மானுடம் குடியமர்ந்த கோள் – புறப்பாடு

சிகந்தர்வாசி

அந்தச் சீனர் உறங்கிக் கொண்டிருப்பதை லிண்டா லூவும் நானும் பார்த்தபடி நின்றிருந்தோம். அவர் விழித்துக் கொள்வார் என்று காத்திருந்தோம், ஆனால் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழுக்கதையும் தெரிந்து கொள்ளும் ஆரவம் எங்களுக்கு இருந்தது, ஆனால் அவர் எப்போது விழித்துக் கொள்வார் என்று தெரியவில்லை. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அவர் தூக்கத்தைக் கலைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே காத்திருந்தோம்.

கால் மணி நேரத்துக்குப் பின்னர், சி லிங்கின் மகன் வீட்டிலிருந்த எங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டோம். அவன் இளம் பருவத்து சி லிங்க் போலிருந்தான். அவனை எல்லாரும் ‘சீனக்குட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். அவன் வேறொரு வீட்டில் இருந்தான், தினமும் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வருவான். இப்போது இங்கே நாங்கள் இருப்போம் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறோம் என்று கேட்டான். எங்களுக்கு வரலாற்றில் உள்ள ஆர்வத்தைக் கூறிவிட்டு, பாதி கதையில் பெரியவர் உறங்கி விட்டார் என்று சொன்னோம். அவன் சிரித்துக்கொண்டே, “இந்தக் கதையை அவர் பலமுறை எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவரே அதில் பாதியை உங்களிடம் சொல்லிவிட்டதால், மீதியை நான் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, சீனக்குட்டி கதையைத் தொடர்ந்தான்.

“என் தந்தையும் பிறரும் கிராமத்திலிருந்து விமானம் மூலம் அந்நிய தேசமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெகு காலம் சென்றபின்னர்தான் அவர் தான் அமெரிக்கா சென்றிருப்பதை அறிந்து கொண்டார். விமானத்தில் சம அளவில் ஆண்களும் பெண்களும் இருப்பதைக் கண்ட அப்பா, இளமைத் துடிப்பில், இத்தனை பெண்கள் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டார். இந்தப் பயணத்தில்தான் அப்பா அம்மாவைச் சந்தித்ததும் காதலித்தும் – அப்புறம்தான் காதலிப்பதற்குறிய சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தித் தந்திருபப்தை அவர் உணர்ந்தார்

“அவர்கள் விமானம் விட்டிறங்கியதும், ஏராளமான கருவிகள் இருந்த ஒரு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் அறைகள் மிகப் பெரிதாக இருந்தன. பளபளப்பான இத்தனை யந்திரங்களைப் பார்த்ததும் அப்பாவுக்கு நிலைகொள்ளவில்லை. அந்த இயந்திரங்களில் ஒளி பொருத்தப்பட்டிருந்தது, வெள்ளை வண்ண கோட்டு அணிந்தவர்கள் அவற்றை இயக்கிக் கொண்டிருந்தனர்.

“இங்குள்ள அனைவரும் விண்வெளிப் பயணம் செல்லவிருப்பதாக இங்குதான் அறிவிக்கபட்டது. செவ்வாய் கோள் நோக்கிய பயணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்திருந்தவர்களில் பலரும் சீனாவின் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விஷயங்கள் எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் கோள்களைப் பற்றிய அறிவு ஏதுமில்லாமல் இருந்தனர். வானூர்தியில் பயணப்படும் செய்தியே அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது, சிலர் மட்டும் இதற்கு பயப்பட்டனர். சிலர் கொண்டாட்டத்தில் குதிப்பதும் சிலர் அச்சத்தில் அழுவதுமாக அந்த இடம் உணர்ச்சிமயமாக இருந்தது. இது மிகவும் பாதுகாப்பான பயணம் என்று விளக்கமாகப் பேசி அழுதுகொண்டிருந்தவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தனர். செவ்வாய் சென்று வந்திருந்தவர்களும் அறைக்குள் நுழைந்து தங்கள் பயண அனுபவம் எத்தனை இனிமையாக இருந்தது எனபதையும் விண்வெளியிலிருந்து பார்க்கும்போது பூமி எப்படி இருந்தது என்றும் செவ்வாய் கோளின மேன்மையையும் பேசினர். அனைவரும் ஓரளவுக்கு அமைதியாகினர்.

“இந்தச் செயல்திட்டம் ப்ராஜக்ட் நோவா என்றழைக்கப்பட்டது, இவர்களுடன் விலங்கினங்களும் இணைகளாக செவ்வாய் நோக்கி பயணப்பட்டன. தங்களுக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் அனைவருக்கு உண்டு என்றும், பயணத்துக்கு முன்னரே தங்கள் இணை குறித்து தீர்மானிப்பது நல்லது என்றும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. பூமி திரும்ப விரும்பினால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், காலவரையின்றி செவ்வாயில் வாழும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், திரும்புவதானால், பணிக்கப்பட்ட வேலையை செய்து முடித்த பின்னரே திரும்ப முடியும். அவர்கள் எப்பணி குறித்து செவ்வாய் செல்கின்றனர்|? அங்கு ஒரு காலணி அமைத்தாக வேண்டும். செவ்வாயில் வளமான மண் இருப்பதும் ஆறுகள் பெருகியோடுவதும் கண்டரிப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் வயல்களில் விதையிட்டுப் பயிரிடுவார்கள். சிலர் மர வகைகளைப் பராமரித்து வனங்களை உருவாக்குவார்கள். சிலர் சூளைகள் அமைத்து அங்கு செங்கல் உற்பத்தி செய்வார்கள். சிலர் காடுகளில் விலங்கினங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும் வகையில் வேட்டையாடுவார்கள்.சிலர் ஆடு, மாடு, கோழி, பன்றி என்று பண்ணைகளை பராமரிக்க வேண்டியிருக்கும். செவ்வாயில் அனைத்துமே புதியதாகத் துவங்கப்பட வேண்டியிருக்கும். கற்கால மனிதனின் வாழ்வு போன்ற வாழ்வு – ஆனால் அறிவும் கருவியும் துணை நிற்கும்.

“அனைவருக்கும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது, சூனிய நிறைஈர்ப்பு விசை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. செவ்வாய் கோளின் ஈர்ப்பு விசைக்கு ஒத்த அறையில் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயணத்தில் உண்ண வேண்டிய உணவு, குடிக்க வேண்டிய நீரின் அளவு, எங்கு எவ்வாறு இயற்கை உபாதைகளைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்கள் அளிக்கப்பட்டன. வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள், செவ்வாய் கொளுக்கான விண்கலம் செலுத்தப்பட்டபின் அவரவர் கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறப்பட்டது.

“என் பெற்றோர் இருவரும் வெற்றிகரமாக பயிற்சி பெற்றனர். செவ்வாய் சென்று சேர்ந்ததும் திருமணம் புரிந்து கொள்வதென முடிவு செய்தனர். இருவரும் பயணத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். சீனாவில் உள்ள பின்தங்கிய, சுவாரசியமற்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இந்தப் பயணம் புதிய உலகத்தையே காட்டுவதாக இருந்தது. பயணம் பற்றி தினமும் உரையாடினர். தாமதிக்கும் ஒவ்வொரு தினமும் தங்கள் வாய்ப்பு தள்ளிப் போவதாக அஞ்சினர்.வ் விண்ணூர்தி கிளம்பும்வரை அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. தங்கள் பயணம் குறித்து மேலதிகாரிகளை தினமும் கேட்டு தொல்லை செய்தனர். எது எப்படியோ, ஒரு வழியாக அவர்கள் விண்ணூர்தியில் தங்கள் இடத்தில் அமர்ந்தபோதுதான் முகத்தில் மெய்யான சிரிப்பு வந்தது. ஆனால் நிறுவனத்தின் உறுதிமொழிகளும் தங்கள் கனவுகளும் வெகு விரைவிலேயே பொய்த்துப் போனதைதான் கண்டனர்”.

சீனாக்குட்டி பேசி முடித்தான். நாங்கள் அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.