghost Towns) இன்னும் மாறவில்லை. இந்த நிலவெளி நமக்கு புதிதாக இருந்தாலும், இங்குள்ள சூழல் நமக்கும் பரிச்சயமான ஒன்றுதான். தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, அதே நேரம் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் வேலையின்மை, காலத்தின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடியாத சிறு வணிகர்கள் சந்திக்கும் வியாபார சவால்கள், பெரு நகரங்களுக்கு படையெடுக்கும் மக்கள் என இவரின் நாவல்களில் வரும் விஷயங்கள் நாம் அன்றாடம் சந்திக்கும்/ கேள்விப்படும் ஒன்றுதான்.

இவருடைய ‘Mohawk’ என்ற நாவலில், ஒரு உணவகத்தில் சென்ற ஆண்டின் நாட்காட்டிதான் இருக்கிறது. இதற்கு காரணமாக “… whoever gave the calendar the year before didn’t give him a new one this year. The months are the same and Harry doesn’t mind being a few days off”, என்று ரூஸோ சொல்கிறார். இந்த வரி, ரூசோவின் புனைவுலகின் நகரங்களைப் பற்றியும், அதில் இருப்பவர்களைப் பற்றியும் குறிப்பிட கச்சிதமாகப் பொருந்தும். ஒரே மந்த கதியில் காலம் சென்று கொண்டே இருக்கின்றது. நகரங்களின் குடிமக்கள், காலம் தங்களைத் தாண்டி செல்வதைக் குறித்து கவலைப்படலாம், சலிப்படையலாம் (சில நேரங்களில் அதுகூட இல்லாமல் ஒரு மோன நிலைக்கும் வந்து விடுகிறார்கள்). ஆனால், பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுபவர்களாக இருக்கிறார்களே தவிர தங்கள் நிலை குறித்து தாங்களாக எதையும் முன்வந்து செய்வதில்லை. அவர்கள் இந்நகரத்தை விட்டுச் செல்லாமல் இருப்பதற்கு பிறந்த மண்ணின் மீதுள்ள பாசம் மட்டுமே காரணமல்ல, அவர்களின் சோம்பலும், புதிய விஷயங்களை எதிர்கொள்ள அவர்களிடம் உள்ள தயக்கமும்கூட காரணம்தான். தூக்கத்தில் நடப்பவர்கள் போல அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

russo

ரூஸோவின் மையப் பாத்திரங்கள் ஆண்களே, அவர்களின் பார்வையில்தான் இந்தக் கதைகள் நகர்கின்றன. இவர்களைப் பற்றி மேலோட்டமாக பார்க்கும்போது ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று சொல்லத் தோன்றும். தன்னை விட்டு ஓடிப்போன மனைவியையும், அவள் காதலனையும் (சிறிய நகரமென்பதால் அவர்களைத் தவிர்க்கவும் முடியாமல், தானும் அந்த இடத்தை விட்டு விலக முடியாமல் சகித்துக் கொண்டிருக்கிறார்) , தன் உழைப்பை உறிந்து கொள்ளும் ஒட்டுண்ணி தகப்பனையும் சகித்துக்கொண்டு, தன் பதின்ம வயது மகளைப் பற்றிக் கவலைப்படும் மைல்ஸ் (Empire Falls), ‘Louis Charles Lynch’ என்ற பெயர், சிறுவயதிலேயே லூஸி (Lucy) என்ற பட்டப்பெயராக சுருக்கப்பட்டு, அப்படியே அழைக்கப்பட்டு, அதுவே பழகிப் போனவர், இவர்கள் அனைவரும் முதல் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர்களாகதான் தெரிகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் அப்பாவித்தனத்தாலோ அல்லது ஏதோ ஒரு அறவுணர்வாலோ உந்தப்படுபவையா? ரூஸோ இந்தப் பாத்திரங்களை எளிமையாக ஒற்றைத்தன்மையுடன் விட்டுவிடுவதில்லை என்பதால், நாவலின் போக்கில் வாசகனுக்கு இத்தகைய கேள்விகள் எழுகின்றன. .

உதாரணமாக ‘Bridge of Sighs’ நாவலின் ஆரம்பத்தில், பெரிய ஏமாற்றங்கள் ஏதுமில்லாத, ஓரளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துள்ளது போல் தோற்றமளிக்கும் 60 வயதான லூஸி, யாருக்கும் தெரியாமல் இவர் தன் வாழ்க்கை குறித்த நினைவுக் குறிப்புக்களை ரகசியமாக எழுத ஆரம்பிக்கிறார். (40 ஆண்டு கால மணவாழ்க்கையை ஒன்றாகக் கழித்த நிலையில் மனைவியிடம்கூட சொல்லாத/ சொல்ல முடியாத இந்த திரைமறைவு வேலை ஏன்?). நிறைவான நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களோடு, லூஸியின் நினைவோடையாகவும் இந்த நாவல் விரிகிறது. முதலில் முழு அப்பாவியாக (நிகழ்கால/ கடந்தகால சம்பவங்கள் இரண்டிலும்​) தோன்றும் லூஸி உண்மையில் அப்படித்தான் என்றால், அவர் ஏன் தன் நினைவுக் குறிப்புக்களை எழுத எழுத சிலவற்றை சற்று திருத்தி மீண்டும் எழுதுகிறார்?

சாராவும் தன் ஆத்ம நண்பன் பாபியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று அறியாதவரா லூஸி? அதைப் பற்றி அவர் தெரிந்திருப்பதற்கான சாத்தியங்களை ரூஸோ நாவலில் (லூஸியின் மூலமாகவே) முன்வைக்கிறார். சாரா- பாபி காதல் பற்றி தெரிந்திருந்தால், தன் பெற்றோர் சாராவிடம் தங்கள் மகனை (லூஸி) மணம் செய்ய கேட்கும்போது, அவர்கள் செய்துள்ள உதவிக்காகதான் சாரா அதற்குச் சம்மதிக்கிறார் என்பதை லூஸி உணர்கிறாரா? அவர்களின் காதலைப் பற்றி தெரிந்திருந்துமா லூஸி சாராவை மணம் முடிக்கிறார்? எனில் அது அவர் தன் நண்பனுக்கு செய்த துரோகமல்லவா?

இப்படி லூஸியை நாம் அணுகும் கோணத்திலேயே ரூஸோவின் மற்ற பிரதான ஆண் பாத்திரங்களையும் அணுக முடியும். தங்கள் அப்பாவித்தனத்தை (அல்லது மற்றவர்கள் அவர்களை அப்பாவியாக நினைப்பதை) தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு இவர்கள் காரியவாதிகளா?

ரூஸோவின் பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களைவிட வலிமையானவர்களாக, ஆண்களை சார்ந்திராத இருப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரின் பெரிய குடும்பத்தின் தலைவியாக, செல்வச் சீமாட்டியாக இருந்தாலும் சரி, சிறிய கடையை நடத்தக் கஷ்டப்படுபவராக இருந்தாலும் சரி, எந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் மன உறுதியை கைவிடாமல் இருப்பதோடு தங்கள் குடும்ப ஆண்களையும் நிலைகுலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்த மன உறுதிக்குப் பின்னாலுள்ள சஞ்சலங்களையும், நிச்சயமற்றத் தன்மையையும் ரூஸோ சுட்டிச் செல்வதின் மூலம் பெண் பாத்திரங்களையும் ஒற்றைத்தன்மையிலிருந்து மீட்கிறார். சாரா 40 ஆண்டு கால வாழ்க்கையில் திருப்தியாகவே இருக்கிறார், லூஸியின் பக்கபலமே அவர்தான், இதெல்லாம் வாசகனுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பாபியை அவர் முற்றிலும் மறந்து விட்டாரா? மலிவான முக்கோண காதல் கதையாக மாறியிருக்கக்கூடிய ஒன்றை, சில விஷயங்களை நேரடியாகக் குறிப்பிடாததால், நாவலில் மட்டுமல்ல சாரா பாத்திரத்திலும் வெளித்தெரியாத உள் அடுக்குக்களை வாசகனைத் தேடச் செய்கிறார்.

சிறு நகரங்களின் ஒரு குணம், அனைவருக்கும் அனைவரையும் தெரிந்திருப்பது. இங்கு தனிமை என்பதோ ரகசியம் என்பதோ பெரும்பாலும் இருப்பதில்லை. இதில் ரகசியம் என்பது ஒரு புதையல், கொலை செய்தது என்றெல்லாம் இருக்க வேண்டுமென்பதில்லை, யாரைப் பற்றியதோ அந்தக் குடும்பத்தைத் தவிர மற்றவர்களுக்கு இவை தேவையே இல்லை, இருந்தும் இந்த விஷயங்கள் அனைவராலும் தொடர்ந்து பேசப்படுகின்றன. ஒரு தலைமுறை கழித்து, அந்த விஷயம் பொதுவெளியில் கிசுகிசுக்கப்படுவது நின்றாலும், என்றாவது வெளிவந்து நிகழ்காலத்தில் இருப்பவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. பொதுவாகவே கடந்த காலத்தின் நினைவுகள், அவை இயல்பாகவே மறக்கப்படுதல் அல்லது வலிந்து நினைவிலிருந்து அகற்றப்படுதல், பின்னர் வெளிவருதல் ரூஸோவின் நூல்களில் வரும் ஒரு முக்கியமான உத்தி ( trope). இப்படி நாம் எளிதில் ஒன்றக்கூடிய ஒரு சிறு நகர உலகை லாவகமாக உருவாக்குவதே ரூஸோவின் முதல் வெற்றி. அந்த இடம் நெருக்கமான ஒன்றாக ஆன பிறகு அதன் மனிதர்களும் அவ்வாறே ஆவது எளிதல்லவா?

ரூஸோவின் கதைசொல்லும் முறை நிதானமானது. முதலில் பாத்திரங்களின் அறிமுகம், சில/ பல சம்பவங்களின் மூலம் நாவலின் களத்தை அமைப்பது/ பாத்திரங்களைப் பற்றிய நம் முந்தைய எண்ணங்களைக் கலைப்பது, பாத்திரங்கள் எதிர்கொள்ள வேண்டிய சில நிகழ்வுகள்/ பிரச்சினைகளை உருவாக்குவது, இறுதியில் முடிச்சுகள் அவிழ்வது என யதார்த்த பாணியில் அமைதியாக, மென்சோகமும் நகைச்சுவையும் கலந்த விதத்தில் சொல்வது ரூஸோவின் பாணி.

russo2

அவரது நாவல்களின் இறுதிப் பகுதிகளை ஒரு பலவீனமாகச் சொல்லலாம். இறுதியில் நாவலின் இழைகள் அனைத்திற்கும் ஒரு முடிவை சொல்கிறார். அது தவறொன்றுமில்லை , மேலும் அந்த முடிவு கதையின் முற்றுப்புள்ளியாக இல்லாமல், வாழ்வின் ஒரு கட்டத்தின் முடிவாகவும் மட்டுமேகூட பல நேரங்களில் இருக்கிறது. அந்த முடிவிற்கு அழைத்துச் செல்லும் இறுதி கட்ட சம்பவங்கள்தான் பிரச்சனை. உதாரணமாக, ‘Mohawk’ நாவலின் இறுதியில், இடியுடன் கடும் மழை பெய்யும் இரவில் நாவலின் அனைத்து முடிச்சுக்களும் அவிழ்க்கப்படுகின்றன. மழை பெய்யும் இரவில் எந்த நிகழ்வும் நடக்காது/ நடக்கக் கூடாது என்பதில்லைதான், ஆனால் நாவலின் அனைத்து முடிச்சுக்களையும் ஒரே இரவின், இடிமழையின் பின்னணியில் அவிழ்க்கும்போது, ரூஸோ நாவலின் (தன்னுடைய) இயல்பான அமைதிக்கு மாறாக அவசர முடிவை அளித்து விடுவதால், நாவலைப் படிப்பதில் உள்ள சமநிலை குலைகிறது.

ரூஸோவின் ‘Straight Man’ நாவல், அவருடைய மற்ற நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டது. நாவலின் நிலவியல் வழக்கம் போல் சிறு நகரமென்றாலும் இதில் துருபிடித்துக் கொண்டிருப்பது கல்விச்சூழல். கல்லூரிகளில் கல்விக்கான மானியம் குறைக்கப்படுவது, அதனால் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படக்கூடிய ஆட்குறைப்பு என இந்தச் சூழலும் நமக்கு பரிச்சயமானதுதான். இந்தப் பின்புலத்தில் மைய பாத்திரமான ஹென்றியை ரூஸோ பின்தொடர்கிறார்.

நாவலின் நடையும் அவரின் மற்ற நாவல்களிலிருந்து மாறுபட்டது, ‘Richard Ford’இன் பாணியில், ஹென்றியின் எண்ணங்களின் மிக நுணுக்கமான விஷயங்களை தொடர்ந்து செல்லும் உரைநடையில், ஹென்றியின் மனஓட்டத்தின் கோணத்திலேயே நாவல் செல்கிறது. ஹென்றியும் நாம் மேலே பார்த்த லூஸி, மைல்ஸ் இவர்களிடமிருந்து மாறுபட்டவர். இவரும் அவர்களைப் போல் கொஞ்சம் பலவீனமானவர்தான் என்றாலும் அதை அவர் எதிர்கொள்ளும் விதம் வேறானது. ‘Something Happened’ (Joseh Heller) நாவலின் Bob Slocum போல, தன் பயங்கள்/ தயக்கங்கள்/ சஞ்சலங்களை மறைக்க சூழலுக்கு பொருத்தமில்லாத ஜோக் அடிப்பது, தடாலடியாக நடந்து அதனால் மற்றவர்களை கோபமூட்டுவது என்று இருக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை (மூக்கு உடைபடுவது ஒரு உதாரணம்) பற்றி அவர் கவலைப்படுவதில்லை. மகளின் மண வாழ்க்கை குறித்து கவலைப்படும் ஹென்றி, அவர்களிடமும் அசந்தர்ப்பமாக பேசுகிறார். தன் மனைவி இன்னொருவனுடன் உறவு கொள்வது போன்ற பகல் கனவுகளிலும் ஈடுபடுகிறார் (அதே நேரம் மனைவி தன்னைத்தான் விரும்புகிறார் என்றும் அவர் அறிந்தே இருக்கிறார்). அவர் வக்கிர எண்ணங்கள் கொண்ட ஆசாமியா அல்லது திமிர் பிடித்தவரா அல்லது அவரது நடவடிக்கைகள் குடும்பம்/ உறவுகள் குறித்த அவரின் கவலைகளை எதிர்கொள்ள அவர் போட்டுக்கொள்ளும் முகமூடியா. உண்மையில் ஹென்றி யார்? லூஸி, மைல்ஸ் போல் எளிதில் வாசகரைக் கவர்பவர் அல்ல ஹென்றி, நாம் அவரை நெருங்குவதற்கு கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டியுள்ளது. இதற்கு அவரின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று தோன்றினாலும், மற்றவர்களைவிட சிக்கலான பாத்திரம் இவர் என்பதே முக்கிய காரணம்.

இந்த நாவலின் ஹென்றியின் மனவோட்டத்தைப் பின்தொடரும் உரைநடை உத்தி மற்ற நாவல்களின் எளிதான ஓட்டமும் இல்லாமல், முழு இறுக்கமான நடையுமாக இல்லாமல், கவன ஈர்ப்பு உத்தியாக மட்டுமே இருப்பதால், ரூஸோவின் நாவல்களில் ஆயாசமளிக்கக் கூடியது இதுவே. இருந்தாலும் தனக்கு பழக்கமான களத்தை விட்டு விலகி, அதில் ஓரளவேனும் வெற்றியும் கண்டிருக்கும் புதிய முயற்சிக்காக குறிப்பிடத்தக்கது.

ரூஸோவின் ஆக்கங்களைப் படித்து முடித்தவுடன் வாசகனுக்கு தோன்றும் எண்ணம், வளர்ந்த நாடோ/ வளரும்/ மூன்றாம் உலக நாடோ எதுவாக இருந்தாலும், சிறு தொழில் நசிவு, வேலையின்மை, காலம் தன் பயணத்தில், தன் பின்னே விட்டுச் செல்லும் பேரழிவு என சில பிரச்சனைகள்/ சமூகச் சூழல்கள் அனைத்திற்கும் பொதுவாகத்தான் உள்ளன.

‘சாதாரணர்’ என்பவர் என்ற கேள்வியும் வாசகன் முன் எழுகிறது. ரூஸோவின் பாத்திரங்கள் எந்த பெரியச் சாதனையையும் செய்யவில்லை, வாழ்கையின் போக்கை மாற்றியமைக்க முயலாமல் அதற்கு ஒப்புக் கொடுத்து அது செலுத்தும் திசையில் சென்றவர்கள். இவர்கள் கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, அடுத்த தலைமுறையில் தங்கள் குடும்பத்தாலேயே மறக்கப்படக் கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் கோணத்தில் பார்க்கும்போது அவர்கள் வாழ்கையில் சந்திக்கும்/ செய்யும் துரோகங்கள், அடையும் மகிழ்ச்சிகள்/ சோகங்கள், எந்த பெரிய சாம்ராஜ்யத்தின்/ சக்ரவர்த்தியின் எழுச்சி/ வீழ்ச்சிக்குப் பின்னே நடக்கும் சம்பவங்களுக்கும் குறைந்ததல்ல. யாரும் இல்லாவிட்டாலும், இந்தச் சிறுநகரங்கள் இவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.