நின்னையே சரணடைந்தேன்…

சிகந்தர்வாசி

கோடை அருவி போல் உன் கன்னங்களில் ஒற்றைத் துளி விழுந்து உருண்டோடுவது எனக்குத் தெரிகிறது, உனக்குத் தெரியாமல். மூடப்பட்டிருக்கின்றன உன் கண்கள், மோன நிலையில் நீ. இமை போர்த்த விழிகளில் கருங்கல் சிலை, வெம்மையால் சிவந்திருக்கும் உன் முகம்.

கருங்கல் சிலைதான். என் அறிவியல் பார்வை அனைத்தையும் பகுக்கின்றது, எது பகுபடாததோ அது ஒன்றே மிச்சமிருக்கிறது. வெறுமை? சாத்தியம்தான். ஆனால் உன்னைப் போல் நான் அழ முடியாது, ஒரு கற்சிலையைப் பார்த்து. அல்லது, ஒரு ஆதர்சத்தில், ஒரு லட்சியத்தில் என் துக்கங்களைக் கரைத்துக் கொள்ள முடியாது. என் முன்னிருப்பது கற்சிலை. வெறிக்கும் என் கண்களை உயிரற்று வெறித்துக் கொண்டிருக்கிறது.

சிலைக்கு ஒளியூட்டுகிறது தீபாராதனை. என் அருகில் இருப்பவன் ஆனந்த நிலையில் இருக்கிறான். என் எதிரில் நிற்கும் பெண்மணி கண்கொட்டாமல் சிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் இவ்வுலகில் இல்லை. கற்சிலை ஊமையாய் நிற்கிறது, எனக்கு மட்டும். உன்னிடம் அது என்ன சொல்கிறது? அல்லது, உன் ஆசைகளை அதன்மேல் சுமத்துகிறாயா? நீ எங்கு அழக் கற்று கொண்டாய்?

இங்கிருப்பவர்களுக்கு என்ன வேண்டும்? சாந்தி என்கிறாய், ஆனால் சாந்தம்தான் என்ன? துன்பமின்மை? ஆசைகளின் பலிதம்? உன் பிரார்த்தனைகள் இந்தச் சிலையிடம் என்ன சொல்கின்றன? உனக்கு என்ன வேண்டும்? அல்லது, உன் கண்களை மூடிக் கொண்டு அனைத்தையும் கடந்து அப்பால் செல்கிறாயா? ஏதுமில்லா இடத்துக்கு? எல்லாம் உள்ள இடத்துக்கு? இருப்பும் இல்லாமையும் நீங்கிய, பொருளற்ற இடத்துக்கு? கணப்பொழுதேனும் ஆசைகள் அற்றுப் போயினவா?

நான் என்ன கண்டேன்: ஆனந்தம் என் மனம் அனுமதிக்காத ஆடம்பர நிலை. எப்போதும் நான் என்னைக் கண்டு கொள்கிறேன். எப்போதும் நான் பிறரைக் கண்டு கொள்கிறேன். உண்மை என்னை ஒளியை நோக்கிச் செலுத்துகிறது, ஒளி என்னை அண்டங்களைக் கடந்து அழைத்துச் செல்கிறது. எனக்குள் என்ன இருக்கிறது? அதுவா முக்கியம்? உள்ள பொருள், அதை ஆய்கிறது என் உள்ளம். ஆன்மா உள்ளதா, ஆய்வுக்கு உட்பட்டதா? கணிதச் சமன்பாடுகளின் மொழியில் பேசாத எதுவும் எனக்குப் பயன்படாது.

இல்லை. உன்னைப் பார்த்து நான் சிரிக்கவில்லை. நீ கரையேறிவிட்டாய். உன் முன் உள்ள பாதை ஒளிர்கிறது. சாகும்வரை நீ அதில் பயணிப்பாய். மரண கணத்தில் உன் முகம் நிறைவின் புன்னகையாய் மலரும். என் கேள்விகள் உனக்கில்லை. அறிவியலின் தீர்மான்மின்மைகள் உனக்கில்லை. எனவேதான் நீ எப்போதும் என்னருகில், என்னுடன் இருக்க வேண்டும். ஐயங்கள் பாலையாய் என் வாழ்வைச் சுட்டெரிக்கின்றன, நீதான் என் புகல். அவ்வப்போது உன்னைக் கண்டு மகிழ்கிறேன்.

கற்சிலைகளை கடந்து தொடர்கிறது என் தேடல். என் தேடல் தொடர்ந்தாக வேண்டும். மதங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், இன்பங்களுக்கு அப்பால். என் தேடல் புதிய சமன்பாடுகளை உருவாக்குகிறது. பழைய சிக்கல்களை அவிழ்க்கிறது. புதிய உலகங்களைத் திறக்கிறது. மேலும் மேலும் கடினமான பாதைகள், முடிவற்ற பாதைகள். நான் பயணித்தாக வேண்டும். ஓய்வில்லை எனக்கு. என் கேள்விகள் ஓயும் முன் என் வாழ்வு ஓயும் என்பதை நான் அறிவேன். உனக்குக் கேள்விகள் கிடையாது, கேள்விகள் எழுமுன் பதில்களைப் பெற்றுக் கொள்கிறாய். உனக்கு எப்போதும் உண்டு, இந்தக் கருங்கல் சிலை, அதன் காட்சியும், கண்ணீரில் நீ கரைதலும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.