– ஸ்ரீதர் நாராயணன் –
‘மாலி வந்திருக்குடா… வெரசா வெளில வா’ வெளியிலிருந்து அம்மா கத்தியது கீழே மெடிக்கல்ஷாப்வரை கேட்டிருக்கும். காசி கையில் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை வேகமாக சுருட்டி சோப்புத்தூள் டப்பாவின் பின்னால் செருகி வைத்துவிட்டு எழுந்து நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். ராஜமாணிக்கம் கொடுத்த புத்தகம் அது. வழவழ பேப்பர்களில் விதவிதமான போஸ்களில் படங்களை என்னமாய் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தினுசு. பொன்னிறக்கூந்தல் பெண்கள். செந்நிற கிராப்புத் தலைப் பெண்கள். ஒல்லி இடுப்பு பெண்கள். பெருத்த உடலைக் கொண்ட பெண்கள்.
‘ஒருநாளப் போல இப்படித்தாம்மா. பாத்ரூமுக்குள்ள போன ரெண்டவர் ஆக்கறான். என்னடா பிரச்னைன்னு சள்ளு புள்ளுன்னு எரிஞ்சு விழறான். எதாச்சும் சொல்பேச்ச கேட்டாத்தான. உடம்பு கிடம்பு சுகமில்லன்னா வைத்தியம் பாக்கதாவல’ அம்மாவின் பிலாக்கணம் காசியை அவசரப்படுத்த, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் குளித்தமாதிரிதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் வந்தான்.
அடிக்குரலில் அம்மாவிடம் ‘நிப்பாட்டுறியா…’ என்று சீறிவிட்டு, பின்னாடி சோஃபாவில் அமர்ந்து செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த மாலினியைப் பார்த்து ‘ஒரு நிமிட்ப்பா. தோ வந்திடறேன்’ என்று ஹாலைத் தாண்டி வலப்புறமிருந்த ரூமிற்கு விரைந்தான். மாலினி கொஞ்சம் சோபயிழந்து இருப்பது போல் காணப்பட்டாள். எப்போதும் கூந்தல் க்ளிப்பிலிருந்து செருப்பு வார்வரைக்கும் ஒன்றுபோல அலங்கரித்துக் கொள்பவள் அன்றைக்கு அள்ளி முடிந்து கொண்டு வந்தாற்ப்போல அவசரகோலத்தில் இருந்தது தெரிந்தது.
காசி ஊர்சுற்றிவிட்டு இரவு லேட்டாக வீடுதிரும்புகிறான். காசி அப்பாவின் பேச்சைக் கேட்டு பொறுப்பாக வேலை கீலை தேடிக் கொள்வதில்லை. காசி எதற்கெடுத்தாலும் எரிச்சலாக திட்டி சண்டை போடுகிறான். அம்மாவின் அடுத்த குற்றசாட்டு வருவதற்குள் ஹாலுக்கு வந்தவன்
‘என்னா இன்னிக்கு நேரத்துக்கு எழுந்து பொறப்பட்டு வந்திருக்க… உடம்பு கெடம்பு சரியில்லயா’ என்றான்.
‘ஆமாம்டா, நடந்தா நெழலும் கூடவே வருது. அதான் டாக்டர பாக்க போயிட்டிருக்கேன். லூசு. உம் ஃபோனுக்கு மெசேஜ் அனுப்பி ஒண்ணரை மணி நேரமாகுது. பாத்ரூம்லேயே தூங்கிட்டியா’
‘உங்கள மாதிரி வெறும் ஜெண்ட்டு மட்டும் அடிச்சிகிட்டு உலாத்த கெளம்பிற முடியுதா என்ன… எங்களால…’
இடைமறித்த அம்மா ‘காப்பி கீப்பி குடிக்கிறியாப்பா…. என்னதான் சொல்றாரு உங்க கம்பேனி மொதலாளி… ஏதும் வேல ஆகுமா இவனுக்கும். கொஞ்சம் பாத்து சேத்து விடு ஆத்தா. நெதம் அவங்க அப்பாக்கும் இவனுக்கும் சண்டதான்’
அம்மாவின் அகராதியில் காசி மட்டும்தான் உதவாக்கரை. அவனைச் சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் கூசாமல் காசியை நல்வழிப்படுத்த மன்றாடுவாள். மாலினியின் முதலாளியாக அறியப்படும் ப்ரின்ஸ், தூத்துக்குடி ரைஸ் மில்லின் உபரி வருமாணத்தை செலவழிக்க அண்ணாநகரில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து நாலு கம்ப்யூட்டரும், நாலு ஜெராக்ஸ் மெஷினும் வாங்கிப் போட்டு கம்பேனி என்று பெயர் பண்ணிக் கொண்டிருக்கிறான். பேச்சு மட்டும் சிங்கப்பூர் பிராஜெட்க் வரும். ரஷியா பிராஜெக்ட் வரும் என்று அளந்து விடுவான். காசி போல ஒரு கூட்டமே அங்கே பொழுது போக்க போகும்போது, ப்ரின்ஸின் ஜாலக்குகளை அப்படியே எதிரொலிப்பார்கள். புத்தக அட்டை, பேஜ் டிசைனிங் எல்லாம் ஓரளவுக்கு தெரிந்தவள் என்பதால் மாலினிக்கு அங்கே வேலை இருந்தது.
‘ஏதாவது டிசைனிங் கத்துக்க சொல்லுங்க ஆண்ட்டி. ஒண்ணுமே தெரியமாட்டேங்குது இவனுக்கு’ மாலினி சிரித்துக் கொண்டே ஃபோனை கைப்பையினுள் வைத்துக் கொண்டு இவனைப் பார்த்து திரும்பி
‘கொஞ்சம் தொரப்பாக்கம் வரைக்கும் போகனும். கூட வரியா காசி’ என்றாள்.
காசிக்கு முன்னால் முந்திக் கொண்ட அம்மா ‘போயிட்டு வாடா. கூடப்போயி நாலு வேலை கத்துக்கிட்டாத்தானே பொழப்ப பாக்க முடியும்’ என்றாள்.
அம்மாவை எரித்து விடுபவன் போல பார்த்துவிட்டு மாலினி பக்கம் திரும்பியவன் ‘என்னாத்துக்கு அவ்ளோ தொலைவு? ஏதும் பிராஜெக்ட் வேலையா?’ என்றுக் கேட்டான். காசிக்குத் தெரியும். ப்ரின்ஸ்க்கு வரும் வேலைகள் பெரும்பாலும் யூனிவர்சிட்டி பைண்டர்கள், இல்லையென்றால் ஒப்பேறாத கதை புத்தகங்கள் செட் செய்து கொடுக்கும் வேலைதான். தொரப்பாக்கம் போய் ஐடி கம்பெனிகளிடம் இருந்து பெறும் வேலை ஒன்றும் இருக்காது. இது வேறு ஏதாவது சமாச்சாரமாக இருக்க வேண்டும்.
‘ப்ரின்ஸ்தான்ம்பா போய்ட்டு வரச்சொல்லிச்சு. கூட வாயேன் நீயும். அம்மாதான் சொல்றாங்கல்ல’
‘அவ்ளோ டிஸ்டன்ஸ்ப்பா. இங்கிருந்து ரெண்டு பஸ் மாறி போவனும். மவுண்ட் போய் போனா கொஞ்சம் சுருக்கப் போலாம். எப்பிடியும் ரெண்டவர் ஆயிடும்’
‘ஏன்? உம் பைக் என்னாச்சு?’
காசி அம்மாவின் பார்வையை தவிர்த்தவாறே ‘சர்வீஸுக்கு விட்டிருக்கேன்’ என்றான்.
‘சரி வா. ப்ரின்ஸ் வீட்டுக்குப் போய் வண்டி எடுத்துக்கலாம். ஆக்டிவா ஒண்ணு இருக்குல்ல’
‘சிஐடி நகரா? இந்நேரத்துக்கு பஸ்ல போனா கூட்டமா இருக்கும். பத்து பதினோரு மணிக்கு மேல போலாம்ப்பா’
‘ப்ரின்ஸ் கொன்னேபுடுவார். சாயந்திரம் ஒரு டெலிவரி பாக்கி இருக்கு. பதினோரு மணிக்குள்ள தொரப்பாக்கம் போயிட்டா ஈவ்னிங் ஷிஃப்ட்ல வந்து அடிச்சுக் கொடுத்திருவேன். பிகு பண்ணிக்காத வாயேன். ‘ என்றாள் மாலினி.
புலம்புவதற்கான சின்ன வாய்ப்பையும் விட்டுவிட மனமில்லாமல் அம்மா ‘அதயேன் கேக்கிற்ப்பா. ஐநூற்றூவா கொடுத்தா முடிஞ்சிரும்னு வண்டிய சர்வீஸ் கொண்டு போய் விட்டான். இத்தோட ரெண்டாயிரத்தி சொச்சம் ஆச்சு. இன்னும் சர்வீஸ் முடியலியாம். இதுக்கு மேல அவங்கப்பா கொடுக்க மாட்டேன்னுட்டார்னு இன்னிக்கு காலேலகூட ஒரே சண்ட’
மாலினி அதே மயக்கும் புன்னகைப்போடு அம்மா சொல்வது அத்தைனையும் கரிசனத்தோடு கேட்டாள்.
‘கவலயேப்படாதீங்க ஆண்ட்டி. காசிக்கு சீக்கிரம் வேலையாயிடும். நான் சொல்றேன் பாருங்க. அப்புறம் போயிட்டு வர்றேன் ஆண்ட்டி’ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவர்கள் இருவரும் காம்பவுண்டை விட்டு வெளியே வரும்போது காசிக்கு, அம்மா வீட்டு பால்கனியிலிருந்து தங்களையே பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது. விட்டால் அவர்கள் கூடவே அவளும் இறங்கி வந்திருப்பாள். காசியின் அத்தனை உலகங்களிலும் அம்மாவுக்கு இருந்தேயாக வேண்டும்.
ஒம்பது மணிக்கே வெயில் சற்று ஏறத் தொடங்கியிருந்தது. வியர்வை கசகசப்பில் மாலினியின் தோற்றம் மங்கி கலங்கலாகத் தெரிவது போல் இருந்தது காசிக்கு. ‘ஆட்டோ புடிச்சுப் போயிடலாமா?’
‘காசு வச்சிருக்கியா?’ அவள் திருப்பிக் கேட்டதை எதிர்பாத்திருந்ததால் பேசாமல் நடந்தான்.
ப்ரின்ஸின் அலுவலக ஜமாவில் மாலினியும், கவிதாவும்தான் பெண்கள். மற்ற எல்லோரும் பொழுதுபோக்க அங்கே வந்து அரட்டையடிக்கும் மொட்டைப்பையன்கள்தான். ஒப்பீட்ட்ளவில் இரு பெண்களில் மாலினி தேவதையாகத்தான் அவர்களுக்குத் தெரிந்தாள்.
‘வந்தோன்ன போய் லிப்ஸ்டிக், பவுடர்லாம் சரியா இருக்கான்னு பாக்கனுமா, இங்க யாருத்தா உங்கள பாக்கறதுக்குன்னு ஓடி வரோமாக்கும்’ ராஜமாணிக்கம் விடாமல் வம்பிழுப்பான்.
‘தூத்துக்குடில்ல ரெண்டு செக்கு ஓடுது. ரைஸ்மில்லு, மணல் குவாரின்னு வச்சுகிட்டு அவன் ஷோக்கு காட்டறதுக்கு இங்க ஆஃபிஸப் போட்டிருக்கான். இது அவனுக்கு ஷோக்கு காட்டி வளக்கப் பாக்குது. இதெல்லாம் நமக்கு தெரியாதாக்கும்’ என்று நமட்டு சிரிப்பு சிரிக்கும் ராஜமாணிக்கம் காசியைப் பார்த்து ‘நீ ஏம்ப்பா நடுவால வாயப் பொளந்துட்டு நிக்கற? அதெல்லாம் பசையிருந்தாத்தான் பச்சக்க்னு ஒட்டிக்குவாளுக’
இந்த நையாண்டிகள் மாலினியின் காதுக்கு போகாமல் இருந்திருக்காது. ஆனால் அவள் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டுதான் இருந்தாள்.
‘ஜிம் போவியா ராஜா…. செம ஆர்ம்ஸ்ப்பா உனக்கு’ அவன் புஜ உரத்தை உணர்வது போல கிள்ளிப் பார்ப்பாள். ‘என்னா ஸ்ட்ரெந்த்து’.
‘காசிக்குதான் ட்ரெஸ்ஸிங்கில் நல்ல சென்ஸ் இருக்குப்பா. செக்ட் ஷர்ட் போட்டு வந்தா, செமயா இருக்குய்யா உனக்கு.’ என்று அவன் சட்டையை தொட்டு பாராட்டி பேசுவாள். இது போன்ற உரையாடல்களினால் அவளால் அவர்களை எளிதாக சமாளிக்க முடிந்தது. அவள் இருக்கும்போது அவளைப் பற்றி கேலியும் சிரிப்புமாகவும், இல்லாதபோது அவளைப் பற்றியே பொரணியும் நமைச்சலுமாக அவர்களால் பொழுது போக்க முடிந்ததே, ப்ரின்ஸின் அலுவலகத்திற்கு ஒரு கவர்ச்சியை கூட்டியது.
காசிக்கு தெரிந்தே ராஜமாணிக்கம் இரண்டொரு முறை மாலினியிடம் தூண்டில் போட்டு பதில் ஏதும் கிடைக்காமல் வெறுத்துப் போயிருந்ந்தான். காசியை சற்று சலுகையோடு அவள் குறிப்பிடுவது மற்றவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. இன்று காசியின் வீட்டுக்கு வந்தது தெரிந்தால் அவர்களின் ஆற்றாமை இடம்மாறி காசியின் மேல் வெறுப்பாக உருவெடுக்கலாம்.
‘என்னமோ ரஷ்ஷா இருக்கும்னு சொன்னே…. பஸ் காலியா வந்திட்டிருக்கு’
‘நுங்கம்பாக்கம் வரப்போ பாரு… பிழிஞ்சு எடுத்திருவாங்க…. ஏறு ஏறு… இந்தப்பக்கமா’ திருவான்மியூர் போகும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.
‘இப்படி ஜன்னல் ஓரமா நீயே உக்காந்துக்க காசி. பயங்கரமா காத்தடிக்குது. இன்னிக்கு ஹேரை நான் ஒண்ணுமே பண்ணல நான். ப்ச்ச்… ரொம்பவும் டல்லா இருக்கா’
முட்டைகரு கலந்த ஷாம்பூவினால் மென்மையாக்கப்பட்ட கூந்தலை எடுத்துக்கட்டி பின்புறம் பரப்பிவிட்டிருந்தாள். அவசரகதியில் தீட்டின மை கலைந்து கரைகட்டியிருந்த கண்களைப் பார்த்து சிரித்தான்..
‘ஏன்.. என்னா? ஏதும் டிவி சீரியலுக்கு ஆள் எடுக்கிறாங்களா?’
‘ஆமாம். உன்னத்தான் வில்லனா போடுவாங்க’ அவன் புஜத்தை திருகி கிள்ளியபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மேத்தா நகரைத் தாண்டும்போதே கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. எல்லோருக்கும் ஏதோ அவசரம் இருந்தது. முன்னே செல்பவரை விட ஓரிரு அடிகள் வேகமாக சொல்லவேண்டும் என்ற முனைப்பு இருந்தது. மாலினி வழியாக நான்கைந்து பேர் பின்பக்கம் கண்டெக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டிருந்தனர். லயோலா, வள்ளுவர் கோட்டம்லாம் தாண்டியதும் பேருந்தின் அத்தனை பகுதிகளையும் நிரப்பிக் கொண்டு பிதுங்கி வழிந்தபடி கூட்டம் ஒரே உருவாக மாறியிருந்த்து.
‘நான் சொல்லியிருந்தேன்ல…. ரகுராம்னு… நினைவிருக்கா காசி. அவனுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்காம். நேத்து சாட்ல சொன்னான்’
காசிக்கு நன்றாக நினைவிலிருந்தது. தொரப்பாக்கம் விப்ரோக்கு பின்புறம் டிஜிட்டாய்ட் என்றொரு நிறுவனத்தில் வேலை செய்கிறான் என்று தெரியும். அதுவும் மாலினி வாயால்தான் தெரியும்.
‘ரொம்ப நாளா ஃபோன்ல ரெண்டு பேரும் நூல் விட்டுட்டே இருந்தீங்களே. இப்ப என்ன மொத்தமா அந்து போச்சா, டீல் விட்டுட்டானா நம்மாளு ‘ காசி சிரித்தான்.
லேசாக மூக்குநுனி சிவக்க திரும்பியவள்… ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
‘அதுக்குதானா இம்புட்டு காலைல கெளம்பி வந்து, என் வேலையையும் கெடுத்து கூட்டிட்டு போற… இதுல எங்கம்மாகிட்ட வேலைக்கு பிராஜெக்ட்டுன்னு பீலா வேற’ காசி குரலில் கொஞ்சம் சலிப்போடு சொன்னான்.
‘போடா…’ அவள் கண்கள் தளும்பியது. காசிக்கு அவள் முகம் சிவக்க சிவக்க கம்ப்யூட்டரில் ரகுராமனுடன் சாட் செய்த தருணங்கள் நினைவிலிருந்தது. கழுத்து செயினைக் கடித்தபடிக்கு அடிக்குரலில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பாள். இந்த மாதிரியான நேரில் சந்தித்தறியாத உறவுகளில் காசிக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் மாலினியை பார்க்க இப்போது வருத்தமாகத்தான் இருந்தது. அவனுடைய பச்சாதாபத்தை உணர்ந்து கொண்டவன் போல, அவன்பக்கமாக சரிந்துகொண்டவள்.
‘ஏண்டா, எனக்கு மட்டும் இப்படி ஆகுது… இவன் என்னல்லாம் சொன்னான் தெரியுமா. எவ்வளவு பிராமிஸ் பண்ணான் தெரியுமா’
‘அதெல்லாம் எல்லாரும் சொல்றதுதானே. சனியன் தொலஞ்சதுன்னு விடுவியா… இப்போ என்ன கண்ணகி மாதிரி நியாயம் கேக்கப் போறியா. வேலையத்த வேலை’
தலையை குனிந்து கொண்டவள், முணுமுணுப்பாக,
‘ஒருதடவயாவது அவன் முகத்த பாத்து கேட்டுட்டு வந்திடனும்’ என்றாள்
பனகல் பார்க் பக்கம் ஊர்ந்து கொண்டு போன நெரிசலிடையே கூட்டத்தின் அழுத்தம் கூடிக் கொண்டிருந்தது.
‘காசி, மூச்சை அடைக்கிற மாதிரி இருக்குடா. ‘
‘பத்து பதினஞ்சு நிமிஷத்தில ஸ்டாப் வந்திரும்… கொஞ்சம் பொறுத்துக்கோ’ மாலினியைத் திரும்பிப் பார்த்தபோது அவள் முகம் விண்டு விழுவது போல நெகிழ்ந்திருந்தது.
‘கொஞ்ச நேரம்தான்பா’
‘அதுக்கில்லடா…. இது…. இப்ப… இந்த சிக்னல்ல இறங்கிடலாம். ப்ளீஸ். ப்ளீஸ்… மூச்சுமுட்டுது எனக்கு’ என்றாள்
அவசரமாக கூட்டத்தைப் பிளந்துகொண்டு பிரசவித்த சிறுகுழந்தையாக இருவரும் கீழே பிதுங்கிவிழ ‘கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா…. ப்ளீஸ்’ பிளாட்ஃபாரம் ஓரமாய் நின்று மூச்சுவாங்கினாள். துப்பட்டா சரிந்து கையில் சுற்றியிருக்க பிளாட்பார கைப்பிடி ஓர க்ரில்லை பிடித்துக்கொண்டு ஊர்ந்து செல்லும் பஸ்ஸையே பார்த்துக் கொண்டிருதவள், அப்படியே ஓரமாக மடிந்து அமர்ந்து ஓங்கரித்தபடி வாந்தி எடுத்தாள்.
ஓடிச்சென்று அவள் தலையைப் பற்றிய காசி, ‘என்ன ஆச்சு மாலி, மயக்கமா வருதா? கொஞ்சம் பிடிச்சுக்கோ சோடா கீடா வாங்கிட்டு வர்றேன் இரு’
அமர்ந்திருந்தபடியே, விலகிச்சென்றவனின் பாண்ட்டை பற்றி இழுத்தவள், வாயை புறங்கையால் தொடைத்துக் கொண்டு ‘சோடா வேணாம். தண்ணி பாட்டில் ஒண்ணு வாங்கிட்டு வா ப்ளீஸ்’ மீண்டும் ஓங்கரித்துக் கொண்டு வாந்தி எடுத்தாள்.
வாங்கிவந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவள் முகமருகே கொண்டு சென்றபோது, அதை விலக்கி கையில் சுற்றியபடி தொங்கி கிடக்கும் துப்பட்டா பக்கம் கொண்டு போனாள். ‘இப்படி விடு’ பொங்கி வந்த கண்ணீரிடையே சொற்கள் தடுமாறி சிதறின.
‘என்னாச்சு… துப்பட்டால வாந்தி பட்டிருச்சா’ எனக் குனிந்த காசியைப் பிடித்து நிறுத்தினாள். ‘கெடக்கு விடு. புழுத்துப் போற ஜென்மம் எச்சப் பண்ணி வச்சிருக்கு’ என்று சொல்லும்போதே குமட்டிக் கொண்டு வந்தது போல மீண்டும் வாந்தி எடுத்தாள். அவள் சொன்னது விளங்கியதும் காசிக்கு அருவருப்பில் காதுமடல்கள் எல்லாம் கூசியது.
‘ஆட்டோ பிடி காசி… என்னால இங்க நின்னுட்டிருக்க முடில’
வழியோடு போன ஆட்டோவை மடக்கி ஏறிக் கொண்டார்கள். ‘வீட்டுக்குப் போயிடலாமா’ என்றவனை மறுத்து ‘தொரப்பாக்கம் போங்கண்ணா’ என்றாள் ஆட்டோக்காரரிடம்.
‘ETL கேட்டாம்மா, கொஞ்சம் உள்ளாற போவனும். இருவது ரூவா மேலப் போட்டுக் கொடும்மா’ என்றவாறே மீட்டரைப் போட்டு ஆட்டோவை கிளப்பினார்.
அநாமத்து கழிசடையின் வக்கிரத்தை சுமந்து கொண்டு அந்த துப்பட்டா தரையிலேயே கிடக்க, லஜ்ஜையில்லாத ஊர் பரபரப்பாக அதைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
சாலையைப் பார்த்துக் கொண்டு குறுகிப் போய் அமர்ந்திருந்த மாலினியின் உடலின் ஒவ்வொரு செல்லும் அதிர்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது காசிக்கு. எதைப் பற்றி எப்படி கேட்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான்.
‘இன்ட்ரவூக்கு போறீங்களா, இன்னா கம்பெனி அது? நிறய ஆள் எடுக்கிறாங்கப் போல. நம்ம உறவுக்காரப் பையன் ஒர்த்தன் விப்ரோல சேந்தான். அப்பாலிக்கா ஒரிசா பக்கம் எங்கியோ போவனும்னு வேலய ரிஜைன் பண்ணிட்டு சும்மாத்தான் சுத்திட்டிருக்கான். இது என்னா நெல்ல கம்பெனியா’ என்று ஆட்டோக்காரர் ஏதேதோ பேசிக்கொண்டே டிஜிட்டாய்ட் கேட்டருகே கொண்டுவந்து இறக்கிவிட்டார். இருபதுக்கு இருபத்தைந்தாக சேர்த்து ரவுண்டாக நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போனார்.
இப்பொழுது மாலினி கொஞ்சம் தெளிந்த முகத்துடன் இருந்த மாதிரி பட்டது காசிக்கு. ‘ரகுராமுங்களா?, ரெண்டாவது மாடிங். நீங்க அப்படி ரிசப்ஷன்ல உக்காந்தீங்கன்னா தகவல் சொல்லி உட்றேன். கீழே வந்து மீட் பண்ணுவாருங்’ சொல்லியபடிக்கு செக்யூரிட்டி ஃபோனை எடுத்து எண்களை ஒத்தியெடுக்க ஆரம்பித்தார்,
‘அவர் ஃப்ரெண்டு காசி வந்திருக்கார்னு சொல்லுங்க’ என்றாள் மாலினி.
கேள்விக்குறியோடு பார்த்த காசியை கவனிக்காமல், ரிசப்ஷன் ஹாலை ஒட்டியிருந்த சிறிய நடைபாதையில் போய் வெளியே நிறுத்தியிருந்த வண்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடி மேஜைகள் மேல் பல்வேறு அறிமுகமில்லாத பத்திரிகைகளுடன் ஒரு ஆஷ்ட்ரேயும், ப்ளாஸ்டிக் பூச்செடியும் இருக்க, காசி லிஃப்ட் பார்வையில் படும் திசையை நோக்கியபடி சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
பத்தாவது நிமிடம் படிகள் வழியே இறங்கிவந்த கண்ணாடி அணிந்துகொண்டு, கழுத்து பட்டியில் அடையாள அட்டையை தொங்கவிட்டபடி, ரிசப்ஷன் ஹாலில் இருந்த காசியை குழப்பமாக பார்த்தபடி ‘ஐயாம் ரகுராம். நீங்க….’ என்றுக் கேட்டுக்கொண்டே வந்தான்..
சோஃபாவை விட்டு எழுந்திருக்காமல் காசி பக்கவாட்டில் கையைக் காட்டி ‘மாலினி வந்திருக்கா பாரு. தோ…அங்க… போய்ப் பாரு’ என்றான். ரகுராமனுக்கு அந்த சூழலின் அபத்தம் மெள்ள விளங்கியது. சற்று அதிர்ச்சியான முகத்துடன் ‘இங்கயா? எதுக்கு?’ என்றவாறே வேகமாக பக்கவாட்டு கதவைத் தாண்டி மாலினி நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்து போனான். அவள் அருகில் போனதும், பேச்சை எப்படி துவங்குவது என்று சற்று குழம்பியவனாய் தொண்டையை கனைத்துக் கொண்டே ‘ஹேய்! இதென்ன ஷாக்கிங் விசிட். நான் எக்ஸ்பெக்ட்டே பண்ணல… ‘ என்று பேச ஆரம்பித்தான்.
அந்த நேரம் நல்ல வெயிலேறி சுற்றிலும் வெம்மை கனத்துக் கொண்டிருந்தது. கவிழ்த்துப் போட்ட ‘ப’ வடிவத்தில் கதவுக்கு அப்பால் பளீரென வெளிச்சம் விழும் இடத்தில் அவர்கள் இருவரும் நிற்பதை பார்த்துக் கொண்டிருந்த காசி அப்போதுதான் திரும்பிய மாலினியின் கையில் இருந்த செருப்பைப் பார்த்தான். ரகுராம் அடுத்த வார்த்தை பேசுமுன்னே செருப்பை முன்னே வீசிக்கொண்டு பாயந்தபடி அவன் முகத்தில் ‘ரப்ப்’பென அடித்தாள். அடிவாங்கியவன் அதன் தாக்கத்தை உணர்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு அடிகள் தாடையிலும் தோள்பட்டையிலும் விழுந்து, தடுமாறி பின்னால் சரிந்து விழுந்தான். சுயஉணர்வு பெற்று ‘செக்யூரிட்டி… செக்யூரிட்டி’ என்று கொஞ்சம் தாமதமாகத்தான் கூக்குரலிட ஆரம்பித்தான்.
கீழே விழுந்து கிடந்தவன் மேலேயே செருப்பை விட்டெறிந்துவிட்டு, அடுத்த கால் செருப்பையும் அப்படியே விட்டுவிட்டு பார்க்கிங் மத்தியில் இறங்கி வேகுவேகமாக வெளி கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மாலினி. ரகுராமனைப் பார்த்து அவள் பேச நினைத்த சொற்கள் அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு அவள் மட்டும் வெளியே கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள். நடந்து முடிந்த மொத்த சம்பவத்தையும் முழுவதுமாக உள்வாங்க காசிக்கே சில நிமிடங்கள் ஆனது. இதொன்றையும் பார்க்க முடியாத கோணத்தில் இருந்த செக்யூரிட்டி, ரகுராமன் குரல் கேட்டு வேகமாக வந்து கீழே விழுந்து கிடந்தவனை தூக்கி என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளும் முன்னர் மாலினி வெறுங்கால்களுடன் வெளிகேட்டை கடந்து போய்விட்டிருந்தாள். தன்னைப் பற்றி யாரும் அடையாளம் கண்டு கேட்பதற்கு முன்னர் காசியும் வந்தவழியே திரும்பி பிரதான வாயில் வழியாக நடந்து வெளியே வந்து, பின்னர் ஓட்டமாக ஓடி மாலினியின் பக்கத்தில் போய் சேர்ந்து கொண்டான். திரும்பிப் பார்த்தபோது யாரும் துரத்திக் கொண்டு வரவில்லை என்று தெரிந்தது.
‘என்னாது இது… கன்ணகி மாதிரி நியாயம் கேக்கப்போறேன்னு பாத்தா, பஜாரி மாதிரி செருப்பால அடிச்சிட்டியே. போலிஸ் கீலிஸ்னு கூப்பிட்டிறப் போறாங்க. இங்க ஆட்டோக் கூட கிடைக்காதே’
அந்த வெயிலில் வேகுவேகென்று அரைகிலோமிட்டர் நடந்து வழியோடு போன ஆட்டோவைப் பிடித்து ஏறியதும், ‘அண்ணாநகர் போங்கண்ணா’ என்றாள் மாலினி. காசைப் பற்றி காசியும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை.
அண்ணாநகர் பஸ் டிப்போவிற்கு மேற்கில் இரண்டாவது சந்தில், போட்டோஸ்டுடியோ பக்கமாக அவள் வீட்டின் முன்னால் இறங்கியதும் ‘நான் இப்படியே வீட்டுக்குப் போயிட்டு ஆட்டோவை கட் பண்ணிக்கிறேன். நீ பாத்து வீட்டுக்குப் போ. ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காதே’ என்றான். அவன் சொன்னதை பாதி கேட்டும் கேட்காமலும் இருந்தவள் வீடு படி ஏறும்போது திரும்பி அவனைப்பார்த்து அரைப்புன்னகை செய்தாள். அதில் ஓரத்தில் ஒரு நன்றியும் தெரிந்ததாக கற்பனை பண்ணிக்கொண்டு ‘ஈவ்னிங் ஆபிஸ்ல மீட் பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினான்..
வீட்டிற்கு வரும் வழியில் ராஜமாணிக்கத்தை வொர்க்ஷாப்பில் வைத்துப் பார்த்து முந்நூத்தம்பது ரூபாய் வாங்கி ஆட்டோவை செட்டில் பண்ணிவிட்டு வீடு திரும்பியபோது ஒன்றரை மணி உச்சிவெயில் காய்ந்து கொண்டிருந்தது.
‘வெயிலெல்லா உம்மண்டயிலதான்னு ஏன்டா இப்படி அலயுற… அப்படி என்ன பெருசா வேலை கிழிக்கிறேன்னு இம்புட்டு தொலவு அவதி அவதியா ஓடிப்போயிட்டு வந்தீங்க’ என்றாள் அம்மா.
‘ஒரு எளவும் இல்ல. உனக்கென்ன போச்சுன்னு இப்படி புலம்பற. காத்தாட ஒக்காந்து சொகுசா டிவி பாத்திட்டிரு போ…’ எரிந்து விழுந்தபடி சோஃபாவில் கால நீட்டிப் படுத்துக் கொண்டான் காசி.
‘ஆமா நா டிவியேதான் பாத்திட்டிருக்கேன். ஊட்ல சோறு வடிக்க ஏழாளு வேலக்கி வச்சிருக்கீய… டேய்…. ரெண்டு வாயி சாப்பிட்டுட்டு படுடா. மதியவேளயில வெறும் வயித்தில படுத்தெழுந்தா தலவலி வயித்துவலின்னு என் உசிர வாங்குவ அப்புறம்… டேய்ய்ய்’
அடுத்து ஐந்து நிமிடங்கள் நிலவிய அமைதியை பொறுக்க முடியாமல் அம்மாவே மீண்டும் ஆரம்பித்தாள் ‘அதென்னடா தொரப்பாக்கம்வரை போயிட்டு இம்புட்டு சுருக்க வந்திட்டீங்க’
‘அங்க தேடிப்போன ஆளு இல்லம்மா. அதான் உடனே ஆட்டோ பிடிச்சு திரும்பிட்டோம்.’
‘ஆட்டோலயா போயிட்டு வந்தீங்க…. காசு?’ என்றாள்.
‘எல்லாம் மாலினி பாத்துகிச்சு. கம்பெனியில வவுச்சர் போட்டு வாங்கிரும்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
‘ரொம்ப நல்ல பொண்ணுல்ல இந்த மாலினி. இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் சேந்து வெளில போக சொல்லோ, எத்தினி கண்ணு பாத்திச்சோ. அம்புட்டும் திருஷ்டி தெரியுமா. அப்படி ஒரு சிரிப்பு அந்தப் பொண்ணு முகத்தில’ சற்று இழுத்தவாறே ‘அவங்க என்னா ஆளுங்கன்னு சொன்னே? அவங்க அப்பாரு ஏதோ போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்காருல்ல’ என்றாள்.
‘ஆளெல்லாம் யாருங்கன்னு எனக்குத் தெரியாது’ வெடுக்கென சொன்னான். அம்மாவின் நினைப்பு எந்தெந்த திசைகளில் அலையும் என்பது காசிக்கு அத்துப்படியாக இருந்தது.
‘இல்ல… நறுவிசான பொண்ணாவும் இருக்குது. ஏதோ வேலக்கி போய் நாலு காசும் பாக்குது. வூட்ல சொந்தமா தொழிலும் இருக்குங்கிற. ஒரே பொண்ணுன்னா… நாம பேசிப் பாக்கலாமேன்னுதான்’ அம்மா முடிக்கும் முன்னர் படக்கென எழுந்து உட்கார்ந்தவன்
‘நீபாட்டுக்கு கண்டதயும் கிண்டதையும் பேசிப் பாக்கிறேன்னு கெளம்பாத. அந்தப் பொண்ணுக்கு ஏற்கெனவே மொற மாப்பிள்ளங்க மூணு பேத்துக்கும் மேல இருக்காங்களாம். போயி வேலயப் பாரு’ என்றான்.
நினைத்துக் கொண்டாற்போல ‘ஒரே கசகசன்னு இருக்கு. நாம்போய் குளிச்சிட்டு வர்றேன். ராஜமாணிக்கம் வந்தான்னா வெயிட் பண்ண சொல்லு’ என்று பாத்ரூமை நோக்கி நடந்தான்.
image credit – Pictures by Jamie