– எஸ். சுரேஷ் –

ஒற்றை மலரை எனக்கு அளித்தான், நாங்கள் சந்தித்தபின்.
மென்மையான ஒரு தூதுவனை அவன் தேர்ந்தெடுத்தான்;
ஆழ் இதயம், தூய்மை, ஈரம் காயாத பனித்துளியின் நறுமணம்-
குறைகளற்ற ஒற்றை ரோஜா.
மலர்களின் மொழியை நான் அறிவேன்;
“மெல்லிய என் இதழ்களில் போதிந்திருக்கும், அவன் இதயம்”
எப்போதோ காதல் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட சின்னம்
குறைகளற்ற ஒற்றை ரோஜா.
இதுவரை ஏன் ஒருவரும் எனக்கு
குறைகளற்ற ஒரு லிமோ அனுப்பியதில்லை|
இல்லை, என் அதிர்ஷ்டம் எப்போதும் எனக்குக் கிடைப்பது,
குறைகளற்ற ஒற்றை ரோஜா
– டார்தி பார்க்கர்
அண்மையில் என் டிவிட்டர் நேரக்கோட்டில் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்களைப் பற்றியும் அவை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஒரு உரையாடல் நேர்ந்தது. அங்கு சில நியாயமான கருத்துகளைக் காண முடிந்தது.
அண்மைக்காலமாக இளவயதினர் திருமணம் தொடர்பாக பெரும் கொந்தளிப்புக்கு ஆளாவதைப் பார்க்க முடிகிறது. என் நண்பர்களில் சிலருக்கு நாற்பது வயது கடந்துவிட்டபின்னும் மணமாகவில்லை. இவர்கள் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல, தனியாய் வாழ வேண்டும் என்று விரும்பி திருமணத்தைத் தவிர்த்தவர்கள் அல்ல. திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்கள்தான்.
எதோ ஒரு சில காரணங்கள் அவர்கள் திருமணத்துக்குத் தடையாய் இருந்திருக்கின்றன: சராசரி மத்திய வர்க்கத் தகுதிகள் அடையப் பெற்றவர்கள்தான் – வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் இருப்பவர்கள், நல்ல வேலை, நல்ல சம்பளம், ‘கெட்ட பழக்கங்கள்’ இல்லாதவர்கள். இருந்தாலும்கூட நல்ல ஒரு வாழ்க்கைத் துணையை இவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ள இயலவில்லை.
ஒரு நண்பர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, “பெண் பார்க்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் என் விருப்பத்துக்கு ஏற்ற பெண்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. காலம் போய் விட்டது, இப்போது என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. முதலில் என் குடும்பத்திலும் எத்தனையோ நிபந்தனைகள் வைத்திருந்தார்கள்: சாதி, உட்பிரிவு என்று நிறைய. இப்பொது எல்லாவற்றையும் விட்டாயிற்று, நீ விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்து கொள். எந்த பெண் என்று மட்டும் சொல், நாங்கள் கல்யாணம் செய்து வைக்கிறோம், என்று சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கிறது”.
நகரங்களிலும் உயர் நடுத்தர வர்க்க வீடுகளிலும் காதல் கெட்ட வார்த்தை இல்லை. இந்த விஷயத்தில் விதிவிலக்குகள் உண்டு என்று தெரியும், ஆனால் பொதுவாக பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படலாம் என்பதை உணர்ந்து, அதற்கு தயாராகவே இருக்கின்றனர். எந்த அளவுக்கு எல்லைகளைத் தளர்த்திக் கொள்ளலாம் என்றும் முன்கூட்டியே சொல்லிவிடுகின்றனர். காதல் விஷயத்தில் பெற்றோர் எதை ஏற்றுக் கொள்வார்கள் என்பது குறித்து இளைஞர்களுக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. இந்த எல்லைகள் மீறப்படும்போதுதான் மோதல், போராட்டம், உடைந்த இதயங்கள்.
காதல் திருமணத்தைச் சகித்துக் கொண்டாலும், காதலை எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்து விட்டது. பெண்கள் கதவின் மறைவில் நின்று கொண்டிருந்த அந்த நாட்களில் ஆண் பெண் உறவு என்பது கடினமான ஒன்று, ஆனால் இப்போது மிகவும் இயல்பாக இருக்கிறது. தினமும் பழகும் காரணத்தால் எல்லாரும் காதல் வயப்படுவதில்லை. சொல்லத் தெரியாத காரணங்களால் ஏற்படுவதுதான் காதல்.
மேலை நாடுகளில் காதல் இயல்பான ஒன்று, அதன் சமூக அமைப்பே காதலை ஊக்குவிப்பதாக இருக்கிறது. இங்கே நாம் காதலைச் சகித்துக் கொண்டாலும், காதலை வரவேற்றாலும், திருமணம் செய்யும் எண்ணமில்லாமல் பெண்களோடு பழகிப் பார்க்க யாராவது ஆசைப்பட்டால் அதை ஒரு குற்றமாகப் பார்க்கிறோம். எனவே இளைஞர்கள், ஒன்று, தங்கள் வட்டத்தில் உள்ள ஒருவரைக காதலித்தாக வேண்டும், அல்லது பெரியவர்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும்.
இந்த பாரம்பரிய மணமுறையில் நிகழ்ந்துள்ள ஒரு பெரிய மாற்றம், இப்போதெல்லாம் யார் தன் கணவனாக வர வேண்டும் என்று ஒரு பெண்ணால் தீர்மானித்துக் கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் தம் முடிவைத் தெரியப்படுத்த பெண் வீட்டார் காத்திருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது, பெண்ணின் விருப்பம் என்ன என்று கேட்டுதான் திருமணம் முடிவு செய்யப்படுகிறது. பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்று நிறைய பேர் சொல்லக் கேட்கிறோம். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
என் சிறு வயதிலேயே தனக்குப் பிடிக்கவில்லை என்று நிராகரித்த இரு பெண்களைப் பார்த்திருக்கிறேன். பையனுக்கு ஒரு குறையுமில்லை என்று சொல்லி அந்த இரு பெண்களுமே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டனர். இது நடந்தது இருபது ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது அந்த இருவருமே மகிழ்ச்சியாக இருக்கின்றனர், ஆனால் அதெல்லாம் வேறு விஷயம்.
பாரம்பரிய திருமண முறையில் சில அடிப்படைத் தகுதிகளைக் கொண்டு மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: சமூக அந்தஸ்து, கல்வித் தகுதி, பணி நிலை, குடும்பப் பின்னணி என்று பல விஷயங்கள் இருந்தன. அமெரிக்காவில் குடியுரிமை பெரும் வாய்ப்புள்ள மணமகனுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன, அவன் பெண் பார்க்க வரும்போது, பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசி அதன் பின் முடிவெடுக்கும் சலுகை அவனுக்கு வழங்கப்பட்டது.
அடிப்படை தகுதிகள் சற்றே மாறியிருக்கின்றன – இப்போது பெண்ணும் பையனும் பெண்ணின் வீட்டில் சந்தித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் ஹோட்டலில் சந்திக்கின்றனர், நீண்ட நேரம் உரையாடுகின்றனர். மொபைல், இணையம் என்று தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து விட்ட இந்நாட்களில் வெகு நேரம் தினமும் பேசிக் கொண்டிருக்க முடிகிறது. அதன் பின், நம் வாழ்க்கைத் துணை இவன்தான் என்று முடிவு செய்யும் அவகாசம் கிடைக்கிறது. முன்பெல்லாம் பையன் பெண் பார்க்க வருவான், முடிவு சொல்வான். இப்போது இதில் பல கட்டங்கள் வந்து விட்டன- முதலில் தெரிந்தவர்களின் வட்டத்தில் அல்லது திருமண தளங்களில் உள்ளவர்களில் யாரைச் சந்திப்பது என்று தேர்வு நடக்கிறது, அதன்பின் இருவரும் பேசிக் கொள்கின்றனர், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது பிரிந்து செல்லலாம்.
இது முறையான வளர்ச்சிதான் என்றாலும் சிலர் பெண்களுக்கு இப்போது இருக்கும் சுதந்திரம்தான் மணமுறிவுகள் ஏற்பட காரணம் என்று சொல்கின்றனர். ஒவ்வொரு முறை அந்த பேச்சு வரும்போதும் இதை ஒரு காரணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெண்களின் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்று பெரியவர்கள் குறை கூறுகின்றனர், மணமுறிவுக்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர்.
பெண்களுக்கு பணத்தாசை அதிகரித்துவிட்டது, அவர்கள் பணம், பதவி, அந்தஸ்து என்றுதான் ஆசைப்படுகிறார்கள், அவர்கள் அன்பை மதிப்பதில்லை என்று சொல்பவர்கள், சம்பிரதாய திருமணங்கள் எப்போதுமே இப்படிதான் இருந்திருக்கின்றன என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இந்த லோகாயத காரணங்கள்தான் எப்போதும் திருமணங்களைத் தீர்மானித்திருக்கின்றன. இதில் ஒரு விஷயம்தான் மாறியிருக்கிறது – இக்கால இளைஞர்கள் தங்கள் தேவைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றனர், யதார்த்த உண்மைகளைப் போருட்படுத்துகின்றனர்.
காதலுக்கு அப்பாற்பட்ட பல காரணங்களுக்காக திருமணம் செய்து கொண்ட பலரை எனக்குத் தெரியும். பெண்கள் நிறைய சம்பாதிக்கின்றனர், பணத்தின் சக்தியை அவர்கள் அறிந்திருக்கின்றனர் என்ற நிலையில் அவர்கள் எப்படி பணத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியும்? இல்லற வாழ்வு சிறக்க அன்பும் புரிதலும் இருந்தால் மட்டும் போதாது, பணமும் சமூக அந்தஸ்தும் தேவைப்படவே செய்கின்றன.
டார்தி பார்க்கரின் நகைச்சுவையான் கவிதை பெண்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் விரும்பும் வாழ்வின் லௌகீக விஷயங்களைப் பேசுகிறது. இந்த உணர்வுகளை இக்கால பெண்கள் அங்கீகரிப்பார்கள் என்று நினைக்கிறேன், சென்ற தலைமுறையைச் சேர்ந்த சிலரும் இதை ஏற்றுக் கொள்ளக்கூடும், நாம் என்னதான் ஆன்மிக அடித்தளம் பற்றி பேசினாலும், நம் இல்லற வாழ்வு லௌகிக கவலைகளை எதிர்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் நாம் நம்மையும் புரிந்து கொள்ள முடியும், நம் குழந்தைகளையும் புரிந்து கொள்ள முடியும்.
ரொம்ப விவரமாக எழுதியுள்ளீர்கள்.இன்றைய காலக்கட்டத்தில் நான் பெரிய பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களும் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ படிப்பது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு இணையான அல்லது அவர்களை விட் உயர்ந்த வேலையில் இருப்பதை தான்.
குடும்ப சூழல் எப்படி இருந்தாலும் ஆண் வீட்டில், பெண்ணிடம் இருந்து சில எதிர்ப்பார்ப்புகள் உள்ளன. அது இன்னும் மாறவில்லை. பெண்ணுக்கோ அவைகளை fulfill பண்ண விருப்பம் இல்லாமலோ அல்லது அப்படி ஒரு சூழலோ வந்து விடுகிறது. அதனால் மண வாழ்வில் ஒரு நெருடல் ஆரம்பித்து விடுகிறது.
பொருளாதாரத் தேவைகளும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. இதில் கூட்டுக் குடும்பம் இல்லா வீட்டில் பிறக்கும் குழந்தைகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. We are creating yet another selfish generation because most working women stop with one child. Secondly children brought up with majority of the time spent in day care centres develop other psychological issues.
Though you may call me old fashioned, however talented and intelligent a woman may be no one can take her place as a mother once a woman becomes one. Hence she and her husband have to realise that act accordingly.
Marriageable age is increasingly becoming higher as expectations on both sides are increasing exponentially. Where arranged marriages are somewhat forced on the kids siting age appropriateness, many times they fail shortly after.
amas32
நன்றி அமாஸ் அவர்களே.
நீங்கள் சொல்வது விவாதிக்கபட வேண்டிய ஒன்று தான். இன்றைய நிதர்சனம் அது. நான் கல்யாணம் செய்துக்கொள்வதை பற்றி மற்றுமே எழுதியுள்ளேன். குழந்தைகளை பற்றி இன்னொரு சமயம் பேசவேண்டு