குழல் புராணம்

– ஆதவன் கிருஷ்ணா

பரண் மேல் கிடைத்த முப்பாட்டனின் கதை:

என் கைகள் அவள் கழுத்தை வளைத்துக் கொண்டிருந்தன. உஷ்ணமான மூச்சுப்பரப்பு அவளின் காதருகே விடப்படும்போது தலை என்ற ஒன்று தனியாக கட்டவிழ்ந்த விலங்கைப் போல தேகப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன். இந்த நிமிடம் முன்புவரை இவ்வளவு அடர்த்தியான கூந்தலைத் தொட்டுப் பார்த்திருக்கவில்லை. தொட்டுப் பார்க்காமல் இருந்திருக்கலாம்.  கேசத்தின் நெடி நாசிப்புழை எங்கும் பரவியது.

நெடி பரவியதும் சடுதியில் அவளை விட்டு எழுந்தேன்.  அவள் பானையிலிருந்த பண்டம் பொங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த நினைப்பின் இடைவெளியில் சமையல்கூடம் சென்று தடித்த அருவாமனை ஒன்றைத் தேடி எடுத்து வந்து அவளுடைய கூந்தலை இழுத்துக் கத்தரித்தேன்.   வெளியில் வந்து சீமெண்ணெய் ஊற்றி அந்த கூந்தலை எரித்தபிறகுதான் என் தனிமையின் அறையெங்கும் நிம்மதி பரவியது.  விடிவதற்கு முன்பாகவே யார் கண்ணிலும் படாமல் அவள் அழுதுகொண்டே தனது தாய் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன். போகட்டும் என்றே எனக்குத் தோன்றியதால்,  அவளைத் தடுத்து நிறுத்தவில்லை.

என் வாழ்நாளில் 31 வயதுக்கு முன்பு வரை உள்ளங்கையால் ஒரு பெண்ணை தொட்டதுண்டா? கையின் புறப்பரப்பு வேண்டுமானாலும் பட்டிருக்கலாம். தெரியாமல். ஏன்? தெரிந்தேகூட.  ஆனால், இந்த உள்ளங்கை மட்டும்தான் காமத்தின் அறிகுறி.  இதைக்கொண்டு ஒரு பெண்ணை ஆக்கிரமிப்பதனால் கலவி உச்சம் பெறுகிறது. ஆனால், அந்த உச்சம் நாசமாகிப் போனது.  காரணம் முடி. முடி என்ற வஸ்து என்னுடைய போகத்திலும் இடை புகுந்திருந்தது.

பால்ய கல்யாணம். அப்போது நான் 14-லும், அவள் 12-லும். மணமாகி ஒரு முறை கூட அவளை நெருங்க என் உறவினர்கள் அனுமதித்ததே இல்லை. பழம் பழுக்கவில்லை என்று சொல்வார்கள். ஒன்றும் புரியாமல் இருந்துவிடுவேன். அவள் பழுத்தும்கூட  தொடத் தோன்றியதே இல்லை. என்னவென்றே தெரியாத ஒரு வெறுப்பு. இருந்தும்கூட அந்த முடியினால்தான் மீண்டும் அவளிடம் நெருங்கச் சென்றேன்.

சவரப்பெட்டி தொட்டு முதலில், மீசையைக் குறைக்கும் கடினமான பகுதியிலிருந்து ஆரம்பித்து அக்குள் முடி அகற்றுவது முதலாக, பிரிட்டீஷ் கிரீம் தடவி முகச் சவரம் செய்வதுவரை பழக ஆண்டு ஒன்று பிடித்தது. அதற்கு பிறகாக தலைமுடியில் கை வைக்க ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக என் நிழல் வெயிலை மறைத்து அடுத்தவன் தலையில் விழும்போது என்னுடைய கணக்கு உயர்ந்துகொண்டே சென்றது. தொழில் நட்டமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

ஊர் ஜமீன்தாருக்கு முடி வெட்டிவிடும்போது மட்டும் ஒரு மாதம் வாழ்க்கையை ஓட்டும் அளவுக்கான பணம் கிடைத்துவிடும். ஏனென்றால் இந்த வித்தையை வேறு எந்த ஊர் நாவிதனிடமும் அவர் பார்க்க முடியாது. ஒரு இணுக்கு புனுகு எடுத்து பாலில் தொட்டு, அரகஜா என்ற வாசனைப் பொருளைக் கொண்டு அதை கைகளால் பிசைந்து ஜமீன்தாரின் நெஞ்சுப் பகுதியில் தேய்க்கும்போது யாரோ தேவலோக ரம்பை அவரைப் புணருவதாக நினைத்துக்கொண்டு முனகலிடுவார்.

மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலையமைப்பு இருக்கிறது. அதை சுழிகொண்டு பிரிப்பது ஒரு குழந்தைத்தனம். ஜடா முடி, முன் குடுமி, பின் குடுமி (இதை ரப்பர் ஸ்டாம்ப் என்று பெரியார் தொண்டனான ராமசாமி கடை வள்ளல் சொல்வான்), என்று எல்லா மண்டையிலும் ஒருகுந்துமணி வித்தியாசத்தையாவது பார்த்துவிடலாம். அதாவது ஆயிரம் ஜடாமுடி இருந்தாலும் அந்த ஆயிரமும் வேறு வேறாகவும், ஆயிரம் மொட்டை இருந்தாலும் அந்த ஆயிரமும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாமல் ஒரு சிறு வித்தியாசம் இருந்துவிடும். தலை முடியமைப்பு என்பது நாவிதனாக நான் அறிந்தவரை ஒரு தனிப்பட்ட உயிர்வகை. முடித்திருத்தப் பயிற்சியில் அப்படி நுணுக்கமான பலவற்றை
கவனித்திருக்கிறேன்.

இந்த சிறு கத்தியும், ஒடிந்த பிளேடும் நான் சுமக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது. நான் தொழிலை நேசிப்பவன் என்றாலும், ஒரு பெரிய குறை. தொழிலிலேயே அது இருந்தது. நான் வெட்டிச் சுத்தம் செய்யும் மண்டையை விட, வெட்டி எறியும் முடிதான் எனக்குப் பிரச்சினையாக அமைந்தது.

முடித்திருத்தம் செய்யும் பணியில் முக்கால்வாசி தேர்ச்சியடைந்துவிட்டேன்.  குழந்தையின் தலைமுடியை நீக்குவது மட்டுமே நான் அப்போது பழக வேண்டியதாகவிருந்தது.  இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையின் மண்டையில் கத்தி கீறி ரத்தம் சூடாக வந்தது.  உடனடியாக டவுனுக்கு விரைந்து சென்ற அவர்கள் காயம் ஆழமாக பட்டிருப்பதாக சொல்லி மேற்படி செலவுக்கு என் கைப்பையிலிருந்தே அவிழ்த்துக்கொண்டார்கள்.

அன்றிலிருந்து குழந்தைகளைக் கையாளப் பழக வேண்டியிருந்தது.  அதற்கு நமது வீட்டிலேயே ஒரு குழந்தை இருந்தால் தேவலை என்று மனைவியை அணுகியபோது இதுவரை பார்த்திருந்த ” முடிக்கலை” மங்களம் பாடியது.  அது என்ன பிரச்சினை என்றால், எனக்கு முடி ஒரு அருவருக்கத்தக்க பொருளாக மாறிக்கொண்டிருந்த நிலையில் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர இத்தனை காலம் பிடித்திருப்பதே.

இதனால் குழந்தைகளைத் தவிர பரிணாமத்தின் மற்ற மனித வகைமைகளை வைத்தே வயிற்றை நிரப்ப நேர்ந்தது.  ஒரு நாள் நினைப்பு முதிர்ந்து உடலெங்கும் முடியாகவும், ஒரு கட்டத்தில் உலகெங்கும் முடியாகவும் என் கண்களில் காட்சியுருவானது. அது ஒரு வித பிரமையையும், பயத்தையும் எனக்குள் ஏற்படுத்தியிருந்தது.

அதனால் ஊரில் எந்த கூந்தலைப் பார்த்தாலும் அறுத்து எறிந்துவிடவும், எந்த முடிச்சுருளைக் கண்டாலும் சீவி வீசிவிட வேண்டும் போலும் நினைக்க ஆரம்பித்திருந்தேன். பெண்களில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. பெண்களின் முடியும், ஆண்களின் முடியும்தான் எனக்குப் பிரச்சினை.

-=-

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் என் சொந்தக் கதை:

இதெல்லாம் நடந்தது என்னவோ 70, 75 வருடங்களுக்கு முன்னால். எனக்கும் என் முப்பாட்டனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.  என் பாட்டன்,  தகப்பனாரை  தவிர்த்து, என்னிடத்தில் முப்பாட்டனின் வாசிக்கும் பழக்கம்தொற்றிக்கொண்டது.  அதனால், எனது முப்பாட்டன் கைக்கு வந்தபடி எழுதியவற்றை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம், மரபுத்தொடர்ச்சியற்ற ஒரு சரடின் மூலம் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்பதால்.

அப்போதைய நாட்களில் – அவன் நினைவைக் கலைத்த அதே முடி என்னுடைய கண்களிலும் சென்று ஒளிந்து கொள்ளும். குறுகுறுப்பான நெருடலின் மூலம் அதை உணர்ந்திருக்கிறேன்.  வாயின் அடியாழத்தில் தங்கி நாக்கிலிருந்து எச்சிலாக வெளியில் வரும். துடைத்து கீழெறிய முயற்சி செய்தாலும் வராமல் கைகளின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும். பொடிப்பொடியான குறுகிய முடியின் பிரச்சினை இது. பெண்ணின் நீண்ட முடி எப்போது வேண்டுமானாலும் காமத்தைக் கிளர வைத்துவிடும். ஒரு பஞ்சைப்போல மெதுவாக உதிரும்.  காற்றில் அசைவுறும்போது பெண்ணின் குழைவைக் காட்டிவிடும். இந்த முடியால்தான் எத்தனை தொந்தரவு. எடையே இல்லாத இந்த நீள் பின்னல்தான் எல்லா சங்கடங்களுக்கும் ஊற்று என்று அந்த பாமர நாவிதனுக்குத் தோன்றியதே எனக்கும் தோன்றுகிறது.

நீ நல்ல மனநல மருத்துவரைப் பார், என்று தங்கமுத்து சொல்லும்போது, கொதிப்பாக இருக்கிறது. மருத்துவரில் என்ன நல்லவர் அல்லது கெட்டவர்? எந்தத் தொழிலையும் பய உணர்வோடு ஒருவர் செய்தாலே போதுமானது. நல்லதோ கெட்டதோ, ஒன்றும் கிடையாது.  மேலும் இதை என் முப்பாட்டனின் நினைவுவழித் தொடர்ச்சியாக நான் கருதுகிறேன். இதில் மனம் என்ற ஒரு அமைப்பே இயங்கவில்லை. இது ஏன் என்னுடன் பதினைந்து ஆண்டுகளாக தொழில் செய்யும் இந்த தங்கமுத்துப் பயலுக்குத் தெரியாமல் போனது?

என் மகனை பெங்களூரில் அண்ணன் வீட்டில் தங்க வைத்து பிஷப் காட்டன் என்ற பள்ளியில் வாசிக்க வைக்கிறேன். ஒரு வகையில், முடியே இல்லாத உலகம்தான் மகத்தானது. பூரணமானது. அப்படி ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும். வேறுபாட்டைத் தங்கமுத்துவைவிட நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

கைவைக்கும் உணவனைத்தும் முடியாக நிரம்பி இருந்தது. பார்க்கும் ஒவ்வொருவரும் முடியால் ஆன மனிதர்களாக மாறியிருந்தார்கள். முடியை மட்டுமே உண்டு, அதையே பேண்டு வைக்கும் ஒருவனாக நான் மாறிவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதனால், என் முப்பாட்டன் அந்த கிழவியின் கூந்தலை அறுத்த காரியத்தை என் மனைவிக்கும் நான் செய்தால் தங்கமுத்து சொன்னது போல பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள்.

இப்போதெல்லாம் முடி நறுக்கும்போது, யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. முகத்தில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு மட்டுமே வேலைசெய்கிறேன். சலூனுக்குள் எந்த உணவுப்பண்டத்தையும் தொடுவதில்லை. முன்பெல்லாம், கடைக்குள் முடி வெட்டும் இடைவெளியில் சிகரெட்டும், டீயும் இல்லாமல் இருந்தது கிடையாது. தங்கமுத்து ஹேன்ஸ் போடுவான். அதை கண்டிப்பாக தவிர்க்க செய்துவிட்டேன்.  எதை வாயில் வைக்கவேண்டுமானாலும் வெளியில் சென்று வைத்துவிட்டு வரும்படி கடைப் பையன்களிடத்தில் சொல்லிவிட்டேன். என் போக்கு எனக்குப் பிடித்தது போல்.

இப்படியே என் போக்கிலேயே வாழ்ந்தால் ஒரு நாள் முப்பாட்டன் சந்தித்த தோல்வியை நானும் சந்திக்க நேரிடும் என்பதால் அதற்கு முன்பாக இந்த கடையை பொறுப்பான ஒரு ஆளிடம் ஒப்படைத்துவிட்டு வாடகையை வைத்து சமாளிக்கும் காலத்திற்கு வந்துவிட வேண்டும்.

அவனுக்கும் ஏற்பட்டதைப் போலவே, தெருவிலோ, கடைகளிலோ கண்களில் குண்டி வரை நீண்ட கூந்தலையும், பொசுபொசு ரோமங்களையும், ஜடைகளையும் வைத்துக் கொண்டு வருபவர்களை அழைத்து ஒரே அறுப்பாக அறுத்து எறிந்தால் மட்டுமே எனக்கு இந்த நினைவுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.  நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் பேசாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்துவிட நினைக்கிறேன்.

முடியை மட்டுமே நம்பி வாழும் என்னைப் போன்ற சலூன் கடைக்காரன் யாரிடத்திலும் இதைப் பகிர்ந்து கொள்ளவே முடியாது. அவனுக்கு எங்குபோய் தெரியப் போகிறது- எனது முப்பாட்டனைப் பற்றியும், மரபு வழியற்ற அருவமான தொடர்ச்சியொன்றைப் பற்றியும்?அன்றைக்கெல்லாம் “என்ன வாழ்க்கையடா இது?” என்று பாரதி சொல்லியிருந்தான். அதையே கொஞ்சம் மாற்றி, “என்ன மயிரு வாழ்க்கையடா இது?” என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.