சென்ற மாதம் பிரடரிக் செய்டலுக்கு பாரிஸ் ரிவ்யூவின் ஹதாதா விருது வழங்கி, ஜான் ஜெரமையா சலிவன் ஆற்றிய உரை இது:
ஆஃப்சைட்டில் இருக்கும், ஆள் இல்லாதபோது வேலையை முடித்துக் கொடுக்கும் ஒரு வகை பாரிஸ் ரிவ்யூ ஊழியன் என்ற முறையில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறும் மகிழ்ச்சி எனக்கு உண்டு என்று என் உரிமையை நிலைநாட்டிக்கொண்டு, இந்த விருதை அறிவிக்கும் வாய்ப்பளித்து என்னை கௌரவித்த ரிவ்யூவைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கௌரவம் என்ற சொல்லை இதைவிடக் குறைந்த விளையாட்டுத்தனத்துடன் வேறெங்கும் நான் பயன்படுத்தியதில்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள் உங்கள் இருபதுகளில் இருக்கிறீர்கள், இந்நகரத்தில் வசிக்கிறீர்கள், அல்லது வேறெந்த நகரத்திலோ வசிக்கிறீர்கள், அல்லது ஏதோ ஓரிடத்தில் வசிக்கிறீர்கள், எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் எனும்போது நன்றாக இருக்கிறது என்ற சந்தோஷத்துக்கு அப்பால் இன்ஸ்பிரேஷன் என்ற சொல்லை நாம் பயன்படுத்தும்போது நம் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கும் அப்பால் உள்ள வேறேதோ ஒன்றை, ஜீவித்திருத்தல் என்ற களத்துக்குரியதை, நாம் இன்று கொண்டாடும் படைப்புகளை அளித்த கவிஞர் ‘உன்னைக் காப்பாற்றக்கூடிய அம்சம்’ என்று விவரிப்பதற்கு, சில கவிஞர்களின் படைப்புகளே பொருள் அளிப்பதாக இருக்கும்.
நான் என் இருபதுகளில் நியூயார்க்கில் இருந்தபோது, எனக்கும் நானறிந்த பிற இளம் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் பலருக்கும் அத்தகைய பொருளளித்த கவிஞர் ப்ரெடரிக் செய்டல் என்பவர், அவர் நாம் கேள்விப்பட்டிருக்கும் மற்றொருவரைப் போலவே செயின்ட் லூயியிலிருந்து ஹார்வர்ட் வழியாக அங்கிருந்து சகல வழிகளிலும் இங்கு வந்திருந்தவர்.
அவர் எங்களில் ஒருவரல்ல, எங்கள் சமகாலத்தவரல்ல, அவர் நாங்களே பேசக்கூடாதென்று எங்களுக்கு அனுமதி மறுத்துக்கொண்ட விஷயங்களை முரட்டுத்தனத்தின் போர்வையைப் பயன்படுத்திச் சொல்ல திடீரென்று எங்களிடையே தோன்றித் தொடர்ந்த ஒரு ரிம்பாவோ பிளாத்தோ அல்ல. மாறாக, தன் அறுபதுகளின் பிற்பகுதிகளின் புகுவாயில் இருந்த அந்த மனிதரின் ஆக்கங்கள் பல பத்தாண்டுகளாக பரவலாக அறியப்பட்டும் மதிக்கப்பட்டும் சில சமயம் வெறித்தனமாகத் தாக்கப்பட்டும் இப்போது புதிய உக்கிரத்தின் நுழைவாயிலில் இருப்பது போலிருந்தது. அல்லது நாங்கள் இப்போதுதான் முதல் முறையாக இவற்றைக் கேள்விப்படுகிறோம் என்பதாகவும் இருக்கலாம்.
சிலபோது அவர் ஒரு குறுங்குழுக் கவிஞர் போல் தெரியக்கூடும் – உங்களுக்குத் தெரிந்தவர்களில் அவரைப் படித்தவர்கள் மட்டும்தான் அவரைப் படித்திருந்தவர்கள் என்பதுபோல்-, ஆனால் மற்ற வேளைகளில் நீங்கள் எங்கு போனாலும் சரி, உலகில் எங்கிருந்தாலும் சரி, அவரது பெயரைச் சொன்னதும், தாமங்கிருந்ததையும், செய்டலின் கவிதைகளை வாசிப்பதன் நுண்ணழகும் அவ்வப்போது அதன் சூடுபட்ட அனுபவமும் பெற்றுள்ளதை அறிவிக்கும் அந்தப் பார்வையை அளிக்கும் யாரோ ஒருவர் எங்கும் இருக்கக்கூடும் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும்.
நான் இந்தக் கவிதைகளை முதன்முதலாய் எதிர்கொண்டபோது இவற்றில் என் மீது தாக்கம் செலுத்தியது எது என்று துல்லியமாகச் சொல்வது எளிது. 1990களில் கல்லூரி வளாகங்களிலும் புத்தகக் கடைகளிலும் ஏராளமான கவிதை வாசிப்பு நிகழ்வுகளுக்குச் சென்றிருந்தவன் நான் – சில ஆண்டுகாலம் எழுத்தாளர் கூடுகையொன்றில் எடுபிடியாக வேலை செய்திருக்கிறேன், அங்கு தீவிர கவிஞர்கள் வெடித்து வெளிப்பட்டிருக்கின்றனர், என்னாலும் கவிதைகள் எழுத முடியும் என்று சில காலம் என்னை நம்பச் செய்வதிலும் நான் வெற்றி பெற்றிருந்தேன்-, இத்தனையும் சொல்வதென்றால் அமெரிக்க கவிதையின் ஓசை, அதன் ஆதார சுருதி, நகரவாழ்வில் புகுந்தபோதே நான் என் தலைக்குள் தெளிவாக அறிந்திருந்த ஒன்று என்று சொல்வதாகும்.
அதனால் இதை மறுப்பது சாத்தியமேயில்லை- வேண்டுமானால் பிறரிடம் இதை மறுக்க முடியலாம், ஆனால் உங்களுக்கே மறுத்துக் கொள்ள முடியாதது இது -, ஏதோ ஒன்று என்னிடம் இல்லை என்ற உணர்வு, இந்தத் தொழிலுக்கே அவசியமாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு முக்கியமான விஷயம் என்னிடம் இல்லை என்ற உணர்வு எனக்கிருந்தது. கவிதை உலகின் பூடகத்தன்மை, விஷயங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகை ஆபத்தை நீக்கியிருந்தது, அதன் பலனாக குறிப்பிட்ட வகை விளைவையும். மிகச் சிறந்த கவிஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்று சொல்வதல்ல இது, ஆனால் அவர்கள் மேடையேறி தாம் எழுதிய புத்தகங்களின் பிரதிகளைப் பிரித்துப் படித்தபோது, எல்லாம் கண்ணுக்குத் தெரியாத ராட்சத மேற்கோள் குறிகளுக்கிடையே நடைபெறுகின்றன என்ற ஒரு அசௌகரிய உணர்வு ஏற்பட்டது. ஏறத்தாழ எல்லா கவிதைகளின் கருப்பொருளும் ஒன்றாயிருந்தது போலுமிருந்தது: நமக்கும் சொல்வதற்கு ஏதேனும் இருக்கலாம் என்ற நம்பிக்கை. மகோன்னத கவிதை எப்படி ஒலிக்க வேண்டுமோ, எப்படி ஒலிக்குமோ அது போன்ற ஓசை.
ஆனால் இந்தக் கவிதைகள், இந்த செய்டல் கவிதைகள், அப்படி எல்லாம் இல்லை. சொல்லப்போனால், அத்தகைய அக்கறை வட்டத்திற்கு முற்றிலும் வெளியேயிருந்து அவை வருவது போலிருந்தன. இவை ஏதாவது சொல்ல வேண்டும் என்ற கவலையற்று இருந்தன. சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று அறிந்திருந்த, எப்போதும் ஏராளமான விஷயங்கள் சொல்வதற்கு இருக்கப் போகிறது- காதல், கலவி, அரசியல், கொலை, அழகு, பணம், மரணம், மோட்டார் சைக்கிள்கள்- என்று அறிந்திருந்த கவிதைகள் இவை -, இவற்றை ஒருவரால் சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. இதற்கான உழைப்பு – முழுமையான தனித்துவம் கொண்ட ஒரு நடையை உருவாக்கிக் கொள்ளும் உழைப்பு-, துணிச்சல், எது மிக உண்மையாகத் தெரிந்ததோ அதை எழுதும் துணிவு, இவை இரண்டும் தேவைப்பட்டன. கவனியுங்கள், எது உண்மை என்பதல்ல- “எது உண்மை” என்பதை நம்மால் அறிய முடியாது – எது மிக உண்மையாகத் தெரிந்ததோ அதை எழுதுவது இன்னும் கடினமான காரியம், ஏனெனில் அதைச் செய்ய முடியும், எனவே அதை முயன்று தோற்க முடியும் என்பதால் அது காயப்படுத்தக் கூடியது.
இந்தக் கவிஞன் செய்வது தொல்லுரிமை போன்ற ஒன்றை ஆணித்தரமாக அறைவது போலிருந்தது, தன் அகத்தின் மிக ஆழத்திலிருந்து பாடும் உரிமையை இவன் நிலைநாட்டுவது போலிருந்தது – வாசிக்கும்போதே வலிக்கும் அழகற்ற விஷயங்களை எழுதும் உரிமையை, அழகிய வலி விஷயங்களை எழுதும் உரிமையை. ஆனால் தான் சொல்ல நினைக்காத ஒரு விஷயத்தையும் எழுதாமல் இருப்பது, இதை ஏற்க இந்தக் கவிஞன் அஞ்சவில்லை.
ஆண்டி வாரோல் பற்றி லூ ரீட் பாடினார், “இசையால் நான் என்னை பயமுறுத்திக் கொண்டேன், வண்ணங்களால் நீ உன்னை பயமுறுத்திக் கொண்டாய்”, என்று. செய்டல் கவிதையால் தன்னை பயமுறுத்திக் கொண்டார், நம்மையும் அச்சுறுத்தினார். இதை அவர் எப்படிச் செய்தார்? அவருக்கு எப்படி இதற்கான துணிச்சல் வந்தது? அவரது வாழ்க்கையை எழுதுபவர்களுக்கான கேள்வி இது. ஆனால் நானறிந்ததெல்லாம், ஒருமுறை அவரது குரலைக் கேட்டபின், அதை விட்டுத் திரும்பிச் செல்வது என்பதில்லை, நீ அதைக் கேட்கவில்லை என்று உன்னை ஏமாற்றி நினைத்துக் கொள்ளவும் வழியில்லை. அந்தக் குரல் எக்களிக்கும் குரல், அது அசுரக் குரலாகவும் இருக்கலாம், ஆனால் அதில் புனிதம் இருந்தது.
சில சமயம் நீங்கள் உங்கள் இருபதுகளில் நேசித்த எழுத்தாளர்கள் உங்கள் இருபதுகளில் மட்டுமே நேசிக்கப்படக்கூடிய எழுத்தாளர்களாக ஆகின்றனர், அந்த நாட்களில் நான் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின் செய்டலின் படைப்புகள் குறித்து நாம் என்ன நினைப்போம் என்று நினைத்துப் பார்த்தது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. நம்ப முடியாத வகையில், அவர் மேலும் சிறந்த கவிதைகளால் இந்தக் கேள்விக்கு முடிவு கண்டிருக்கிறார்.
அவர் இது குறித்து எச்சரித்திருந்தார் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னரே, இவர் தன் லட்சியச் சொற்கள் இவை என்று சொல்லவில்லையா – “கனிவதற்கு முன் நான் அழுகலாகிறேன்”, என்று? இவர் கனிந்தார். 2006ஆம் ஆண்டு ஊகா-பூகா எழுதினார். பின்னர் “ஷாவின் மறைவு” எழுதினார் – இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மறுப்பதற்கில்லாத முதல், பெரிய எழுத்து மகோன்னதக் கவிதை இது. இன்னும் இவரது வேகம் குறைந்தபாடில்லை.
நம்ப முடியவில்லைதான், இன்றைய இரவின் கவிதை வாசிப்புக்கு எந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யேச ஆரம்பித்தபோது, எங்கள் தேர்வுகள் புதிய படைப்புகளை நோக்கியே விழைந்தன. ஆனால் இறுதியில் கொஞ்சம் பழைய கவிதை ஒன்று, ஒப்பீட்டளவில் கொஞ்சம் புதிய கவிதை ஒன்று, மிகப் புதியக் கவிதை ஒன்று – சில மாதங்களுக்கு முன்னர்தான் எழுதியது என்று தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
கவிதைகளை இங்கே வாசிக்கலாம்.