மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2

– சிகந்தர்வாசி – 

நாங்கள் இந்தக் கோளில் குடியமர்த்தப்பட்ட சில காலத்துக்குப்பின் தொழில்நுட்பத்தைச் செலுத்தும் தீசலெண்ணெய் முதலான உள்ளீட்டுப் பொருட்கள் இல்லாது போயின. இந்த இழப்பைத் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அதுவரை கற்றிருந்த கல்வியின் பயனை இழந்தது.

விவசாயிகளும் வனவாசிகளுமே இத்தகைய மாற்றங்களால் தடுமாற்றமடையாதவர்களாக இருந்தனர். விவசாயிகள் தம்மிடமிருந்த விதைகளைக் கொண்டு தொடர்ந்து பயிர்ச் சாகுபடி செய்தனர். வனவாசிகள் இயற்கையை ஒட்டி வாழ வேண்டிய சூழலில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள எங்கள் அனைவருக்கும் பயிற்சியளித்தனர். மண்வளம் குன்றாதிருந்தது, பயிர்கள் செழித்தன. நாங்கள் கொணர்ந்திருந்த விலங்குகள் வனத்தில் பெருகின. வனவாசிகள் வேட்டையாடக் கற்றுத் தந்தனர். எங்கள் காலனி மெல்ல மெல்ல உணவுப் பற்றாகுறையிலிருந்து மீண்டது. “உணவைப் பொருத்தவரை நாம் தன்னிறைவை எட்டிவிட்டோம்,” என்று ஒரு மேலாண்மை நிபுணர், சுள்ளி பொறுக்கும்போது குறிப்பிட்டதில் உண்மை இல்லாமலில்லை.

இவ்வாறாக உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது போல் பிற துறைகளில் முன்னேற்றம் காண்பது இவ்வளவு எளிதாக இருக்காது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். தங்கள் முன்னோர்களின் நிலையை எட்டவே பல நூற்றாண்டு காலம் தேவைப்படும். தம் போதாமைகள் காரணமாக மனதைக் குற்றவுணர்வாலும் தாழ்வு மனப்பான்மையாலும் நிறைக்கும் அறிவை ஒரு சுமையாகக் கருதாமல், அதை ஒரு இறுதி லட்சியமாகக் கொள்வதென முடிவெடுத்து அத்திசையில் மெல்ல மெல்ல முன்னேறினர். புவி மருத்துவர்களின் இடத்தில் புது மருத்துவர்கள் உருவாயினர். இவர்கள் மரங்களின் மருத்துவ குணங்களைப் பற்றி வனவாசிகளிடம் கற்றறிந்தனர். மெல்ல மெல்ல இந்த மருத்துவ முறையும் முன்னேற்றமடைந்தது.

உணவு, மருத்துவம், அறிவியல் குறித்த கேள்விகளுக்கு பதில் இவ்வாறு கிட்டிவந்த வேளையில் அறம் குறித்த விவாதம் வலுத்தது. தங்கள் மூதாதைகளின் சமயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று இங்கிருந்த வயோதிகர்கள் வலியுறுத்தினர். சமயமே ஒழுக்கத்தைக் கட்டிக்காக்க உதவும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இன்றும் நாம் சிலர் இல்லங்களில் சிலுவையும் சிலர் இல்லங்களில் பிறை நிலவையும் சிலர் இல்லங்களில் தெய்வங்களையும் காண முடிகிறது. ஆனால் இன்று சமய அமைப்புகள் இல்லை. அதற்கான தேவை எழவில்லை. குடியேறிய துவக்க நாட்களில் சமய நம்பிக்கை தொடர்பான விவாதங்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது, ஆனால் உயிர்வாழ வேண்டுமெனில் ஒற்றுமையாக இருந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததும் எம் மக்கள் முதல் வேலையாக தம்மிடையே இருந்த வேற்றுமைகளைக் களைந்தனர். இங்கு பிறந்தவர்களுக்கு சமயம் சார்ந்த பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க சிலர் முயற்சித்தனர், ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. பூமியில் ஆற்றல் மிகுந்ததாய் இருந்த கதைகள் இங்கு நீர்த்துப் போயின. சமய அமைப்புகள் வலுவிழந்து அழிந்தன. மின்சாரம் இல்லாத கணிமைகள் போல் அவையும் உயிரற்றுக் கிடந்தன. சில குறியீடுகள் மிச்சம் இருப்பினும் அவற்றின் ஆதார நம்பிக்கைகள் குலைந்தன.

-என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் சில எண்ணங்களை முழுமையாக வேரறுக்கவே முடியாது போலிருக்கிறது, எமது மூதாதைகள் மீண்டும் மீண்டும், எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்போதெல்லாம் சமய நம்பிக்கைகளுக்குத் திரும்பினர். மக்களிடையேயும் சில கெட்ட பழக்கங்கள் இருந்தன. பிறரின் உணவைச் சிலர் திருடினர். சிலர் இல்லற வாழ்வில் கள்ள உறவு வைத்துக் கொண்டிருந்தனர். பல காரணங்களுக்காக மோதல்கள் எழுந்தன. உணவு அபரிதமாக இருந்தது என்றாலும் மக்கள் நடத்தை பெரியவர்களுக்கு நிறைவு தருவதாக இல்லை. பூலோகத்தில் சொர்க்க வாழ்வு வாழ்ந்தது போன்ற தோற்றமளிக்கும் பழங்கதைகளையே அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர், அக்காலத்திய சமய நம்பிக்கைகள்தாம் பொது ஒழுக்கத்தைக் கட்டிக் காத்தன என்று கூறினர். சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருந்தது, அதைப் பாதுகாக்க காவல்துறையும் நீதித்துறையும், அவற்றின் செயல்பாட்டை நெறிமுறைப்படுத்த சட்டங்களும் நடத்தை விதிகளும் இருந்தன என்று மீண்டும் மீண்டும் முன்னர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.

நான் இக்கோளின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமும் வந்தது. அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் எந்த ஒரு புதிய மொழியையும் புரிந்து கொள்ளும் திறமை இருந்ததாலும் என் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டனர். பூமியிலிருந்து மக்கள் இங்கு வந்தபோது பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் மொழி என்பது மனிதர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்த உதவும் கருவிதான் என்பதாலும், எங்கள் மக்கள் தொகை சில ஆயிரங்கள் மட்டுமே இருந்ததாலும் அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதற்கான தேவை இங்கு இருக்கவில்லை. மெல்ல மெல்ல எங்கள் முன்னோர்கள் அனைவரும் ஆங்கில மொழி பாவிப்பவர்களாக மாறினர்.

எங்கள் தாத்தாக்களின் தாத்தாக்கள் பேசும் மொழிகளை எங்களால் விளங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகிவிட்டது. ஆனால் சங்கேதக் குறிப்புகளின் புதிர்களை விடுவிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் என்னால் புதிய மொழிகளின் பொருளை விளக்க முடிந்தது. இதனால் மக்கள் மத்தியில் என் மதிப்பு உயர்ந்தது- இன்று நாகரிகமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இணக்கமான, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பொது வாழ்வின் ஒழுக்க நெறிகளை உருவாக்குவதுதான் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு. பூமியிலுள்ள புனித நூல்களை ஆய்வு செய்து அவற்றின் சிறந்த கூறுகளைத் தொகுத்து நவீன வாழ்வுக்கான நன்னெறிகளை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

எனவேதான் நான் இந்த வினோதமான கருவியைப் பொருத்திக் கொள்கிறேன். இது எங்கள் விண்கலம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதன் குழாய்களில் பிராணவாயு செலுத்தப்படும்போது என் செவிப்புலன் அடங்குகிறது, கண்கள் என்முன்னிருக்கும் இந்த எழுத்துருக்களை மட்டுமே காண்கின்றன. நான் என் கவனத்தை ஒருமைப்படுத்தத் துவங்குகிறேன். புதிய மொழி தன் தொல் ரகசியங்களை வெளிப்படுத்தத் துவங்குகிறது. புனித நூல்கள் ஒவ்வொன்றையும் அவற்றின் மூல மொழியிலேயே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஹீப்ரு மொழியில் மோசஸின் பத்து கட்டளைகளை வாசித்தேன், ஆங்கில மொழியில் விவிலியத்தை வாசித்தேன். அரபி மொழியில் புனித குரானை வாசித்தேன். சமஸ்கிருத மொழியில் பகவத் கீதை என்ற ஒரு புனித நூல் இருக்கிறது, அதையும் வாசித்தேன். தமிழ் மொழியில் சமயம் சாராத ஒழுக்க நூல் ஒன்று இருக்கிறது, திருக்குறள். அதையும் வாசித்தேன்.

ஆனால் இத்தனை வாசிப்பும் எனக்குச் சோர்வளிப்பதாக மட்டுமே இருந்தன. பூமியில் இத்தனை புனித நூல்களும் ஒழுக்க நூல்களும் இருந்திருக்கின்றன. இவற்றை உருவாக்கி, போற்றிப் பின்பற்றிய மக்கள் தன்னலமற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். பேராசை, பாபச் செயல்கள், குற்றங்கள் என்று எதுவுமில்லாத நலவாழ்வு வாழ இந்தப் புத்தகங்கள் வழி காட்டியிருக்கும். இதைத்தானே இந்த நூல்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் இது போன்ற எதுவும் எம் மக்களிடம் இல்லை. கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கிறது.

இவ்வாறெல்லாம் நான் நினைத்தாலும் என்னுடன் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த நண்பன் ஒருவன் இதை வேறு மாதிரி பார்க்கலாம் என்று சொன்னான். பூலோக வாழ்க்கை அப்படி ஒன்றும் சொர்க்கம் போல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றான். போர் இல்லாத இடத்தில் அகிம்சையை வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன? பழைய சண்டைகளை இங்கே கொண்டு வரக்கூடாது என்று நம் முன்னோர்கள் பிரச்சினைக்குரிய விஷயங்களை பூமியிலேயே விட்டுவிட்டு வந்திருப்பார்கள் என்று சொன்னான் அவன். அறிவியல், மருத்துவக் கல்வி போன்ற பயனுள்ள விஷயங்கள் தவிர மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் விஷயங்களை நம் முன்னோர்கள் நம்மிடமிருந்து மறைத்துவிட்டனர் என்றான் அவன்.

எங்களிடையே கலைகள்கூட அவ்வளவு பிரமாதமாக செழிக்கவில்லை. வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும்போது ஓவியம், நடனம், சங்கீதம் என்று கலைகளுக்கெல்லாம் நேரத்தை வீணடிக்க யாரால் முடியும் என்று சொல்லி அவற்றுக்கான பயிற்சி ஒடுக்கப்பட்டது. தினமும் மாலை ஒரு மணி நேரம் மட்டும் அனைவரும் ஒன்றாகப் பாடுவோம். அதற்கு மட்டுமே அனுமதி.

ஒரு முறை என் நண்பன் ஒருவன் என்னை ஒரு விண்கலத்துக்கு அழைத்துப் போனான். அதில் ஒரு ரகசிய அறை இருந்தது. அதனுள் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவை சமயப் புத்தகங்கள் அல்ல, நாவல்கள் என்றழைக்கப்படும் வாழ்வியல் ஆவணங்கள். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா இவற்றைக் கொண்டு வந்தார், என்றான் என் நண்பன். இவை கதைப் புத்தகங்கள் போலிருந்தன. வெவ்வேறு மொழிகளில் இருந்தன. மெல்ல மெல்ல இந்த மொழிகளைப் புரிந்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். அந்த அனுபவம் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டும் உரியவை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த அத்தனை தீய குணங்களும் பூலோக மனிதர்களுக்கும் இருந்தன என்றறிந்தேன்.

இந்தப் புத்தகங்களில் உள்ளவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டனர், ஏமாற்றினர், பேராசை கொண்டிருந்தனர், பிறன்மனை விழைந்தனர், சமயம், இனம், சாதி, நிறம், மொழி, தொழில் என்று பல வகைகளில் பிரிந்திருந்தனர். இதுபோதாதென்று இவற்றுள் உட்பிரிவுகள், மோதல்கள். ஆனால் சில புத்தகங்கள் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவியதைப் பேசின, பிறருக்காக தியாகம் செய்ததைப் பேசின, உயரங்களைத் தொட ஒருவருக்கொருவர் துணையாய் இருந்ததைப் பேசின. மனிதர்கள் கீழ்மையும் மேன்மையும் சம அளவில் உள்ளவர்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தின. எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்தப் புத்தகங்களில் உள்ளவை மெய்யா புனைவா? இதை எப்படி கண்டுகொள்ள முடியும்?

என் குழப்பத்தின் விடை ஒரு சம்ஸ்கிருத நூலில் இருந்தது. ஒவ்வொரு வரியாகவே வாசிகக முடியும் என்றாலும் எனக்கு அதுவே போதுமானதாக இருத்தது. ஜைமினி என்ற அந்த அறிஞர் ஓரே வரியில் மானுட இருப்பின் சாரத்தைச் சொல்லிவிட்டார் என்று உணர்ந்தேன். சம்ஸ்கிருத வரி, “ந கதாசித் அநித்ருஷம் ஜகத்’ என்று சொன்னது. ‘உலகம் என்றும் மாறியதில்லை’.

ஓரே வரியில் மானுட உணர்வுகளையும் அறிவியல் சாதனைகளையும் வேறுபடுத்திக் காட்டிவிட்டார் இந்த அறிஞர். மனித உணர்வுகள் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கின்றன. புறச்சூழல் எப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் அவற்றை அனுபவமாய் வாழ்ந்த மனிதர்களுக்கு உலகம் என்றும் மாறியதில்லை- இதே விருப்பு வெறுப்புகள்தான், கோபங்களும் ஆசைகளும்தான், லட்சியங்களும் வீழ்ச்சிகளும்தான் மானுட வாழ்வின் வண்ணங்களாக எப்போதும் இருந்திருக்கின்றன.

கதைகள் உண்மையையே பேசின என்று நான் உணர்ந்தேன். இன்னும் பல தலைமுறைகள் வரும். அவை வேறு பல சூழல்களை எதிர்கொள்ளும். அவற்றுக்கான கருத்துருக்களையும் கருவிகளையும் வடிவமைத்துக் கொள்ளும். ஆனால் மானுட அனுபவம் மாறாது. இதுதான் உலகம்: “ந கதாசித் அநித்ருஷம் ஜகத்’.

இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறேன். என் செவிப்புலன் கூர்மையடைகிறது. தலைக்கவசத்தை நீக்கிவிட்டு என் கண்முன் இருக்கும் உலகை நோக்குகிறேன். “ந கதாசித் அநித்ருஷம் ஜகத்,’ என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வது என் செவிகளில் ஒலிக்கிறது. என்றைக்கும் உண்மையாயிருக்கக்கூடிய வலிமை கொண்ட இந்த உண்மையைக் கைப்பற்றியவனாக என் மக்களைச் சந்திக்க எழுகிறேன். மனித இனம் பிழைத்துக் கொள்ளும்.

Image Credit : Laughingsquid.com

இந்தக் கதையின் முந்தைய பகுதி இங்கே : மானுடம் குடியமர்ந்த கோள் – 1

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.