அதிகாலை ஒரு வெள்ளைக் கதவு

றியாஸ் குரானா

 

வடிவமைத்த திரைச் சீலையை
ஆற்றங்கரையில் விட்டு நெடுநதூரம் வந்த நான்,
பின்னர் திரும்பிப் பார்க்கிறேன்
பயப்பட ஏதுமில்லை
பிரச்சினையை கடந்துவிட்டேன்
எனினும், அதிக விலைகொடுக்க வேண்டியிருந்தது
எவைகளை இழக்க வேண்டியிருந்ததோ
அந்நிலையில்தான் ஏற்கனவே இருந்தேன்
முழு நேரமும்,
புல்வெளியில் அலைய வேண்டியிருந்தது
கைகளில் நிரம்பியிருந்து காட்டுப் பூக்கள்
இறந்த ஏதோவொன்றை மறைக்கிறது
எல்லோரும் திரைச்சீலையிலுள்ள
அழகிய வேலைப்பாடுகளை காட்சியாகப் பார்க்கின்றனர்
நான் கிடந்து போராட வேண்டிவந்தது
கட்டாயம் இங்கிருந்து விலகிப்போய்
திரும்பிவந்து இவர்கள் பார்க்க வேண்டும்
திரைச் சீலையில் சுருக்கம் விழுந்திருப்பதை
யாரும் ஒப்புக்கொள்ளவில்லை
அதிகம் பேர் அதன் கரையில்தான்
வாழ்வைத் தொடருகிறார்கள்
நானோ, சிறிது நேரமே தங்குகிறேன்
திரைச் சீலை மாட்டப்பட்ட
அந்த வெள்ளைக் கதவிற்குப் பின்னால்
எனது மகனின் கனமான கைப்பை மறைந்திருக்கிறது
வட்டமான பிரகாசிக்கும் கைப்பையை
அவன் இன்னும் தொட்டுத் தூக்கியதில்லை
ராணி தனது படுக்கையில்
தனித்து உறங்குகிறாள்
ம்…திறக்க வேண்டாம்
திரைச் சீலையை மகன் திறந்துவிட்டான்
வைகறை மெதுவாக வெளிப்பட்டது
இரவு என்பது, வெள்ளைக் கதவின் மீது
நான் போட்ட திரைச் சீலை
கவிதையில் தேர்ந்த உளவாளி எனில்,
எப்படித் தயாரித்தேன் என்பதன் அத்தாட்சிகளை
நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி: “கவிதைக்கும் அதன் வாசகனுக்கும் இடைப்பட்ட உறவு எத்தகையது என்று கருதுகிறீர்கள்?”

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.