போயிகுடாவின் மாரடோனா

– எஸ். சுரேஷ் –

“மாரடோனா ஆடினத பாத்தீங்களா பாய்? ஒருத்தனா இருந்து ஜெர்மனிய தோக்கடிச்சிருக்கான் பாருங்க. என்ன ஆட்டம் நேத்தி. நம்ப எப்போதான் புட்பால் சூப்பர் பவர் ஆவோமோ. எப்போதான் நம்ப ஊர்ல ஒரு மாரடோனா பிறப்பானோ?” என்று ஆதங்கத்துடன் பஷீர் பாயைக் கேட்டேன். இரவு நாங்கள் எல்லோரும் அர்ஜென்டினா – ஜெர்மனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்தபின் மாரடோனாவின் மேல் எங்கள் எல்லோருக்கும் மரியாதை பெருகியிருந்தது.

“நம்ப ஊர்ல என்னடா? நம்ப காலனியிலேயே ஒரு பெலே, ஒரு மாரடோனா அளவுக்கு ஆடற ஒரு ஆள் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பஷீர் பாய்.

“நம்ப போயிகுடாலையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் புஜ்ஜி

“ஆமாம். போயிகுடாலதான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஆளுதான்” என்றார் பஷீர் பாய்

“எங்களுக்கும் தெரியுமா?” என்று கேட்டான் அருண்.

“உட்காருங்க. உங்களுக்கு அந்தக் கதை சொல்றேன்” என்றார் பஷீர் பாய். நாங்கள் அவர் அருகில் திண்ணையில் உட்கார்ந்தோம்.

“யார் பாய் அது?” என்று கேட்டான் மோகன்.

“ஹ ஹ ஹ. சொல்றேன் சொல்றேன். இங்க இருக்கறதே ஒரு புட்பால் பிளேயர்தான்- அப்சல் பாய்.”

“ஆஹா. ஆமாம். அவரு தான் ஈ.சி.ஐ.எல்லுக்கு விளையாடுறாரு.” என்றான் புஜ்ஜி.

“கரெக்ட்” என்று ஆரம்பித்தார் பஷீர் பாய்.

அப்சல் பாய்தான் அந்த ஆளு. அவரு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு புட்பால் பிளேயர் ஆனாருன்னு உங்களுக்கெல்லாம் தெரியாது. அது ஒரு பெரிய கத.

அப்சல் பாய் அப்பா பேரு இர்ஷாத் கான். அவரு ஒரு பயங்கர புட்பால் வெறியர். பெலே இந்தியா வந்தபோது கடன் வாங்கிட்டு கல்கத்தா போயி பெலே ஆடறத பாத்துட்டு வந்தார். ஒரு நாள் அப்சல் புட்பால் ஆடறத பாத்துட்டு அவர் ஷாக் ஆயிட்டார். அவ்ளோ நல்லா விளயாடிக்கிட்டு இருந்தான் அவன். உடனே அவர் பக்கத்துல இருந்த என்கிட்ட சொன்னார், “இவன நான் ஆல்-இந்தியா லெவல் ஸ்டார் ஆக்கறேன் பார்”, அப்படின்னு.

இர்ஷாத் சொன்னத செய்யற ஆளு. அவர் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்.

‘ரயில் நிலையம்’ பக்கத்துல இருக்கற ஆர்.ஆர்.சி கிரௌண்ட்ல தினமும் காலையில் புட்பால் ப்ராக்டிஸ் நடக்கிறத அவர் தெரிஞ்சுக்கிட்டார். அங்க கோச் நாகேந்திர ரெட்டி வந்து கோச்சிங் குடுக்கறாருன்ன தெரிஞ்சுது. உடனே அடுத்த நாள் காலையில அஞ்சு மணிக்கே அப்சல எழுப்பி ஆர்.ஆர்.சி. கிரௌண்டுக்குக் கூட்டிட்டு போனார். ரொம்ப சீக்கிரம் போனதால கோச் வரும்போது யாரும் இல்ல. அவரைக் கெஞ்சி அப்சல் ஆடறத பாக்க சொன்னார். அவன் ஆடறத பாத்த கோச் குஷி ஆயிட்டாரு. உடனே அவனையும் தினம் ட்ரைனிங்குக்கு வரச் சொன்னார். தினமும் காலைல அப்சல கூட்டிக்கிட்டு இர்ஷாத் பாய் ஆர்.ஆர்.சி. கிரௌண்டுக்கு போனார். பல மாதங்களுக்கு எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருந்தது. ஆனா இர்ஷாத் பாய் பத்கிஸ்மத், அந்த சம்பவம் நடந்தது.

இர்ஷாத் பாய் அப்சல ஒரு பெரிய பிளேயர் ஆக்கணும்னு பாடுபட்டுக்கிட்டு இருந்தார். ஆனா அத கண்டுக்காம இருந்தான் அப்சல். அப்போ அவன் ஒம்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தான். ரொம்ப ருபாபா இருப்பான். யார் கூடவும் ஜாஸ்தி பேசமாட்டான். பேசினாலும் ரொம்ப ருபாபா பேசுவான். அவன் பேச்ச கேட்டா எல்லோருக்கும் எரிச்சல் வரும். அப்படி அவன் பேசினதுனாலதான் அந்த லடாய் ஆச்சு.

ஒரு நாள் கோச் அங்க இருக்கற பிளேயர்ஸ வச்சி ஒரு மேட்ச் போட்டாரு. அதுல அப்சல் பிரமாதமா ஆடினான். ஆனா அவனுக்கு இருக்கற ஒரு கெட்ட பழக்கம், அவன் யாருக்கும் பால் பாஸ் பண்ண மாட்டான். அவனேதான் ட்ரிப்லிங் பண்ணிட்டு போவான். ரொம்ப செல்பிஷா ஆடுவான். அன்னிக்கு மாட்ச் முடியற சமயம் வந்துது. ஸ்கோர் 2-2. அப்போ அப்சல்கிட்ட பால் இருந்தது. அவன் முன்னாடி ரெண்டு டிபெண்டர் இன்னும் கோல்கீப்பர். அப்சலுக்கு இடது பக்கம் அவன் டீம் ஆளு ஸ்ரீநிவாஸ் ரெட்டி இருந்தான். அப்சல் ஸ்ரீநிவாசுக்கு பாஸ் பண்ணா ஷுவர் கோல். ஆனா அப்சல் அவனே கோல் அடிக்கப் பாத்தான். பால் டிபெண்டர் கால்ல பட்டு வெளியிலே போயிடுச்சு. ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்ச் டிரா ஆயிடிச்சு.

ஸ்ரீநிவாஸ் ரெட்டிக்கு ஒரே கோவம். “க்யா பேக்கார் கேலா ரே. அறிவில்லையா உனக்கு. பாஸ் பண்ணியிருந்தா நான் கோல் போட்டிருப்பேன். நாம ஜெயிச்சிருக்கலாம். நீ பண்ண முட்டாள்தனத்துனால மேட்ச் டிரா ஆச்சு. உன்ன எல்லாம் எதுக்கு டீம்ல சேத்துக்கராங்களோ”, என்று கோவமா கத்தினான்.

இர்ஷாத் பாய் கொஞ்சம் பயந்துவிட்டார். ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அப்சல் அசரவில்லை. இர்ஷாத் பாய் எதுவும் சொல்லறதுக்கு முன்னாடி ரொம்ப ருபாபா அவன் பதில் சொன்னான்,”உனக்கு ஓபன் கோலா இருந்தாக்கூட கோல் போட தெரியாது. நீ என்ன சொல்ற. என்கிட்டே ஆட்டம் இருக்கு அதுனால என்ன சேத்துட்டாங்க. உன்ன போல அப்பா சிபாரிசுல்ல டீம் உள்ள வரல நானு” என்றான். ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் அப்பா ரயில்வேயில் பெரிய அதிகாரி. கோச் நாகேந்திர ரெட்டிக்கு நல்ல தோஸ்த். இதை எப்படியோ அப்சல்தெரிஞ்சி வச்சிருக்கான்.

இத கேட்ட ஸ்ரீநிவாஸ் ரெட்டி எப்படி டான்ஸ் ஆடியிருப்பான்னு நம்ப யூகிக்கலாம். ஒரு ஒம்பதாவது கிளாஸ் பையன், அதுவும் ஒல்லியா குள்ளமா காத்து ஜாஸ்தி அடிச்சா எகிறி போயிடுவான் போல இருக்கற ஒரு பையன் இப்படி பேசினா மிளகா கடிச்ச மாதிரிதான் இருக்கும். ஸ்ரீநிவாஸ் ரெட்டி, “க்யா போலா பே. க்யா போலா. மூ தொட்தேதும். உன் மூஞ்சிய உடைச்சிடுவேன்டா. என்ன பேசறான் இவன். நாலு அடி உயரம் கூட இல்லை. சாலே” என்று கத்திக்க்கிட்டு அப்சல் மேல பாயப் போனான். மிச்சவங்க அவன பிடிச்சி இழுத்தாங்க. ஆனாலும் அப்சல் அசராம, ”ஜா பே” என்றான். ஸ்ரீநிவாஸ் ரெட்டி எதுவும் சொல்றதுக்கு முன்னாடி கோச் பளார் என்று அப்சல ஒரு அறை விட்டார்.

அப்சலுக்கு கண்ல தண்ணி. அவனுக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்தது. “ஹாத் மத் லகா சாலே” என்று கோச்சை திட்டினான். இத கேட்டு கோச் ஸ்தம்பித்துப் போனார். இர்ஷாத் பாய் அப்சல் தலையில் பலமாக அடித்து அங்கிருந்து அவனை கூட்டிக்க்கிட்டு வீட்டிற்கு வந்தார். வரும் வழி முழுவதும் அவனை திட்டிக்கிட்டே வந்தார். அப்சல் எதுவும் நடக்காதது போல் பேசினான். அது இர்ஷாத் பாய் பிரஷர ஜாஸ்தி ஆக்கிடுச்சு. இன்னும் சத்தமா கத்த ஆரம்பித்தார். வீட்டுக்கு வந்த பிறகும் கத்திக்கிட்டே இருந்தார். அப்சல் எதுவும் கண்டுக்கல.

இன்னொரு டீம். இன்னொரு கோச்ன்னு இர்ஷாத் பாய் தேட ஆரம்பிச்சாரு. அப்சல், புட்பால் இல்லேனா உயிரா போயிடும்ன்ற மாதிரி அவன் வேலைய அவன் பாத்துட்டு இருந்தான். இர்ஷாத் கூட வேல செஞ்சிட்டிருந்த டானியல், “நீங்க ஏன் கோச் பிரான்சிஸ்கிட்ட போகக் கூடாது?”ன்னு ஒரு நாள் கேட்டான். “யார் அவரு?”ன்னு இர்ஷாத் பாய் கேட்டாரு. நம்ப எல்லார் போலயும் உலகத்துல மிச்ச நாடுகள்ல இருக்கற புட்பால் பிளேயர், கோச் எல்லார் பத்தியும் தெரியும். ஆனா லோக்கல் ஆளு யாரையும் தெரியாது. “அவரும் அந்த ரெட்டி போல ஒரு பேமஸ் கோச். பரேடு கிரௌண்ட்ல தினமும் கோச்சிங் குடுக்கறாரு” அப்படின்னு சொன்னான் டானியல்.

அடுத்த நாள் டானியல் இர்ஷாத் பாய கூட்டிக்கிட்டு பரேட் கிரௌண்ட் போனான். டானியல் சிபாரிசு பேர்ல கோச் பிரான்சிஸ் அப்சல அடுத்த நாள் வரச்சொன்னாரு. அப்சல் வந்தான். எல்லோர போலயும் கோச் பிரான்சிஸ் அவன் ஆட்டத்த பாத்து அசந்து போனாரு. அவன் பண்ற பாஸ், அவன் பண்ற ட்ரிபிள் எல்லாமே அவருக்கு பிடிச்சு போச்சு. ஒரு புட்பால் ஜீனியஸ கண்டுபிடிச்சுட்ட சந்தோஷம் அவர் மூஞ்சில தெரிஞ்சிது. அவர் இர்ஷாத் பாய் கிட்ட வரப்போ வேற ஒரு பிளேயர் வந்து கோச் பிரான்சிஸ் காதுல ஏதோ சொன்னான். அவர் மூஞ்சி மாறிடுச்சி. அப்புறம் இர்ஷாத் பாய் கிட்ட வந்து, “இங்கெல்லாம் உன் பையனுக்கு சான்ஸ் குடுக்க முடியாது.” என்றார். “நல்லா தானே ஆடறான்” என்றான் டானியல். “ஆமாம். ரொம்ப நல்லாதான் ஆடறான். ஆனா உடம்பு பூரா திமிருன்னு கேள்விப்பட்டேன். கோச் நாகேந்திர ரெட்டி எனக்கு சீனியர். அவரையே இஜ்ஜத் போற மாதிரி பேசிட்டானாம் இவன். நான் இவன இங்க சேத்திருக்கேன்னு தெரிஞ்சா ரொம்ப ப்ராப்ளம் ஆயிடும். சலோ யஹான் சே. கிளம்புங்க, கிளம்புங்க” என்றார். இர்ஷாத்தும், டானியலும் எவ்வளவோ கெஞ்சினாங்க. ஆனால் அவர் விட்டுக் கொடுக்கலை. அன்னிக்கும் அப்சலை திட்டிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தார் இர்ஷாத் பாய்.

அடுத்த நாள் ஆபிசில் ரொம்ப சோகமாக இருந்த இருஷாத் பாய பாத்து டானியல் ஒரு பிளான் சொன்னான். அன்னிக்கி சாயந்தரம் ஒரு கேக் வாங்கிக்கிட்டு கோச் பிரான்சிஸ் வீட்டுக்கு போனாங்க. கோச் வீட்டுக்கு வந்திருக்கமாட்டாருன்னு டேனியலுக்கு தெரியும். அவங்க அங்க வந்ததே கோச்சோட அம்மா மேரி டீச்சர பாக்கதான். கோச் பிரான்சிஸ் அம்மாவுக்கு கட்டுப்பட்டவர்னு டேனியலுக்கு தெரியும். மேரி டீச்சர வச்சு கோச்ச மடக்கறதுதான் டேனியல் பிளான்.

கேக் பார்த்த மேரி டீச்சருக்கு ஒரே குஷி. அவங்க ஒரு காலத்துல டீச்சரா இருந்தவங்க. இப்போ ரிடயர் ஆயிட்டாங்க. அவங்க புருஷன் ஒரு காலத்துல பெரிய கால்பந்து வீரனா இருந்தவரு. “வூ இஸ் திஸ் மான்?” என்று இர்ஷாதை பார்த்து கேட்டார். “இவர் என் தோஸ்த் இர்ஷாத். உங்கள ஒரு வேலையா பாக்க வந்திருக்காரு” என்று சொன்னான் டேனியல். “என்னோட இவருக்கென்ன வேலை? எதாவது டியூஷன் எடுக்கணுமா?” அப்படின்னு கேட்டாங்க மேரி டீச்சர். “இல்ல டீச்சர். டியூஷன் இல்ல. இவர் பையன் ஒரு புட்பால் பிளேயர். அவன் ஆடறத பாத்து உங்க லேட் ஹஸ்பண்ட போலவே ஆடறான்னு எல்லோரும் சொல்றாங்க. அவன நீங்க ப்ளேஸ் பண்ணனும்” என்றான் டேனியல்.

“இஸ் இட். அவ்வளவு நல்லா ஆடறானா? வெரி குட் வெரி குட்” என்றார் மேரி டீச்சர்.

“அவன் பெரிய பிளேயரா வருவான். ஆனா உங்க சன்தான் அவனுக்கு கோச்சிங் குடுக்க மாட்டேன்றார்.” என்றார் இர்ஷாத். “நீங்க கொஞ்சம் அவருக்கு சொல்லி என் பையனுக்கு கோச்சிங் குடுக்க வைக்கணும்”

“வை இஸ் ஹி நாட் கோச்சிங் தி பாய்? என்ன பிரச்சினை?” என்று கேட்டாங்க மேறி டீச்சர்.

டானியல் பழைய கதைய எல்லாம் சொன்னான். அதை கேட்டுட்டு மேரி டீச்சர் சத்தமா சிரிச்சாங்க. “ஹ ஹ ஹ. இந்த பையன் என் லேட் ஹஸ்பண்ட மாதிரிதான் இருக்கான். அவருக்கும் இப்படிதான் அடிக்கடி கோவம் வரும். பிரான்சிஸ் வரட்டும். நான் அவனோட பேசறேன்” என்று நம்பிக்கை கொடுத்தார்.
.
ஒரு மணி நேரம் கழித்து கோச் பிரான்சிஸ் வந்தாரு. அவர் உள்ள வந்த உடனே இர்ஷாத பார்த்து, “ஏன் இங்க வந்தே?” என்று கேட்டார். இர்ஷாத் பதில் சொல்றத்துக்கு முன்னாடி மேரி டீச்சர், “என்ன பாக்க வந்தாங்க” என்றார். “உன்னையா?” அப்படின்னு ஆச்சரியப்பட்டார் பிரான்சிஸ். “ஆமாம் என்னதான். நீ அவர் பையன உன் டீம்ல வேணாம்னு சொன்னயாமே?” என்று ஸ்ட்ரிக்ட்டா கேட்டாங்க மேரி டீச்சர். பிரான்சிஸ்க்கு என்ன சொல்றதுன்னே தெரியல. “மம்மா. யூ டோன்ட் க்னோ..” அப்படின்னு மழுப்பினார். “ஐ க்னோ. நீ அந்த ரெட்டிக்கு பயப்படற. உங்க அப்பா யாருக்கும் பயப்பட்டது கிடையாது. அவருக்கு இப்படி ஒரு சன் இருக்கான்னு தெரிஞ்சா எல்லாரும் சிர்ப்பாங்க. நல்லா ஆடற ஒருத்தன உங்க அப்பா என்னிக்கும் ரீஜெக்ட் பண்ணி இருக்கமாட்டாரு. நீ பாரு …” என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

கோச் பிரான்சிஸ் பல்லைக் கடிச்சுக்கிட்டு டேனியலை பார்த்து, “உன் வேலையா இது?” என்று கேட்டுவிட்டு அவர் அம்மா பக்கம் திரும்பி, “ஸ்டாப் இட். நான் அவன கோச்சிங்குக்கு எடுத்துக்கறேன். ஆர் யூ ஹாப்பி நொவ்?” என்று கேட்டார்
.
“அவன் உங்க அப்பா போல விளையாடறான்னு எல்லோரும் சொல்றாங்களாமே?” என்று மேரி டீச்சர் கேட்டார்.

கோவமாக டேனியல் பக்கம் திரும்பி பார்த்தார் கோச். டானியல் தலைய குனிந்து கொண்டான். ஆனால் அவன் உதடுகளில் ஒரு சின்ன புன்னகை இருந்தது. அதை பார்த்த கோச் சிரித்துவிட்டார். “சரி நாளைலேர்ந்து காலையில ப்ராக்டீஸுக்கு வந்திடுங்க”.

வழி முழவதும் டேனியலுக்கு நன்றி சொல்லிக்கொண்டே அப்சல் சரியாக நடந்துக்கணும் என்று வேண்டிக்கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார் இர்ஷாத் பாய்.

அடுத்த நாள் காலைலேர்ந்து அப்சல் விளையாட ஆரம்பித்தான். ஒரு பக்கம் பிரான்சிஸ் அவன் விளையாட்டை கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். “இந்த மாதிரி ஷாகிர்த் கிடைக்கணும்டா. அதுதான் ஒவ்வொரு கோச்சோட ஆசையும். அந்த ரெட்டிக்கு இவனோட தெறமைய எடபோட தெரியல.” என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அப்சலின் செல்பிஷ் ஆட்டமும் அவனோட ருபாபான பேச்சும் அவருக்கு எரிச்சலா இருந்தது அதனால் சில சமயம் புகழ்வதும் சில சமயம் திட்டுவதுமாக அவர் காலை கழிந்தது.

மூணு மாசம் ஆனபிறகு ஒரு டோர்னமென்ட் வந்தது. அது இங்க இருக்கற கிளப் நடுவுல நடக்கற டோர்னமென்ட். இந்த டோர்னமென்ட்தான் இங்க நடக்கற பெரிய டோர்னமென்ட். இத ஜெயிக்கணும்னறது கோச் பிரான்சிசோட கனவு, லட்சியம் எல்லாம்.”

புஜ்ஜி குறுக்கிட்டு, “அந்த நாகேந்திர ரெட்டி, ஸ்ரீநிவாஸ் ரெட்டி டீம் கூட இந்த டோர்னமென்ட்ல விளையாடி நம்ப அப்சல் அவங்களுக்கு எதிரா கோல் போட்டு அவன் டீம ஜெயிக்க வெச்சான் இல்லையா?” என்று கேட்டான்.

உன்ன விட்டு இந்த சினிமா மோகம் போகாது போல இருக்கு. அப்படி நடந்திருந்தா த்ரில்லா இருந்திருக்கும் ஆனா அப்படி நடக்கல. அவங்க டீம் செமிஸ்ல ஏ.ஒ.சி. சென்ட்டர் டீம் கிட்ட தோத்துட்டாங்க. அவங்க மிலிடரி ஆளுங்க. அட்டா கட்டாவா இருப்பாங்க. அவங்க ஃபைனல் வந்தாங்க. இன்னொரு பக்கம் கோச் பிரான்சிசோட டீம் ஃபைனல் வந்துது.

கோச் பிரான்சிசுக்கு ஒரே குஷி. ஆனா இர்ஷாத் பாய்க்கு ரொம்ப துக்கம். ஏன்னா கோச் ஃபைனல்ல அப்சல் ஆட மாட்டான் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். செமி பைனல் மாட்ச்சில் பல தடவை வேறு பிளேயர்கள் ஓபன் கோல் முன்னாடி இருந்தும் அப்சல் அவர்களுக்கு பாஸ் செய்யவில்லை. இதனால் நிறைய கோல் அடிக்க முடியாமல் போய்விட்டது. கடைசியில் அப்சல்தான் கோல் அடித்தான் என்றாலும் கோச்சுக்கு அவன் ஆடிய செல்பிஷ் ஆட்டம் பிடிக்கவில்லை. மற்ற பிளேயர்களும் புகார் செய்ய, அப்சல் அவர்களை பார்த்து, “உங்களுக்கு பெரிசா என்ன ஆட வரும்” என்று கேட்க, முன்பு நடந்தது போல் களேபரம் நடக்க, கோச் பிரான்சிஸ் உறுதியாக சொல்லிவிட்டார், “நீ நாளை மாட்ச்சில் கிடையாது” என்று. மறுபடியும் வரும் வழி முழுவதும் அப்சலை திட்டிக்கொண்டே வந்தார் இர்ஷாத் பாய். வழக்கம் போல் அப்சல் அவர் சொல்வதை கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் இர்ஷாத் பாய்க்கு இதனால் பி.பீ. ஏறியது.

அடுத்த நாள் அப்சல் தான் ஆடாத மாட்சுக்கு என் போகவேண்டும் என்று அடம் பிடித்தான். இப்படி சொல்வான் என்று இர்ஷாத் பாய்க்கு தெரியும். அதனால் அரைமணி முன்பே அவனை தயார் செய்ய ஆரம்பித்தார். உங்க ஆளுங்க சொல்வாங்க பாரு, ‘சாம பேத தான தண்டம்’ன்னு அதெல்லாம் செஞ்சி அவன கிளப்பினாரு. இவங்கள பார்த்த கோச் பிரான்சிஸ், “எதுக்கு வந்தீங்க. இன்னிக்கு இவன் நிச்சயமா கிடையாது. டைம் வேஸ்ட் பண்ணாம வீட்டுக்கு போங்க” என்றார். “சலோ ஜாயிங்கே” என்று அங்கிருந்து வெளிநடப்பு செய்ய இருந்த அப்சலை கையை பிடித்து நிறுத்தி வைத்தார் இர்ஷாத் பாய்.

கேம் ஆரம்பமானது. எதிர் அணி டிபென்சில் கில்லாடிகள். சென்ட்டர் பாக் ரெண்டு பேரும் ஆறு அடிக்கு மேல இருப்பாங்க. மிலிடரி க்ராப், எப்போவும் மூஞ்சிய சீரியஸ்ஸா வச்சிட்டு இருப்பாங்க. டோர்னமெண்ட்ல யாரும் அவங்களுக்கு எதிராக இதுவரையிலும் கோல் போட்டதில்ல. அவங்க கோல்கீப்பர் டாப் கிளாஸ் ஆளு. அவங்க ஒரு வீக்னெஸ் என்னன்னா பார்வர்ட் சரி கிடையாது. அதனால அவங்க நெறைய கோல் போடமாட்டாங்க.

ஹாப் டைம் வந்தது. ஸ்கோர் ௦ – ௦. ஹாப் டைம் வரைக்கும் இர்ஷாத் பாய் கோச் பிரான்சிசோட அடிக்கடி பேசப் போனாரு ஆனா கோச் “டோன்ட் கம் ஹியர்” என்று வெரட்டி விட்டுக்கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் அப்சல் “இந்த தண்ட மாட்ச எதுக்கு பாக்கணும் வீட்டுக்கு போகலாம்” என்று பிடுங்கிக் கொண்டிருக்க இர்ஷாதுக்கு எரிச்சலாக இருந்தது. அப்பொழுதுதான் டேனியல் அங்கு வந்தான். நிலைமையை அவரிடம் இர்ஷாத் பாய் விளக்கினார். “சரி, நீ வண்டிய எடு” என்றான் டேனியல். “எங்கே?” என்று இர்ஷாத் பாய் கேட்டார். “நீ வா சொல்றேன்”என்று கூட்டிக் கொண்டு போனான் டேனியல்.

ஆட்டம் மறுபடியும் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இர்ஷாத் பாய் ஸ்கூட்டரில் மீண்டும் வருவது அப்சலுக்கு தெரிந்தது. அவர் பின்னால் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். கிட்டே வந்த பின்தான் அது மேரி டீச்சர் என்று அடையாளம் தெரிந்தது. கோச் இவர்களை பார்க்கவில்லை. அவர் ஆட்டத்தை பார்த்துக்கொண்டு பிளேயர்களுக்கு சிக்னல் செய்து கொண்டிருந்தார்.

ஸ்கூட்டரிலிருந்து இறங்கிய மேரி டீச்சர் நேராக கோச்சிடம் போய், “வை இஸ் திஸ் பாய் நாட் ப்ளையிங்?” என்று அவர் தொளை தட்டி கேட்டார். தன் அம்மாவை அங்கு எதிர்ப்பார்க்காத கோச், “நீ ஏன் எங்க வந்தே?” என்றார். “நான் இந்த பையன் விளையாடி பார்க்கணும்” என்றார் டீச்சர். “அது முடியாது” என்றார் கோச். “உங்க அப்பா ஆடி என்னால பார்க்க முடியல. இவன் ஆடியாவது நான் பார்த்தாகணும். ஐ ஹாவ் டு சி ஹிம் ப்ளே” என்று பதிலுக்கு உரக்க கத்தினார் டீச்சர். ஒரு வயசான அம்மா கௌன் போட்டுக்க்கிட்டு வருவதை ஆச்சரியமாக பார்த்தவர்கள், இந்த சண்டையை இன்னும் சுவாரஸ்யத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். எல்லோர் கண்களும் மைதானத்தை விட்டு இவர்கள் பக்கம் திரும்பியது. கோச் கூடவே ஆட்டக்கார்களும் இங்கு பார்க்க எதிர் அணி அந்த சமயம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு கோல் போட்டு விட்டார்கள். இவங்க லக். பால் போஸ்ட்ல பட்டு வெளியே போச்சு.

அப்போ பி.பீ. எடுத்திருந்தா கோச் பிரான்சிஸ் பி.பீ. வேர்ல்ட் ரெகார்ட் லெவெல இருந்திருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் மேரி டீச்சர் கத்திக்கொண்டு இருந்தால் தன் மானம் முழுவதாக போய்விடும் என்று கோச் பிரான்சிஸ் அப்சலைப் பார்த்து, “யூ கெட் இன் மான். ஆனா நீ உள்ள போகறதுக்கு முன்னாடி ஒரு சத்தியம் செஞ்சி கொடுத்துட்டு போ. நீ கோல் அடிக்கக் கூடாது. பாஸ் மட்டும்தான் பண்ணனும். வேற யாராவதுதான் கோல் அடிக்கணும். கோல் அடிச்சா நீ இனிமே இந்த டீம்ல இருக்க மாட்டே” என்று கோபமாக சொன்னார். ஏதோ பதில் சொல்ல இருந்த அப்சலை தடுத்து இர்ஷாத் பாய், “அவன் வெறும் பாஸ் பண்ணுவான் கோச். நீ உள்ள போ” என்று அப்சலை துரத்தினார். எந்த கோச்சும் கோல் வேணாம்னு சொல்ல மாட்டார் ஆனா கோச் பிரான்சிஸ் நெலமை அப்படி. எதாவது பண்ணி அவர் தான் லீடர்ன்னு ப்ரூவ் பண்ணனும். அப்சல் உள்ளே போனவுடன் மேரி டீச்சரை பார்த்து “யூ ஹாப்பி?” என்று கேட்டார் அவர். தன் காதில் எதுவும் விழாதது போல் மேரி டீச்சர் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்சல் இறங்கியவுடன் ஆட்டமே மாறிப்போனது. அப்சலுக்கு ரைட் விங்ல பால் கிடைச்சது. பால் தட்டிக்கொண்டு நேராக ஓடினான். இதற்கு முன் எல்லோரையும் சர்வசாதாரணமாக டீல் செய்த செனட்டர் பாக் பசங்க இவன் வரத பார்த்து சிரிச்சாங்க. இந்த குட்டி பையன் என்ன பண்ணுவான்னு ரொம்ப காசுவலா கிட்ட வந்தான் ஒருத்தன். ஒரு டம்மி குடுத்து அவன பாஸ் பண்ணி போனான். இன்னொருவன் இவன டாக்கிள் பண்ண வந்தான். ஒரு அருமையான ட்ரிப்பில் செய்து அவனையும் தாண்டிட்டான். கோல்கீப்பர்தான் பாக்கி. ஆனா கோச் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்ததோ என்னவோ. அப்போ அவன் இடது பக்கம் இருந்த ஜோசப்புக்கு பால் பாஸ் பண்ணினான். இத எதிர்ப்பார்க்காத ஜோசப் பால சரியா கண்ட்ரோல் பண்ணல. அதுக்குள்ள டிபெண்டர் வந்து பால வெளியில தள்ளிட்டான்.

இன்னும் ரெண்டு தடவ இது போல் ஆச்சு. முதல் தடவ முன்னால் வந்த டிபெண்டர் கால் நடுவுலேர்ந்த பால பாஸ்கருக்கு பாஸ் பண்ணினான் ஆனா பாஸ்கர் அடிச்சத கோல்கீப்பர் தடுத்து விட்டான். இன்னொரு முறை இரண்டு டிபெண்டர்கள் அப்சலுக்கு முன் ஆஜர் ஆனார்கள். அப்போ அப்சல் பால ஸ்கூப் செஞ்சான். மறுபடியும் ஜோசப் கிட்ட பால் போச்சு. மறுபடியும் ஜோசப் முழிச்சான். மறுபடியும் டிபெண்டர் பால வெளியிலே தட்டிட்டான்.

இதெல்லாம் பார்த்துட்டு இருந்த மேரி டீச்சருக்கு ரொம்ப கோவம் வந்தது. கோச் பிரான்சிசை பார்த்து “என்ன கோச்சிங் குடுத்திருக்க இவங்களுக்கு? அப்சல தவிர ஒருத்தனுக்கும் ஆட வரல.” என்று கத்தினார். அப்சல் அவர்கள் பக்கம் வந்தபோது, “யூ ஸ்கோர் எ கோல் மான். இவன் ப்ராமிசுக்கு கட்டுப்படாத. என் பேச்ச கேளு. நீ கோல் போடு” என்று உரக்க கத்தினார். அப்சல் கோச்சை பார்த்தான். அவர் வேண்டாவெறுப்பாக தலையை ஆட்டினார்.

பால் தனக்கு கிடைத்தவுடன் அப்சல் பாலைத் தட்டிக்கொண்டு முன்னே ஓடினான். ஒரு மிட்-பீல்டர் வேகமாக வந்து வலது காலை நீட்டி பாலைத் தடுக்க பார்த்தான். அப்சல் பாலை வேகமாக முன்னே தள்ளி அவன் நீட்டியிருந்த வலது காலைத் தாண்டிக் குதித்து மறுபடியும் பாலை தன் காலின் கீழ் கொண்டு வந்தான். டிபெண்டர்களுக்கு அப்சல் மேல் மரியாதை அதிகமாகி இருந்தது. அதனால் அவர்கள் அப்சலைப் பார்த்து உடனே வரவில்லை. அப்சல் ரைட் விங்கில் முன்னால் போனான். பெனால்டி ஏரியாவிற்குள் வந்துவிட்டான். கோல்போஸ்ட் பக்கத்தில் கோல்கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனுக்கும் போஸ்டுக்கும் இடையில் இடைவெளியே இல்லை. அவனுக்கு பக்கத்தில் ஒரு டிபெண்டர் இருந்தான். அப்சலுக்கு முன்னே இடதுபுறத்தில் இன்னொரு டிபெண்டர் இருந்தான். அப்சல் கோல் போட முடியாதபடி அவர்கள் சுத்தி வளைச்சு நின்னுக்கிட்டு இருக்காங்க.

ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம்தான் இருந்தது. ஒரு கோல் போட்டுவிட்டால் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆனால் அப்சல் எல்லா பக்கமும் ஆளுங்க. அவனுக்கு இடது பக்கம் கொஞ்சம் தூரத்தில் ஜோசப் நின்றிருந்தான். கோல்கீப்பர் அவனுடைய இடது போஸ்ட் அருகில் வந்துவிட்டதால் வலது பக்கம் காலியாக இருந்தது. அதற்கு முன்னால்தான் ஜோசப் இருந்தான். இப்பொழுது அப்சல் ஜோசப்க்கு பாஸ் செய்தால் கோல் நிச்சயம். அதாவது ஜோசப் பாலை கண்ட்ரோல் செய்தால். ஒரு முறை ஜோசப் பக்கம் பார்த்தான் அப்சல். அதுவரையில் கோல்கீப்பரையே பார்த்துக் கொண்டிருந்த அப்சல் மூஞ்சியை ஜோசப் பக்கம் திருப்பினான். கோல்கீப்பருக்கு அப்சல் ஜோசப் பக்கம் திரும்பிப் பார்ப்பது தெரிந்து விட்டது. உடம்பை திருப்பிய அப்சல் வலது கால் நேராக ஜோசபை பார்க்க பாலை உதைக்கத் தயாரானான். இவன் ஜோசப்க்கு பாலை பாஸ் செய்ய போகிறான் என்று அறிந்த கோல்கீப்பர் தன் வலது புறம் நகர்ந்தான். அப்பொழுது அவனுக்கும் கோல்போஸ்ட்டுக்கும் இடையில் ஒரு பந்து நுழையும் அளவுக்கு கேப் விழுந்தது. டேனியல் பக்கம் பாலை உதைக்க கால் கீழே வந்துகொண்டிருக்கும் பொழுதுதான் இந்த கேப்பை அப்சல் கவனிச்சான். லாஸ்ட் மொமெண்ட்ல காலைக் கொஞ்சம் இடதுபுறமாக கொண்டு போய் பாலின் இடப்பக்கத்தைக் காலால் உதைச்சு ஒரு ஸ்பின் கொடுத்தான்.

ஜோசப்பிடம் பால் பறக்கும் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்து நின்றிருந்தார்கள். ஆனால் பாலோ 9௦ டிகிரி ஆங்கிள்ல பறந்து, கோல்கீப்பருக்கும் போஸ்ட்டுக்கும் உள்ள இடைவெளி வழியா உள்ளே போயிடுச்சு. கோல்கீப்பர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிச்சான். டேனியல் பக்கம் ஓடிக்கொண்டிருந்த டிபெண்டேர்ஸ் ஷாக் அடிச்ச மாதிரி நின்னுட்டாங்க. “கோல் கோல் கோல்” என்று கோச் பிரான்சிஸ் டீம் முழுக்க கத்த, மேரி டீச்சர் இர்ஷாத் பாயைக் கட்டிப் பிடிச்சுட்டாங்க. இர்ஷாத் பாய்க்கு ஒரே வெட்கம். கோச் பிரான்சிஸ் ஒருத்தர்தான் வாயயடைச்சு நின்றிருந்தார். அவரால் தான் இந்த டோர்னமெண்ட் ஜெயிச்சத நம்ப முடியவில்லை. “ஐ கான்ட் பிலீவ் திஸ்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அன்றுதான் முதல் முறையாக வீடு திரும்பும்போது அப்சலை திட்டாமல் வண்டி ஓட்டினார் இர்ஷாத் பாய்.

அந்த டோர்னமெண்ட்தான் அப்சல இந்த ஊர்லயே ஒரு டாப் பிளேயர்ன்னு எல்லார்க்கும் புரிய வச்சது. அதுக்கு அப்புறம் அவன் டிப்ளோமா பாஸ் செஞ்சி ஸ்போர்ட்ஸ் கோட்டால ஈ.சி.ஐ.எல்.ல சேர்ந்தான். என்ன, காதல், கல்யாணம், பிள்ள குட்டி, ஸ்டடி ஜாப், என்று இருந்ததால் அவன் நம்ப ஊர் லெவல்லையே நின்னுட்டான். இல்லேன்னா அவன் இந்தியாவுக்கு ஆடியிருக்க வேண்டியவன். நம்ப ஊரு மரடோனா அவன், இது யாருக்கும் தெரியாம போயிடுச்சு, என்று கதையை முடித்தார் பஷீர் பாய்.

நாங்கள் எல்லாம் கிளம்பி எங்கள் கிரௌண்ட் பக்கம் சென்றோம். அங்கு அப்சல் பாய் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். பஷீர் பாய் சொன்னதைக் கேட்டபிறகு எங்களுக்கு அவர் மேல் மரியாதை கூடியிருந்தது. “நமஸ்தே பாய்” என்றோம். “கியா கேல்ரே ஆஜ்?” என்று கேட்டார் அவர். “புட்பால்” என்றோம்.

“பாய், நீங்க கூட ஒரு பெரிய ப்ளேயர். உங்க அப்பா உங்கள ரொம்ப சப்போர்ட் பண்ணினாராமே?” என்று புஜ்ஜி அவரைக் கேட்டான்.

“எங்க அப்பாவா? அவருக்கு நான் புட்பால் ஆடறதே பிடிக்காது. அவர் வேணாம் வேணாம்னு சொன்னாலும் நான் கேட்காமல் புட்பால்ல சேர்ந்தேன்” என்று சிரித்தார் அப்சல் பாய்.

நாங்கள் குழம்பிப் போனோம். “நீங்க நம்ப ஊர் மரடோனான்னு சொல்றாங்க. அவ்வளவு அற்புதமாக ஆடுவீங்கன்னு சொன்னாங்க” என்று சொன்னேன் நான்.

இப்போது அப்சல் பாய் உரக்கச் சிரித்தார். “நான் எப்போ பார்வேர்டா இருந்தேன்? எப்போவுமே கோல்கீப்பரா தானே இருந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு அவர் நண்பருடன் சென்று விட்டார்.

நாங்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தோம். திடீரென்று அருண் சிரித்துக்கொண்டே, “மறுபடியும் நம்பள பஷீர் பாய் உல்லுவாக்கிட்டாரு,” என்றான்.

அவனுடன் சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.

image credit: Dynamism of a Soccer Player, Umberto Boccioni, MOMA 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.