பஷீர் பாய்
நான் அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் கணினியில் கதையோ கட்டுரையோ கவிதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் சென்று ‘ஹலோ’ என்றதும் திடுக்கிட்டு பார்த்தார்.
“ஒ, நீங்களா? கறிகாய் வாங்கப் போன என் மாமியார்தான் திரும்பி வந்துவிட்டாங்களோன்னு பயந்துட்டேன். அப்படி ஓரமா உக்காருங்க. அவங்க வரதுக்குள்ள இதை முடிக்கணும்”
“எதை சார்? கதையா, கவிதையா, கட்டுரையா?”
“ஓஹோ. என் படைப்புல இந்த மூணுத்துக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுதா? அப்படின்னா நான் இன்னும் உழைக்கணும்,” என்று சொல்லிவிட்டு கீபோர்ட்டை ஆக்ரோஷமாக தாக்க ஆரம்பித்தார் பேயோன். அரைமணி கழித்துதான் நிறுத்தினார்.
“நான் உங்கள வரச்சொல்லலையே? ஏன் வந்தீங்க?” என்று உபசரித்தார்.
“உங்க கிட்னி ஏதோ பிரச்னைன்னு படிச்சேன். அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்?”
“என் கிட்னிய கேக்க வந்தீங்களா?”
“இல்ல சார். நீங்க நல்லா இருக்கீங்களான்னு பாக்க வந்தேன். இப்போ யார் கிட்னிய வச்சிருக்காங்க?”
“என் கேரக்டர நீங்க புரிஞ்சிக்கவேயில்ல. அது சரி. நீங்க இந்த மாதிரி வந்து விசாரிக்கற ஆள் இல்லையே. இங்க எப்படி வந்தீங்க?”
“இது யாரும் தெரியாத தெருன்னு நினைச்சி நுழைஞ்சிட்டேன். அப்புறம் பாத்தா இங்க உங்க வீடு இருக்கு”
“என் வீடு எப்பவும் இங்கதான் இருக்கு”
“கதவு வேற திறந்திருந்தது. சரின்னு நுழைஞ்சுட்டேன்”
அப்பொழுது பேயோனின் நண்பர் லார்ட் லபக்தாஸ் உள்ளே வந்து, “பேயோன். நான் ‘All The King’s Men’ நாவலை ‘எல்லா ராஜாக்களும் ஆண்களே”ன்னு மொழிபெயர்ப்பு செஞ்சிட்டிருக்கேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
வேறொரு அறையிலிருந்து பையன் உரக்க கத்தும் சப்தம் கேட்டது. “எவ்வளவு பொத்திப் பொத்தி வளர்த்தாலும், நான் பக்கத்துல இல்லேன்னா இப்படிதான்..”
“உங்க மாமியார் இன்னும் ஊருக்கு போகலியா சார்?”
“உங்களுக்கு என்ன சார், மாமியார் உங்ககூட இல்ல. வேர்ல்ட் கப் பைனல் அன்னிக்கி சரியா கோட்ஸ் கோல் போடற சமயம் பாத்து டிவிய மறைச்சிட்டாங்க”
“எதுக்கு சார்?”
“அவங்க ரூம பெருக்கிட்டிருந்தாங்க”
“காலை ரெண்டு மணிக்கா?”
“ரீ-ப்ளே காமிக்கும்போதும் பெருக்கிட்டிருந்தாங்க,” அழுது விடுவார் போல் இருந்தது.
“அழுதாத்தான் பாரம் குறையும். துக்கத்தை மனசுலயே வெச்சுக்கிட்டா அப்புறம் அதுலேந்து மீண்டு வர்றது கஷ்டம்,” என்று சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் அவர் அதை ரசிக்கமாட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.
“ஒரு நிமிடம் இருங்கள்,” என்று கூறிவிட்டு உள்ளே சென்று ஒரு காபி கோப்பையுடன் திரும்பினார். “என் மனைவிக்கு இங்கிதம் கம்மி. இருவர் இருக்கிறோம் என்று ரெண்டு கோப்பை காபி கொண்டு வந்து விடுவார். காபிய ரசித்து குடிக்க தெரியாத உங்களுக்கு காபி குடுப்பது தண்டம். அதனால் எனக்கு மட்டும் ஒரு கப் காபி கொண்டுவந்தேன்”
“அந்த ஃபைல் நேம் மாத்தின கவிதையை வெளியிட்டாங்களா சார்?”
“எடிட்டர்ன்னா அவ்வளவு சீக்கிரம் ஏத்துப்பாங்களா? மறுபடி மறுபடியும் மாத்தச் சொன்னான். கடைசில poem7.docல வந்து நிக்குது. அடுத்த வாரம் வரும்.”
“உங்க கும்ப ராசி நாவல் வந்துவிட்டதா சார்? என் நண்பர் ஒருவர் கேட்டார். அப்படியே நீங்க மிச்ச ராசிகளை பற்றியும் புத்தகம் எழுதினால் அவர் ஐநூறு காபி வாங்கி மகள் கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு குடுக்கலாம் என்றிருக்கிறாராம். இதற்கு பிறகு ‘வாழ்க்கையை வெல்வதற்கு துணை புரியும் நவகிரகங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று ஒரு பப்ளிஷர் கேட்டார்”.
“நீங்க கிளம்புங்க”
“மறுபடியும் சந்திப்போம்”
“அவசியமில்லை” என்று சொல்லி வழியனுப்பினார்.