
ரேவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பாதாதிகேசம் பளபளத்தான் அவன் – கருநிற ஷூக்கள் அணியும் வழக்கம் எப்போதும் இருந்தது. தன் மேலங்கியை அடிக்கடி பாலிஷ் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதுவும் வெயில் ஒளியில் மினுங்கியது. ரேவனை இப்போது காண நேரிடும் எவரும் அவனை ஒரு நீதிபதியென்றோ பாதிரியாரென்றோதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவனோ சட்டம் படிக்கும் வாய்ப்பும் சர்ச்சில் சேரும் வாய்ப்பும் கிடைத்திருந்தபோதும் அவ்விரு பாதைகளையும் நிராகரித்திருந்தான்.
கடைசியில் ரேவன் போயும் போயும் ஒரு லைப்ரரியனாகி விட்டான் என்பதில் அவனது தந்தைக்கு வருத்தம். ஒரு நீதிபதி நம் குடும்பத்தில் இருந்திருந்தால் எத்தனை கௌரவமாக இருந்திருக்கும், அது எனக்கு ஒரு சமூக அந்தஸ்தைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தார் அவர். ரேவன் நீதித்துறையில் இருந்தால் நான் மார்க்கெட் போகும் ஒவ்வொரு முறையும் மளிகைக்கடை பன்றி எனக்கு மரியாதை செலுத்தி வணங்குவான். திரும்பி வரும்போது அக்லி டக்ளிங் அம்மையார் எனக்காகக் காத்திருந்து என்னைப் பார்த்து புன்னைகைப்பார். எத்தனை பெருமையாக நாலு பேர் முன் நான் தலை நிமிர்ந்து நடந்திருப்பேன், தளுக்காய் நடைபோடும் மிஸ் கூஸி எதிர்படும்போதுகூட அவளது வசீகரப் புன்னகையை உரக்கச் சிரித்து வெற்றி கொண்டிருப்பேன். இதுபோன்ற இரவல் பெருமைகளின் கனவுகளில் மூழ்கியிருந்த ஒரு நாளில்தானே ரேவன் தான் லைப்ரரியனாகப் போகும் செய்தியைச் சொன்னான். அப்போது அது அவருக்கு இடி விழுந்தது போலிருந்தது.
புத்தகங்களோடுதான் தன் வாழ்வு என்று ரேவன் சொன்னதும் அவருக்கு வாயடைத்துப் போயிற்று. வருகிறவர் போகிறவர்கள் கேட்கும் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதும் ஒரு தொழிலா? தூக்கு தண்டனைக்கும் நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியவன், யாருக்கும் உதவாத புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்வதா? என்ன ஒரு வீழ்ச்சி, என்ன ஒரு வீழ்ச்சி. அக்லி டக்ளிங் அம்மையார் இனி அவரைப் பொருட்படுத்த வேண்டிய தேவையே இல்லை, மிஸ் கூஸியின் புன்னகைகள் அவருக்கில்லை. மளிகைக்கடை பன்றி ஏன் அவரைப் பார்த்து கேலியாய் சிரிக்க மாட்டான்? அவனிடம் எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது. பெற்ற பிள்ளைகளே சொல்பேச்சு கேட்பதில்லை, இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நான் என்ன செய்வேன்? ரேவனின் எதிர்காலம்தான் என்ன ஆகும்? குடும்ப கௌரவம் மண்ணோடு மண்ணாய் மறைய வேண்டியதுதானா?
ஆனால் ரேவனுக்கு இந்தக் கவலைகள் எதுவும் இருக்கவில்லை. அவனுக்கு புத்தகங்களே போதும் என்றிருந்தது. காலையில் எழுந்ததும் புத்தகம் படிக்க ஆரம்பித்தவன் இரவு வரை படித்துக் கொண்டேதான் இருந்தான். நின்ற நிலையிலும் கிடந்த நிலையிலும் புத்தகம் படித்தான். தோப்பிலும் ஆற்றோரத்திலும் காமிரா உள்ளிலும் மொட்டை மாடியிலும் புத்தகம் படித்தான். எங்கும் எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டேயிருந்தான். சிறிது காலத்துக்குப் பின்னரே தன்னைப் போன்ற பிறரும் இருப்பதையும் அவர்கள் நூலகங்களில் கூடுவதையும் கண்டு கொண்டான். அவர்களில் சிலர் இவனைப் போல் லைப்ரரியன் ஆகவும் வேலை செய்தனர்.
ரேவனின் நண்பர்களில் சிலர் அவனைவிடத் தீவிரமானவர்களாக இருந்தனர். ஒருவர் ஒரு ஏணியில் ஏறி நூலக அடுக்குகளின் உச்சங்களில் புத்தகங்களைத் துழாவுவது கண்கொள்ளாக் காட்சி. ஏணியில் நிற்கும் அவரது கால்களுக்கிடையில் ஒரு புத்தகத்தை இடுக்கி வைத்திருப்பார், இரு கைகளிலும் இரு புத்தகங்கள் பிரிந்திருக்கும். தன்னைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதை மறந்து அவர் வாசிப்பில் லயித்திருப்பார். காய்ச்சல் வந்த நிலையிலும் வாசிப்பவர்கள் உண்டு. உடல் வலியால் துடிப்பார்கள், தலையில் ஒரு ஈரத்துணியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள், ஆனால் விரல்களோ பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும், கண்கள் சுரத்தின் எரிச்சலால் சிவந்து காந்தும். ஆனால் வாசிப்பை எதுவும் தடை செய்ய முடியாது. கைகளில் புத்தகங்களோடு நடைபயிற்சி கிளம்புபவர்கள் சிலர் உண்டு. பசும்புற்பரப்புகள் காற்றில் ஆடுவதும், தெள்ளிய நீர் சலசலத்தோடுவதுமாக இயற்கையின் அழகுகள் அவர்கள் முன் விரிந்திருந்தாலும் கண்களோ மாலைப் பொழுதின் அரை இருட்டிலும் தங்கள் கையில் உள்ள புத்தகங்களுள் புகுந்திருக்கும். எவ்வளவு அழகிய பெண் நின்றாலும் கையிலுள்ள நாவலின் நாயகிக்கு ஈடாக மாட்டாள். நிஜ உலக வில்லன்கள் புத்தக வில்லன்களோடு ஒப்பிட்டால் அப்பிராணிகள். நாயகனுக்கு இணையான உத்தம குணங்களும் வீரமும் கொண்டவர்கள் புத்தக வில்லன்கள்.
அன்றைக்கு தன் புத்தகத்தில் ஒன்றியிருந்த ரேவன் நடக்க மறந்து குளக்கரையில் நின்று விட்டான், ஆணி அடித்த மாதிரி அடுத்த அடி வைக்கவும் நினைக்காமல் நிமிர்ந்து நின்றவாக்கில் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக் கணம் அப்படியே நீண்டிருந்தால் ரேவன் யுகம்தோறும் தன் லயிப்பில் இருந்திருப்பான், ரேவனின் சுவர்க்கத்தில் அவள் நுழைந்த கணம் அது.
பருந்தாக்ஷி இனிமையாய் பேசினாள். தானும் புத்தகங்களை நேசிப்பதாய்ச் சொன்னாள். எங்கிருந்தாலும் சரி, என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, எப்போதும் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைப்பேன், என்றாள் அவள். “அப்படியானால் எங்கே உன் புத்தகங்கள்?” என்று வியப்பில் கூவினான் ரேவன். புதிதாய் வந்திருப்பது யார் என்று பார்க்க வந்த ஊர்க்காரர்களும் அதே கேள்வியைக் கேட்டனர்.
பருந்தாக்ஷி தன் கையில் ஓரே ஒரு சிலேட்டுப் பலகை மட்டுமே வைத்திருந்தாள். கனமற்றது போலிருந்த அதை அவள் அவ்வப்போது பார்த்துக் கொண்டாள் – “இதுதான் என் புத்தகம்”.
ஒவ்வொருத்தருக்கும் அதைக் காட்டும்வரை யாரும் அவளை நம்பவில்லை. ஆற்றில் ஓடும் நீரில் ஒளிக் கற்றைகள் தெறிப்பதைப் போல், அதன் பரப்பில் எழுத்துகள் ஒளிர்ந்தன.
“இதுதான் தேவர்களின் சுவடியா?” என்று கேட்டான், ரேவன்.
“இது ரேடியத்தால் செய்யப்பட்டதா?” என்று கேட்டான் விஞ்ஞானி.
“இந்த சிலேட்டில் எழுதிய பேனா எங்கே? இதை அழிப்பது எவ்வாறு?” என்று கேட்டாள் காரியச்சமர்த்தாள்.
சிலேட்டைப் புரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாய் இருந்தனர். யாரும் எதுவும் எழுதாமல் பக்கங்களைப் புரட்டாமல் சொற்கள் தோன்றி மறையும் அதிசயத்தைக்கூடி நின்று வியந்தனர்.
பருந்தாக்ஷி சிரித்தாள். “இதுபோன்ற ஒன்றை நீங்கள் பார்த்தது கிடையாது. இதுதான் உங்கள் எதிர்காலம். இனி இப்படிதான் வாசிக்கப் போகின்றீர்கள்”.
“ஒரு பக்கம் மட்டுமா, திரும்பத் திரும்பவுமா?”” என்று கேட்டான் சுரவேகன்.
சிரித்துக் கொண்டே பருந்தாக்ஷி தன் ஆள்காட்டி விரலால் சிலேட்டுப் பலகையைத் தடவிக் கொடுத்தாள். பக்கங்கள் மாறின.
ரேவனும் பிறரும் திகைத்து நின்றனர், தொண்டையில் புதிது புதிதாய் புறப்பட்ட கேள்விகள் நாவுக்கு வருமுன் தம் அபத்தத்தை உணர்ந்து மறைந்தன. இது என்ன மாயம்? சற்று நேரம் யாருக்கும் எதுவும் கேட்கும் துணிச்சல் வரவில்லை.
“இதைப் பார் ரேவன்,” என்றாள் பருந்தாக்ஷி. அவள் சிலேட்டுப் பலகையை இருமுறை தட்டினாள், புதிய புத்தகம் ஒன்று அதனுள் தோன்றிற்று.
“இந்தப் பலகைக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எவ்வாறு இருக்க முடியும்? நீ செய்யும் கண்கட்டு வித்தை என்ன?” என்று கோபமாய் கேட்டார் மூத்த நூலகர். கைகளில் இரு புத்தகங்களும், கால்களில் ஒன்றுமாய் வேகமாக அங்கே வந்திருந்தார் அவர்.
“தாத்தா, உங்கள் நூலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களும் இதில் அடக்கம். ஓட்டை ஏணியில் ஏறி இனி எதையும் தேட வேண்டாம். எல்லாம் உங்கள் விரல் நுனியின் ஒரு மெல்லிய அழுத்தத்தில் தோன்றும். நிம்மதியாகப் படித்துக் கொண்டேயிருக்கலாம். தங்களுக்குத் தேவையான புத்தகங்களை ஒவ்வொருத்தரும் தேடிக் கண்டு கொள்வார்கள்”.
மூத்த நூலகரின் அதிர்ச்சியை அனைவரும் கண்டனர். “இவள் ஒரு சூனியக்காரி,” என்று அலறினார் அவர். “இவள் புத்தகங்களை அழிக்க வந்திருக்கிறாள். இவள் நூலகங்களை அழிக்கப் போகிறாள். இவள் என்னை அழித்து விடுவாள்,” என்றவர், “இவள் ஒரு சூனியக்காரி”, என்று ஓலமிட்டுக் கொண்டே பாக்ஸ் தம்பதியரைத் தேடி ஓடினார்.
“எந்த சூனியக்காரியும் எங்கள் முன் நிற்க முடியாது,” என்று சிரித்தனர், “அவளிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்,” என்றனர் பேயோட்டும் அத்தம்பதியினர்.
பருந்தாக்ஷி இருந்த இடத்துக்கு வந்ததும் பாக்ஸ் தம்பதியர் தங்கள் மந்திரங்களைப் பிரயோகித்தனர். அவளை அவை எதுவும் செய்யவில்லை. பாக்ஸ் தம்பதியினர் குழம்பிப் போயினர், இருந்தாலும் தோல்வியை ஏற்றுக் கொண்டு திரும்ப மனமில்லாமல் மீண்டும் மீண்டும் அதே மந்திரங்களை சபித்தனர். பருந்தாக்ஷி மறைவதாயில்லை. சிலேட்டும் கையுமாக அவள் அப்படியே இருந்தாள். மூத்த நூலகர், பாக்ஸ் தம்பதியர் என்று அனைவரும் அவளுக்கு எதிரில் நின்றனர். தனியாக இருந்தாலும் பருந்தாக்ஷி அச்சமின்றி சிரித்தாள். அவளது சிரிப்பு அனைவரையும் வசீகரித்தது, அவளது அழைப்பு அனைவரையும் ஈர்த்தது. “கல்லாதது உலகளவு எனினும் கையளவே, என்னிடம் வாருங்கள்,” என்றால் அவள். அனைவரும் ஒருவரையொருவர் அச்சத்தால் இறுகப பிடித்துக் கொண்டு நின்றனர். பாக்ஸ் தம்பதியினர் மந்திரங்களை விடாது சபித்தனர். பருந்தாக்ஷியின் சிரிப்பு மறையவில்லை. அவளது சிலேட்டு ஒரு மாயக்குழலின் இசைபோல் ஒளிர்ந்தது.
ரேவனால் தன் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை, எண்ண முடியாத அளவு புத்தகங்களைத் தன்னுள் திரட்டி வைத்திருக்கும் அந்த சிலேட்டை பார்த்தவாறே அவளருகில் சென்று நின்றான். “எத்தனை அறிவுச் செல்வம் இதனுள் பொதிந்திருக்கிறது, இது எப்படி வெடிக்காமல் இருக்கிறது? இந்த சிலேட்டு ஒரு உலக அதிசயம்,” என்றான் ரேவன். பருந்தாக்ஷி அவனது தோளைத் தொட்டு மெல்ல அணைத்துக் கொண்டாள். “வா, நாம் ஒரு புதிய உலகம் செல்வோம். அங்கே நீ முடிவில்லா பயணங்களை மேற்கொள்ளலாம், உலகில் உள்ள அத்தனை புத்தகங்களும் உன் தொடுகைக்குக் காத்திருக்கும். வா, நாம் செல்வோம்” என்றாள் அவள்.
மெல்லச் சிறகடித்துப் பறந்தாள் பருந்தாக்ஷி. அவளைத் தொடர்ந்து சென்றான் ரேவன். அவள் கைகளில் இருந்த சிலேட்டின் ஒளி ஒரு பாதையாய் ஆகாயத்தில் ஒளிர்ந்தது. அதில் மெல்லச் சிறகடித்துப் பறந்து மறைந்தான் ரேவன். தன் மகன் நல்வழி திரும்புவான் என்ற நம்பிக்கையை முழுமையாய் இழந்து வீடு திரும்பினார் அவனது தந்தை. புத்தகங்களிடமிருந்து பிரிக்க முடியாத இடத்துக்குச் சென்று விட்டான் ரேவன்.

“என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?”
“இந்தப் புத்தகத்தின் நாயகன் ஒரு தீவிர இலக்கிய வாசகன். என்னைப் போல் அவனும் ஒரு லைப்ரரியன். புத்தகங்களை எடுக்க ஏணியில் ஏறும் அவன் வந்த வேலையை மறந்துவிட்டு, ஒரு புத்தகத்தைத் தன் கால்களுக்கிடையில் இடுக்கிக் கொள்கிறான், ஒன்றை இடது கையில் ஏந்தியிருக்கிறான், வலது கையில் உள்ள புத்தகத்தைப் பிரித்து படிக்கத் துவங்கிவிடுகிறான். இனி ஏணியை விட்டு இறங்குவது அவன் கையில் இல்லை. எங்கே வாசிக்க ஆரம்பிக்கிறான் எண்பது ஒரு பொருட்டேயல்ல, அவன் ஒரு அதிநாயகன். அந்த நூலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவன் படித்தாயிற்று, அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பான். அவன் தன் இதயத்தை வாசிப்புக்கு ஒப்படைத்துவிட்ட அவன், புத்தகங்களை கனத்த இதயத்துடன்தான் வாசிக்கக் கொடுக்கிறான்”
“அவர் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறார்?”
“அவர் ஒரு கவிஞனைப் பற்றிய புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். கவிஞன் அவரது ஆதர்ச நாயகன், கணக்கற்ற புத்தகங்களை தினந்தோறும் வாசித்தாலும் நுண்மைகளைத் தவற விடாதவன். அவன் கடும் சுரத்தில் படுத்திருக்கிறான். அவனது நெற்றியில் அவன் மனைவி ஒரு துணியை நனைத்துப் போர்த்திருக்கிறாள். அவனது உடலின் ஒவ்வொரு எலும்பும் வலிக்கிறது. அவனது கண்கள் சிவந்து கொதிக்கின்றன. அவனது நாக்கு கசப்பு நிறைந்திருக்கிறது. அவனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவும் முடியவில்லை. இருந்தாலும் அவன் ஒரு புத்தகத்தைப் பிரித்து வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனது கண்கள் வலிக்கின்றன, அவனது தலை வலிக்கின்றது, இருந்தாலும் அவன் படித்துக் கொண்டிருக்கிறான். மெல்ல மெல்ல அவன் ஒரு கற்பனை உலகுக்குள் நுழைகிறான். அங்கே அவனுக்குச் சுரமில்லை. புத்தகங்கள் நிறைந்த உலகில் அவன் மறைகிறான்”
“அவன் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறான்?”
“புத்தகங்களை நேசிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறான். அவள் ஒரு ஓடையை ஒட்டி நடந்து செல்கிறாள், ஆனால் அவள் ஓடையைக் காண்பதில்லை. அவள் ஒரு கோட்டையை நோக்கிச் செல்கிறாள், ஆனால் அவள் அந்தக் கோட்டையைக் காண்பதில்லை. அவள் செழிப்பான பசும்புற்கள் நிறைந்த படுகையில் நடந்து செல்கிறாள், ஆனால் அவள் பசுமையைக் காண்பதில்லை, அவற்றில் அசைத்துச் செல்லும் காற்றின் ஓசையைக் கேட்பதில்லை. அவள் கையில் ஒரு புத்தகம் இருக்கிறது. அவள் காணும் உலகம் அதனுள் இருக்கிறது. புறவுலகம் மறைந்து விட்டது. இல்லை, அவள் புத்தகத்தினுள் மறைந்து விட்டாள்”
“அவள் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்?”
“இந்தப் புத்தகத்தில் ஒரு அண்டங்காக்கையும் கழுகும் பேசிக் கொள்கின்றன. அந்த அண்டங்காக்கையின் பெயர் ரேவன். ரேவன் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான், அப்போது கழுகு கீழே இறங்கி வந்து அவன் என்ன படித்துக் கொண்டிருக்கிறான் என்று கேட்கிறது”
“ரேவன் என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்? ஆ, சொல்லாதே. எனக்குப் புரிந்து விட்டது. நாம் ஒரு புத்தகத்தில் இருக்கிறோம், இதுவெல்லாம் இப்போது நடக்கின்றன, இல்லையா?”
“ஆம். நாம் நிகழ்கணத்தின் நூலில் இருக்கிறோம். நாம் சொல்வதை பிறர் வாசிப்பார்கள்”
“இதைக் கேட்கவே எனக்கு பயமாக இருக்கிறது. அப்படியானால் இப்போதே நான் அறிவுப்பூர்வமாகவும் ஆழமாகவும் ஒன்று சொல்ல வேண்டுமே…”
“இதோ நீ சொல்லியாயிற்று, ‘அறிவுப்பூர்வமாகவும் ஆழமாகவும் ஒன்று’, என்று”
“ஆம். சொல்லி விட்டேனல்லவா, சரி, உன்னை நிகழ்கணத்தில் விட்டுச் செல்கிறேன்,” என்று கூறிப் பறந்து சென்றது கழுகு. அதன் ஒளிர்பாதையின் வெளிச்சத்தில் வாசிப்பைத் தொடர்ந்தான் ரேவன்.
நன்றி – Vanitas Magazine