டோல்கீன் தன் ‘பேவோல்ஃப்’ மொழிபெயர்ப்பைத் தனியாய் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின் அவர் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அந்தக் கவிதை குறித்த மிகச் சிறந்த கட்டுரை என்று மட்டுமல்ல, பலர், இது ஆங்கில இலக்கியத்தின் மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று என்றும் கருதுகின்றனர். இதுதான் அந்தக் கட்டுரை “பேவொல்ஃப்: மான்ஸ்டர்களும் விமரிசகர்களும்”. விமரிசகர்களுக்கு மான்ஸ்டர்கள் மேல் என்று நினைத்தார் டோல்கீன். கவிதையின் பொருள் புறக்கணிக்கப்பட்டு, தொல்பொருள் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது அவரது கருத்தாக இருந்தது. பேவொல்ஃப்பில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, எந்த அளவுக்கு கற்பனை உள்ளது? அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்கு அதனுடன் உள்ள உறவு என்ன?
கவிதையின் உண்மையான கருப்பொருளைத் தவிர்க்கவே இவ்வளவும் என்று கருதினார் டோல்கீன்: மரணம், தோல்வி. இவை பேவொல்ஃபுக்கு மட்டும் வருவதில்லை, அவனது அரசுக்கும் நிகழ்கிறது, ஒவ்வொரு அரசுக்கும் இதுதான் விதி. பல விமரிசகர்களும் ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கும்போது ‘பேவொல்ஃப்’ குழப்பமான ஆக்கம் என்று நினைத்தார்கள் – உதாரணத்துக்கு, அதில் பாகனிய சிந்தனைகளும் கிறித்தவ சிந்தனைகளும் கலந்திருக்கின்றன. ஆனால் பேவொல்ஃபின் கதைசொல்லி, போர்வீரர்களை மகிழ்விக்கும் கவிஞர்களைப் போல், தான் தொல் காலங்களில் நிகழ்ந்த ஒரு கதையையே சொல்வதாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். “நான் கேள்விப்பட்டேன்,” என்கிறார் அவர். “நான் அறிந்து கொண்டேன்”.
கவிதையில் சொல்லப்படும் விஷயங்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கின்றனவோ அவை கிட்டதட்ட கிபி 500 ஆம் ஆண்டையொட்டி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் டோல்கீன். ஆனால் அதைப் பாடிய கவிஞன் புதிய காலத்துக்கு உரியவன், பிரிட்டிஷ் தீவுகள் கிறித்துவத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்ட நாட்களில் வாழ்ந்தவன். இந்த மதமாற்றம் ஓரே நாளில் ஏற்பட்டதல்ல. எனவேதான் இந்தக் கவிஞன், கடவுள் இந்த பூமியைக் கடல் கொண்டு இறுக்கி, வானில் சூரியனைக் கட்டி வைத்தான் என்று சொல்லும்போதும் மீண்டும் மீண்டும் பாகனிய விழுமியங்களுக்குத் திரும்புகிறான். கவிதையில் பேசப்படும் எவரும் வினயமாய் இருப்பது குறித்தோ எளிமை குறித்தோ அக்கறை கொண்டவர்களாக இருக்கவில்லை (அவர்கள் செல்வத்தைப் போற்றினர், அதை மீண்டும் மீண்டும் கணக்கிட்டு மகிழ்ந்தனர்). அவர்களுக்கு தன்னடக்கம் இருக்கவில்லை (தங்கள் வீரச்செயல்கள் குறித்து அவர்கள் பெருமைப்பட்டனர்). மரணமே முடிவு என்று நினைத்தனர். பேவோல்ஃப் உட்பட யாருமே இதைவிட உயர்ந்த இடத்துக்குச் செல்வதாகச் சொல்லப்படுவதில்லை.
பேவொல்ஃபை இன்னும் சீரான கவிதையாக வாசிக்க விரும்பும் விமரிசகர்கள் கண்டனம் செய்யும் இன்னொரு விஷயம், அது காலப் பரிமாணத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்பதுதான்: உத்தமமான ஒரு தொல்குடியினர் திரட்டி, பின்னர் டிராகனின் புதையலாக மாறிய வரலாறு நிகழ்ந்த பெரும்பழங்காலம்; மகோன்னதமான அரசர்களும் நாயகர்களும் எழுச்சியடைந்து வீழ்ந்த அதனின் குறுகிய கடந்த காலம் (இத்தகைய பல காலங்கள் கவிதையில் உண்டு); மான்ஸ்டர்களை பேவொல்ஃப் கொல்லும் நிகழ்காலம்’ எதிர்காலம் – இதில் பிற மக்கள், பேவொல்ஃபின் மரணத்தை அறிந்து, கீட்டுகளுக்கு எதிராகப் போரிடும் துணிச்சல் பெறுவர்; கீட்டுகளைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தவும் செய்வர். இதை நினைத்துப் பார்க்கும்போதே கீட்டிஷ் பெண்கள் கூக்குரலிடுகின்றனர். இது நடக்கப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். “ட்ராஜன் விமன்’னில் நிகழ்வது போன்றது இது.
இந்தக் காலப்பரிமாணங்கள் மோதிக் கொள்ளும்போது கதையின் முடிச்சுகள் அபரிதமாக அவிழ்கின்றன. டிராகனைச் சந்திக்க பேவொல்ஃப் செல்லும்போது, கவிஞன் நான்கு முறை முழுமையாகச் சொல்கிறான், பாடல் நாயகன் தன் மரணத்தை நோக்கிச் செல்கிறான் என்று. கிரேக்க துயர்நாடகங்களில் நிகழ்வது போல், இந்தக் கவிதையை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அதன் முடிவை அறிந்திருந்தார்கள். அதன் மத்திம பகுதிகளையும் அறிந்திருந்தனர் -இது நல்ல விஷயம்தான். ஏனெனில், பேவொல்ஃபின் ஐம்பது ஆண்டுகால ஆட்சியின் நிகழ்வுகள் டிராகன் வரும்வரை சொல்லப்படுவதில்லை. கவிதைக்கு உரை எழுதிய பலருக்கு இது உறுத்தலாக இருந்தது – டோல்கீன் இதைப் பொருட்படுத்தவில்லை. அவருக்கு மூன்று சண்டைகளுமே போதுமானதாக இருந்தன. பேவொல்ஃப் ஒரு மனிதன்தான், என்று எழுதுகிறார் டோல்கீன்:
“அவனுக்கும் பலருக்கும் அதுவே போதுமான துயராக இருந்தது. கவிதையின் தொனி இவ்வளவு உயர்ந்ததாகவும் அதன் கருப்பொருள் அவ்வளவு தாழ்ந்ததாகவும் இருப்பது என்பது நம்மை வெறுப்பேற்றும் விபத்தல்ல: வாழ்வு நிலையற்றது: ஒளியும் உயிரும் உடன் விரைந்து நீங்குகின்றன. இந்த அடிப்படைச் சிந்தனை அவ்வளவு தீவிரமானதாகவும் தவிர்க்க இயலாததாகவும் உள்ளது- ஒளிவட்டத்தில் இருப்பவர்கள், முற்றுகையிடப்பட்ட கோட்டையுள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் பணியிலும் உரையாடலிலும் ஆழ்ந்திருக்கின்றனர், கோட்டையின் அரண்களைப் பார்ப்பதில்லை, அதை நினைத்தும் பார்ப்பதில்லை, அஞ்சுவதுமில்லை. சாவும் விருந்துண்ண வருகிறது.”
பேவொல்ஃபை டோல்கீன் ஒரு காவியமாகவோ நாயக பாடலாகவோ கருதவில்லை. அவற்றுக்கு கதை சொல்லலின் உந்துவிசை தேவைப்படக்கூடும். அது ஒரு கவிதை மட்டுமே – ஒரு இரங்கற்பா. ஒளியும் உயிரும் உடன் விரைந்து நீங்குகின்றன.