வித்தைக்காரனின் வெஞ்சினம்

Stephen Leacock
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்

Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.

conjurer-revenge

ப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”

அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’

ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்”

உடனே அந்த துரிதப் பேர்வழியை மக்கள் பிரகாசமாக ஆமோதித்தனர் “அட! ஆமாம்”; கூடத்தில் இருந்த எல்லோரும் கிசுகிசுத்தனர் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்”.

“இதோ அடுத்த வித்தை,” சொன்னான் வித்தைக்காரன். “பிரபலமான இந்துஸ்தானி வளையங்கள். இந்த வளையங்கள் வெளிப்படையாக பிரிந்திருப்பதை கவனியுங்கள்; ஒரே அடியில் எல்லாம் சேர்ந்துகொள்ளும் (க்ளாங், க்ளாங், க்ளாங்)— ப்ரெஸ்டோ!”

பொதுவான வியப்புகூவல் சலசலத்தது, அந்த துரித பேர்வழி கிசுகிசுப்பதை கேட்கும்வரை, “அவன்-கண்டிப்பாக-இன்னொரு-தொகுதி-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்திருப்பான்”

மீண்டும் எல்லோரும் ஆமோதிப்படிக்கே கிசுகிசுத்தார்கள், “அந்த-வளையங்கள்-அவன்-கைக்குள்-ஒளிந்திருந்தன”.

மாயக்காரனின் புருவங்கள் கூடி கோணலாய் முடிச்சிட்டுக்கொண்டன.

“நான் இப்பொழுது ” தொடர்ந்தான், “உங்களுக்கு ஓர் அதி வேடிக்கையான வித்தையை காட்டப்போகிறேன், அதன் மூலம் என்னால் தொப்பியிலிருந்து கணக்கில்லா முட்டைகள் எடுக்க இயலும்.. யாரேனும் ஒரு கனவான் தன்னுடைய தொப்பியை அன்புடன் கடன் தர முடியுமா? அஹ்., உங்களுக்கு நன்றி–ப்ரெஸ்டோ!”

அவன் பதினேழு முட்டைகள் எடுத்தான். அவையோர் முப்பத்தியைந்து நொடிகளுக்கு, அவன் ஓர் அற்புதம் என எண்ணத்தொடங்கினர். அப்புறம், அந்த துரிதப் பேர்வழி முன்வரிசையெங்கும் கிசுகிசுத்தான் “அவன்-ஒரு-கோழியை-கைக்குள்-ஒளித்துவைத்திருக்கிறான்’, உடன் எல்லா மக்களும் அதையே தொடர்ந்து கிசுகிசுத்தனர் “அவன்-கைக்குள்-நிறைய-கோழிகள்-ஒளித்துவைத்திருக்கிறான்”

அந்த முட்டை வித்தை குலைந்துபோனது.

அப்படித்தான் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. துரித பேர்வழியின் கிசுகிசுப்புகள் வழியாக, வித்தைக்காரன் தன் கைக்குள் மறைத்து வைத்திருந்தது, வளையங்கள், கோழிகள் மற்றும் மீன்களோடு கூட, பல சீட்டுக்கட்டுகள், ஒரு ரொட்டித்துண்டு, ஒரு பொம்மையின் தொட்டில், உயிருள்ள கினிப் பன்றி, ஒரு 50 சதம் மற்றும் ஆடுநாற்காலி ஒன்று.

வித்தைக்காரனின் மதிப்பு அதிவேகமாக சுழியத்துக்கும் கீழே தாழ்ந்து கொண்டிருந்தது. அந்த மாலைப்பொழுதின் முடிவில், அவன் இறுதி முயற்சியாய் முனைந்தான்.

‘சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் “சமீபத்தில் திப்பேரரிவாசிகள் கண்டுபிடித்த ஜப்பானிய வித்தையை, முடிவாக உங்களுக்கு வழங்குகிறேன். ஐயா நீங்கள்?’ அவன் துரித பேர்வழியிடம் திரும்பினபடிக்கு தொடர்ந்தான் “உங்கள் தங்க கைக்கடியாரத்தை அன்புடன் கொடுக்க முடியுமா?’

அது அவனிடம் அனுப்பப்பட்டது.

“இதை இந்த உரலுக்குள் போட்டு துண்டுகளாக நொறுக்குவதற்கு, எனக்கு உங்கள் அனுமதியுண்டா?” அவன் கேட்டான்

துரித பேர்வழி ஆமோதித்தபடியே முறுவலித்தான்.

வித்தைக்காரன் அந்த கைக்கடிகாரத்தை உரலில் போட்டுவிட்டு, மேஜையிலிருந்த சுத்தியலை பற்றி எடுத்தான். வன்மையாக நொறுக்கும் சத்தம் கேட்டது. “அவன் – கைக்குள்-தள்ளிக்கொண்டான்” என்று கிசுகிசுத்தான் துரித பேர்வழி.

“இப்பொழுது’, தொடர்ந்தான் வித்தைக்காரன், “உங்கள் கைக்குட்டையை பெற்று அதில் துளைகள் இட எனக்கு இசைவளிப்பீர்களா? நன்றி. பாருங்கள் சீமாட்டிகளே, கனவான்களே, பொய்யில்லை. துளைகள் எல்லாம் கண்களுக்கு புலனாகின்றன. ”

துரித பேர்வழியின் முகம் பிரகாசித்தது. இம்முறை அதன் உண்மையான புதிர்த்தன்மை அவனை ஆட்கொண்டது.

“இப்பொழுது ஐயா, உங்கள் பட்டு தொப்பியை அன்புடன் தந்து, அதன் மேல் நான் நடனமாட இசைவளிக்க முடியுமா? நன்றி”

வித்தைக்காரன் தொப்பியின் மேல் கால்களால் சில வேக அசைவுகள் செய்து, அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்த தொப்பியைக் காட்சிப்படுத்தினான்.

‘இப்பொழுது ஐயா, உங்கள் செல்லுலாயிட் கழுத்துப்பட்டையை கழட்டி, அதை மெழுகுவர்த்தியில் எரிக்க அனுமதிப்பீர்களா? நன்றி ஐயா. மேலும், உங்களுக்காக, என்னுடைய சுத்தியலால் உங்கள் கண்ணாடியை நொறுக்க இசைவளிப்பீர்களா? நன்றி”

இந்த நேரத்திற்குள், துரித பேர்வழியின் முகக்கூறுகள் வியப்பான தோற்றத்தை கொண்டிருந்தது. “இது என்னை அசர வைக்கிறது”, அவன் கிசுகிசுத்தான். “என்னால் துளிக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை”

அவையோர் மீது பெரும் அமைதி பரவியிருந்தது. அப்பொழுது, வித்தைக்காரன் தன்னுடைய முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று, சோர்ந்த தோற்றத்துடன் துரித பேர்வழியைப் பார்த்தவாறு, முடிவாக சொன்னான்

‘சீமாட்டிகளே, கனவான்களே, நீங்கள் அவதானித்தபடிக்கு, இந்த கனவானின் அனுமதியுடன், கைக்கடிகாரத்தை உடைத்தேன், காலரை எரித்தேன், அவர் கண்ணாடியை நொறுக்கினேன், அவருடைய தொப்பியின் மீது நடனமாடினேன். அவர் மேற்கொண்டு அனுமதியளித்தால் அவருடைய மேலங்கி மீது பச்சைக்கோடுகளை வரைவேன், அல்லது அவருடைய சஸ்பெண்டர்களை முடிச்சாக பிணைப்பேன். உங்களை மகிழ்விப்பதில் ஆனந்தம் அடைவேன். இல்லையென்றால், இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவடைகிறது”

உடன், இசைக்குழுவிடமிருந்து பீறிட்டெழுந்த பிரமாதமான இசையினூடே திரை விழ, அவையோர் சில வித்தைகளாவது, எவ்வகையிலும், வித்தைக்காரனின் கைக்குள் ஒளித்து நிகழ்த்தப்படவில்லை என நம்பியபடியே, கலைந்துசென்றனர்.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.