கவியின் கண் 8 – ‘கையிருப்பில் இல்லாத காரணத்தால்’

– எஸ். சுரேஷ்-

MUSEUM –  Wislawa Szymborska

Here are plates with no appetite.
And wedding rings, but the requited love
has been gone now for some three hundred years.

Here’s a fan–where is the maiden’s blush?
Here are swords–where is the ire?
Nor will the lute sound at the twilight hour.

Since eternity was out of stock,
ten thousand aging things have been amassed instead.
The moss-grown guard in golden slumber
props his mustache on Exhibit Number…

Eight. Metals, clay and feathers celebrate
their silent triumphs over dates.
Only some Egyptian flapper’s silly hairpin giggles.

The crown has outlasted the head.
The hand has lost out to the glove.
The right shoe has defeated the foot.

As for me, I am still alive, you see.
The battle with my dress still rages on.
It struggles, foolish thing, so stubbornly!
Determined to keep living when I’m gone!

(Translated by Stanislaw Baranczak and Clare Cavanagh)

இதன் எளிய தமிழாக்கம் இது போலிருக்கும்:

அருங்காட்சியகம்
விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா

இங்கே தட்டுகள் இருக்கின்றன, ஆனால் பசியில்லை.
இதோ மண மோதிரங்கள் இருந்தாலும், நிறைவடைந்த காதல்
மாயமாய் மறைந்து முன்னூறு ஆண்டுகளாகின்றன.

இதோ கை விசிறி- கன்னிப் பெண்ணின் நாணமெங்கே?
இதோ போர் வாள்- சினம் எங்கே?
அந்திப் பொழுதில் இசை எழுப்பாது இங்கிருக்கும் யாழ்.

சாஸ்வதம் கையிருப்பில் இல்லாத காரணத்தால்,
புராதனப் பொருட்கள் பல்லாயிரம் சேர்த்து வைத்திருக்கின்றோம்.
பச்சையம் படிந்த காவலாள் தன் பொன் உறக்கத்தில்
மீசையை முறுக்கிக் கொள்கிறான், சான்றாவண எண்…

எட்டு. உலோகங்கள், களிமண், சிறகுகள்- தேதிகளை
அமைதியாய் தோற்கடித்ததைக் கொண்டாடுகின்றன.
எகிப்திய நடனமங்கையின் கொண்டையூசி மட்டும் கெக்கலிக்கிறது.

சிரம் போன பின்னும் வாழ்கிறது கிரீடம்,
கையுறையிடம் தோற்றுப் போனது கரம்,
வலது காலணியிடம் தோற்றது பாதம்.

என் கதையைக் கேட்டால், இன்னும் உயிரோடிருக்கிறேன், பாருங்கள்.
என் ஆடைகளுடனான போர் தினமும் தொடர்கிறது.
முட்டாள் வஸ்து, விட்டுக் கொடுக்காமல் போராடிக் கொண்டிருக்கிறது!
நான் போன பின்னும் தான் வாழப் போவதில் உறுதியாயிருக்கிறது!

இதுவரை நாம் ஔவையின் பாடல்களை வாசித்து வந்தோம். இந்த வாரம் போலந்தின் ஔவை, விஸ்லாவா ஸிம்போர்ஸ்காவின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்.

போலந்தில் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிஞர்கள் சிலர் பிறந்திருக்கின்றனர். ஐரோப்பாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் Zbignew Herbert, ஐரோப்பாவின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் Tadeusz Różewicz, நாடகாசிரியரும் தன் கவிதைகளால் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான Adam Zagajewski, நோபல் பரிசு பெற்ற Czeslow Milosz என்று பலரும் போலந்தைச் சேர்ந்தவர்களே. இத்தனை பேருக்கிடையில் விஸ்லாவா தன் தனித்துவம் மிக்க குரலால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். 1996ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

போலந்துக்கு இருபதாம் நூற்றாண்டு இரக்கம் காட்டவில்லை. எனவே அதன் முக்கியமான கவிஞர்களின் ஆக்கங்களில் அரசியலுக்கு பிரதான இடமுண்டு. இவர்களுக்கு மாறாக, விஸ்லாவாவின் கவிதைகள் அரசியலைவிட தனி மனிதனையே அதிகம் பேசுகின்றன. அவரது கவிதைகளில் ஒரு முரண்நகையும், விளையாட்டுத்தனமும், அனைவராலும் ஏற்கப்பட்ட உண்மைகளைப் புரட்டிப்போடும் இயல்பும் உண்டு. அருங்காட்சியகம் என்ற இந்தக் கவிதையில் நாம் இதைப் பார்க்க முடிகிறது.

மனிதர்களின் சாஸ்வதத்தன்மை இங்கே கேள்விக்குட்படுத்தப்படுகிறது. நாம் மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், எப்படியாவது அதைத் தவிர்க்க ஆசைப்படுபவர்கள். எல்லா சமயங்களும் ஏதோ ஒரு வகையிலான இறவாமையைப் பேசி நம்மைச் சமாதானப்படுத்துகின்றன. ஆன்மா அழிவற்றது, உடல் மரித்தாலும், ஆன்மா இறப்பதில்லை. புண்ணிய ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பதில்லை, அளவற்ற பரமாத்மாவில் கலந்து நித்திய நிலையை அடைகின்றன என்று பல சமாதானங்கள் உண்டு. ஆனால் விஸ்லாவா, உயிர்கள்தான் மறைகின்றன, உயிரற்றவையே சாஸ்வதம் என்கிறார்!

என் ஆடைகளுடனான போர் தினமும் தொடர்கிறது.
முட்டாள் வஸ்து, விட்டுக் கொடுக்காமல் போராடிக் கொண்டிருக்கிறது!
நான் போன பின்னும் தான் வாழப் போவதில் உறுதியாயிருக்கிறது!

சினம், நாணம், பசி, நேசம் : எல்லாம் மறைந்துவிட்டன, ஜடப்பொருட்கள் மட்டுமே அழிவற்றுத் தொடர்கின்றன. மனிதர்களைவிட அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. இந்தக் கவிதை ஒரு நேரடி வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது. விஸ்லாவாவின் நகைச்சுவை உணர்வு, நேரடியான, எளிதாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய அவரது மொழி, இவற்றை நம்மால் அதிசயிக்க முடிகிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் கவனமாக வாசிக்கும்போது, கவிதை இன்னும் பல கதவுகளைத் திறந்து கொடுக்கிறது.

கடந்த கால எச்சங்களின் இருப்பிடமாக இருக்கும் அருங்காட்சியகமல்ல, கவிதையின் பாடுபொருள். இந்தப் பொருட்கள் உயிரற்றவை, இவற்றை இன்று யாரும் பயன்படுத்த முடியாது. ஆனாலும்கூட இவற்றை ஒரு பார்வையாளன் எதிர்கொள்ள நேரும்போது, இந்தப் பொருட்களுடன் தொடர்புடைய மானுட உணர்வு உயிர்பெற்று எழுகிறது. ஒரு கைவிசிறியைக் காணும்போது, இதை ஏந்தியிருக்கும் பெண்ணின் நாணம் எங்கே என்று கேட்டுக் கொள்கிறோம். கத்தியைக் காணும்போது, “இதற்குரியவனின் சினம் எங்கே,” என்று நினைத்துக் கொள்கிறோம். ‘புராதனப் பொருட்கள் பல்லாயிரமும்’ காணாமல் போன ஒரு யுகத்தை உயிருக்குக் கொண்டு வருகின்றன. காதல், கோபம், பேராசை, பொறாமை – மனிதன் கையாண்டப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் மானுட உணர்வுகள் உறைந்திருக்கின்றன.

நுண்ணுணர்வு கொண்ட ஒரு பார்வையாளனைப் பொருத்தவரை ஜட வஸ்துக்கள் நிறைந்த அருங்காட்சியகம் உயிரோட்டம் மிகுந்த இடமாக இருக்கிறது என்பது ஒரு முரண்நகை. எகிப்தியப் பேரரசின் மகோன்னதம், மெசபடோமியாவின் வணிகத் தளங்கள், இந்து சமவெளியின் பண்டை நகரங்கள் என்று இன்னும் பல உலகங்கள் பார்வையாளர்களாகிய நமக்குத் திறந்து கொள்கின்றன, எந்த ஒரு பிரயத்தனமும் இன்றி நாம் காலப்பயணம் செல்கிறோம். யாருமில்லாத நேரங்களில், இந்தப் பொருட்களும் நம் பார்வை படும்போது உயிர்த்தெழக் காத்திருக்கின்றன. அருங்காட்சியகம், தன் கதவுகளுக்குள் ஒரு பல்லுலகப் பேரண்டத்தை மறைத்து வைத்திருக்கிறது. கதவுகள் மூடப்பட்டதும், அது ஒரு இடுகாட்டு நிலைக்குத் திரும்புகிறது.

அன்றாடப் பயன்பாட்டுக்குச் செய்யப்பட்ட ஒரு கோப்பையைவிட, நுட்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் நீண்ட காலம் வாழும் என்பது நம் நம்பிக்கை. பொதுவாக, நாம் கலைஞர்களின் மரணத்தைக் கடந்து அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் வாழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

எதிர்காலம் கலைப் பொருட்களைத் தேடிப் பாதுகாக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கவிதை இந்த எதிர்பார்ப்பைப் புரட்டிப் போடுகிறது. அருங்காட்சியகத்தில் உள்ளவை அனைத்துமே கலைப் படைப்புகள் அல்ல. அவை மிகச் சாதாரணமானவை. அவை ஏன் அழியாமல் இருக்கின்றன என்றால், ‘சாஸ்வதம் கையிருப்பில் இல்லை’ – நாம் சாஸ்வதமாய் இருக்கக்கூடியவற்றைச் சேகரம் செய்து வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

இருப்பதிலேயே சிறந்ததுதான் வேண்டும் என்பதில்லை, சாதாரண பொருட்களும் போதும், அவற்றைக் கொண்டு நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியும். முற்றிலும் மாறுபட்ட ஒரு காலத்தை நாம் கற்பனை செய்து பார்க்கவும், இறந்த காலத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் அன்றாட பொருட்களே போதும். இதனால் நாம் ஒரு நீண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களாக நம்மை உணர்கிறோம். யாருக்குத் தெரியும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ரவி வர்மா ஓவியத்துக்கும் சினிமா போஸ்டருக்கும் சம மதிப்பு இருக்குமோ என்னவோ?

ஆனால் இதை யோசிக்கும்போது வேறொரு கேள்வி எழுகிறது – தன்னைவிடத் தன் ஆடை நீண்ட நாள் வாழும் என்று சொல்கிறாரா விஸ்லாவா? அல்லது, தன் கவிதைகளைவிட தான் உடுத்த ஆடைகள் வாழும் என்கிறாரா?

கவியின்கண் தொடரில் விஸ்லாவாவைப் பேச ஒரு காரணமுண்டு. அவரது கவிதைகளில் சங்கப் பாடல்களுக்குரிய ஒரு தன்மை உள்ளது. வெளிப்பார்வையில் எளிமையான, ஆனால் பல வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கும் கவிதைகளை இவர் எழுதியிருக்கிறார். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட படிமங்கள், சொல்லமைப்பு. எளிய வடிவத்தில், உணர்வுகளைத் துல்லியமாக விவரிப்பவை.

இதில் இரு விஷயங்களை என்னால் தீர்மானமாகச் சொல்ல முடிகிறது. ஒன்று, சங்ககாலப் புலவர்கள் விஸ்லாவாவைத் திறந்த மனதுடன் தம்மில் ஒருவராக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இரண்டு, எது சாஸ்வதம் என்று போட்டி வைத்தால், அதில் விஸ்லாவாவின் ஆடைக்கு இணையாக நிலைத்து நிற்கக்கூடிய கவிதைகள் இவை.

தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.