டானா டார்ட்டின் மூன்றாவது நாவலின் துவக்கத்தில் அவரது நாயகன் தியோ டெக்கரின் வயது பதின்மூன்று. அவன் மிகவும் நேசிக்கும் அவனது தாய்,- அவன் மீது மிகுந்த நேசம் வைத்திருப்பவள், கலையில் ஆர்வம் கொண்டவள் – தனக்கு மிகவும் பிடித்த ஓவியம், பதினேழாம் நூற்றாண்டு டச்சு கலையின் சிறிய ஒரு அதிசய ஓவியம், அதைக் காண அவனை அழைத்துச் செல்கிறாள். கரேல் ஃபாப்ரிஷியஸின் அந்த ஓவியம் இந்தப் புத்தகத்தின் தலைப்புமாகிறது, “கோல்ட்ஃபிஞ்ச்”. துவக்க காட்சியில் அது ந்யூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆப் ஆர்ட்ஸில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
தியோவும் அவனது தாயும் மிகவும் நெருக்கமான இருவர்; நம்பிக்கை வைக்கமுடியாத அவனது அப்பா அவர்கள் வாழ்வை விட்டு ஏறத்தாழ முழுமையாகவே இல்லாமல் போய் விட்டார். அவர்கள் அங்கிருக்கும்போது ஒரு வெடி விபத்து நேர்கிறது. 1654ஆம் ஆண்டு 32ஆம் வயதில் டெல்ஃப்ட் நகரில் ஃபாப்ரிஷியஸ் இறப்பதற்கு காரணமாக இருந்த வெடிமருந்து விபத்தின் எதிரொலியாக இது இருக்கிறது. தியோவுக்கு நினைவு தப்புகிறது. அவனது தாயும் வேறு பலரும் இந்த விபத்தில் மரணமடைகின்றனர். தியோ எதுவும் புரியாத மயக்க நிலையில் விழிக்கிறான், ஒரு சிறிய ஓவியத்தை ஏந்தியபடி மியூசியத்தைவிட்டுத் தப்பியோடுகிறான். மியூசியத்தின் சுவற்றிலிருந்து கீழே விழுந்த ஓவியம் அது. இறந்து கொண்டிருப்பவன் ஒருவனுக்குரிய ஒரு கனமான தங்க மோதிரமும் அவனுக்கு அதனுடன் கிடைக்கிறது. மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அந்த மனிதன் தியோவிடம் சொல்கிறான்: “ஹோபார்ட் அண்ட் ப்ளாக்வெல். ரிங் த கிரீன் பெல்”
வெடிவிபத்து, திடீரென்று ஏற்படும் கொடூரமான மரணங்கள், ஓவியம், மோதிரம் – இவை இந்தப் பெரிய, சிடுக்குகள் கொண்ட நாவலின் நகர்வைத் துவக்கும் கருவிகள். இந்த அசாதாரண நிலையை, இதன்பின் வரும் ஒவ்வொன்றையும், உண்மையாகவும் வாழ்வனுபவமாகவும் நம்மை நினைக்கச் செய்வது டார்ட்டின் டிக்கன்ஸிய திறமைகளுக்கு அத்தாட்சி.
1992ல் அவரது முதல் புத்தகமான சீக்ரெட் ஹிஸ்டரி வந்தவுடன் அவர் பெரும் புகழ் பெற்றார். அதன்பின் அவரது இரண்டாம் நாவலான லிட்டில் ஃபிரெண்ட் வருவதற்கு வாசகர்கள் பத்தாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. சதர்ன் கோதிக் ஸ்டைல் கதையான அது சிலருக்கு ஏமாற்றமளித்தது. கோல்ட்ஃபிஞ்ச் வர இன்னொரு பதினோரு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. காத்திருந்த காலம் வீண் போகவில்லை.
இதன் கதையைக் கொண்டு செல்பவன் தியோ. சீக்ரெட் ஹிஸ்டரியில் உள்ளதுபோல் இதிலும் கதையின் பிரதான பாத்திரமே கதைசொல்லியாக இருக்கிறது. குண்டு வெடிப்புக்குப் பின் அவனது பள்ளித் தோழன் ஒருவனின் குடும்பத்தினர் அவனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். தியோவின் அம்மாவால் அவனைத் தனியார் பள்ளியில் கூட படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் இங்கோ தன் நண்பனுடன் வசதியான, பார்க் அவென்யூ வாழ்க்கை வாழ்கிறான் தியோ. இதை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. சிறிது காலத்திலேயே ஹோபார்ட் அண்ட் ப்ளாக்வெல்லைத் தேடி அவன் ஊருக்குள் கிளம்புகிறான், அங்கே ஒரு புதிய மேடையின் கதவு அவனுக்குத் திறக்கிறது.
ஹக் ஃபின், ஹோல்டன் கால்ஃபீல்டு, ஸ்கௌட் ஃபிஞ்ச் போன்ற இளம்பருவ அமெரிக்க கதைசொல்லிகளிடமிருந்து தியோ டெக்கருக்கு ஒரு நேர்க்கோடு வரைய முடியும். அந்தப் பாத்திரங்களைப் போலவே அவனும் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழலிலும் கொஞ்சம் வெளியே நிற்பவனாக இருக்கிறான். இதனால் தன் பிரதான பாத்திரம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறது என்பது குறித்த கூர்மையான அவதானிப்புகளை டார்ட் வெளிப்படுத்த அவன் ஒரு நுட்பமான கருவியாகப் பயன்படுகிறான். வாழ்வில் தான் எதை உண்மையாகவே நாடுகிறோம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத குழந்தைத்தனமான இயலாமைக்கும் தன் தாயில்லாமல் தான் முழுமையாகத் தொலைந்து போய் விடுவோம் என்ற அச்சத்துக்குமிடையே தியோ அல்லற்படுகிறான்.
பொறுப்பில்லாத அவனது அப்பா திரும்ப வரும்போது நிலைமையில் ஏற்றம் காண்பதாயில்லை. அவர் அவனை பார்க் அவென்யூவிலிருந்து வீணாய்ப் போய்க் கொண்டிருக்கும் லா வேகாஸுக்குக் கொண்டு செல்கிறார். தியோவை ஆதரவற்ற இளைஞர்களுக்கான விடுதியில் விட்டுவிடப் போவதாக மிரட்டும் திகட்டத் திகட்ட இனிமையான சமுதாய களப்பணியாளர்களாகட்டும், தியோவின் நிம்மதியைக் குலைக்கும் கனவுகளை விரட்ட அவனறியாமல் அவனுக்குத் தூக்க மாத்திரை கொடுக்கும் நண்பனின் தாயாகட்டும், அதன் நியான் மையத்துக்கு மிகத் தொலைவில் இருக்கும் லா வேகாஸின் கருகிப் போன விளிம்புகளாகட்டும், எவற்றை விவரிக்கும்போதும் டார்ட்டின் மொழி ஓங்கி ஒலித்தாலும் நம்மோடு மட்டும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதாய் இருக்கிறது.
வேகாஸில்தான் போரிசைச் சந்திக்கிறான் தியோ. ஒவ்வொரு ஹீரோவுக்கும் தேவையான உதவியாள் போரிஸ், புத்தகத்தில் நம்மை மிகவும் வசீகரிக்கும் பாத்திரங்களில் ஒருவன். வசீகரமானவனாக இருப்பினும், இருளின் நிழல் படிந்தவன் போரிஸ் – இதுவே புது நண்பன் தியோவை ஈர்ப்பதாக இருக்கிறது. தியோ தன்னை நல்ல பையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அது உண்மைதானா? சிகரெட் குடித்த காரணத்தால் அவனது பள்ளி அவனை சஸ்பெண்ட் செய்திருந்த காரணத்தால் மட்டுமே அவன் தன் தாயுடன் ம்யூசியம் சென்றிருந்தான்; அவனது சீரழிவின் வித்துக்கள் அவனிடம் எப்போதும் இருந்திருக்கின்றன. இந்தச் சீரழிவுதான் நாவலை அதன் இறுதி காற்பகுதியில் த்ரில்லரின் பிரதேசங்களுக்குக் கொண்டு செல்கிறது. இங்கு கார் சேஸ், துப்பாக்கிகள் எல்லாம் உண்டு.
தியோவின் வாழ்வின் ஒவ்வொரு கூறுக்குப் பின்னும் அந்த ஓவியம் இருக்கிறது; பயங்கரமான ஒரு சொத்து, அச்சுறுத்தும், ஜ்வலிக்கும் ரகசியம். “யதார்த்தத்தின் போக்கை மாற்றுகிறது அழகு,” என்று ஒரு பாத்திரம் சொல்கிறது. ஃபாப்ரிஷியஸின் ஓவியம் ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் தியோவை எப்போதும் அது சூழ்ந்திருக்கிறது. நாவலின் இறுதிப் பகுதியில் தியோவின் கைக்கு அது திரும்பவும் வரும்போது, அவன் அதன் சட்டகத்தில் தன் விரல்களைத் தேய்த்துப் பார்க்கிறான், “கிறிஸ்துவின் உள்ளங்கையின் குறுக்கே சந்தேகிக்கும் தாமஸ் செய்தது போல்”.
புத்தகத்தின் இறுதிப் பகுதியின் மேற்கோள் நீட்ஷேவுக்கு உரியது: “உண்மையால் நாம் இறவாதிருக்கவே கலையை உருவாக்கிக் கொண்டோம்”. நாவலின் துவக்கத்தில் தியோ அதுவரை அறிந்த வாழ்வு அழிக்கப்படுகிறது. ஃபாப்ரிஷியஸின் சின்னஞ்சிறிய கோல்ட்ஃபிஞ்ச், சங்கிலியால் தன் இருக்கையில் பூட்டப்பட்டது, நாம் எதிர்பார்ப்பதற்கில்லாத மீட்பர்.
கோல்ட்ஃபிஞ்ச் திகைப்பூட்டும் சாதனை. ஒரு அனாதையின் அறக்கல்வி, கனமான தங்க மோதிரம் என்று முழுமையான ஒரு விக்டோரிய கதையை பின்நவீனத்துவ த்ரில்லர் என்ற அதிர்வேட்டுக் கருவி நிலைக்குக் கொண்டு வருகிறது. ஒரு மெய்யான கதைசொல்லிக்கு இருக்க வேண்டிய வரங்கள் அருளப்பெற்றவர் டார்ட், சுவாரசியமான கதைசொல்லி அவர். டார்ட் உருவாக்கும் குரல் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது, வாசகர் அவர் சொல்லும் எதையும் நம்புவார். இதை ஒரு பழங்கதைப் பாணி நாவல் என்று பார்ப்பது தவறாக இருக்கும். நீண்ட, தறிகெட்டு ஓடும், துணிச்சலான கதைகளுக்குத் தகுந்த ஊடகம் தொலைகாட்சிதான் என்று எண்ணியிருந்த வேளையில், சிறந்த நாவல்களால் அதை இன்றும் செய்ய முடியும் என்று தன் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் டானா டார்ட்.
நன்றி : எகானமிஸ்ட்