ஆறாம் கயல் – 1

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

அம்மா எப்போதும்போல சகஜமாக எங்களுடன் வந்தாள்.

`இனி நாம பயமில்லாம வான்குடிகள் எல்லைக்கு வரலாம் இல்லியா?`, என்னைப் பார்த்துக் கேட்டாள்.

பச்சை நிற மலைச்சரிவில் ஆங்காங்கு தெரிந்த கரிய தரைப்பகுதியைப் பார்த்தபடி மையமாகத் தலையாட்டினேன்.

`ஏன் பயமில்லை சொல்லு?`

`அவங்களை நாம அழிச்சிட்டோம்`, கிளம்பும்போது பலமுறை என்னிடம் சொல்லப்பட்ட பதிலை நான் முடிப்பதற்குள் அவசர அவசரமாக மறுத்தாள்.

`இல்லை. நம்முடைய நிலங்களை மீட்டுவிட்டோம்.`, சிறிது இடைவெளிக்குப் பின்னர், `அது தான் உண்மை`, என்றாள்.

நான் அப்பாவின் முகத்தை ஒரு முறை பார்த்தேன். இறுகிய மண் போல அவரது முகத்திலிருந்து எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

`சரி, உன்னுடைய அப்பா என்ன தொழில் செய்பவர் சொல்லு?`

அம்மோம்மா பலமுறை நினைவூட்டியதுதான், `மண்குடி பொதுநலத் தாதன். மூத்தகுடி ஆயியான நமது தாய் அரியின் மருத்துவன்`

அம்மா முகத்தில் பெருமிதம் வழிந்தது. இதைச் சொல்லிக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிற்கூசும்படியான கர்வம் அவளிடம் குவியும்.

நேற்று நடந்து வந்த பாதையிலிருந்து இந்த நிலம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சதுப்பு நிலப்பகுதி. கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடந்த சண்டையின் அழிவுகள் ஆங்காங்கு தெரிந்தன.

‘ஆறாவது சுழற்சி முடிவடையும் நிமித்தங்கள் எழும்பிவிட்டன. இனி வான்குடி அழியும்; விண்ணேறி சரியும்; காலம் திசையறியும்’, அவள் மனதில் எழுந்த பூரிப்பின் வீச்சு கண்களில் பளபளத்தது.

சற்று தொலைவில் கழிவுகளையும் குரேம்பாக்களையும் அடித்துசென்றபடி நதி ஓட்டம் தெரிந்தது. ஊதா நிற இறகுகள் கொண்ட கழுகுகள் நிழலற்ற நதி வண்டலில் இறங்கின.

`விலங்குகளைப் பார்த்து சத்தம்போடக்கூடாது, சொன்னது நினைப்பிருக்கு இல்லியா?`

மையமாகத் தலையாட்டினேன்.

*

முன்னை ஒரு நாளில் – சம்பா எனும் எளியவள்.

ஒவ்வொரு கூரான கல்லைப் பிடித்து ஏறும்போதும் என் விரல்கள் நடுங்கின. விரல்களின் பிடியில் கற்கள் சிறு துகள்களாகச் சிதறி கீழே விழுவதைப் நடுக்கத்துடன் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஏறிவிட்டால் தூரத்தில் விண்ணேறியின் தளங்கள் பார்வைக்கு வந்துவிடும். ஆயி சொன்னது மட்டும் உண்மையாக இருந்தால் விண்ணேறி என் கண்ணில் படுவதற்கு முன்னால் அதிலிருந்து வரும் புகை தெரிந்தாக வேண்டும். ஹூம். நான் ஏறிக்கொண்டிருந்த குன்றின் உச்சிக்குச் செல்ல வேண்டும். நிற்காதே. ஏறு, ஏறு. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும். கீழே இறங்குவது எப்படி எனத் திட்டம் போடாததைப்பற்றி எண்ணுவதற்கு மனம் மறுத்தது. விண்ணேறி உடைந்ததா என முதலில் பார்க்க வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்.

Tall-Tower-1

தூரத்தில் மண்ணைப் பிளந்து முளைந்த பெரு நகரம் மேகங்களுக்கு இடையே மறைந்திருந்தது. விண்ணேறி நின்ற உருவம் ஒரு நகரத்தையே தனக்குள் அடக்கியிருந்தது. வான்குடியின் தலைமையகம் என அமையக்கூடிய எல்லாவிதமான தன்மைகளையும் விண்ணேறி கொண்டிருந்தது. வெளிப்புறம் கரும் பாறையால் செய்தது கரடுமுரடாக இருந்தது. அமானுஷம் எனும் குணம் யுகயுகமாகத் திரண்டு மலைமுகடுகளையும் தாண்டி பீறிட்டுச் செல்வது போன்றதொரு அமைப்பு. இத்தனை அகலமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மண்குடி சதுக்கத்தில் இருக்கும் நடுமரம் போல ஒல்லியாக நீண்டிருக்கும் என நினைத்திருந்தேன். மூன்று பெரு நகரங்களை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போன்ற பெருத்த சுற்றளவு. வானத்தைத் துளைக்கும் வாய் இருக்குமென கற்பனை செய்திருந்தேன். நகரமே வாயாக மண்ணிலிருந்து எழும்பி நின்றது. ஆ என என்னை எதிர்பாராமல் ஒரு சத்தம் போட்டேன். நினைவு வந்துவிட்டது. ஆயி தனது குலக்கதை எனச் சொல்லும் போது நெருப்பு உமிழும் பெரு மலைகளைப் பற்றி கூறியிருந்தாளே. அதைப் போன்ற ஒன்றாக விண்ணேறியை கற்பனை செய்திருந்தேன்.

இருட்டும் வரை உற்றுப்பார்த்தேன். எத்தனை நிதானமாகப் பார்த்தும் அதன் சுழற்சி கண்ணுக்குத் தெரியவில்லை. எனது விரலைக் கண்முன்னே வைத்துப்பார்த்தேன். கட்டைவிரலால் விண்ணேறி நகரத்தை மறைந்துவிட முடிந்தது. மறைவதும் தெரிவதுமான விளையாட்டை பல முறை செய்து பார்த்தேன். விண்ணேறி இல்லாத செளந்தர்ய உலகம் எப்படி இருக்கும்? எவ்வளவு யோசித்தும் அப்படி ஒரு உலகை கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி ஒரு உலகம் அமைதியாக, நிறைவாக இருக்கும் எனத் தோன்றியது. எனது குன்றிலிருந்து விண்ணேறி நகரம் எத்தனை தூரம் என கணிக்கப் பார்த்தேன். சதா சுழலும் விண்ணேறியை தூரங்களாலும் உயரங்களாலும் அளக்க முடியாது என ஆயி சொன்னது நினைவுக்கு வந்தது.

*

முதலில் வாசனை வந்தது. கூடவே காதுகளைக் கூசச்செய்யும் தொடர் ஒலி, முறிந்துவிழும் மூத்த மரங்கள் போல. இரவு முழுவதும் எனக்குத் தெளிவற்ற தூக்கம். சத்தம் கேட்டு அதிகாலை விழித்தபோது சுயநினைவு தெளிவதற்கு சில நொடிகள் ஆயின. வாசனை உறைத்ததும் சுய ஞாபகம் வந்தது. நேற்று முழுவதாக இறக்கிவைக்காததில் மார்புகள் கனத்த மூட்டை போல பெருத்திருந்தன. சகல உறுப்புகளும் பிய்ந்து விழுவது போலொரு வலி. சிறிது நேரத்தில் எல்லாம் நிதானத்துக்கு வந்தபோது மீண்டும் கடும் வாசனை என் நாசியை நிறைத்தது.

மெல்ல வெளியே எட்டிப்பார்த்தேன். குரேம்பாக்கள் அருகில் இல்லை. விடுவிடுவென வெளியேறினேன். வான்குடி பள்ளத்தாக்குக்கு அருகே சிறு சுனை உண்டு. அங்கு சென்றால் மட்டுமே மலைப்பகுதியை முழுவதுமாகப் பார்க்கமுடியும். மண்குடியில் சத்தமே இல்லை. எல்லாரும் வாசனையைத் தேடி போயிருக்க வேண்டும். மண்குடிகளின் உலகில் பிற உயிர்கள் கிடையாது. பல கதைகள் மூலம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட யுத்தக்காலம் இப்போதும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. துறவெளி எனும் பள்ளத்தாக்கில் யுத்தகாலத்தில் வான்குடிக்கும் மண்குடிக்கும் நடந்த சண்டையின் கதை மட்டுமே நாங்கள் அறிந்தது. சிறு வயது முதல் மூத்தோர்குடிக்குச் செல்லும்வரை ஒரே கதை பல முறை எங்களுக்குச் சொல்லப்படும். இப்போது வரும் வாசனை வான்குடிகளுக்கே உரியது என எனக்குத் தோன்றியது ஒரு சிறு தள்ளாட்டம் ஏற்பட்டது. மலை ஒரு முறை சுழன்றது போல ஒரு மின்னல் வெட்டு. வாசனை மேலும் தீவிரமடைய என் நடையில் வேகம் கூட்டினேன்.

தானியமடத்துக்கு அருகே கூட்டம் கூட்டமான மண்குடிகள் நின்றிருந்தனர். பெருத்த சத்தம் அந்த இடத்தை நிரப்பியது. தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்கள் அனைவரும் ஒரே உடல்பரப்பைக் கொண்டது போலத்தோன்றியது. அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் குரேம்பாக்கள் நின்றிருந்தனர். மண்குடிகளின் இடமல்ல தானியமடம். என்ன நடக்கிறது! தானியமடத்துக்கு அரி மட்டுமே வர இயலும். மண்குடிகளுக்குத் தேவையான விலங்குகள் பாதி மயக்க நிலையில் தானியமடத்தில் வைக்கப்பட்டிருக்கும். விடியலுக்குள் குரேம்பாக்கள் அவற்றைச் சேகரித்து மண்குடி சதுக்கத்தில் வைத்துவிடுவர்.

தானியமடத்தைத் தாண்டியதும் வான்குடி பள்ளத்தாக்கு ஆரம்பமாகிவிடும். கரிய உடலும், அரைகுறையாக வெந்திருந்த கைகால்களும், செம்மஞ்சள் விழிக்குழிகளும் உள்ள மனிதர்கள் அங்கு நடமாடுவதாக எங்கள் கதைகள் சொல்லும். மண்குடிகளை அழிக்கக்கூடிய வெறிபிடித்த மிருகங்களுக்கான பள்ளத்தாக்கு. குரேம்பாக்களின் கண்காணிப்பில் யாருமே வர இயலாத இடத்தில் இன்று பெரும் கூட்டம்.

யம்மே என்னை உடனடியாக கண்டுகொண்டாள். `வேணாம் போயிடலாம்..பயம்மாயிருக்கு`, என என் கையைப்பிடித்து இழுத்தாள்

எங்கிருந்தோ பெரும் சத்தம், இதுவரை நான் பார்த்திராத உருவில் பெரும் பாறை வடிவில் ஒரு குரேம்பா வேகமாக ஓடிவந்தது.

*

யாரோ கூப்பிடுவதைப் போலிருந்ததில் கண்ணைத்திறந்து பார்த்தபோது அந்த விபரீதம் புரிந்தது. ரப்பர் முகத்தோடு ஒரு உருவம் என் மூக்கைத் தொடும் தூரத்தில் கிடந்தது. அதன் கண்கள் முழுவதும் திறந்திருந்தன. திடீரெனத் தாக்கப்பட்டவன் போல அவனது பார்வை திகிலின் உறைகணமாக இருந்தது. ஜில்லிட்டுப்போன அழுகிய மூக்குநுனி கூரான ஊசி குத்தல் போலிருந்தது.

எப்படியேனும் எழுந்துவிடவேண்டும் என காலால் எழும்பப் பார்த்தேன். என் முன்னே கிடந்தவனின் மேலே அடுக்கடுக்காகப் பிணங்கள் கிடந்தன. அவற்றைத் தாண்டித் தெரிந்த கதவின் கைப்பிடி துருபிடித்திருந்தது. திமிறித் தவித்த போதும் மண்டை ஓடுகளும், செம்பட்டை மயிர் கற்றைகளும் விழுந்தவண்ணம் இருந்தன. சுற்றிலும் கடுமையான அமிலக் காற்று. கதவு துளையிட்டு தெறிக்கும்படி கத்தினேன். அலறினேன். யம்மே, சம்பா, யதி, பெருங்கிழன் என தனது குல மூத்தார் வரை எல்லாரையும் துணைக்கு அழைத்தேன். ஒவ்வொரு சத்தமும் எனக்குள்ளேயே ஒடுங்குவது போலிருந்தது. மண்ணுக்கடியே புதைந்துபோன பழங்கதைகளோடு மக்கிப்போய்விடுவேனோ என பயமாக இருந்தது. ஐயோ கதவைத் திறங்க. உதவி உதவி. பிணங்கள் ஒவ்வொன்றும் பழங்கனவை உண்டு செறித்துக் கிடப்பது போல அசைவற்றுக்கிடந்தன. நேரம் மட்டும் நகர்ந்துகொண்டிருக்க பிற பரிமாணங்கள் உறைந்திருந்தன. வெளியிலிருந்து உதவி வரப்போவதில்லை. நானே இங்கிருந்து வெளியே வந்தாக வேண்டும். உடலற்று உயிரற்று கிடப்பது போலிருந்தால் சில நாட்களைக் கடத்த முடியும். ஒரே நேரத்தில் புலன்கள் அனைத்தும் முழு உயிர்ப்போடும் சுரணையற்றும் கிடக்க வேண்டும். என்னைச் சுற்றியிருந்த பிணங்களின் கனவுகளில் நிலமற்ற நிலங்களும், ஈரமற்ற நீர்வீழ்ச்சிகளும், மணலற்ற பாலைவனங்களும் இருக்கக்கூடும். இங்கு எதுவும் மாறாது. என்னுடைய இடமல்ல இது. படபடவென அடிக்கத் தொடங்கிய இதயத்தை முதலில் ஒரு நிலைக்குக் கொண்டுவரவேண்டும். நான் இங்கு எப்படி வந்தேன், இங்கிருந்து எப்படி தப்பிப்பேன் என நினைப்பதை விடுத்து என் சிறுவயது விளையாட்டுகளை ஞாபகப்படுத்திக்கொண்டேன். வயது பின்னே போகப் போக இந்த மண்புதையலுக்கு உள்ளே முழுமையாக வாழத் தொடங்கியது போலத் தோன்றியது.

சிறு வயதில் அரி சொன்னது நினைவுக்கு வந்தது.

`வாழ்க்கை உனக்கு எள்ளைக் கொடுத்தால், அதிலிருந்து எண்ணெய் எடுக்கப் பார்`

`அரி, நீ சொல்வது எதுவும் விளங்கவில்லை. எள்னா என்ன?`

`ரொம்பவும் யோசிக்காதே. விடமாட்டார்கள். நானே சொல்கிறேன் கேட்டுக்கொள். உன் காலத்தில் அது ஒரு சாதனையாக இருக்கலாம்`

மீளாமல் போய்விடக்கூடிய பயணத்தின் எல்லையைத் தொட்டுவிட்டது போல பெருமூச்சு. சக்தி அனைத்தையும் இழந்துவிட்டதுபோல சூன்யமான உலகத்திலிருந்து திடீர் விழிப்பு நிலை; பெரும் சத்தம் காதை அடைத்தது.

முகம் முழுவதும் வியர்த்திருக்க விழிப்பு தட்டியது.

என்ன ஆனது? உணர்வின் அறுதி எல்லையில் நான் இருப்பது போலவும், ஒளி மிகு உலகம் தூரத்தில் விலகிப் போவது போலவும் கால இடவெளி. இதோ தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது;காலவிலகலைத் தாண்டியும்.

அரியின் மணிக்கட்டுகளிலும் புஜங்களிலும் நெருக்கமாக குத்தப்பட்டிருந்த உலோக வளையங்கள் வேகமாக அசைவது போலொரு உணர்வு.

வெளியே நீல இருள் பிரியாதிருந்தது. மெல்ல உடல் ஒரு நிதானத்துக்கு வந்தது.

இப்படி பல கதைகளை தனது குடும்பக் கதைகள் எனச்சொல்லியிருக்கிறாள் யதி. கதையின் நிகழ்வுகள் பெரும்போருக்கு முன்னர் நடந்தவை. வான்குடிகளின் வெற்றிக்கதை. இன்று மண்குடிகளுக்கு அவை அனைத்தும் புதிர் மட்டுமே. எட்டாக் கனவு.

**

வஞ்சி எனும் கன்னிகை

பொன்னாலான ஆடைகளை அப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். யம்மேயின் கைகளில் மின்னிய சிறு வெள்ளிச் சரடுகள் வேகமாக நகரும் விண்மீனைப்போல இருளைக் கிழித்துக் கடந்தன. கற்குவியல்களில் கூரானக் கற்கள் அவள் கால்விரல்களைக் கிழிக்கக்கூடும். தோளிலிருந்து கை அறுபடுவதுபோல அவளை இழுத்துச் சென்ற குரம்பேக்களின் பார்வை உச்சிப்பாறையிலிருந்து விலகவில்லை. அவள் அழக்கூடாது. அதற்கு அனுமதியில்லை. தூரத்தில் குவிந்திருந்த செம்மண் மேட்டின் பிளவிலிருந்து நானும் சம்பாவும் திகிலுடன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தோம். சம்பாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. இறுக கண்களை மூடிக்கொண்டு என் கால்களை அணைத்திருந்தாள். அவளது உதடு எதையோ முணுமுணுத்தபடி இருந்தது.

திடீரென ஒரு பிளிறல் சத்தம். மரங்கள் முறிவது போல. என் காலில் துளைபோட்டுவிடுவது போல சம்பாவின் நகம் தோலை ஊடுருவியது. வலியில் என் ஒரு கண் துடித்தபடி இருந்தது. நிதானமாக அவள் அருகே உட்கார்ந்து அழுத்தமாக அவளது கையை விலக்கப்பார்த்தேன்.

`போயிடலாம் வஞ்சி`

அழுது முடித்தவள் போல ஈனஸ்வரத்தில் முணகினாள்.

`ஏ..நம்ம யம்மே டீ..`, என செம்மண் மேட்டைத்தாண்டி சுட்டினேன்.

அவள் என் பிடியை மேலும் இறுகினாள்.

சம்பாவை அணைத்து உட்கார்ந்தேன். என் விரல்களில் சாமந்திப்பூ வாசம். காலையில் அரக்கு போட்டுத் தேய்த்தும் மிச்சம் இருந்தது. சம்பா பிடித்திருந்த பிடியைத் தளர்த்திவிட்டு மண்ணில் புதையப் புதைய விரல்களை பரபரவெனத் தேய்த்தாள். சம்பாவின் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை.

நான் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

என்னை இறுக அணைத்தபடி சம்பா பேச்சை மறந்து கிடந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தோம் எனத் தெரியவில்லை. திடீரென விழித்தபோது வைகறை வெளிச்சத்தில் தூரத்து மலைகுகைகள் துலங்கின.

உடனே எங்கிருக்கிறேன் எனப் புரிந்தது. செம்மண் மேட்டிலிருந்து எட்டிப்பார்த்தேன். இனி பத்து நாட்களுக்கு குகையிலிருந்து யம்மே வெளியே வரமாட்டாள். ஆம், பத்து நாட்கள். வெளியே வந்துதான் என்ன? யம்மே என்றொருத்தி இல்லாமல் இருப்பது போலத்தானே எனும் நினைப்பு வந்ததும் முள் குத்தியது போன்றொரு திடுக்கிடல். முட்புதர் உராய்வுகளைக் கூடத் தாங்கமுடியாதவள் எப்படி குரம்பேக்கள் இழுத்துப்போனபோது அழாமல் இருந்தாள்?

அம்மோம்மா சொல்றதெல்லாம் உண்மையா இருக்குமோ என நினைக்கும் நேரம் என் கண்கள் சுழற்றன. பிடி நழுவியதில் செம்மண் சரிவில் உருண்டோம். எந்த வலியும் தெரியவில்லை. அம்மோம்மா சொன்னது மட்டுமே கடலில் திரண்ட குரலாக ஒலித்தது.

*

FutureCity

[ நன்றி: Fantasy on City Image in the Future (Image by: Yaroslav Shkriblyak)]

நிமிடத்துக்கு ஒரு முறை விழிப்பு தட்டுவதுபோல அரியின் உடம்பு துடித்தபடி இருந்தது. அரைவட்ட வடிவில் சுற்றிலும் இளைஞர்கள் நின்றிருந்தனர். உதறல்களுக்கு இடையே அரியின் உதடு பிரிந்து வந்தது. பாட்டு பாடத் தயார் ஆகுபவள் போல வாயை அகல விரித்து பின்னர் மூடிக்கொள்வாள். மீண்டும் ஒரு துடியாட்டம். அவ்வப்போது நீளமான குடுவையிலிருந்து இளைஞர்கள் அவள் வாயில் நீரை ஊற்றினர். அசைவற்றதும் தீயிட்ட உயிர்ப்பொட்டைப் போன்ற துடிப்பும் மாறி மாறி வந்தன.

அரிக்கு துடிப்பு எனக் கேட்டதும் பால்பிடிக் கிடங்கிலிருந்து ஓடி வந்துவிட்டதில் என் மேலாடை முழுவதும் ஈரமாகியிருந்தது. இளைஞர்கள் நின்றிருந்த விளிம்புக்கருகே யம்மேவைப் பார்த்தும் அவளுடன் இணைந்துகொண்டேன்.

அரியை ஒரு பெரும் சட்டியில் அமரச் செய்தனர். ரெண்டடுக்கு சட்டியில் கீழே கொழுத்த தீ எரிந்துகொண்டிருந்தது. சுற்றிலும் நின்றிருந்த பெரியவர்கள் கண்களில் தெரிந்த உக்கிரம் அரியின் சன்னதத்தை போல தீவிரம் அடைந்திருந்தது.

யாமே பிண்டம்

எஞ்சியதனைத்தும் இவ்விடமே! இவ்விடமே!

உடம்பாலான அலை போல இளைஞர்கள் சீராக ஆடிக்கொண்டிருந்தனர். ஒரே குரலாக மந்திரத்தை முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லார் வாயும் அதை முணுமுணுத்தன. சம்பாவுக்கருகே இருந்தவளின் கையில் அரைவிழிப்பு நிலையில் இருந்த குழந்தையின் உதட்டசைவும் கோர்வையாக இருந்தது. எனக்குப் பின்னால் யாரும் இல்லை எனத் தெரிந்ததும், அக்குழந்தையின் உதடுகளில் தவழும் சிறு சிரிப்பை ரசித்தேன். ஒரே ஒரு நொடிதான். சம்பா என்னை முறைப்பது தெரிந்ததும் என் பார்வையை மாற்றிக்கொண்டேன்.

மந்திரத்தின் முழக்கம் என்னைச் சுற்றியிருந்த மலைப் பிரதேசத்தில் எதிரொலித்துக் கலந்தன. ஒலி அலைகள் பெருகிப் பெருகி கானகத்தின் வசீகரத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து பார்வையை விலக்காமல் ஓரக்கண்ணால் எங்கள் மலைக்குகைகளைப் பார்த்தேன். மண்ணில் செல்லரித்துக் கிடந்த கறையான் குன்றுகள் வெடித்து வெளிவந்தது போல ஆங்காங்கே மேட்டுக்குகைகள். அரி துடித்தடங்கும் மண் சட்டியைப் போல எங்கள் குடியிருப்பு அத்தனையும் மண் வெடிப்புகள்.

கடல் அலை உறைந்தது போல மண் மடிப்புகள்.

யாமே பிண்டம் என முணுமுணுத்த உதடுகள் சொன்னதைக் கேட்டதும் பெரும் திடுக்கிடல் ஏற்பட்டது. உடல் கூசுவதைப் போல, அரியின் கால்களின் வெம்மை என் உடல் முழுவதும் அனலானது. வேகவேகமாக கூட்டத்தின் தாளத்தை மீறி  யாமே பிண்டம், யாமே பிண்டம் எனப் பிதற்றத்தொடங்கினேன். எனக்கு முன்னால் நின்றிருந்த கிழவிக்கு எனது பதற்றம் உறைத்திருக்க வேண்டும். என்னைத் திரும்பிப் பார்த்தாள். சிமிட்டாத எனது கண்கள் அரியை நோக்கி நிலைக்குத்தியிருந்தன.

என்னைச் சுற்றிய மலைகள் சுழன்று மேலே விழுவது போலிருந்தன. நேற்றிரவு இப்படித்தான் இருந்தது. ஒரு வினோதமான நினைப்பு. கரிச்சாம்பலை அள்ளிப் பூசியிருந்த அரியைப் போல மலை முழுவதும் மலர்களால் பூசப்பட்டது போல ஒரு கணத்திடுக்கிடல். சற்றுத் தொலைவில் பெரும் சத்தத்தோடு உறங்கிக்கொண்டிருந்த குரேம்பாவின் உடல் மேலெழும்பி இறங்குவது போலிருந்தது. இவ்விடமே, இவ்விடமே என அவசரம் அவசரமாகச் சொல்லிக்கொண்டேன். படு படு எனச் சொல்வது போல குரேம்பாவின் கைகள் அசைந்தன.

*

Sunset-Mountain

வலக்கையில் மரத்தாலான சின்னமும், இடக்கையில் பாறை வெடிப்புகள் போல் கொப்பளங்களுமாக பெருகடல் முன் அமர்ந்திருந்தாள் அரி. ஆழ்கடல் வினவியதும் வாய் திறவாமல் பதில் சொன்னதும் அவளது அகம் மட்டும் அறியும். சினமற்ற தினங்களில் கடல் அவளுடன் அளவலாவும். இறந்த பெரும் கடல் ஆமைகளும், வேட்டை மீன்களும் எலும்புகளாகக் கரையில் சிதறிக்கிடந்தன. ஆழக்கடல் உள்ளடங்கி தனது அகத்தைக் காட்டும் பருவத்தில் அவள் கைநீட்டி நின்றிருப்பாள். கடும் மழையும், தீப்பிழம்பும் வானிறங்கி வரும்போதும் அசையாது நின்றிருப்பதை மலைமக்கள் கண்டனர்.

கடலுக்கு அடியிலும் விசும்பின் விரிவுக்கு அப்பாலும் கண்டங்கள் உண்டென அவள் அறிவாள். மலை மக்கள் அறியார் என்பதையும் அவள் அறிவாள். புல்லினங்கள் அற்ற வெறுமை கடலின் ஆழம் வரை சென்றது. தனது கூனல் உடலை வளைத்து நின்று, ஏக்கத்தால் நிறைந்த குழிக்கண்களைக்கொண்டு கடலுக்குள் தேடுவாள்.

அரி நின்றிருந்த பச்சைமலை சிவந்தது. பச்சையும் மண்ணுமாயிருந்த பெருங்குவியல் தழல் நிறத்தில் கரைந்தது. நீலக்கடலிலிருந்து வெகுண்டெழுந்த ஜ்வாலை அப்பகுதியையே மூடிவிடுவது போல பற்ற வைத்தது. எல்லையின்றி காணும் திக்கெல்லாம் விரிந்து கிடந்த விசும்பின் மீது நெருப்புப் பொத்தல் விழுந்தது போலக் கண்கூசியது. ஜ்வாலை அரவணைக்கக் காத்திருப்பவள் போல விரித்த கைகளுடன் அரி நின்றிருந்தாள். காற்றின் உப்பு மணம் மறைந்தது. அவளுக்குப் பின்னாலிருந்த மலைகுடிகளின் மண்மேடுகள் சிறு தீப்பந்தங்கள் போலக் காற்றில் துடித்தன.

சருகுகள் மீது ஆவேசமாக மோதும் நெருப்பு மழையை விரித்த கண்களுடன் அரி பார்த்திருந்தாள். பொலபொலவென மரப்பட்டைபோலக்கிடந்த அவளது கூந்தல் பளபளத்தது. விம்மித் தணிந்த மார்பு பிரபஞ்சத்தைக் கும்பியாற்றும் வல்லமையில் செழித்திருந்தன. இதழோரம் குறுநகைப்போடு நெருப்புப் பொத்தலைப் பார்த்திருந்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.