ஆயிரம் ஏக்கராக்கள்

– அஜய் ஆர். – 

ஒரு முதியவர் தன் சொத்துக்களை தன் மூன்று பெண்களுக்கிடையே பிரித்துத் தர முடிவு செய்ய, மூத்த இரு பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள, கடைசி மகள் அவ்வாறு செய்வதில்லை. அந்தப் பெண்ணை அவர் விலக்கி வைக்கிறார். ஷேக்ஸ்பியரை முழுமையான/ சுருக்க (abridged/original) பதிப்பில் படித்திருந்தவர்கள் இந்தச் சூழலை ‘King Lear’ கதையோடு இணைக்கலாம். ஆம், தன் நாட்டை இரு நன்றிகெட்ட பெண்களுக்கு கொடுத்து துன்பப்பட்ட லியரின் கதையை , ஸ்மைலி லியரின் இரு மூத்த பெண்களின் கோணத்தில் ‘A Thousand Acres’ நாவலில் எழுதியுள்ளார்.

லியராக இதில் லாரி குக். அவர் அரசரல்ல, அதற்கு மாறாக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரியவர். அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஜின்னியும் அடுத்த பெண் ரோசும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் அப்பாவுக்கு ஒத்தாசையாக பண்ணையில் வசிக்கிறார்கள்,. கடைசி பெண் கரோலின் ஒரு வக்கீல். அப்பாவைவிட்டுப் பிரிந்து வேறொரு ஊரில் இருக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் ஒரு நாளில் தன் நிலபுலன்களைப் பெண்களுக்குப் பங்கு பிரிப்பதாக லாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். ஜின்னியும் ரோசும் இதற்குச் சம்மதிக்கின்றனர். ஆனால் கரோலின் அதற்கு எதிராகக் குரலெழுப்புகிறாள். இதனால் லாரி தன் சொத்தில் கரோலினுக்கு உரிமையில்லை என்று அறிவிக்கிறார். இதையடுத்து தொடரும் நிகழ்வுகள் அனைவரின் வாழ்வையும் துயர் தோய்ந்ததாக மாற்றுகின்றன. நெருங்கிய உறவுகள் கடும் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு , குடும்பத்தினர் அனைவருமே வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுகின்றனர்.

‘கிங் லியரில்’ மோசமானவர்களாக வரும் மூத்த பெண்களின்,(இந்த நாவலில் ஜின்னி/ ரோஸ்) கோணம், ஜின்னி கதைசொல்லியாக இருக்க, அவள் பார்வையில் சொல்லப்படுகிறது. இந்தப் பாத்திரங்களின் இயல்பையும் அவர்களின் நோக்கங்களையும் நாம் எவ்வாறு மூல ஆக்கத்திலிருந்து புரிந்து கொண்டிருக்கிறோமோ அதில் ஸ்மைலியால் இந்த உத்தியைக் கொண்டு மாற்றம் செய்ய முடிகிறது. துவக்கம் முதல் முடிவு வரை நாவல் நெடுக ஒரு அசௌகரிய உணர்வு வியாபித்திருக்கிறது. ஏதோ ஒன்று சொல்லப்படவில்லை, நாவலில் தெரியவரும் புறத்தோற்றத்துக்கு அப்பால் ஏதோ ஒரு குறை, இயல்புக்கு மாறான ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்ற உணர்வு. கதைக்களன் ஆயிரம் ஏக்கர் பெருவெளி என்று நிலையில், பாத்திரங்கள் மூச்சுத்திணற வைக்கும் இறுக்கத்தில் இருப்பதான உணர்வு வாசகனுக்கு வருவது ஒரு நகைமுரண் தான்.

உதாரணத்துக்கு, நாவலின் துவக்கப் பகுதிகளில் வரும் ஒரு காட்சி. ஜின்னியும் அவளது கணவனும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றிக்கொண்டு உறங்கப் போகின்றனர். சாப்பிடும்போதும் படுக்கையில் இருவரும் படுத்திருக்கும்போதும் பேசிக்கொண்டிருந்தபின் ஜின்னியின் கணவன் உறங்குகிறான். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும், அவர்களின் உரையாடல்கள் / அவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறொன்றை சுட்டுகிறது. ஏதோ ஒரு ஹோட்டலில் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரு அன்னியர்களிடையே நிகழும் (நாகரீகம் கருதி மேற்கொள்ளப்படும்) இணக்கமான ஆனால் எந்த உள்ளார்ந்த ஈடுபாடு இல்லாத உரையாடல் போல்தான் இருக்கிறது. இருவரும் மேம்போக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றனர், பதினைந்து ஆண்டுகளாகத் தாம்பத்யம் நடத்தும் இருவர் பேசிக்கொள்ளும்போது இருக்க வேண்டிய அந்நியோன்னியத்துக்கான அறிகுறியே இவர்களிடையே இல்லை. இத்தனைக்கும் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் என்றோ வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என்றோ ஸ்மைலி சுட்டுவதில்லை, ஆனால் இருவரின் உறவிலும், காதலோ/ ஈர்ப்போ முடிந்து போய், வாழ்க்கை வழமையான (routine) ஒன்றாக மாறி விட்டதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். இந்தச் சூழல் கண்டிப்பாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தோன்றுகிறது. நாவலின் பிற்பகுதிகளில் ஜின்னிக்கு பல கருச்சிதைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் ஜின்னியின் கணவன் இனி குழந்தைகளே வேண்டாம் என்று முடிவெடுத்து பாதுகாப்பான உடலுறவு கொள்ளுதலையும் விடுத்து, அதை முற்றிலும் துறத்தலுமாக இருக்கையில் ஜின்னி இன்னும் குழந்தைப் பேற்றுக்கு ஆசைப்படுகிறாள் என்பதை நாமறியும்போது கதையின் துவக்கப்பகுதிகளின் பொருள் விளங்குகிறது.

அதே போல், கதையில் ஓரிடத்தில் ஜின்னி இருக்கும் பகுதியின் வேறொரு பண்ணையைச் சேர்ந்த பெண்மணி ஜின்னியைப் பார்க்கும்போது, ஜின்னியின் தாய் சாவதற்கு முன்னர் தன்னிடம் சொன்னதைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறாள். இதை ஜின்னி பெரிதுபடுத்துவதில்லை. வாசகர்களாக நாமும் அதைத் தவற விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவள் போகிறபோக்கில் சொல்வதில்கூட ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது. வேகமாகப் படிக்கையில் கடந்து சென்றுவிடும் வகையில் அமைதியாக இது போன்ற சம்பவங்களை ஸ்மைலி எழுதுகிறார். (சில நாவல்களில் இது போன்ற விஷயங்கள் தாம் நுட்பமாக இருப்பதை உரக்கச் சொல்லிக் கொள்ளும் – இதனால் நுட்பமாக எழுதியதன் நோக்கமே முறியடிக்கப்பட்டு விடுகிறது.)

நாவலின் மையத்தில் இருக்கும் மர்மத்தின் விடுவிப்பை வெளிப்படுத்துவதற்குத் தேவையான சூழலை ஸ்மைலி மிகத் தேர்ச்சியான வகையில் அமைக்கிறார். அதற்காக வாசகர்களின் உணர்வுகளை அவர் நாவலின் போக்கிற்கு ஏற்றார் போல் வலிந்து திரிப்பதில்லை. நடந்த மிருகத்தனத்தையும் அவர் சொல்லத் தவறுவதில்லை. நாவலின் முதலிலிருந்து ஆங்காங்கே சொல்லப்பட்ட சில விஷயங்களை நாம் கேள்விப்படுவதில் துவங்கி, மெல்ல மெல்ல இப்படி நடந்திருக்குமோ என்ற வலுவான அச்சம் உருவாகி, இறுதியில் நமது அச்சங்கள் உண்மையே என்பது ஜின்னி வாயிலாக உறுதிப்படுகிறது.

உண்மை வெளிப்பட்டு பாத்திரங்கள் சரிவை நோக்கி வீழ்ந்த பின்னும், கதையின் முடிவிலும் இன்னொரு கதவு திறக்கப்படவில்லை, பாத்திரங்களின் வாழ்வில் இன்னொரு பக்கம் திருப்பப்படவில்லை என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. ஏதோ ஒன்று சொல்லப்படாமல் விடுபட்டிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஜின்னியின் பார்வையில் அல்லாமல் கரோலின் போன்ற வேறொருவரின் கோணத்தில் இந்தக் கதையைச் சொல்லியிருந்தால் நாம் நடந்தவற்றை வேறொரு வண்ணத்தில் பார்த்திருப்போம் என்ற உணர்வு நமக்கு எழுகிறது.

எழுத்தாகட்டும் எந்த ஒரு கலையுமாகட்டும் இதுதானே நோக்கம்? எதற்கும் பல கோணங்கள் உண்டு, இறுதி ஒற்றை உண்மை என்ற ஒன்று கிடையாது என்று நமக்கு உணர்த்துவதுதான் கலையின் நோக்கம். இங்கு பல பார்வைகளுக்குச் சாத்தியம் உண்டு என்று சொன்னால் நாம் நடுவில் உட்கார்ந்து கொண்டு அவரவர் பார்வை அவருக்கு என்று எல்லாரையும் மன்னித்து விடுகிறோம் என்றல்ல பொருள். இல்லை, நமக்கென்று ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொண்டு, மாற்றுப் பார்வைகளுக்கும் இடம் உண்டு என்று ஏற்பது. அவ்வாறு நமக்குக் கிட்டும் காட்சிகளை/ மாற்றுப் பார்வைகளை நாம் வெறுக்கலாம், ஒப்புக்கொள்ளாமல் போகலாம் அது வேறு விஷயம், மாற்றுப் பார்வை ஒன்று வெளிப்படுவதும் அது நம்மைத் தீண்டுவதும்தான் முக்கியம்.

அந்த வகையில்தான் இந்தக் கதையில் லாரியின் செயல்கள், நோக்கங்கள், அவனது ஆணவம், பிறரை அவன் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது- இவற்றை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர் ஏன் அவ்வாறு இருக்கின்றார் என்று நமக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அது அவனை களங்கமற்றவனாகச் செய்யாது என்றாலும், அவனைப் புரிந்து கொள்ள உதவக் கூடும். மீட்சிக்கான சாத்தியங்கள் என்றில்லாமல், நாவலின் மற்ற பாத்திரங்களுக்கும், அவர்களைப் பற்றி இது புரிதலுக்கான சாத்தியக்கூறுகளை நாவலில் வைத்திருக்கிறார்.

நாவலின் மையத்தில் உள்ள விஷயத்தை எளிதில் யூகிக்க முடியும். இது ஸ்மைலியின் குற்றமல்ல. இந்த காலத்தில் நமக்கு சகல விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்று தான் பொருள். எதுவும் நமக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என்பதைத் தாண்டி எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவும் பழகிவிட்டோம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் (நாவல் வெளிந்த காலகட்டத்தில்) இப்படி இருந்திருக்காது, அரசல் புரசலான விஷயமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்போது மிக மோசமான விஷயத்தைக் நம்மால் கற்பனை செய்ய முடிகிறது , அது உண்மைதான் என்று தெரிய வரும்போதும் அது அதிர்ச்சியாக இல்லை. இது நாவலின் குறையல்ல என்றாலும், வாசிப்பில் நமக்கு அதன் போக்கு பிடிபட்டு விட்டால் ஒரு சிறிய தொய்வாவது ஏற்படும் இல்லையா? ஆனால் நம்முடைய யூகம் உண்மையா என்று நம்மை எதிர்பார்க்க வைப்பதில் ஸ்மைலி வெற்றி பெறுகிறார். மற்றபடி இந்த நாவலில் ஜெஸ் கிளார்க்குக்கும் இரு சகோதரிகளுக்கும் உள்ள உறவுதான் கதையோட்டத்தில் ஒட்டாமல் வலியத் திணிக்கப்பட்ட செயற்கைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நாவலின் பிற பகுதிகள்/ பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில், இந்தப் பாத்திரம் கிங் லியர் நாடகத்துக்கு ஒப்பீடாக இருக்கச் செய்யப்பட்ட புகுத்தல் என்றுதான் தோன்றுகிறது.

இந்தச் சிறு குறைகள் நாவலின் வாசிப்பிற்கு முட்டுக்கட்டையாக இல்லை. ஷேக்ஸ்பியரின் எதிர்மறை பாத்திரத்தின் பார்வையில் கதை சொல்லப்படுவதால், ஏற்படும் மாற்றுக் கோணத்தை புரிந்து கொள்ள கிங் லியர் மூல நாடகத்தை (முழுதாகவோ/சுருக்கமாகவோ) படித்திருந்தால் உதவியாக இருக்கக்கூடும். அப்படி இல்லையென்றாலும் இந்த நாவலைத் தன்னளவிலே முழுமையான தனி நாவலாகவும் வாசிக்க முடியும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.