
நான் பெரியவர்களின் வீட்டில் இருக்கிறேன்
இங்கே நீல நிற வெண்டைக்காய்கள் கிடையாது
உங்களுக்குத் நீல வெண்டைக்காய்களைத் தெரியுமா?
உதிர்த்தால் உள்ளே சிகப்பு நிற விதைகள் இருக்குமே…
இங்கே கோடுகள் கோடுகளாக இருந்தாக வேண்டும்
வட்டங்கள் வட்டங்களாக இருந்தாக வேண்டும்
வண்ணங்களைக் குழைத்து நீரில் கலந்திருக்கிறீர்களா?
தண்ணீரில் வண்ணங்கள் வளர்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
அதாவது, வண்ணங்களை வீணாக்குவது.
இங்கே கண்ணாடியில் வரையக் கூடாது
நீரில் கலந்த வண்ணங்கள் விரைந்து ஓடுவதை ரசிக்க முடியாது
இது பெரியவர்களின் வீடு
சிறிவர்களுக்கு இடமில்லை; இங்கே இருக்க
நானும் பெரியவளாகத்தான் வேண்டும்.