ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.
– ஔவை, புறநானூறு 101
இதன் எளிய ஆங்கில வடிவம் –
Not one day, not two
Having stayed with him for many days
When I come back
with many others
He welcomes us
as if it is the first day
We are here to receive gifts
from Adhiyaman
who possesses elephants with ornaments
and chariots
You may get it immediately
or it may be delayed
but like the rice ball given to the elephant
you will surely be given
don’t worry my heart
May he live long
இனி.
நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னனைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுகிறாள் ஔவை. மன்னனிடம் பரிசில் பெறப் பாடப்பட்ட புகழ்ச்சி பாடல்கள் புறநானூற்றில் நிறைய இருக்கின்றன. அதியமான் கொடைத் திறனை வியந்து ஔவை பாடிய பல பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலை இப்படி காட்சிபடுத்திக் கொள்கிறேன் – அதியமானின் அரண்மனைக்கு அப்போதுதான் வந்து சேரும் புலவன் ஒருவன் அடக்க ஒடுக்கமாய் தனக்கு ஏதேனும் பரிசு கிடைக்குமா என்று ஆவலாகக் காத்திருக்கிறான். என்ன கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பது அவனுக்குத் தெரியாது. கவலையைப் போக்கிக் கொள்ள ஔவை, ‘வருந்த வேண்டா நெஞ்சே’ என்று ஆறுதல் சொல்லிக் கொள்கிறாள்- எப்படியும் கொடுப்பான், கொடுக்காமலிருக்க மாட்டான்.
இந்தப் பாடல் என்னை வருத்தப்பட வைக்கிறது. கவிஞன் அந்த அரசனுக்கும் அவன் மக்களுக்கும் எவ்வளவு முக்கியமானவனாக இருக்கிறான் என்பதை இந்த இரு அடிகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன – “அதியமான் பரிசில் பெறூஉங் காலம்/ நீட்டினும் நீட்டாது ஆயினும்”. அவன் உடனே கொடுத்தாலும் கொடுப்பான், காலதாமதம் ஆனாலும் ஆகலாம். எப்போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் வள்ளல். கவிஞன் அவனது கருணையை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். சங்க காலத்தில் புரவலர்களை நம்பி வாழ்க்கை நடத்திய கலைஞர்களின் நிலையை இப்பாடல் சித்தரிக்கிறது. இப்போது பரவாயில்லை, ஏதோ ஒரு விலை வைத்து படைப்பை விற்க முடிக்கிறது.
இதையொட்டி ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது – ஒரு சமூகத்தில் கலைஞனின் இடம்தான் என்ன?
கேளிக்கையாக இருக்கும் கலைஞர்கள் ஒரு போதும் பிரச்சினையாக இருந்ததில்லை. அவர்களுக்கு எப்போதும் கவனமும் கரகோஷமும் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன (கேளிக்கைக்கு எதிரான சர்வாதிகார அரசில் வேண்டுமானால் நிலைமை வேறு மாதிரி இருக்கலாம்). கேளிக்கைக் கலைஞர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள், இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் பெரும்பணக்காரர்களாக இருக்கிறார்கள். கேளிக்கை கலையாகுமா, அவர்கள் கலைஞர்களா என்ற விவாதத்துக்கு முடிவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் இதுதான் – உண்மையான கலைஞர்கள் பலர் கேளிக்கையளிக்கவும் செய்திருக்கின்றனர். இவர்களுக்குப் புரவலர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் இருந்திருக்கிறது.
கேளிக்கை கலைஞர்களுக்கு அடுத்தபடியாக ‘சமூகப் பிரக்ஞை’ உள்ள கலைஞர்கள் சமூக அங்கீகாரத்தை எளிதில் பெறுகிறார்கள். இவர்கள் சமூகத்தில் நிலவும் அநீதிகளைக் கண்டிப்பவர்களாக இருக்கலாம், அல்லது ஆளும் வர்க்கத்தை விமரிசிப்பவர்களாக இருக்கலாம், அல்லது சமய அமைப்புகளை எதிர்ப்பவர்களாக இருக்கலாம், அல்லது இது போன்ற வேறேதோ ஒரு போராட்டம் நிகழ்த்துபவர்களாக இருக்கலாம். எப்படியோ இவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. இது போன்ற சிலர் நேரடியாக, வெகு எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தங்கள் சமூக பிரக்ஞையை வெளிப்படுத்துகிறார்கள்.
ஏறத்தாழ எல்லா கலைஞர்களுமே ஏதோ ஒரு வகையில் சமூகத்தை விமரிசனத்துக்கு உட்படுத்துபவர்களாகதான் இருக்கின்றனர் – ஆனால் அவர்களுக்கு ‘சமூக பிரக்ஞை’ இருப்பதற்கான அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. இவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டாலும் விழிப்புணர்வு, சமூக பிரக்ஞை போன்ற விஷயங்களை நேரடியாகப் பேசும் கலைஞர்களை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது, எதிர்தரப்பு கடும் சாடல்களுடன் நிராகரிக்கிறது. எது எப்படியிருந்தாலும், இந்தக் கலைஞர்கள் தங்களை சமூகத்தின் உறுப்புகளாக உணர்கின்றனர், இவர்களுடைய கலையின் பயன்பாடு கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை. அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் நிஜமாகவே கலைஞர்கள்தானா, அவர்களது படைப்புகள் பிரச்சார சாதனங்கள் ஆகிவிடுமே என்பது விவாதிக்கப்பட வேண்டிய கேள்விதான். இப்போதைக்கு, வெளிப்படையாக அரசியல் பேசினாலும் சில கலைஞர்கள் எப்போதும் கலைஞர்கள்தான் என்று மட்டும் சொல்லி விடுகிறேன். சுப்ரமணிய பாரதி இவர்களில் ஒருவன்.
இவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா என்ற குழப்பத்தில் புறக்கணிக்கப்படும் கலைஞர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் சிலர் தங்கள் கலையை மேம்படுத்த விரும்புகிறார்கள். பொதுப் பார்வையில் அவர்கள் ஏதோ ஒரு ரகசிய கூட்டத்துக்குரிய சங்கேதமொழியில் உரையாடிக் கொள்பவர்கள் போலிருக்கின்றனர், தங்கள் கலையைத் தவிர வேறு எதிலும் அக்கறை இல்லாதவர்கள் இந்தக் கலைஞர்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. “இதனால் என்ன பிரயோசனம்? பொழுதும் போவதில்லை, சமுதாயத்தில் மாற்றமும் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்ட படைப்புகளை நாம் ஏன் ஊக்குவிக்க வேண்டும்?” என்ற கேள்வி திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.
ஜெயமோகனின் தளத்தில் உள்ள கட்டுரைகளைப் படித்தால், இலக்கியம் குறித்து இது போன்ற கேள்விகளுக்கு அவர் மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். ஒரு மாபெரும் இலக்கியப் படைப்பு சமூகத்தின் சிக்கல்களைச் சித்தரிப்பது போல் எந்த ஒரு நேரடியான தகவல் கட்டுரையும் செய்ய முடியாது என்று அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். பைரப்பாவையோ ராகவேந்திர பாட்டில் எழுதியதையோ படிக்கும்போதுதான் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிகிறது. பொதுவாக, உயர்ந்த கலைப்படைப்புகள் இருமைகளில் சிக்கிக் கொள்வதில்லை. வரலாற்று உருவாக்கத்தில் தாக்கம் செலுத்தும் பல்வேறு கூறுகளின் இடையூட்டத்தை அவை முன்னிலைப்படுத்துகின்றன. சிறந்த எழுத்தாளர்கள் சமூகச் சிக்கல்களைத் தங்கள் ஆக்கங்களில் சிறப்பாகக் கைப்பற்றுகின்றனர் என்பது மட்டுமல்ல, மானுட இதயத்தை ஆழத் துளைத்துச் சென்று தனி மனிதனுக்கும் சமூகத்துக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொளவும் முயற்சிக்கின்றனர்.
மேற்சொன்னவை பயனுள்ள விஷயங்களாகத் தோன்றினாலும், பொதுப் பார்வை இதிலெல்லாம் ஒரு பிரயோசனமுமில்லை என்றுதான் சொல்கிறது. ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தைப் பார்த்து நாம் என்ன சொல்ல முடியும்? இம்ப்ரஷனிஸ்ட் ஓவியர்கள் தங்கள் சமகாலத்தில் பொதுமக்களாலும் விமரிசகர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்களின் ஓவியங்கள் தக்க அங்கீகாரம் கிட்ட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. மோனே, ரென்வா, செஜான் போன்றவர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியளித்து சமாளித்து வாழ்ந்தனர், யாரும் அவர்களை கவனிக்கவில்லை. பொதுமக்களுக்கு அந்த ஓவியங்கள் புரியவில்லை. விமரிசகர்களோ, அக்காலத்துக்குரிய ஓவியச் சட்டகங்களை அவர்கள் உடைத்ததால் கடுமையாகக் கண்டித்தனர். ந்யூ ஆர்ட் என்று ஒன்று வந்தபோது, அது எதற்க்ம் பயனற்றது என்பதுதான் பொதுக் கருத்தாக இருந்தது. ஆனாலும் சிறந்த கலைப் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, அவை எவ்வளவு விநோதமாக இருந்தாலும். இது ஏன்? இதற்கான விடை காண, வேறொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டாக வேண்டும்.
ஔவையின் இந்தப் பாடலேகூட, என்னை, “ஏன்?” என்றுதான் கேட்க வைக்கிறது. இந்தக் காலத்தில் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மாணவன் பொறியியல் படிக்கப் போகாமல் கலைக் கல்லூரியில் சேருகிறேன் என்று சொன்னால் நாம் இந்தக் கேள்வியைதான் கேட்போம். பெற்றோர் கண்முன் இந்தப் பாடல் விவரிப்பது போன்ற ஒரு காட்சி தோன்றுகிறது, “ஏன்?” என்ற கேள்வி எழுகிறது. ஒருவன் ஏன் கலைஞனாக வேண்டும்?
மல்லிகார்ஜுன் மன்சூரின் கௌட் மல்ஹார் ராக ஆலாபனை பற்றி ஹார்மோனியக் கலைஞரும் இந்துஸ்தானி இசை விமரிசகருமான ராஜன் பரிக்கர் இப்படிச் சொன்னார்: “பித்து எனும் பேய் எலும்புகளுக்குள் புகுந்தால்தான் இப்படி பாட முடியும். தர்க்கத்துக்கு கட்டுப்பட்ட மானுடர்களால் ஆகாத காரியம் இது”. பித்து ஒரு பேய் போல் ஆட்கொள்ள இடம் தருவதுதான் ஒரு கலைஞனால் ஆகக்கூடிய செயல். இந்தப் பேயை விரட்டும்வரை அவர்கள் தங்களாலானதைச் செய்யாதிருக்க முடியாது. கலையைக் கொண்டு வெளிப்படுவதே இந்தப் பேயை வெளியேற்றும் ஒரே வழி.
அடிப்படையில் கலை தகவல் பரிமாற்ற வடிவம். கலைஞன் தொடர்பு கொள்ளவே விரும்புகிறான். மானுட இருப்பு குறித்த தன் ஆழமான புரிதலை அவன் நமக்குச் சொல்ல நினைக்கலாம், அல்லது சமூக அமைப்பு குறித்த தன் பரந்துபட்ட புரிதலைச் சித்தரிக்க நினைக்கலாம், கலையின் எல்லைகளை விரிக்கும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த நினைக்கலாம். கலையின் வரைகள் விரியும்போது மனிதர்களுக்கிடையேயான தொடர்பு பாதைகளும் விரிவடைகின்றன. இவற்றின் வடிவம் மொழியாக இருக்கலாம், சிற்பமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம். தன் சக மனிதனைத் தொட கலைஞர்கள் கண்டுபிடிக்கும் புதுப்புது கருவிகள் இவை.
ஆனால் உண்மையில், தொடர்பு சாதனங்கள் அனைத்தும் நம்மைக் கட்டுப்படுத்தும் சாதனங்களே எனபதை உண்மையான கலைஞன் அறிந்திருக்கிறான். எனவேதான் நிறுவப்பட்ட வடிவங்களைத் தகர்த்து புதிய வகைகளைத் தேடிச் செல்கிறான். கடினமான மொழியில் எழுதுவது ஏன் என்று கேட்டதற்கு வில்லியம் பாஃக்னர், இப்படிதான் என் பார்வையை வெளிப்படுத்த முடிகிறது என்று பதிலளித்தார். அவருக்கு, கடினமான மொழியா எளிய மொழியா என்பதல்ல கேள்வி, எது இயல்பான மொழி என்பதுதான் பிரச்சினை.
இதுபோன்ற மாற்றங்கள் முதலில் சமுதாயத்தில் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், மெல்ல மெல்ல புதிய மொழி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. காலப்போக்கில் இதுவே இயல்பான மொழியாகவும் மாறுகிறது. காலம்தோறும் கவிதை எவ்வாறு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது இதைப் புரிந்து கொள்ளலாம் – ஓவியங்களும் தக்க உதாரணங்கள். “ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட கலை பின்னர் ஏன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?” என்ற கேள்விக்கு இதுவே விடையுமாகிறது. இம்ப்ரஷனிஸ்டுகள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் – முதுமைப் பருவத்தில் தங்கள் கலை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதைக் கண்டனர்.
இப்போது ஔவையின் பாடலை வேறு கோணத்தில் வாசிக்க முடியும். இந்தப் பாடல் நெடுமான் அஞ்சியைப் பேசவில்லை. மாறாக, சமூகத்தின் பரிசிலுக்காகக் காத்திருக்கிறாள் கவி. உண்மையில், ஒரு கவிஞனுக்குரிய அங்கீகாரம் உடனே கிடைக்கலாம் அல்லது காலம் தாழ்ந்து கிட்டலாம். ஆனால், ஔவை உறுதி கூறுகிறாள், தக்க பரிசு கிடைத்தே தீரும். கலைஞன் என்றாவது ஒரு நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அவனுக்கு மரியாதை அளிக்கப்படுவது உறுதி. தங்கள் வாழ்நாளில் இதைப் பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சிலருக்கு அந்த நாள் காணும் பாக்கியம் கிடைப்பதில்லை.
– எஸ். சுரேஷ்
– தமிழாக்க உதவி : பீட்டர் பொங்கல்