– ரா. கிரிதரன் –
எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.
`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.
அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.
`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`
நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா. (more…)