
என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்
என் செவிகள் பழுதாகிவிடவில்லை நண்பா,
என் காதுகளை நானேதான் மூடிக் கொண்டிருக்கிறேன்
கண்களால் இன்னும் கூர்மையாய் கேட்கலாம் என்று
இப்போது சொற்கள் என்னிடம் தெளிவாகப் பேசுகின்றன
உனக்கு சொற்களின் ஓசைதான் தெரியும்
நான் அவற்றின் மௌனத்தை அறிகிறேன்
எனக்கு வேண்டாம்
நடிக்கத் தெரியாதவர்களின் அரைகுறை வசனங்கள்
நண்பா, நன்றாகச் சிரி
கம்பனின் சொற்கள் என்னுடன் நேரடியாகப் பேசுகின்றன.
ராமனின் மென்மையான குரல்,
ஜாம்பவானின் உறுமல்,
மந்தாரையின் கீச்சுக்குரல்,
ராவணனின் முழக்கம்
உன்னால் கேட்க முடியாது நண்பா
சிரி நண்பா, இதற்கும் சிரி
ஸ்வரப்படுத்தபட்ட இசைக்குறிப்பை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு துல்லியமாய் ஒலிக்கிறது மோகனம்
உனக்கோ எதிலும் எதிர்படும் அபஸ்வரங்கள்
நான் சாகித்யகர்த்தாவின் இதயத்தை உணர்கிறேன்
நீயோ மானுட முயற்சிகளோடு போராடுகிறாய்
நீ சிரித்தால் என்ன நண்பா,
நாமிருவரும்தான் நகைக்கிறோம்
நீ நிகழ்கணத்தைக் கேட்டு
நான் காலங்களைக் கண்டு –
இதோ இங்கு ரிஷிகளின் வேதகோஷங்கள், அதோ,
ஏவாளிடம் ஆதாம் ஆப்பிளுக்கும் ஆசைப்படாதே என்கிறான்
அலெக்ஸாண்டரிடம் பேசுகிறானே போரஸ்,
அவன் குரலில்தான் என்னவொரு கம்பீரம்
சாக்ரடீசும் பிளாட்டோவும் பேசிக்கொள்வதைக் கேட்கிறேன்
கலிங்கத்துக்குப்பின் அசோகனின் புலம்பல்
மார்ட்டின் லூதரின் அறச்சீற்றம்
ஹிட்லர் குரலுடன் முசோலினியின் குரலும்
இவர்களுடன் ஸ்டாலினும் சங்கமிக்கும் கோரஸ்
சஹாராவில் ரோம்மல் தலைமையில் டாங்கிகளின் கர்ஜனை
சர்ச்சிலின் எழுச்சி உரைகள்
காந்தியின் சன்னக் குரல் –
உன் காதில் இவை விழுகின்றனவா?
சிரி நண்பா,
அறியாமல் சிரி.
கடந்த காலத்தின் சொற்கள்
எதிர்காலச் சொற்களை எதிரொலிக்கின்றன
உன் தலைவன் பேசப்போவதை நான் அறிவேன்
அரசியல்வாதியின் பரப்புரையில் புதிதாய் என்ன இருக்கும்?-
நாளை முதுமையில் நீயும் உன் பிள்ளைகளிடம்
சொல்லப் போவது அத்தனையும் எனக்குத் தெரியும்
புத்தகத்தைப் புரட்ட புரட்ட
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என காலங்கள்
என்முன் வரிசையாகச் செல்கின்றன
நான் எப்போதும் என் புத்தகங்களில் இருக்கிறேன் நண்பா
என் செவிகள் சொற்களை நாடுகின்றன
அவற்றின் மணத்தை சுவாசிக்கின்றன, அவற்றின் சுவையில்
கரைகின்றன, சொற்களை உண்டு செரிக்கிறேன்
நான் வாழ்வது சொற்களில்தான் நண்பா
ஏதும் கோராத தோழமையில்
எல்லாம் எனக்கென அளிக்கும் புத்தகங்கள்
என் சிலச் சொற்களைப் பெற்றுச் செல்கின்றன
அவை உனக்கில்லை நண்பா
இப்போது நீ என்னை பார்த்து சிரிக்கலாம், நண்பா-
நான் எப்போதும் வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கிறேன்
image credit: Pintores y Pinturas