பிராங்க் ஓ’ஹாரா – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு கவிதைகள்

 

 

அட்லாண்டிக் இதழில் மிகா மாட்டிக்ஸ் எழுதிய கட்டுரையை இங்கே முழுமையாக வாசிக்கலாம் –

சில கவிஞர்கள் நம் பேச்சுமொழியை உருவாக்குகின்றனர். வேறு சிலர், தன்னிகழ்வும் தரிசனமும் வாய்க்கப்பெற்று, மொழியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தும் மொழிவழக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிராங்க் ஓ’ஹாரா இரண்டாம் பகுப்புக்கு உரியவர்: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது லஞ்ச் கவிதைகள் பதிப்பிக்கப்பட்டபோது நாவலாசிரியர் கில்பர்ட் சொரண்டினோ இவ்வாறு எழுதினார்: இந்தக் கவிதைகள், “தீர்மானமாக ந்யூ யார்க்கின் joie de vivreஐக் கொண்டிருக்கின்றன: சற்றே நலிந்த, கசங்கிய, ஆனால் தற்போதுள்ள ‘பாணியை’ விட எப்போதும் ஒரு அடி உயரே உள்ள ஒருவகை மோஸ்தரில்”.

பார்க் அவென்யூ, டைம்ஸ் சதுக்கம், பென்சில்வேனியா ஸ்டேஷன், லிவர் சாசேஜ் சாண்ட்விச்சுகள், பைவ் ஸ்பாட், சீக்ராம் பில்டிங், அமெரிக்க நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகத்தின் திறப்புவிழா என்றும் இன்னும் பலவும் பேசும் மிகவுமே ந்யூ யார்க்த்தனமான புத்தகம் இது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த நகரைச் சுற்றி நடை போடுகிறார் ஓ’ஹாரா, ‘சாக்லேட் மால்ட்டட்’ அல்லது ‘சிறிது வெர்லேன்’ வாங்குகிறார், ஒரு நண்பரின் பிறந்தநாளை நினைவுகூர்கிறார், ப்யோர்ட்டோ ரிக்கன் டிரைவர்களோடு பேசிவிட்டு ரெவர்டியின் கவிதைகளை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மோமாவில் உள்ள தன் இருக்கைக்கு விரைகிறார்.

பால்டிமோரில் பிறந்து மசாசுசெட்ஸில் உள்ள கிராப்டனின் வளர்ந்த ஓ’ஹாரா 1951ஆம் ஆண்டு ந்யூ யார்க்கில் குடியேறினார், 1966ல் அகால மரணமடையும் வரை அங்கு வாழ்ந்தார். சுதந்திரம், சாத்தியம், நகர்வு முதலானவற்றை அவர் ந்யூயார்க்கில் கண்டார் – ஓ’ஹாராவுக்கு இவை வாழ்வின் ஆதார இயல்புகளாக இருந்தன. ‘ஒரு புல்லிதழில்கூட எனக்கு மகிழ்ச்சி கிடைக்காது,” என்று அவர் ஒரு முறை எழுதினார், “அருகில் வசதியாக ஒரு சப்வே இல்லாமல்”. தன்னைப் போன்றே விலக்கி வைக்கப்பட்டவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று ஒரு சமூகத்தை அங்கு அவர் அறிந்து கொண்டார் – லைட்டில் ஷா சொல்வது போல் இவர்கள் ஓ’ஹாரா சுவீகரித்துக் கொண்ட குடும்பத்தினர் ஆயினர்.

இன்றைய ந்யூ யார்க்கர்கள் மத்தியிலும் லஞ்ச் கவிதைகள் பிரபலமாகதான் இருக்கின்றன: 2012ஆம் ஆண்டு, ‘ந்யூ யார்க்கின் கதையை மிகச் சிறப்பாகச் சொல்லும்’ பத்து விஷயங்களுக்கு வாக்களிக்கும்படி லேனார்ட் லோபேட் ஷோ தன் நேயர்களைக் கேட்டுக் கொண்டபோது, இது ஆறாம் இடத்தைப் பிடித்தது – ப்ரூக்ளின் பாலத்தைவிட ஒரு இடம் மேலே.

ஆனால் எழுதப்பட்ட இடத்துக்கும் காலத்துக்கும் அப்பால் தாக்கம் செலுத்தும் ஒரு வசீகரம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஐம்பதாம் ஆண்டு நிறைவுப் பதிப்பான சிட்டி லைட்ஸ் வெளியீடு இந்த உண்மையை உணர்த்துகிறது. போகிறபோக்கில் பேசும் தொனியில், பகடி செய்யும், சிரிக்க வைக்கும் வகையில், ஏராளமான பாப் கல்ச்சர் உணர்த்துதல்களோடுள்ள லஞ்ச் கவிதைகள் நவீன பொதுவுரைக்கு (discourse) உரிய அத்தனை சுருக்கமும் சௌஜன்யமும் நகைமுரணும், சில சமயம் அர்த்தமற்றுப் பெசிக்கொண்டிருக்கும் தன்மையும் கூடியதாக இருக்கிறது – அவற்றின் பாதிப்புக்கு உள்ளாகாமல்.

இதுவரை இந்த நூல் அச்சில் இல்லாமல் போனதே கிடையாது. அதற்கு ஒரு காரணம் நவீன அமெரிக்கர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியில் ஓ’ஹாராவும் தன் உணர்வுகளை விவரிப்பதாக இருக்கலாம் : நம்மில் பலரைப் போலவே அவரும் நவீன வாழ்வின் அபத்தத்தையும் தனிமையையும் முகம் தெரியாத அன்னியர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்கிறார்.

பேஸ்புக் நிலைத்தகவல்கள், டிவீட்டுகள், பகிர்வுகள், சேகரித்தல்கள் போல் ஓ’ஹாராவின் லஞ்ச் கவிதைகள் கவிஞனின் அனுபவ உலகை மீட்டுருவாக்கம் செய்கின்றன. தன் தனிமையை எதிர்கொள்ள அவர் பிறரோடு உரையாடுகிறார் – நவீன வாழ்வு பற்றிய வம்பும் சில சமயம் குத்தலும் கொண்ட பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார். சிறிதும் வடிகட்டப்படாத உற்சாகத்துடன் தன் சலிப்பை நேரடியாகப் பேசும் தொனியில் வெளிப்படுத்துகிறார். சுருக்கமாகச் சொன்னால், லஞ்ச் கவிதைகள் ஐம்பது ஆண்டுகள் பழசாக இருந்தாலும், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு புத்தகம்தான்.

“பெர்சனிசம்- ஒரு கொள்கை விளக்க அறிக்கை’ என்ற குறிப்பில் ஓ’ஹாரா தன் கவிதைகளைத் தீர்மானமாகவே இருபதாம் நூற்றாண்டுக்குரிய ஒரு தொலைதொடர்பு ஊடகத்துடன் ஒப்பிடுகிறார்- தொலைபேசி அழைப்பு. பெர்சனிசத்தில் உள்ள பலவும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டவை எண்பது உண்மைதான். ஆனால் ஓ’ஹாரா நகைமுரணாகப் பேசும்போதுதான் மிகத் தீவிரமாகப் பேசுகிறார், பெர்சனிசத்தின் இரண்டாம் பகுதியைப் பொருத்தவரை இதுதான் உண்மை: தன் கவிதைகள் தொலைபேசி அழைப்புகளைப் போன்றவை என்று எழுதுகிறார் ஓ’ஹாரா, ஏனெனில் அவை வேறு யாருக்கோ எழுதப்பட்டவை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, கவிதை மறைமுகமாகப் பேசுகிறது – “இவ்வாறாகவே,” என்று எழுதுகிறார் ஓ’ஹாரா, “காதலின் உயிர் அளிக்கும் கொச்சைத்தன்மையை அழிக்காமல் அவை காதலின் சாயல்களை” தோற்றுவிக்கின்றன.

நன்றி : அட்லாண்டிக் 

தொடர்புடைய பதிவு:

“இக்கவிதையில், ஓ ஹாரா, நகர நெரிசலின் தனிமையில் இருக்கும் தனது வாசகரிடம் மிக மெதுவாக பேசுகிறார். தினமும் பேருந்துகளிலும் இரயில்களிலும் சில மணி நேரங்களாவது பயணிக்கும் வாசகரிடம், அவர் கடந்து சென்றுகொண்டிருக்கும் நகரவெளியைப் பற்றி, அப்பயணத்தின் அசைவமைதியுடன் சொல்கிறார். அந்த கடைசி கேள்வியின் இறுதி நிறுத்தத்தில், ஒரு கணம் நாம் மீண்டும் நகரிலிருந்து அன்னியப்பட்டு மீள்கிறோம்”
– நகரம் கவிதைகள்- 1 அழுக்காக இருக்கிறதா, பிராங்க் ஓ’ஹாராவின் Song (is it dirty) என்ற கவிதை குறித்த அனுகிரஹாவின் வாசிப்பு அனுபவம்

image credit: city lights

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.