ஞாபகம்

ரா. கிரிதரன்

soccer memoirs

எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.

`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.

அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.

`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`

நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா.

எட்டுதிசை பதினாறாகிச் சிதறும் எண்ணங்களில் என்னைத் தொலைக்கக்கூடாதென மேற்கொண்டு பேசாமல் கிளம்பினேன். பழைய வாழ்வின் நிழல் பூரணமாக விலகாமல் இருப்பவர். சொல்லப்போனால நம்மில் பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் என்றாலும் நேற்றைய நாளில் சுணங்கிவிடாமல் நம் செயலூக்கம் இருக்கும் திசை நோக்கி நம் வாழ்வு மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் சமீபத்தில் படித்த மொழியாக்கக் கவிதையில் வரலாறு செல்லும் திசையில் அடித்துச் செல்லப்படும் மனிதர்களைப் பற்றிய ஒருவரி இதை மிகச் சிறப்பாகச் சொல்வதைக் கண்டேன். கரோல் வத்ஜேலா `போர்க்கருவியாலைத் தொழிலாளி` எனும் கவிதை எழுதியிருக்கிறார். பிரமிளின் மொழியாக்கத்தில் படிக்கக் கிடைத்தது.

உலகின் விதியை நிர்ணயிக்க
என்னால் முடியாது
யுத்தங்களை ஆரம்பித்து வைப்பவன்
நானல்லன்
போர்வேண்டுமா – சமாதானமா?
இதற்குப் பதில் எனக்குத் தெரியாது
எனக்கு இல்லாதது செல்வாக்கு
இதுவே எனது கவலை.
யுத்தங்களைப் பொறுத்தவரை
பாவி நானல்ல.
நான் திருகாணிகளைத் திருகிவிடுகிறவன்,
அழிவின் ஆரம்பப் பகுதிகளை
உருக்காலையில் தட்டிவிடுகிறவன்.
அவற்றின் முழுமையோ
மனித ஜீவனின் கோளாறோ
என் அறிவால் எட்டமுடியாதது.
பேச்சின் பொய்ம்மைக்கும்
செய்கையின் தேய்வுக்கும்
அப்பாற்பட்ட பரிசுத்தமான
பேரியக்கம் ஒன்றினுள்தான்
எனது இயக்கம் இடம்பெற முடியும்.
என் சிருஷ்டி முழுவதுமே
தவறானதெனினும்
உலகின் தவறுக்கு நானல்ல
சிருஷ்டிகர்த்தா.

இன்றைய காலங்களில் பேச்சின் பொய்ம்மைக்கும், செய்கையின் தேய்வுக்கும் கிடைக்கும் கைதட்டல்கள் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? பரிசுத்தமான பேரியக்கத்தைப் பேணுபவர்கள் சற்று அப்பால் போகட்டும். காலமும், கலையும், உண்மையும் அவர்களை நினைவில் வைத்துத் தொலைக்கட்டும். ஜேப்படி வித்தைக்காரனின் துல்லியத்துடன் நாம் எடுத்துக்கொண்ட பொய்ம்மைகளையும், வாழ்வு நசிவுகளையும் பின் தொடர்வோம்.

உலகப் போரின் நூற்றாண்டு நினைவு விழாக்கள் ஐரோப்பாவெங்கும் தொடங்கிவிட்டன. ஒரு தலைமுறைக்காலம் முடிவதற்குள் உண்மையும், பொய்யும் இடப்பெயர்ந்து விட்டாலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெரும் யுத்தங்களின் பாதிப்பு நமது சின்ன வாழ்வில் எங்கும் எதிரொலிக்கின்றன. புகைப்பட அரங்குகள், நினைவுச் சின்னங்கள், வரலாற்று ஆவணங்கள் எல்லாம் நமது மூச்சடைக்கும் செய்தி வர்த்தகத்தை இரு நிமிடங்கள் நிறுத்திவைத்து யுத்தம் என்ன செய்தது என யோசிக்கச் சொல்கின்றன. மனித இயக்கம் எப்போதும் அவனது செயல்களின் விளைவுகளை விஞ்சியே நின்றாகவேண்டும் என்பதை உணர்த்தவந்த யுத்தங்கள். எதிர்புதிர் வாதபிரதிவாதங்களை விடுத்துப் பார்த்தால் ஒட்டுமொத்த இயக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டதாகச் சமூக ஆய்வாளர்கள் நினைக்கவில்லையாம். War is an endless path எனும் கூற்று நிரூபணமாயிருக்கிறது.

செங்கிஸ்தான் காலத்திலிருந்து யுத்தம் ஒரு சிறு நிறுத்தமாகவே இருந்திருக்கிறது. A gentle pause. அதற்கு முன்னும் பின்னும் வாழ்க்கை பெரிய பாய்ச்சலைச் சந்ததித்திருப்பதாகத் தெரியவில்லை. பெரும் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியுற்ற பாதையிலிருந்து தள்ளாடி எழும்பி நின்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஓட்டமாகவே இருந்திருக்கிறது. To shoe the hoofs of death மட்டுமே நோக்கமாக. முதல் மகாயுத்தத்துக்குப் பிறகு போர் விளைவுகள் மாறிவிட்டன. யுத்தம் என்றால் லாபம் – அரசுக்கு மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களுக்கு, ஊடகங்களுக்கு. பரிசுத்தமான பேரியக்கத்தின் புலன்கள் சற்று ஸ்தம்பித்துத்தான் போயிருக்கின்றன. வில்சன் தாத்தா தலைமுறையினர் யுத்தத்தை நாடுகளுக்கிடையேயான போர், நாட்டுப்பற்று போன்ற ஃபார்மால்டிஹைடில் தோய்த்து நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பார்க்கின்றனர்.

சமீபத்தில் அறிமுகமாக எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig). ஆஸ்திரா நாட்டைச் சேர்ந்தவர். யுத்த காலங்களில் ஐரோப்பா, அமெரிக்காவில் வாழ்ந்தவர். அவரது இரு முக்கியமான ஆக்கங்கள் – Journey into the Past மற்றொன்று The World of Yesterday. புகை மூட்டம் போலக் குழப்பமான யுத்த காலகட்டத்தைக் காட்டும் படைப்புகள். இதில் Journey into the past குறுநாவல் அன்பிற்குத் தவிக்கும் இருவரை யுத்தம் பிரித்துவைத்திருக்கும் ஒற்றைச் சரடைக் காட்டும் படைப்பு. யுத்தத்துக்குப் பின்னான காலம் அவர்களது பழைய வாழ்வை மீட்டுத் தருமா? மீண்டும் அவ்வாழ்வின் சுகங்களுக்குள் தங்களை ஒப்பு கொடுக்கமுடியுமா என்பது கதை. அனேகமாக வேட்டையாடப்பட்ட மனிதனும் வேட்டையாடிய மனிதனும் ஒருசேர கையறு நிலையை எட்டிய முதல் யுத்தமும் இதுதான். எந்த இடத்தில் தொடங்கியது, எப்போது முடிந்தது போன்ற காலக்கணக்குகள் டாலி ஓவியங்கள் போல் குழம்பிக்கிடக்கின்றன. இக்கையறு நிலையைப் பேசிய பலப்பல எழுத்தாளர்களுள் மிகச் சூட்சுமமான மாறுதல்களைப் பேசியவர் ஸ்டீபன். அவரது படைப்புகள் எப்போதும் போர் சூழ நடக்கும்; போரைப் பற்றியன அல்ல. மனிதப் பிரக்ஞையில் ஏற்பட்ட கணநேர மாற்றங்களையும் அவற்றின் நிரந்தரமான விளைவுகளையும் பேசும் படைப்புகள்.

மாறும் உலகம் மனிதனை அமைதி இழக்கச் செய்திருக்கிறது. அதுவும் உடனுக்குடனான திசையறியா மாற்றங்கள் எல்லாவற்றையும் சந்தேகக்கண்ணோடு பார் என்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கவிதை மாறுகிறது, கலைச் செயல்பாடுகள் மாறுகின்றன, சிகை அலங்காரங்கள் கூட ஒரு வட்டம் அடித்துவிடுகின்றன. காட்டில் கணக்கற்ற அளவில் மரங்களை வெட்டிச் சாய்க்கும் எந்திரத்திடம் சிக்கிக்கொண்ட சிறு செடி போல மனிதனின் அல்லாடுகின்றான். இந்நாவலில் காதலால் இணையவேண்டும் என அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இருவரும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளால் பிரிக்கப்படுகின்றனர். இது கூடக் காலாகாலமாக நடக்கும் சங்கதிதான். ஆனால், மீண்டும் சேரும் பட்சத்தில் அனைத்தும் பழையன போலாகிவிடும் எனும் எண்ணத்தில் மண் விழுந்தால் என்ன ஆவது?

யுத்தம் முடிந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேரும் காதலர்கள் பெர்லின் நகரத்தைச் சுற்றிப்பார்க்கிறார்கள். தங்களது நாட்டைக் காக்கும்பொருட்டு மூன்றாம் படையினருடன் பொதுமக்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்வதைப் பார்க்கின்றனர். சின்னஞ் சிறுவர்கள், கல்லூரி முடிக்காத மாணவர்கள், வேலைகிடைக்காதவர்கள் எனப் பெருங்கூட்டம் நாட்டுப்பற்று, இனப்பற்று எனும் லட்சியங்களுக்காகத் தெருவில் பெரிய போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மிகக் கவலை தோய்ந்த முகத்துடன் கதாநாயகன் லுட்விக் அவர்களைப் பார்க்கிறான். திடீரென அவனுக்குத் தோன்றுகிறது – அவனும் அவர்களைப் போலத்தான். பழைய பொன்னுலகத்தைத் தேடி வந்திருக்கிறான். அவனது விரல்களைக் கோர்த்தபடி அப்பொன்னுலக வாசல் கூடவே நின்றிருக்கிறது. ஆனால் அவ்வுலகம் மிகத்தொலைவில் இருப்பதை உணர்கிறான். அவனால் எட்டிப்பிடிக்கமுடியாத தூரம். வெர்லைன் எழுதிய ஒரு கவிதை அவனுக்கு நினைவுக்கு வருகிறது.

In the old park, in ice and snow caught fast
Two spectres walk, still searching for the past.

அத்தோடு காதலை முறித்துக்கொள்கிறான். அப்பழைய உலகம் அவனுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை நினைத்து ஏங்கிய நாட்களின் தீஞ்சுவை அவனுக்குப் போதும்.

ஞாபகத்துள் களிக்கும் வில்சன் தாத்தாவும் எப்போதும் அவருடைய பரிசுத்தமான பேரியக்கத்துள் காலத்துக்கும் அடைந்துகிடக்கட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.