I
ஆறு வயதில் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொண்டாடப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் ஆடிஷன் வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஒரு மினி திரைத்தாரகையாக ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன். பின்னர் இயக்குநரின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா பேசிக்கொண்டிருந்தார்கள். அதை வைத்தோ, என்னுடைய முகத்தை வைத்தோ, என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆறு வயதில் நான் எப்படி இருந்தேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயது புகைப்படம் இருக்கிறது. அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. குண்டு கன்னம்; கண்ணாடி போடாமல் மலங்க மலங்க விழிக்கிறேன்; வட்ட முகம்; நிச்சயமாக நானில்லை. ஆனால், அது நான்தான். “நான் மாறிக் கொண்டேயிருந்தால், எவனாக நான் இருந்தேனோ, அது நானில்லை” – ரில்கே சொன்ன கதை இது. (Rilke, The Notebooks of Malte Laurids Brigge). நான்- எல்லாம் மாறும்போதும் எது மாறுவதில்லை? – இந்த பாரடாக்ஸை அணுக முயற்சிக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் (Richard Linklater). இதற்கு முன் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை.
பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்ட படம். நான் சினிமாவில் நடிக்க வந்தபோது எனக்கு இருந்த வயதைவிட ஒரு வயது குறைந்த, என்னைப் போன்ற ஒரு ஐந்து வயது பையனில் துவங்கி, அவனின் பதினேழு வயது வரை நிகழும் வாழ்வைச் சொல்கிற படம் – பாய்ஹுட் (Boyhood).
மணி ரத்னத்தின் நாயகன் முதல் ஹாலிவுட் வாழ்க்கை வரலாறுகளான ‘ஜே, எட்கர்’ வரை பல்லாயிரக்கணக்கான படங்களில், இந்த மாதிரி வளர்ச்சியைக் காட்டி வந்திருக்கிறார்களே! இந்த மாதிரி ஒன்று வந்ததில்லை என்று சொல்லும்படி இதில் என்ன புதியதாக இருக்கிறது?
திரைப்படத்தில் நடிப்பவர் எல்லோருமே பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தில் உழன்றிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆண்டுகளாக படத்தயாரிப்பு என்றாலும், மொத்த படப்பதிவும் 39 நாட்கள் மட்டுமே. ஒரு வருடத்திற்கு பதினைந்து நிமிஷம் என்று படம் பிடிக்கப்பட்டு, பன்னிரெண்டு ஆண்டுகளை மூன்று மணி நேரமாக குறுக்கியிருக்கிறார் இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர்.
இதற்கு முன் Michael Apted பன்னெடுங்காலமாக சிலரைப் பின்தொடர்ந்து “Up” என்னும் தொடரை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ஆனால், எவரும் பொழுதுபோக்குப் படமாக எடுத்ததில்லை. கால நேர வர்த்தமானத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஆண்டி வாரோல் (Andy Warhol) எடுத்த Empire, Alexander Sokurov எடுத்த Russian Ark, Christian Marclay எடுத்த The Clock போன்றவை குறிப்பிடத்தக்கவை.
படத்தின் கதையும் அது எடுக்கப்பட்ட விதமும் இதெல்லாம் ஒரு மேம்போக்கான வணிக சினிமா வர்த்தக உத்தியாக இல்லாமல் காப்பாற்றுகின்றன. .படத்தின் கதை என்ன? விவாகரத்து ஆன கணவன் மனைவி; அவர்களுக்கு மூத்தவள் பெண் குழந்தை; இரண்டாமவன் மேஸன் – தலைப்பின் நாயகன். இவர்கள் நால்வரின் பன்னிரெண்டு ஆண்டுகால வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம்.
படம் பார்க்கும் அனைவரையும் ‘இது என்னுடைய கதை’ என உணர வைத்திருப்பதுதான் லிங்க்லேட்டரின் சாமர்த்தியம். தந்தையாக மகளுக்கு பாடம் எடுக்கும் காட்சி ஆகட்டும்; இளம்பிராயத்தில் செய்த சோதனைகளை பிரஸ்தாபிப்பதில் ஆகட்டும்; வீட்டை தூசி தட்டு என்றவுடன் கோபம் பொங்குவது ஆகட்டும்; தலைமுடியை ஒட்ட வெட்டி சம்மர் கட் ஆக்குவது ஆகட்டும்; ப்ரீமியர் பத்மினி போன்ற லொட லொடா பந்தா காரில் இருந்து ஸ்டைலான ஹோண்டா வேனுக்கு மாறும் ஆண் ஆகட்டும்; தனக்குத் தருவேன் என வாக்குறுதி தந்த காரை விற்றது அறிந்து வெடிக்கும் மகன் ஆகட்டும்; எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன், எல்லோரையும் நான் அறிவேன். என்னைப் போல் எண்ணற்றவர்களின் உள்ளார்ந்த தருணங்களை சாவகாசமாக மீட்டெடுத்திருக்கிறார் லிங்க்லேட்டர்.
திரைப்படத்திற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். பாய்ஹுட் என்றால் இளம்பிராயம். ஆனால், தாய்மை என்றோ குடும்பம் என்றோ வாழ்க்கை என்றோ எப்படி வேண்டுமானால் தலைப்பாக்கி இருக்கலாம். இயக்குநர் லிங்க்லேட்டர் அசலாக வைக்க இருந்த நாமம் ‘12 ஆண்டுகள்’. ஆனால், கிட்டத்தட்ட அதே தலைப்பில் ‘12 ஆண்டுகள் அடிமை’ (12 years a slave) சென்ற வருடம் வெளியானது; சில பல ஆஸ்கார்களும் தட்டிச் சென்றது. பன்னிரெண்டு ஆண்டுகளாகப் படம் பிடித்ததில் படத்தின் தலைப்பு பறி போய் விட்டது. அதனால் என்ன… நல்ல படம் கிடைத்திருக்கிறது.
லிங்க்லேட்டரின் படங்கள் எப்பொழுதுமே மதர்ப்பான உலகத்தில் நிகழ்பவை. அவரின் ‘பிஃபோர் சன்ரைஸ்’, ‘பிஃபோர் சன்செட்’, ‘பிஃபோர் மிட்நைட்’ போன்றவற்றில் நாயகனோ நாயகியோ விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க வெளியூர் சென்றிருப்பார்கள். பரஸ்பரம் உரையாடிக் கொள்வதெல்லாம் பதினைந்து நிமிடங்களுக்குக் குறையாமல் ஒரே சீராக, ஒரே காட்சியாக, அப்படியே தொடரும். அவ்வளவு நெடிய வசனங்களை மனனம் செய்வது சிரமம். எனவே, அதில் இயல்புத்தன்மை மிகுதியாகப் புலப்படும். இயல்பாக இருந்தாலும், உள்பொதிந்த வாதங்களுக்கும் புத்திசாலித்தனங்களுக்கும் எவ்வித குறைபாடும் இருக்காது. இந்த ‘பாய்ஹுட்’ படத்தில் அவ்வளவு நெடிய ஒரே டேக் கொண்ட காட்சிகள் குறைவு. எனினும், அடர்த்திக்கும் எதார்த்தத்திற்கும் எவ்வித வஞ்சனையும் வைக்கவில்லை.
இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் தாத்பர்யம், ‘திரைப்படம் என்பது நிஜ வாழ்க்கை; அதன் அலுப்பான நிகழ்வுகளை மட்டும் வெட்டி விட வேண்டும்! என்பதுதான்.’ லிங்க்லேட்டர் அப்படியே உல்டா. இந்தத் திரைப்படத்தில் சகஜமான நிகழ்வுகளும் சாதாரணமான சம்பவங்களும் மட்டுமே இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், அலுக்கவே இல்லை.
II
இந்த வருடம் 2014. மேஸன் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் வருடம் 2014. அவனுடைய ஐந்தாவது வயதில் திரைப்படம் தொடங்குகிறது. அப்படி பார்த்தால், கதை ஆரம்பிக்கும் வருடத்தை 1999 என்று சொல்லலாம்.
தொண்ணூறுகளின் இறுதியில் அமெரிக்கா சடாரென்று மாறிக் கொண்டிருந்தது. அப்பொழுது, கார் தயாரிப்பு, ஆடைத் தயாரிப்பு, கணினித் தயாரிப்பு என எல்லா வேலைகளும் டாக்காவிற்கும் சென்னைக்கும் ஷாங்காய்க்கும் கை மாறிக் கொண்டிருந்த காலம். படித்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்கும். படிக்காவிட்டாலும் அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்னும் நிலை மாறிவிட்டிருந்தது. இயந்திரகதியில் வேலை செய்ய இயந்திரங்களே இருக்கிறது. அசுரத்தனமாக இருபத்து நாலு மணி நேரமும் நெற்றி வியர்வை சிந்தும் உழைப்பிற்கு சீனர்களும் இந்தியர்களும் தெற்காசியர்களும் இருக்கிறார்கள். எனவே, அமெரிக்காவுக்கு இருக்கையில் உட்கார்ந்து யோசிக்கும் கணக்காளர்களும் கணினியாளர்களும்தான் தேவைப்பட்டார்கள்.
கதையின் துவக்கத்தில் மனைவி கணவனைப் பிரிகிறாள். பட்டப்படிப்புக்குச் செல்ல நினைக்கிறாள். கல்லூரியில் மேற்படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் அமரும் தொலைநூர திட்டத்தை செயலாக்கும் முதற்படியில் நிற்கிறாள். அவளுக்கு புருஷனின் துணை தேவையாகவே இல்லை. வாழ்க்கைத் துணையாக முதலில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறாள். அவன் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா கொடி தூக்கிய வேளையில் பிறந்தவன். சரஸ்வதி கடாட்சத்தை விட துர்க்கையின் பலம் கொண்டு, வாழ்க்கையை அணுகுபவன். முரட்டுப்பிடியான வேலை, உடல் பராக்கிரமம் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைக்கும் இளவயதினன்.
இவளுக்கோ அமெரிக்கா மாறிவருவது புரிகிறது. டௌ ஜோன்ஸையும் நாஸ்டாக்கையும் பார்த்தால் அமேசான் பங்குகள் மூன்று மடங்கு பெருகிறது; ஈ-பே பங்குகளோ சந்தையில் நாளொரு நானூறு சதவிகிதம் வளர்கிறது. குடும்பத் தலைவனை நம்பி பெண்கள் காலம் தள்ளும் நிர்ப்பந்தம் இல்லாத சூழல் வந்துவிட்டது. பதின்ம வயதில் கட்டிய காதல் கணவனோ, வாழ்வதற்கான பொருளை ஈட்டும் வழியைத் தேடுவதை விட்டுவிட்டு, வாழ்க்கையின் பொருளைத் தேடுகிறான். அவன் அலாஸ்கா செல்கிறான். அவள் கல்லூரிக்கு படிக்கச் செல்கிறாள். கதையின் நாயகன் குட்டிப் பையன் மேஸன் இதையெல்லாம் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
முதல் திருமணம்தான் தோல்வி. இரண்டாவதில் சர்வகலாசாலை குருவான பேராசிரியரையே கைபிடிக்கிறாள் மேஸனின் அம்மா. படிப்புதான் ஆதர்சம் என்றாகி விட்டது. மெத்தப் படித்து, அருமையாக தத்துவத்தையும் உளவியலையும் சரித்திர பின்னணி கொண்டு விளக்கும் ஆசிரியரைவிட சிறந்த தேர்வு எதுவாக இருக்க முடியும்! அவருக்கும் இவளைப் போலவே, ஒரு மகள், ஒரு மகன். வயது வித்தியாசமும் இல்லை. வீட்டில் ஒரு ஆண் நடமாடினால் தனக்கும் உதவியாக இருக்கும். காலையில் வேலை; மாலையில் வாசகசாலை; இரவில் கல்லூரிப்பாடம்; அதன் நடுவே கொஞ்சம் ஓய்வு என்று இருக்கும் வாழ்க்கையில், அவளுக்கும் ஆணின் துணை தேவைப்படுகிறது.
இப்பொழுது 2002, 2003 ஆகிவிடுகிறது. அமெரிக்காவின் வீழ்ச்சித் தருணங்கள். 2001ல் உலக வர்த்தக மையம் தரைமட்டமாகிறது. அதன் பின்னர் சிரமதசை ஆரம்பிக்கிறது. கல்லூரிகளுக்கும் மேற்படிப்புக்கும் கோடிக்கணக்கான நிதியை வருடந்தோறும் அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கும். அந்த நிதி எல்லாம் இராக் போருக்கும் ஆஃப்கானிஸ்தான் டோரா போரா மலைகளில் ஒசாமா பின் லாடனைத் தேடுவதற்கும் திசைமாறிப் போகிறது. மேலும், இணையம் தோன்றியதால் நிறைய பேர் உயர்படிப்பு பெறுவதற்காக கல்லூரி செல்லத் துவங்குகிறார்கள். ஆனால், கல்லூரி செலவுகள் எக்கச்சக்கம் என்பதால் வலை வழியாக பாடம் படிக்க சென்றுவிடுகிறார்கள். முன்பு உற்பத்தி சார்ந்த வேலைகளும் தொழிற்சாலைகளும்தான் அமெரிக்காவில் இருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த 2003, 2004களில் கணினி வேலைகளும் சட்டப்படிப்பு வேலைகளும் கூட இந்தியாவிற்கும் ஃபிலிப்பைன்சிற்கும் ஏற்றுமதி ஆக ஆரம்பித்தன. அமெரிக்காவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் மூழ்கத் துவங்கிய காலகட்டமாக இதைச் சொல்லவேண்டும்.
மேஸனின் புதிய தந்தையும் வேலையிழக்கிறார். விளக்கு வைப்பதற்கு முன்பே குடிக்க ஆரம்பிக்கிறார். குடித்தபிறகு அனைவரையும் திட்டுகிறார். தன் மகன் என்றோ, இறக்குமதியான இன்னொருவரின் மகள் என்றோ எவரையும் விட்டுவைப்பதில்லை. மதுவீழ்ச்சியின் அடுத்த கட்டமாக கை நீள்கிறது. வெறுமையும் இயலாமையும் மட்டுமே அவரிடம் நிறைந்திருக்கின்றன. ஆசிரியராக சிறப்பாக பணியாற்றக் கூடியவர். திறமைசாலிகளும் கடனாளிகளாக பயனற்றவர்களாக நிற்கும் நிர்க்கதியை அவரின் கதாபாத்திரம் குறிக்கிறது. அமெரிக்காவே வீடற்று பிரோசாக், விகோடின் போன்ற உளச்சோர்வு போக்கிகள் பின் சென்று கொண்டிருப்பதை இவர் உணர்த்துகிறார்.
இவரின் பிணையக்கைதிகளாக சிக்குண்டிருக்கும் மகனையும் மகளையும் மீட்கும் காட்சியும் வரலாற்றுப் புதினம் போல் சொல்லப்பட்டிருக்கிறது. அரசு பாதுகாப்பே மேஸனின் அம்மாவிற்கு உதவுகிறது. அரசு ஊழியர் ஒருவர் துணைக்கு வர, மேஸனையும் அவனுடைய அக்காவையும் குடிகார இரண்டாவது புருஷனின் வீட்டுச்சிறையில் இருந்து மீட்டுச் செல்கிறாள். இருபதாண்டுகள் முன்பு இத்தகைய உதவிகளை பெண்களுக்கு அரசாங்கம் பெரிதாக செய்யவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தும், இத்தகைய சிக்கல்களை, ‘குடும்பப் பிரச்சினை’ என்றே அரசும் காவல்துறையும் கருதியது. நாலு சுவற்றுக்குள் நடக்கும் பிணக்குகளுக்குள், நாங்கள் நுழைய மாட்டோம் என ஒதுங்கியே இருந்து, அடித்து உதைக்கும் புருஷன்களுக்கு அரணாக இருந்தது.
மேஸனின் அம்மாவின் அடுத்த தேர்வும் தோல்வியிலேயே முடிகிறது. இவர் ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் போருக்குச் சென்றவர். அப்போதைய அமெரிக்காவில் ஒரு வேலை மட்டுமே எளிதாகவும் உத்தரவாதமாகவும் கிடைத்தது. நடுவண் அரசின் படையில் சேர்வது. ராணுவத்தில் சேர்ந்து சண்டைக்குப் போய், உயிரோடு திரும்பி வந்தால், கல்லூரிச் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். அப்படி இராணுவத்தில் சேர்ந்து, சக தோழர்களின் மரணத்தை அன்றாடம் சந்தித்துத் திரும்பியவனை திரையில் பார்க்கிறோம். இராணுவ அதிகாரமாக, ‘எல்லோரும் எப்பொழுதும் அடிபணிய வேண்டும். நேரப்படி ஒழுங்காக காரியங்கள் நடக்க வேண்டும்.’ என்னும் கொள்கை உடையவன்.
இப்படி நாடு திரும்பிய எண்ணற்றவர்களின் மனச்சிக்கல்களை அன்றாடம் அமெரிக்கா எதிர்கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று கொண்டும், கொன்றபின் அவர்கள் திருப்பித் தாக்குவார்களோ என்னும் அச்சத்துடனும், குடும்பம் என்னும் கட்டமைப்பு இல்லாத தனிமையுடனும் பல்லாண்டு காலம் தூரதேசத்தில் வாழ்ந்து திரும்பியவர்கள். இவர்களில் சிலர் மனநிலை ஊக்கமடைவதற்காக ஒவ்வொரு நாளும் பத்து விதமான மாத்திரைகளை மூன்று வேளையும் உட்கொள்ளுகிறார்கள். மாத்திரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் தான் கொலை செய்தவர்களை நினைத்து மனதில் சுயவெறுப்பு; உட்கொண்டாலோ நிச்சலனமான உணர்வினால் எழும் ஊக்கமற்ற உதவாக்கரை இருப்பு. இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து குடிபோதையில் அடைக்கலம் புகுகிறான். ‘பாய்ஹுட்’ ஒரு வரலாற்று ஆவணமாக, அமெரிக்காவின் பயணத்தையும் அதில் உலா வரும் மாந்தர்களையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.
ஆனால், இவையெல்லாம் இயக்குநர் லிங்க்லேட்டர் முன்பே அனுமாணித்திருக்க மாட்டார். அன்றாட காலத்தின் கூறுகளை திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சித்தரித்திருப்பது அமெரிக்காவை ஒரு சரித்திரப் புனைவைப் போல் அளவிட்டு நம் முன் நிறுத்துகிறது.
முதற்காதல் எப்பொழுதுமே பசுமையானது. ‘அவ உன்ன பார்க்கிறா’ என்று நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். நாமும் ரோஜாவும் கையுமாக படத்திற்கு அழைத்துச் செல்ல கூப்பிடுவோம். பள்ளிக்கூடமே இன்பச் சுற்றுலா போகையில் நாம் இருவர் மட்டும் தன்னந்தனியே குற்றாலத்துத் தேனருவியில் நிற்பது போல் உணர்வோம். ஏதோ கேஸட் கடையில் ’என்ன விலை அழகே!’ ஒலித்தால் அது நமக்கே நமக்காகப் பாடுவது போல் உணர்வோம். அந்தப் பசுமையையும் படத்தில் தவழ விட்டிருக்கிறார்கள்.
காதலியைத் தேர்ந்தெடுக்கும்போது நம்முடைய தாயை நினைவுகூரும் குணாதிசயமோ தோற்ற ஒற்றுமையோ நம்மை வசீகரிக்கும். இதில் மேஸனின் பள்ளிப் பருவத்தின் காதலியைப் பார்த்தால், மேஸனின் இளவயது அம்மாவின் தோற்றத்தை அச்சு அசலாக உரித்து வைத்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பன்னிரெண்டு ஆண்டு காலம் படம் எடுத்ததால், தாயார் வேஷத்திற்கும் மகள் வேஷத்திற்கும் ஒரே நடிகையைப் போடும் வசதியும் லிங்க்லேட்டருக்கு கிடைக்கவில்லை.
படத்தின் இறுதிக்காட்சி என்னுடைய மேலாண்மை வகுப்பில் நாங்கள் செய்த தொடர்பாடல் சோதனையை நினைவுறுத்தியது. இருவர் அமர்ந்திருப்போம். ஒருவர் முன்னோக்கி நகர்ந்தால், இன்னொருவரும் தன்னுடைய இடத்தை விட்டு அசைந்து கொடுப்பார். ஒருவர் புன்முறுவல் பூத்தால், இன்னொருவரும் கொஞ்சமாவது சிரிப்பார். உங்களின் உடல்மொழி, இன்னொருவரை நிச்சயமாக பாதிக்கும். கையை இறுகக் கட்டி, கால் மேல் கால் போட்டு, கமுக்கமாக இருப்பவர்களை, எப்படி இளக வைப்பது என்று செயல்முறையில் விளக்கினார்கள். அதே போல், பரிச்சயமற்ற தோழியிடம் போலித்தனம் கிஞ்சித்தேனும் காட்டாமல், பாசாங்கற்ற உரையாடல் நிகழ்த்துகிறான மேஸன். அது நடிகன் என்றே அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. லிங்க்லேட்டர் சொன்ன வசனத்தை அவன் பேசிக் கொண்டிருக்கிறான் என்றும் உறைக்கவில்லை. அந்த உடல்மொழி எல்லாம் இயக்குநர் அபிநயித்து நாலைந்து டேக் எடுத்திருப்பார் என்றும் எண்ணவில்லை.
ஏன்?
திரைப்படங்களில் எல்லாமே நடிப்பு. நிஜ மனிதர்கள் அல்ல; நடிகர்கள் அவர்கள். நடப்பதும் நிஜம் அல்ல; பேசுவதும் எவரோ எழுதிக் கொடுத்து பத்து முறை ஒத்திகை பார்த்த வசனம். இதெல்லாம் ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அன்னியப்படுத்தி, திரையை இன்னும் தூர நிறுத்தி வைக்கும். இந்தப் படத்தில் நான் சந்தித்த நிகழ்வுகளான அமெரிக்க தேர்தல்களும், வேலை பறிபோன சிக்கல்களும் வரலாறாக இல்லாமல் கூடவே பயணிக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வருடங்கள் சென்று வயது ஆக ஆக, குணாதிசயங்களை மாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், தோற்றத்திலும் உருமாறுகிறார்கள். அதன் நடுவே இவர்கள் நடிகர்கள் அல்ல… நான் சந்தித்தவர்கள்தான் என்னும் நம்பகத்தன்மையும் ஒன்றியைந்து அவர்களின் முடிவுகளை நினைத்து ’உச்’ கொடுவதும், ‘ஆ’ வென வாய்பிளப்பதும் தற்செயலாக நிகழ்கிறது.
கலைப்படங்களுக்கே உரிய அமைதியான நடை கொண்டிருக்கிறது. திரள்மந்தைக் கூட்டத்திற்கான காதலும் இருக்கிறது. தலைப்புச் செய்திகளும் உலக நிகழ்வுகள் எவ்வாறு கதாபத்திரங்களை பாதிக்கின்றன என்பதும் உண்மைத்தன்மை கொடுக்கின்றன. என்னையும் இந்த அரசியல் சம்பவங்கள் பாதித்திருக்கின்றன. என்னுடைய முடி நரைத்த கதையையும் தொப்பை தோன்றியதையும் அரும்பு பூனை மீசை முளைத்ததையும் சொல்வதால் மட்டும் இந்தப் படம் இந்தக் கணம் எனக்கு உலகின் முக்கிய படமாகவில்லை. இப்பொழுதைய தருணத்தைப் போராட்டமாக எண்ணி வருந்தாமல், கொண்டாடி மகிழ் என்பதை எப்படியோ உணர்த்துகிறது இந்தப் படம். பால்மணம் மாறா பாலகன் ஒருவன் வயசுக்கு வருகிறான்
III
தன்னைப் புற்றுநோய் முழுமையாக ஆட்கொள்ளக் கொள்ள “என்னிடம் உடம்பு இல்லை; நானே உடம்பு” என்கிறார் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ். உடல் என்பது நாம் வசிக்கும் இல்லம் அல்ல. மூளை கொண்டு சிந்திக்கும் எந்திரத்தின் உறைவிடம் அல்ல. ஆன்மா உறைந்திருக்கும் வாசஸ்தலம் அல்ல. நான் என்பது நான்தான். இதைத்தான் ‘பாய்ஹுட்’ சொல்லவருகிறது. படத்தின் இறுதியில் வரும் வசனம்- “இது நிரந்தரம்! இக்கணம்… எப்போது பார்த்தாலும் இப்பொழுதிலேயே, நிகழ் கணத்திலேயே இருக்கிறோம்… இல்லையா?” – பன்னிரெண்டு ஆண்டு காலக் கதை இப்படித்தான் முடிகிறது. கடந்த காலம் என்பது இறந்த காலம். நாம் நமக்குள்ளேயே ஓரிகமி மாதிரி நம் கடந்த காலத்தை சுருட்டி வைத்திருக்கிறோம்.
இயக்குநரின் முந்தைய ”பிஃபோர்” திரைப்பட வரிசைகளின் முக்கியாம்சமாக, மாறாத தனிமனிதத்தன்மையை சொல்லலாம். “பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் பிறவிக்குணம் என்று ஒன்று உள்ளே கிடக்கிறது. என்னதான் அனுபவமும் பட்டறிவும் வயதும் நம்மை மாற்றும் என்றாலும் பெரிதாக ஒன்றும் அசைத்துவிடுவதில்லை” என்று அந்தப் படங்களின் நாயக கதாபாத்திரம் பேசும் – anyclip.com
பாய்ஹுட் படம் இதற்கு நேர் எதிர். சின்ன வயதில் முக்கியமாகப் படும் விஷயம் கொஞ்சம் வளர்ந்த பிறகு பொருட்படத்தக்கதாக இல்லை. காலம் மட்டுமல்ல, இடமும் நம் அனுபவங்களைத் திருத்தி வாசிக்கச் செய்கிறது, நம் வாழ்வுக்குப் புது அர்த்தம் தருகிறது – இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருகிறேன். அதே உடம்புதான். ஆனால், இடத்திற்கேற்ப சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஈடுபாடுகளும் மாறுகின்றன.
நம்மை யார் நினைவு வைத்திருப்பார்கள்? என்னுடைய குழந்தைப் பிராயத்தில் மடியில் வைத்து எடுத்த படத்தை வைத்து அம்மாதான் பால்ய காலத்தை நினைவு வைத்திருக்கிறார். அப்பாவோடு போன இடங்களை வைத்து அவர் நினைவு கூர்வார். அவரவர் காலம் கழிந்தபின் எப்படி நினைவு கூரப்படுவோம்? பாய்ஹுட் நாயகன் மேஸன் ஒளிப்படமாக எடுத்துத் தள்ளுகிறான். ஒவ்வொரு படமாக, காலத்தை உறையச் செய்கிறான். பன்னிரெண்டு ஆண்டு கால வாழ்வை நினைவோடையாக, சம்பவங்களாக, புகைப்படங்களாக நினைவு கூரலாம். நமக்கு பொருள் ஈட்டி வாழ்வது அர்த்தமாக இருக்கலாம். இன்னொருவருக்கு வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பது பிறருக்கு அர்ப்பணிப்பாக இருக்கலாம். நம் அனுபவங்களை வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பயணமாக்கிக் கொள்வதே பாய்ஹுட் சொல்ல முயற்சிக்கும் கதை.
இயக்குநர் லிங்க்லேட்டர் மேஸன் ஆக நடித்த கால்டிரேன் (Coltrane) உடன் பல முறை உரையாடி, இறுதியில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.. கால்டிரேனின் பெற்றோருடன் பல உரையாடல்கள் நிகழ்த்தி, அவர்களின் மனநிலையும் அறிந்து, மேஸன் கதாபத்திரத்தில் பன்னிரெண்டு கால ஒத்துழைப்பை இந்தப் பையனும் இவர்களின் பெற்றோரும் தருவார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார் லிங்க்லேட்டர்.
மேஸனின் அக்கா கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்க்லேட்டரின் மகளே நடித்திருக்கிறார். சிறிய வயதில் எப்பொழுது பார்த்தாலும் ஆடலும் பாடலுமாக இருந்த மகளை சமந்தா ஆக்கி இருக்கிறார். வயது ஆக ஆக, பதின்ம வயதுகளில் அந்தக் கதாபாத்திரத்தில் தொடர மகள் முரண்டு பிடித்திருக்கிறார். இருப்பினும் எப்படியோ வலியுறுத்தி, சமந்தா ஆக நடிக்க, தொடர வைத்திருக்கிறார்.
இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் நடக்கும் நிஜ சம்பவங்களும் ஆங்காங்கே தலை காட்டுகின்றன. படத்தின் சம்பவங்கள் போலவே இதிலும் எந்தவித கடுமையான திருப்பங்களோ, அசம்பாவிதங்களோ இல்லை. ஹாரி பாட்டர் புத்தக வெளியீடுகள் கொண்டாட்டமாக நிகழும். எல்லோரும் ஹாரி போட்டர் போலவும் ஹெர்மாயினி போலவும் ஆடை தரித்து உலா வருவார்கள். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு புத்தகம் விற்க ஆரம்பிப்பார்கள். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், வாசகர்கள் கால்கடுக்க நாள்கணக்கில் வரிசையில் காத்து நிற்பார்கள். அந்தக் கொண்டாட்டத்தை திரையில் கொணர்கிறார். அமெரிக்கக் கால்பந்து ஆட்டத்தைப் புகைப்படம் பிடிக்க கதாநாயகன் மேஸன் செல்கிறான். அந்த ஆட்டமும் கதையின் நடுவே வந்துபோகிறது. தேர்தல் சமயத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்னும் சம்பாஷணை வருகிறது. படம் பிடிக்கும்போது நிலவும் கருத்தும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நமக்கு அறியவருகிற கருத்தும் மாறி இருக்கலாம். அன்றைய நிலவரங்களை அவ்வப்பொழுது நுழைத்திருப்பது நம்முடைய எண்ணங்களின் சரித்திர தீர்மானங்களைத் துலாக்கோலாக எடை போட்டு அசைத்துப் பார்க்கிறது.
சாதாரணத் திரைப்படங்களில் காட்சியின் துவக்கத்தில் துப்பாக்கியைக் காண்பித்தால், காட்சி முடிவதற்குள் துப்பாக்கி வெடித்தாக வேண்டும் என ஒரு விதிக்கப்படாத கட்டாயம் இருக்கிறது. இயக்குநர் லிங்க்லேட்டர், அந்த மாதிரியெல்லாம் எந்தக் கட்டுப்பாட்டையும் இந்தப் படத்தில் வைத்துக் கொள்ளவில்லை. மேஸன் வண்டியோட்ட, பள்ளித்தோழி தன்னுடைய செல்பேசியில் ஃபேஸ்புக் புகைப்படங்களைக் காட்டுகிறார். படம் பார்க்கும் நமக்கோ, பதற்றம். சரிதான். வண்டி விபத்தாகப் போகிறது. தெளிந்த நீரோடை போல் செல்லும் கதையில் முதல் முறையாக அதீதக் காட்சி வருகிறது. குருதி பெருக, கை கால் போகப் போகிறது. சாலையில் கவனம் தேவை என்னும் போதனைக் கருத்து வைக்கப் போகிறார் லிங்க்லேட்டர் என எண்ணுகிறேன். ஃபேஸ்புக் படத்தைப் பார்த்துவிட்டு, அப்படியே தொடர்ந்து ஜீப்பை செலுத்திக் கொண்டிருக்கிறான் மேஸன். அந்தக் காட்சி முடிந்து விடுகிறது.
படம் நெடுக இது போல்தான். இயல்பான காட்சியமைப்பு. தினசரி நடக்கும் சம்பவம். பள்ளியில் படிக்கும்போது பீலா விடுவது; அணுக்கமான பதின்ம வயது தோழியோடு நெடுந்தூரம் பயணிப்பது; முதற் காதல்; அது பிரிவில் முடிவது; கணவனைத் தேர்ந்தெடுப்பதில் பெண்களுக்கு உள்ள சிக்கல்; இளமையான மனைவிகளைத் தேடும் ஆண்கள்; ஏரியோரமாக இயற்கையோடும் அப்பாவோடும் செலவழிக்கும் விடுமுறை; பாதுகாப்பான பாலுறவு குறித்த அறிவுரைப் பேச்சு… எல்லாமே நாம் எதிர்கொள்பவை. அவை மட்டுமே திரைப்படமாகக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்குமா? இருக்குமே என நிரூபித்திருக்கிறார் லிங்க்லேட்டர்.
நல்ல திரைப்படங்கள் வருவது அரிது. வித்தியாசமான திரைப்படங்கள் வருவது அதனினும் அரிது. முன்னோடியான முயற்சிகள் வருவது அரிதினும் அரிது. மூன்றும் ஒருங்கே ஒரேயிடத்தில் அமைந்திருக்கும் படம்தான் ‘பாய்ஹுட்’.
ஒளிப்பட உதவி – Show Film First, Slate, Indiewire, Boyhood| Facebook
//சிவாஜித்தனமான செயற்கையில்//