புனைவுலகைப் பேசும் தளத்தில் இக்கட்டுரையில் உள்ள சிந்தனைகளுக்கு நேரடி பொருத்தம் உண்டா என்ற கேள்வி எழலாம். படைப்பில் உணர்ச்சிக்குச் சமமான இடம் வடிவத்துக்கும் உண்டு, கற்பனைக்கு உள்ள முக்கியத்துவம் யதார்த்த உண்மைக்கும் உண்டு, மன நிறைவும் நீதியுணர்வும் வெவ்வேறல்ல. அழகுணர்வில் இவையனைத்தும் சீர்மையடைகின்றன என்கிறார் ஷில்லர். இவ்விரு விசைகளும் பிளவுபட்ட நிலையின் சீரழிவை விவரித்து, அழகணுபவத்தில் சாத்தியமாகக்கூடிய மேன்மையை முன்னிறுத்துகிறதுஜான் ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய இக்கட்டுரை. இதன் முற்பகுதிச் சுருக்கமும் பிற்பகுதியின் சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கமும் இனி.
முற்பகுதிச் சுருக்கம்: சிந்தனையாளர் ஷில்லர் மனித மனதை இரு பெரும் உந்துவிசைகள் பொருதும் களமாகக் கண்டார். உணர்ச்சி விசை நிகழ் கணத்துக்கு உரியது, உடனடி சுக நாட்டம் கொண்டது. வடிவ விசை காலக்கணக்கில் வடிவ நாட்டம் கொண்டது, அருவச் சிந்தனையும் தர்க்க ஒழுங்கும் தேடுவது. அது தன் அனுபவ புரிதல்களை விட்டுச் செல்லவும் பொது கொள்கைகளை நிறுவவும் முனைகிறது. நீதியுணர்வின் பிறப்பிடம் அது. இவ்விரண்டு உந்துசக்திகளும் சமநிலையடைதலே மனித வாழ்வுக்கு அமைதியை அளிக்கிறது. அழகுணர்ச்சி இவ்விசைகளை, நம்மைப் புரிந்துகொள்ள ஒரு வழியாகிறது.
இனி கட்டுரையின் தமிழாக்கப் பகுதி:
ஒருவரின் முகத்தைப் பார்த்து அவர்களுடைய இயல்பை நம்மால் ஊகிக்க இயலும் என்று நாம் நினைப்பது ஏன் என்பதில் ஷில்லருக்குத் தீவிரமான அக்கறை இருந்தது. நம் வாழ்வைச் செலுத்தும் இருவகைப்பட்ட உந்துவிசைகளின் சீர்மை நிலையை உணர்த்துமிடம்தான், அப்பல்லோவின் சிலை போல், முகத்திலும் அழகு மிளிர்கிறது என்று கருதினார் அவர்.

இந்த ஓவியம் அவரது ஆதர்ச உருவம். ஒரு வகையில், இது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருகிறது. ஒவ்வொரு விபரமும் ஒன்றோடொன்று இணங்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. நாற்காலி முதுகின் வளைவு, நம் கண்களை இந்தப் பெண்ணின் உதடுகளுக்குக் கொண்டுச் செல்லும் அதே நேரம், எழிலாக வளைந்த அவளது கையின் வளைவை சமநிலைப்படுத்துகிறது. முகவாய் நுனி தலையின் உச்சத்துக்கும் அவள் அணிந்திருக்கும் கவுனின் கழுத்துப் பகுதிக்கும் மத்தியில் துல்லியமாக வரையப்பட்டிருக்கிறது. எல்லாமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு புனைந்த ஓவியம் இது. ஒழுங்குபடுத்தும் உணர்வின் தீவிரம் இந்த ஓவியத்தை ஆள்கிறது. வடிவ உந்துவிசை இங்கு முழுவீச்சில் செயல்படுகிறது. இந்தத் தெளிவும் கட்டமைப்பும் ஓவியம் யாரைப் பார்த்து வரையப்பட்டதோ, அவருக்கும் உண்டு என்று தோன்றுகிறது. இந்தப் பெண் அமைதியாக இருக்கிறாள், தெளிவாகத் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள், அறிவின் தீட்சண்ய அழகை நாம் இவளிடம் காண்கிறோம்.
இதே அளவுக்கு, உணர்வின் உந்துவிசையும் முழு வீச்சில் இந்த ஓவியத்தில் இயங்குகிறது. இவள் இயல்பாக அமர்ந்திருப்பது போலிருக்கிறாள் – கூடுகை நிகழ்வின் ஏதோ ஒரு மூலையில் எதிர்பாராமல் நாம் சந்திக்கக்கூடிய பெண் இவள். ஒரு கணப்போதில் இவள் சிரிக்கலாம், அல்லது தன் கழுத்தில் உள்ள நகையைச் சரி செய்து கொள்ளலாம். இத்தனை பகட்டாக ஆடை அணிந்திருந்தாலும், இவள் மென்மையானவள், நம்மைப் புரிந்து கொள்வாள் என்று தோன்றுகிறது – நம் பிரச்சினைகளைப் பேசத் தகுந்த நபராக இவள் இருக்கக்கூடும். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற தேவையையும், மெல்லிய அந்தரங்க உணர்வுகளுக்கான தேவையையும் ஏககாலத்தில் இந்த ஓவியம் நிறைவு செய்கிறது என்பதுதான் இதன் அழகு.
ஷில்லரை உணர்ச்சிவசப்படச் செய்த குறிப்பிட்ட சில உதாரணங்கள் பிறரை நெகிழச் செய்வதில்லை என்பது ஒரு பிரச்சினையல்ல. ஏதோ ஒன்று இதுபோன்ற ஒரு தாக்கத்தை எல்லாருக்கும் ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஏதோவொன்றை நாம் அழகாக இருப்பதாகச் சொல்கிறோம். அழகு ஏன் நம்மைத் தொட்டசைக்கிறது என்பதற்கு இது ஒரு விளக்கமாக இருக்கலாம் – அழகு ஏன் நம்மை அழச் செய்கிறது? ஒரு இசைத் துணுக்கில் நாம் அழகைக் கண்டு கொள்ளும்போதும் ஒருவரின் நடத்தையில் கண்ணியத்தைக் காணும்போதும் நாம் அலட்சியப்படுத்தியவற்றையும் நம் துரோகங்களையும் நாம் காண்கிறோம் – திகைக்க வைக்கும் துயரையும் ஆனந்தத்தையும் அங்கு ஒருங்கே உணர்கிறோம்.
இன்றுள்ள பலரைப் போலவே ஷில்லர் அழகு சமூக அந்தஸ்துடன் நெருக்கமான உணர்வு கொண்டிருப்பதைக் குறித்து கவலைப்பட்டார். ஆம், அருவருக்கத்தக்கவர்கள் அழகிய பலவற்றுக்கும் உரியவர்களாக இருக்கின்றனர். இவற்றுக்கு உரிமையாளர்களாக இருப்பதால் அவர்களுக்கும் ஒரு மானுடத்தன்மையோ நளினமோ இருப்பது போன்ற தோற்றம் உருவாவது கிடையாது. அழகை ஒரு ஆடம்பர அலங்காரமாகவோ சமூக அந்தஸ்தின் குறிப்பானாவோ கருதுவது, அழகனுபவத்தின் மெய்யான சாத்தியங்களைத் தவற விடுவதாகும் என்ற நம்பிக்கை ஷில்லருக்கு இருந்தது. அழகின் நோக்கம் ஆன்மாவுக்கு அதன் மேன்மையை உணர்த்தல்.
ஷில்லர் உற்சாகமிக்க சீர்திருத்தவாதி. புதிய ஒரு நியாயமான, உத்தமமான சமூகத்தை உருவாக்க தணியாத் தாபம் கொண்டிருந்தார். ஆனால், அரசியல் சீர்திருத்தங்களால் சாதிக்கக்கூடியவை குறித்து அவர் நம்பிக்கை இழந்திருந்தார். தன் வாழ்நாளில் அவர் பிரஞ்சுப் புரட்சி வன்முறையைக் கட்டவிழ்த்துச் சீரழிந்ததைக் கண்டிருந்தார். பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக பெருங்கூட்டங்கள் உருவாகி அதிகார அமைப்பு குலைவதையும் உணர்ச்சியற்ற அரசு இயந்திரத்தின் சர்வாதிகாரம் நிறுவப்படுவதையுமே அவர் கண்டார். இவ்விரண்டின் கூட்டாட்சி உருவாகக் கண்டார். அவர் காலத்து கல்வியற்றவர்கள் உணர்ச்சி வேகத்தில் செயல்படுவதில் உணர்வின் உந்துவிசையையும், பிரஞ்சு அரசாங்கத்தின் பொது அமைதிக்குழு தூய்மையைத் தீவிரமாகக் கடைபிடித்ததில் வடிவின் உந்துவிசையையும் அவர் கண்டார். மனித இயல்பின் ஆதார உந்துவிசைகள் இரண்டும் பிளவுபடுவதன் விளைவை சமூக அளவில் பிரான்சின் புரட்சிகரச் சூழல் வெளிப்படுத்துவதாகத் தெரிந்தது.
சமூகப் பிரச்சினைகளைக் குறித்த ஷில்லரின் கணிப்பு, தனிமனித வாழ்வின் அகப் போராட்டங்கள் குறித்த அவரது புரிதலுக்கு இணக்கமான விளக்கமாக இருந்தது. இந்த இரு தளங்களிலும் முழுமையான மானுடச் சீர்மையின் இழப்பை அவர் முன்னிலைப்படுத்தினார். மக்களும் தலைமையும் அதைத் திரும்பப்பெற முடியாது என்று அவர் நினைத்தார். அழகைக் கொண்டு அடையப்படக்கூடிய அக வளர்ச்சி கணிசமான எண்ணிக்கை மக்களுக்குச் சாத்தியப்படும்வரை பெரும் குறிக்கோள்களைக் கொண்ட சமூகச் சீர்திருத்தங்கள் தோல்வியடையும் என்ற முடிவுக்கு வந்தார் அவர். இது நம் நம்பிக்கைகளை தொய்வடையச் செய்தாலும், இதில் உண்மை இருக்கலாம்.
சில சமயம், நாம் ஷில்லர் போன்ற சிந்தனையாளர்களை, இவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வத்தில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அல்லது, சிந்தனை வரலாற்றின் பெரும்போக்கைப் புரிந்து கொள்ள இவர்களை அறிய முனைகிறோம். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே நமக்கு இந்தப் பேரண்டம் எவ்வாறு உருவானது என்பதைக் கற்பதில் ஒரு ஆர்வமும் முனைப்பும் இருந்தது. தொல்லியல் துறை உருவாவதற்கு முன்னரே வரலாற்றுக்கு முந்தைய காலம் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்பட்டோம். இப்போது இப்படிப்பட்ட எண்ணங்களைப் பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்கிறோம். ஓரளவுக்கு இணக்க உணர்வுகள் நமக்கு இருந்தாலும், இந்தச் சிந்தனைகள் நம் மனதை மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இந்த எண்ணங்களைக் கைகொள்வதில்லை. நம்மை யாரும் நம்பச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் நமக்கில்லை. இருந்தாலும், நாம் முன்னேறித்தானிருக்கிறோம். ஒரு புதிய உலகில்தான் வாழ்கிறோம்.
ஆனால் அவ்வப்போது நம் காலத்துக்குத் தேவையான சிந்தனைகள் சில கடந்த காலத்திருந்து உயிர் பெற்றெழுவதை நாம் எதிர்கொள்ள நேர்கிறது. ஷில்லரைச் சந்திப்பதும் இப்படிப்பட்ட ஓர் அனுபவம்தான். அழகு குறித்த அவரது சிந்தனைகள் பதினெட்டாம் நூற்றாண்டில் வெய்மார் நகரில் வாழ்ந்து மறைந்த ஒரு தனி நபரின் நம்பிக்கைகள் மட்டுமல்ல. அதனினும் பெரிது. ஆம், அவை நமக்கு வழி காட்டக்கூடும் – நாம் அழகைக் கொண்டு மேன்மையடைய அவை இன்று நமக்கு உதவக்கூடும்.
தமிழாக்கம் – எஸ். சுந்தரமூர்த்தி