“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும்.

எல்ஸ்வேர் வாசித்துக் கொண்டிருந்தேன், உங்கள் தாயாரை நன்றாக அறிந்தவர்கள் அவரது மனநிலை பற்றி பேசும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. நீங்கள் கல்லூரி செல்வதற்காக அரிஜோனா நகருக்கு காரில் சென்றபோது அவரும் உங்களுடன் வந்திருக்கிறார், அப்போது அவரது ‘கண்டிஷனை’ச் சுட்டிக்காட்டி அவரது பெற்றோர் அவரைத் தடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். உங்களுக்கு 21 வயதாகி இருந்தபோது, இந்தப் பைத்தியக்காரப் பெண்ணுடன் என்னால் வாழ முடியாது என்று உங்கள் அப்பா உங்களிடம் சொல்லியிருக்கிறார். அவரது மனநிலை தடுமாற்றத்தை நீங்கள் எப்போது உண்மையாகவே உணர்ந்தீர்கள்?

நாங்கள் இருவரும் அரிஜோனா செல்லும்போது எனக்கு எதுவும் தெரியாது. அப்போது எனக்கு பதினெட்டு வயது. இது பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்ல மாட்டேன். என் தாயாரின் குடும்ப வழியில் பெண்களுக்கு எல்லாம் ‘நரம்புத் தளர்ச்சி’ என்று மறைமுகமாகப் பேசப்பட்ட ஒரு நோய்மை பீடிக்கும் வாய்ப்பு இருந்தது, அது அவர்களைச் செயலற்றவர்களாக ஆக்கியது, வீட்டைவிட்டு வெளியே போக முடியாமல் செய்தது என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். இது அம்மாவுக்கு மட்டுமல்ல, என் தாய்வழி பாட்டிக்கும் அவரது சகோதரிகளுக்கும் இருந்தது.

கவலைப்படும் சுபாவத்தைவிட தீவிரமான மனநிலை இது என்பது எனக்கு எப்போது தெரியும்? எனக்கு மணமாகி விட்டது. அப்போதுதான், அம்மா நோய்க்குறிகளை இன்னும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும்போதுதான் என் மனைவியின் குடும்பத்தினரும், என் குடும்ப வட்டத்துக்கு வெளியே இருப்பவர்களும் அதைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

அவரது உலகில் வாழ்வது உங்கள் யதார்த்தத்தை பாதித்ததா?

அதில் சந்தேகமே இல்லை. ஒரு குழந்தையாகவே எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதிலும் எல்லாமே தர்க்கப்படி நடக்க வேண்டும் என்பதிலும் கருத்தாக இருப்பேன். நீங்கள் ஓரே குழந்தையாக இருக்கும்போது யாரிடமும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து புரிந்து கொள்ள முடியாது. எனக்கு திருமணமாகி, நான் என் இருபதுகளின் இறுதியில் இருந்தபோதுதான் இது நரம்புத் தளர்ச்சியைக் காட்டிலும் தீவிரமான ஏதோ ஒன்று என்ற உண்மை உறைத்தது.

எல்ஸ்வேரின் இறுதிப் பகுதியில் நீங்கள் புதிதாக மணமான உங்கள் பெண்ணின் அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸார்டரை விவரிக்கிறீர்கள். சரியாக மருந்து எடுத்துக் கொண்டால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று மருத்துவர் சொல்கிறார். அது இல்லாமல் இந்தப் பிறழ்நிலை, “அவரை உயிருடன் தின்னும்” என்கிறார் அவர். பழைய விஷயங்களை நினைத்துப் பார்ப்பதுண்டா? உங்கள் தாயாருடன் நீங்கள் இருந்த நாட்களின் அனுபவத்தை எந்த அளவுக்கு நினைத்துப் பார்க்கிறீர்கள்?

நாங்கள் இருவரும் இணைந்திருந்த வாழ்வைப் புதிதாய் பொருட்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. என் மிகவும் பழைய நினைவுகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் திருத்திப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புத்தகம் எழுதும் வேலையில் இதற்கும் பங்குண்டு. என் மகளின் மனநிலை குறித்து தெரிந்து கொண்டதில் இன்னொரு விஷயம், அவளுக்கு வல்லுனர்களின் உதவி உடனே கிடைத்ததால் அவள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நன்றாக ஆகிவிட்டார், ஆனால் என்னைக் குற்ற உணர்ச்சி ஆட்கொண்டது. நான் எல்லாவற்றையுமே தவறாகச் செய்திருக்கிறேன். நான் என் அம்மாவுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். அவர் எதை விரும்பினார் என்பதும் அவருக்கு எது தேவைப்பட்டது என்பது இரு வேறு விஷயங்கள். அவர் வாழ்வின் பின்னாட்களில், அவரது நிலையை மேலும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன்.

உங்கள் தாயாருக்கு மருத்துவ உதவி கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்று நீங்கள் நினைத்துப் பார்ப்பது உண்டா?

நான் எப்போதும் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவள் தன் பங்குக்கு பல மருத்துவர்களைப் பார்த்தாள். சிலர் அவரை மிக கவனமாக கவனித்துக் கொண்டனர். ஆனால் இப்போது உள்ளது போல் அப்போது அவளது மனநிலை மருத்துவ வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. இன்று இருக்கும் தொழில்முறை உதவி அவருக்குக் கிடைத்திருந்தால் அவர் முழுக்கவே வேறு வகைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார்.

௦௦௦௦௦

தான் பிறந்து வளர்ந்த இடத்தைக் குறித்து தொடர்ந்து எழுதுவதை பல எழுத்தாளர்களால் தவிர்க்க முடிவதில்லை. ஒரு எழுத்தாளனின் வாழ்வின் முதல் இருபது ஆண்டுகள் மிக முக்கியமானவை. அவனது அறிவும் கற்பனையும் வளரும் காலம், உலக பார்வை உருவாகும் காலம் அது. ஒரு குறிப்பிட்ட பருவத்தைக் கடந்ததும் தன் முந்தைய அனுபவங்களைக் காட்டிலும் கற்பனைக்குத் தக்க பொருள் செறிந்த அனுபவங்களைக் கண்டு கொள்வது கடினமாகிறது. இவர்கள் எழுத்தில் தாம் பிறந்த மண்ணும் அதன் மனிதர்களும் தொடர்ந்து வெளிப்படுகிறார்கள். ரிச்சர்ட் ரூஸோ இப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

“அமெரிக்கா என்றவுடன் ஒளி பொருந்திய நகரங்கள், பணம் கொழிக்கும் சூழல் என்ற பொதுபிம்பத்துக்கு மாறாக, அங்குள்ள வறுமை, இனவெறி, கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் விட்டுச் செல்லப்படும் நகரங்கள்/ மக்கள், என அதன் பல்வேறு பக்கங்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள். அவர்களில், ரூஸோ அமெரிக்காவின் சிறு நகரங்களைப் பற்றி எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். 7 நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதியுள்ள ரூஸோ ‘Empire Falls’ என்ற நாவலுக்காக புலிட்சர் விருது பெற்றவர்.” என்று தன் கட்டுரையில் ரிச்சர்ட் ரூஸோவை அறிமுகப்படுத்துகிறார் அஜய். குட்ரீட்ஸ் தளத்தில் ஒரு நேர்முகத்தில்  தன் படைப்புகளில் இடம் பெரும் சிறுநகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் தான் வளர்ந்த க்ளோவர்ஸ்வில் குறித்து தன்னால் எழுதாமல் இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார் ரூஸோ.

எல்ஸ்வேர் நூலின் முடிவில் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்: “என் சொந்த ஊருடன் எனக்குள்ள விருப்பும் வெறுப்பும் கலந்த உறவை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு பதிலாக, பிற க்ளோவர்ஸ்வில்களை என் கற்பனையில் புனைந்தேன்”. நீங்கள் இதைதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தது எப்போது?

என் மூன்றாம் புத்தகத்தை எழுதும்போது, Nobody’s Fool நாவலை எழுத ஆரம்பிக்கும்போதே நிச்சயமாக அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை என் ஏஜெண்டிடம் கொடுத்தது நினைவிருக்கிறது – அப்போது நோபடிஸ் ஃபூல் நாவலின் நூறு பக்கங்கள் எழுதி முடித்திருந்தேன், “நான் இந்த ஊரில் சிக்கிக் கொண்டுவிடக்கூடாது என்று பார்க்கிறேன்,” என்று அவரிடம் சொன்னது நினைவிருக்கிறது. இப்போது என் நினைவுகளை எழுதிவிட்டபின் பார்க்கும்போது நான் அப்போது அதைச் சொல்லப் பயன்படுத்திய மொழி சுவாரசியமாக இருக்கிறது. என் அம்மா எப்போதும் என்னை எச்சரித்துக் கொண்டே இருப்பார்|: “க்ளோவர்ஸ்வில்லில் சிக்கிக் கொள்ளாதே”. இதோ, இப்போது இங்கே இருக்கிறேன், என் முப்பதுகளின் பிற்பகுதியில், அல்லது என் நாற்பதுகளின் துவக்கத்தில்- என் மூன்றாம் புத்தகத்தின் ஒரு பகுதியை எழுதி என் ஏஜண்டுக்கு தபாலில் அனுப்புகிறேன், அப்போது நான் சொல்வது, “நான் இந்த ஊரில் சிக்கிக் கொண்டுவிடக்கூடாது என்று பார்க்கிறேன்,” என்றுதான்.

அதற்கு அவர் என்ன சொன்னார்?

“இல்லை, நான் லண்டனில் சிக்கிக் கொண்டுவிடக்கூடாது, என்று டிக்கன்ஸ் சொல்வதைப் போன்றது இது,” என்றார் அவர். அடிப்படையில் இதுதான் உனக்குத் தெரிந்த விஷயம். நீ இந்தப் பிரதேசம் என்னுடையது என்று வேலி அடித்து சுவாதீனப்படுத்திக் கொண்டாயிற்று. நீ உனக்கு வேண்டும் என்று கற்பனை செய்து பார்த்த இடமாக இது இல்லாது போகலாம், ஆனால் உன் வாசகர்கள் இதை நேசிக்கிறார்கள், நீ இதை நேசிக்கிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது, இதைப் பற்றி நீ கொஞ்சம்கூட அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. நான் Empire Falls நாவல் எழுதும் இடத்துக்கு வந்தபோது, என் ஏஜெண்ட் அப்போது சொன்ன அறிவுரையின் அருமையைப் புரிந்து கொண்டேன்.

நிஜமான க்ளோவர்ஸ்வில்லை என்னால் எப்போதும் நேசிக்க முடியாத அளவுக்கு நான் புனையும் க்ளோவர்ஸ்வில்களை நேசிக்கும் சுதந்திரம் எனக்கு உள்ளது என்பதை எப்போது நான் தெளிவாக உணர்ந்தேன் எனபது தீர்மானமாகத் தெரியவில்லை, ஆனால் என் புனைவுகளில் மீண்டும் மீண்டும் அங்கு செல்வதுதான் அந்த இடத்துக்கு என்னால் எப்போதும் கொடுக்க முடியாத நேசத்தின் தூய வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொண்டேன், ஆனால் அது எப்போது என்று சரியாகத் தெரியவில்லை.

ஆனால் இதனால் ஒரு முரண்நிலையும் உருவானது. “நீ மெயினில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஊருக்குத் திரும்பி வந்து அப்ஸ்டேட் ந்யூ யார்க்கில் இருக்க வேண்டியதுதானே? நீ இந்த ஊர்க்காரன்தானே,” என்று பலரும் என்னை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வகையில், இந்தப் புத்தகம், எல்ஸ்வேர், அந்தக் கேள்விக்கான பதில் என்று சொல்லலாம். “ஒரு இடத்தை விட்டுப் பிரிய முடியாத அளவு அதை நீ நேசிக்கிறாய் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்போது, நீ ஜாய்ஸ் டப்ளினை நடத்திய மாதிரி அல்லவா நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பவர்களுக்கும் இதில் பதில் இருக்கிறது.

சரி, ஆனால் ஜாய்ஸ்கூட டப்ளினில் இருந்துகொண்டே டப்ளினைப் பற்றி எழுதவில்லையே…

அவர் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடிப் போனார்! நான் என்ன செய்திருக்கிறேனோ, அதையேதான் அவரும் செய்தார். தன் வாழ்வின் எஞ்சிய நாட்களெல்லாம் அவர் டப்ளினராகதான் இருப்பார், ஆனால் அங்கே இருப்பதைவிட நாசமாய்ப் போகலாம் என்று நினைத்தார் அவர்!

௦௦௦௦௦.

“ரூஸோவின் கதைசொல்லும் முறை நிதானமானது. முதலில் பாத்திரங்களின் அறிமுகம், சிலபல சம்பவங்களின் மூலம் நாவலின் களத்தை அமைப்பது/ பாத்திரங்களைப் பற்றிய நம் முந்தைய எண்ணங்களைக் கலைப்பது, பாத்திரங்கள் எதிர்கொள்ள வேண்டிய சில நிகழ்வுகள்/ பிரச்சினைகளை உருவாக்குவது, இறுதியில் முடிச்சுகள் அவிழ்வது என யதார்த்த பாணியில் அமைதியாக, மென்சோகமும் நகைச்சுவையும் கலந்த விதத்தில் சொல்வது ரூஸோவின் பாணி,” என்று இந்த இதழில் எழுதுகிறார் அஜய். தன் எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் அதன் தீவிரத்தன்மை தவிர்த்தல் குறித்து  ஃபெயில்பெட்டர் என்ற தளத்தில்  ஜேட் சாங்கிடம் பேசியுள்ளார் ரூஸோ. அந்தப் பகுதியின் தமிழாக்கம் இது..

உங்கள் நாவல்களில் பெருமளவு காணப்படும் சாதாரணன்/ சொந்த ஊர் கருப்பொருள் குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றைவிட உங்கள் எழுத்தில் குறிப்பிடத்தக்க தனித்தன்மை கொண்ட அம்சமாக இருப்பது உங்கள் ஒவ்வொரு புத்தகத்திலும் மிளிரும் நகைச்சுவை உணர்வுதான் என்று நினைக்கிறேன். Empire Falls இதற்கொரு விதிவிலக்கல்ல. உண்மையில், சில இடங்களில் அது வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பதாக இருக்கிறது. பெரும்பாலும் ஓர் எழுத்தாளரிடம் அவரது படைப்பு குறித்து கருத்து கேட்கப்படும்போது, அதன் தீவிரத்தன்மை கொண்ட கூறுகள் மிக எளிதாக துலக்கம் பெறுகின்றன. ஆனால் எங்கள் முதல் கேள்வி இது: நகைச்சுவையாக எழுதுவதில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் என்ன? உங்கள் நகைச்சுவை உணர்வு எம்பயர் ஃபால்ஸ் போன்ற ஒரு காவியத் தன்மை கொண்ட நாவல் வாசகர்களாலோ விமரிசகர்களாலோ தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு பாதகமாகவோ தடையாகவோ செயல்படும் என்பதை இலக்கியப் புனைவெழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா?

நான் சொல்வது போலித்தனமாகத் தெரியலாம் என்ற ரிஸ்க் இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன், நான் நகைச்சுவையாக எழுதுபவனாக என்னைப் பற்றி நினைத்துக் கொள்வதில்லை. நான் காணும் உலகைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்கிறேன், அவ்வளவுதான். அவை அடிக்கடி வேடிக்கையாக இருக்கின்றன. இதுதான் விஷயம். நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் விஷயங்கள் பலவும் சிக்கலானவை, அவற்றை முழுமையாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. எனவே நாம் பார்ப்பதை நம்மையறியாமல் எடிட் செய்கிறோம், எதை உண்மையாகவே பதிவு செய்வது, எதைக் கண்டு கொள்ளாமல் விடுவது என்று தெரிவு செய்கிறோம். இதனால்தான் ஓரே விஷயத்தை எல்லாரும் பார்த்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றையே பார்ப்பதில்லை. ஆங்கில கல்வித்துறை விவாதங்கள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறேன், இந்த விவாதங்களில் உரக்கச் சிரிக்காமல் இருக்க சிரமப்பட்டவன் நானாக மட்டும்தான் இருந்திருக்கிறேன். ஆனால் கல்வித்துறையை விவரிக்கும் Straight Man என்ற நாவலில் இதே துறை விவாதங்களைப் பதிவு செய்தபோது, தாங்கள் வாழ்ந்த அனுபவங்களையே அப்போது சிரிப்புக்கிடமானவையாகப் பார்க்காதவர்கள் நாவலில் என் பார்வையில் அவற்றைப் பார்த்துச் சிரித்தனர். நகைச்சுவையாக எழுதுபவர்கள் சிரிக்க வைப்பதற்காக புதுசாக எதையோ கண்டுபிடிக்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் நம் சிரிப்பைத் தடுக்கும் தடைகளை, கவனக்கலைப்புகளை நீக்கிக் கொடுக்கிறார்கள். “நான் பார்ப்பது போல் பார்க்க முயற்சி செய்யுங்கள்,” என்று நாங்கள் வலியுறுத்துகிறோம், “நான் சொல்வது சரியா தவறா என்பதைக் காலம்தான் சொல்லும்”.

நகைச்சுவையாக உள்ள காரணத்தால் நான் எழுதுவதை தீவிர எழுத்தாக யாரும் எடுத்துக் கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று  எப்போதும் கவலைப்பட்டதில்லை. கடைசியில் பார்த்தால், நகைச்சுவை எழுத்தாளனின் மிகச் சிறந்த கைவேலை, நகைச்சுவை சிரமப்படாமல் செய்யப்படுவது என்ற மாயத்தை நிகழ்த்துவதுதான். ஏதோ சுலபமான ஒன்றை இவன் செய்கிறான் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றால் அது தொழில்முறை ஆபத்துதான். காரி கிராண்ட் ஆஸ்கார் வென்றதேயில்லை. அவர் எது செய்தாலும் அதை சிரமம் தெரியாத வகையில் செய்தார் என்பதுதான் முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. சீரியஸ் சினிமாவிலும் சரி, தீவிர புனைவிலும் சரி, விஷயகனத்தை உன்னால் உணர முடியும். அது அத்தனையையும் சுமப்பதில் உள்ள உழைப்பையும் பாடுபடுதலையும் பார்க்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நாம் வெற்றிக்கு மட்டும் பரிசு தருவதில்லை, உழைப்புக்கும் ஊதியம் அளிக்கிறோம். காமெடியும் அதே அளவு சீரியஸானதுதான், அந்தத் தீவிரத்தன்மையை அலட்சியப்படுத்துவது என்பது தவறான வழிகாட்டலின் பேரில்தான் இருக்க வேண்டும். ஆனால் உலகை சிரிப்புக்கிடமாய் பார்க்கும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனையாகின்றன என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். எங்களில் பலரும் இப்படி இருப்பதைதான் விரும்புகிறோம்.

௦௦

ஐடண்டிடி தியரி என்ற தளத்தில் ஒரு பேட்டியில் ராபர்ட் பிர்ன்பாமிடம் தான் மிகவும் மதிப்பும் எழுத்தாளர்கள் இருவரைப் பற்றி ரிச்சர்ட் ரூஸோ உரையாடுகிறார் –

… முதலில் ரிச்சர்ட் யேட்ஸ் பற்றி பேசுவோம்.  ஒரு எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பாராட்டுவது, அவரது ரசிகராக இருப்பது, தன்னைப் போல் எழுதாத ஒரு எழுத்தாளரை ஆதர்சமாய் கொண்டிருப்பது போன்றவற்றில் உள்ள முரணியை நான் யேட்ஸ் பற்றி அறிந்து கொண்டது, அவரது சிறுகதை தொகுப்புக்கு நீங்கள் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்து கொண்டது, முதலியவை யோசிக்கச் செய்தன. இந்த விஷயத்தில் நீங்களும் ரிச்சர்ட் யேட்ஸும். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரைப் போல்தான் நீங்கள் எழுத வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை. இருந்தாலும், ராபர்ட் ஸ்டோன் போல் யேட்ஸ், பிரச்சினையில் இருப்பவர்களைக் காட்டுகிறார், அவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதில்லை. இதுவும் உங்கள் பாணியல்ல.

தனித்தன்மை கொண்ட ஒரு எழுத்தாளரின் உலகில் நான் இருக்கும்போது, உலகை அந்த எழுத்தாளரின் பார்வையில் பார்க்கிறேன், என் கண்களால் அல்ல- இலக்கியம் பற்றி பொதுவாக நான் இதைதான் சொல்வேன், இலக்கியத்தில் நான் மிகவும் நேசிக்கும் விஷயமும் இதுதான். என்னைக் காட்டிலும் வேறுபட்ட பலரின் எழுத்தை நான் விரும்பிப் படிக்கிறேன். எனக்கு ஆலிஸ் மன்ரோவின் எழுத்து பிடிக்கும். இவரால் ந்யூ யார்க்கரில் இருபத்தைந்து முப்பது பக்கங்களுக்கு ஒரு கதை எழுத முடிகிறது, சில சமயம் அதில் ஒரு காட்சிகூட இருப்பதில்லை, உரையாடலே இல்லை என்று சொல்ல முடியும், மிக அழகான உரைநடையில், நளினமான மொழியில். அதன் திகைக்க வைக்கும் நயம்- நான் எழுதும் உரைநடையின் ரிதம்களோடு ஒப்பிட்டால் அது வெகு தூரத்தில் இருக்கிறது. வேறொரு துருவம் என்றே சொல்லலாம். ஆனால்கூட, நான் அவரது உலகில் இருக்கும்போது, அது என் உலகமாகிறது.

அதேபோல்தான் யேட்ஸ். நீங்கள் சொல்வது போல்தான் எல்லாரும் யேட்ஸ் பற்றிச் சொல்கிறார்கள் – நான் மிகவும் எச்சரிக்கையான, ஆனால் பிறவியிலேயே நம்பிக்கை வாய்க்கப்பெற்ற மனிதன். என் பாத்திரங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதில்லை என்று சொல்வதைவிட அவர்கள் பிரச்சினைகளோடு வாழக் கற்றுக் கொள்கின்றனர் என்று சொல்லலாம் – ஆனால் யேட்ஸ் பாத்திரங்கள் அவ்வளவு தூரம்கூடச் செல்வதில்லை. அவரது பாத்திரங்கள் மோசமான பிரச்சினைகளிலிருந்து மிக மோசமான பிரச்சினைகளுக்குச் செல்கின்றனர் – நெருப்பில் விழும் ஈசல்களைப் போல் அவர்களது இதயம் நொறுங்கிப் போவதை நோக்கிச் செல்கின்றனர். நான் எழுதும் எதிலுமே இருக்கக்கூடிய சிறிதளவு நம்பிக்கையையும்கூட அவரது வெகு சிலக் கதைகளிலேயே அவரால் அடைய முடிகிறது. இப்படிப் பார்த்தால் நான் யேட்ஸ் வாசகன் என்பது வினோதமாகதான் இருக்கிறது.

ஆனால் அவரது எழுத்து எவ்வளவு உண்மையாக இருக்கிறது, அவரது பார்வை எவ்வளவு தெளிவாக இருக்கிறது, எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றால், நான் ஒரு ரிச்சர்ட் யேட்ஸ் கதை படித்துக் கொண்டிருக்கும்போது, என் வேலை எதையோ செய்வதற்காக என் மேசைக்குப் போகிறேன், திடீரென்று நான் வேறோருத்தனாக இருப்பதை உணர்கிறேன். நான் உலகை வேறு மாதிரி பார்க்கிறேன், இப்போது என்னிலிருந்து வரப்போகும் கதை யேட்ஸின் அந்த மாதிரியான தாக்கத்தால் வருவதாகச் சொல்ல முடியாது, ஆனால் நான் அங்கே அவரோடு இருக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவரது பார்வை எனது பார்வையாகிறது, நிஜமாகவே நல்ல எழுத்தாளர்களாக இருப்பவர்களின் விஷயம் அப்படிதான். நான் பார்ப்பது போலில்லாமல் வேறு மாதிரி உலகைப் பார்க்கும் எழுத்தாளரிடம் ஒவ்வாமை ஏற்படுவது ஓரே ஒரு சமயம்தான், அவர் உண்மையைச் சொல்லவில்லை என்றோ அவர் தான் நிஜமாகவே நம்பாததை எழுதுகிறார் என்றோ ஏதோ ஒரு காரணத்தைத் தொட்டு எனக்கு ஒரு எண்ணம் வரும்போது என்னால் அந்த எழுத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. அது ஏதோ ஒரு பாவனை அல்லது அந்த மாதிரி ஏதோ ஒன்று என்ற எண்ணம் வருகிறது. அப்படி ஏதாவது நடப்பதாகத் தோன்றினால் ஈடுபாடு விட்டுப் போய்விடுகிறது. ஆனால் யேட்ஸ் மாதிரி ஒருத்தர் அல்லது ஆலிஸ் மன்ரோ மாதிரி ஒருத்தர்…

௦௦

படைப்பூக்கம் மற்றும் எழுத்தாள- வாசக கடமைகள் குறித்து ரிச்சர்ட் ரூஸோ ஸ்ப்ளாஷ் ஆஃப் ரெட் என்ற தளத்தில் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:

உங்கள் எழுத்தில் உங்களுக்கு மிகவும் நிறைவளிப்பது எது, எழுத்தின் மிகப் பெரிய சவால்கள் என்ன?

என்னைப் பொருத்தவரை எழுத்துக்கும் என் எண்ணங்களைப் பிறருக்குச் சொல்வதற்கும் ஒரு தொடர்புமில்லை. உண்மையில் என்ன நினைக்கிறேன் எனபதைக் கண்டுபிடிப்பதற்காகதான் நான் எழுதுவதே. நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன். பலர் போல் எனக்கும் ஏராளமான கருத்துகள் இருக்கின்றன. ஒரு கிளாஸ் வைனும் நல்ல பேச்சுத் துணையும் கொடுத்துப் பாருங்கள். அப்புறம் இன்னொரு கிளாஸ் வைன் கொடுங்கள், இன்னும் ஏராளமான விஷயங்கள் குறித்து இன்னும் ஏராளமான கருத்துகள் எனக்கு இருப்பது தெரியும். பிரச்சினை என்னவென்றால், இந்தக் கருத்துகள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று , என் கருத்து தவறாக இருக்கும் – நான் அதைப் பற்றி பொறுப்பாக யோசித்திருக்க மாட்டேன். அல்லது அது சரியாக இருக்கும், ஆனால் அதை நான் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துக் கொண்டிருப்பேன் (அதாவது, ஏதோ ஒரு கட்டத்தில் நான் அதைப் பற்றி ஆரம்பம் முதல் முடிவு வரை நன்றாக யோசித்திருப்பேன், ஆனால் அது கெட்டித்து இப்போது டின்னர் பார்ட்டி செட் பீஸ் மாதிரி பயன்பட்டுக் கொண்டிருக்கிறது).

உண்மையான சிந்தனையில் இன்னும் நல்ல விநயம் இருக்கும். அதன் துவக்கம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலாக இருக்கும். உண்மையான சிந்தனையும் உண்மையான எழுத்தும் அறிந்திருப்பதால் பிறப்பதல்ல, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பிறக்கின்றன. நீங்கள் எழுதிய ஒரு வாக்கியம் உங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அது எப்போதும் அதே கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்பது போல் இருக்கிறது: இது மெய்யா? இதை நான் நிஜமாகவே நம்புகிறேனா? என் வாழ்வனுபவத்தோடு இது ஒத்துப் போகிறதா, அல்லது நாலு பேர் ஏற்றுக் கொண்ட விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேனா?

ஒரு எழுத்தாளனின் அன்றாட வேலை ஒரு போலீஸ்காரனின் வேலை போன்று இருக்க வேண்டும். எந்த இரு நாட்களும் ஓரே மாதிரி இருக்காது. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்தாயிற்று, உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது பாதுகாப்பானதல்ல, ஏன், அந்த எண்ணம் உங்கள் உயிரையும் பறிக்கலாம். மிகச் சிறந்த நாட்கள் ஆச்சரியங்கள் நிறைந்தவை, உங்கள் கணிசமான அனுபவம் அவற்றை அடையாளம் கண்டு, உள்வாங்கிக் கொண்டு, புதிதெனப் புரிந்து கொள்ள உங்களை அனுமதித்திருக்கிறது.

ஒரு கதையை எழுதுவதில் அதன் எழுத்தாளனின் பொறுப்பு என்ன? அதே போல், ஒரு கதையை வாசிக்கையில் வாசகனின் பொறுப்பு என்ன?

ஒரு எழுத்தாளனின் முதன்மை கடமைகள் மகிழ்விப்பதும், அறிவுரைப்பதும்தான் (to entertain and instruct). மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கே இது போதுமான பொறுப்பாக இருக்கும், வாழ்நாள் நெடுக தாங்கக்கூடியவை. சிறந்த வாசகர்கள் இரு முரண்பட்ட அடிப்படை கோட்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும்: தாராளத்தன்மை, கறாரான விமரிசனப் பார்வை. தாராளத்தன்மை என்று சொல்லும்போது நான் எதைச் சொல்கிறேன்? ஒரு எழுத்தாளனின் அடிப்படை ஊகங்களை ஏற்றுக் கொள்ள வாசகன் தயாராக இருக்க வேண்டும். வாம்பயர்கள் கிடையாது என்பதை பலரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் குறிப்பிட்ட இந்த ஒரு கலைப்படைப்பின் நோக்கங்களுக்காக மட்டும், அந்த நம்பிக்கையைத் தற்காலிகமாக தள்ளி வைப்பது வாசகனுக்கே நன்மை செய்வதாக இருக்கும். எனக்கு ரொமான்ஸ் நாவல்கள் பிடிக்காது என்று சொல்லும் வாசகன் ஜேன் ஆஸ்டன் நாவல்களைத் தனக்கு மறுதலித்துக் கொள்கிறான். துப்பறியும் கதைகளை நான் வெறுக்கிறேன் என்று சொல்பவன் தனக்கு ரேமண்ட் சாண்ட்லர் இல்லை என்ற நிலையை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் மறுபக்கம் பார்த்தால், அந்த எழுத்தாளனுக்கு ஒரு சில ஊகங்களை தாராள மனதுடன் அனுமதித்தபின், ஆஸ்டன், சாண்ட்லர் போன்ற எழுத்தாளர்கள் நிலைநிறுத்தியுள்ள உயர்ந்த தரம் இருக்க வேண்டும் என்று அவனை வலியுறுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு.

0000

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.