நீண்டு என் முகம் தொடும் கை
விரல்களின் சுருக்கங்கள் கன்னத்தின்
மழிக்கப்படாத சருமத்தில் சொரசொரக்கின்றன.
கண்டுகொண்டது போன்ற மென்சிரிப்பு
தோன்றியதும் மறைகின்றது, மின்னலெனக்
கண்களில் உயிர்க்கும் ஒளிக்கீற்றும்.
எப்போதும் நிலைகொண்ட தொலைதூரப் பார்வை,
திரும்பவும் தன் இடம் வந்தமர்கிறது.
மெல்ல நடக்கும் அவர் பாதையில்
இடம் வலம் உந்திச் செல்கிறேன்,
வலிக்காமல்- அவர் கைபற்றிச் செல்கையில்,
நடை நிறுத்தி போக்குவரத்தைப் பார்க்கிறார்,
தான் இருப்பதை விளங்கிக் கொள்ள.
உன்னி வெறிக்கும் அவர் பார்வை
எதிர்படும் ஒருவரை மிரளச் செய்கிறது.
முன்னறிவிப்பின்றி, காரணமின்றி,
எங்கிருந்தோ வருகிறது அந்தப் புன்னகை,
சிரிப்பு, அது வெறும் சிரிப்பு, தூய சிரிப்பு,
அவர் முகத்தை தனதாக்கிக் கொள்ளும்
அதன்பின் நினைவேதும் இல்லை,
அல்லது உண்டா? தெரியவில்லை.
நடக்கத் துவங்குகிறோம்.
எண்ணங்களில் என்னை இழக்கின்றேன்.
அவர்? தெரியவில்லை.
வீடு சேர்ந்ததும் புதிராய்ப் பார்க்கிறார்,
தன்னை உள்ளழைத்துச் செல்லும்
என் அம்மாவை.
இணை வரலாற்றின் சமச்சீர் குலைவில்,
ஆதாரம் இழந்துவிட்டன
அம்மாவின் நினைவுகள்.
அவற்றை மெய்ப்படுத்த வேண்டியவர்
அமைதியாய் இருக்கிறார்.
கோடுறு தீக்கூற்றுவன்
கொன்று கொண்டிருக்கிறான்
என் அம்மாவை.
image credit : ‘Two People. The Lonely Ones’, Edward Munch, MomA