கண்ணாடிச் சாளரம்

சோழகக்கொண்டல் 

கம்பிகள் இன்னும் சூழாத
கண்ணாடிச் சாளரம் ஒன்று
எனது வீட்டின் சுவற்றில்
இருக்கிறது

மழைக்கு வேர்க்கும் வெளிப்புறமும்
மழைநின்றும் குளிரும்
உட்புறமும் கொண்டு
உள்ளீடற்ற வெளியால் பிரிந்த
இரட்டைக் கண்ணாடிகளால் ஆன
மாபெரும் சாளரம் அது

ஒன்றையொன்று கவிழ்ந்து
அடைகாக்கும் வானவில்களும்
ஒன்றையொன்று துரத்தி
அலைக்கழியும் மேகங்களும் கொண்ட
வானங்கள் அதில்
வரையப்படுகின்றன

பருவங்கள்தோறும் நிறம் மாறும்
கண்ணாடிகள் வழி
கண்காணிக்கின்றன
ஓராயிரம் கண்களோடு
ஒளிரும் இரவுகளும் சூரியன்களும்

காலங்கள் மாறும்தோறும்
உரித்து ஒட்டப்படுகின்றன
புதுப்புது ஓவியங்கள்

இன்னும் திரையிடாமல்
திறந்தே வைத்திருக்கிறேன்
அந்த சாளரத்தை

ஒளியும் இருளும்
உள்நுழைய இருக்கும்
ஒற்றைவழி அதுதானே
என் வீட்டிற்கு.

ஒளிப்பட உதவி – Wyn-Lyn Tan

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.