குண்டூசி

வெ. கணேஷ்

நான் உட்கார்ந்திருந்த இருக்கையின் மெத்தை மீது யாரோ சில குண்டூசிகளை தலைகீழாக குத்தி வைத்திருக்கிறார்கள். தெரியாமல் உட்கார்ந்து விட்டேன். சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் அந்த இருக்கையைத் தவிர வேறு இருக்கைகள் காலியாக இல்லை. எழுந்து நின்று கொண்டேன்.

வேலையில்லாதவர்கள் யாரோ இந்த வேலையை செய்திருக்க வேண்டும். உட்காரும் இருக்கையில் தலைகீழாக குண்டூசியை குத்தி வைத்தவர்களின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும்? நான் அவஸ்தை பொறுக்காமல் எழுந்து நிற்பதை குத்தியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ!

ரிசப்ஷனையும் உள்ளிருக்கும் ஹாலையும் கண்ணாடிச் சுவர் பிரித்தது ; உள்ளே இருபது முப்பது பேர் தத்தம் இருக்கையில் உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தனர் அல்லது வேலை செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக அந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

யாரைப் பார்க்க வந்தேனோ அவர் அமைதியாகப் பேசும் மனநிலையில் இருந்ததாக தெரியவில்லை. போனில் யாரையோ கத்தினார். பின்னர் அறைக்குள் நுழைந்த சக-ஊழியர் ஒருவரின் மேல் சத்தம் போட்டார். . நான்கைந்து நாட்களாக சவரம் செய்யாமல் முளைத்திருந்த முட்தாடியை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டிருந்தார். தன் உருவத்தை சாந்தமாக வைத்துக் கொள்ள அரும்பாடு பட்டார். நான் சொல்வதை சில நொடிகள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தவரின் கவனத்தை போனில் வந்த குறுஞ்செய்தியொன்று சிதறடித்தது. அடுத்த நிமிடம் நான் மீண்டும் ரிசப்ஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர் தன் மேலதிகாரியைப் பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டேன்.

ரிசப்ஷனில் காத்திருப்போரின் எண்ணிகை கூடியது மாதிரி இருந்தது. ஏற்கெனவே மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் இன்னும் உட்கார்ந்திருந்தார்கள். குண்டூசி இருக்கையின் விளிம்பில் ஓர் இளைஞன் பதற்றத்துடன் பல்லைக் கடித்தவாறு அமர்ந்திருந்தான். நேர் முகத்திற்கு வந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன்.

பத்து நிமிடங்கள் கழித்து அவர் வரவேற்பறைக்கு வந்தார். நான் இன்னும் அவருக்காக காத்திருந்தது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது போல் தோன்றியது. சலித்துக் கொள்பவர் போல அவர் பார்வை இருந்தது.

அதே அறைக்குள் மீண்டும் சென்றேன். அவர் மேஜையின் மேல் குவிந்திருந்த காகிதங்களின் உயரம் அதிகமாகியிருந்தது. மேலாக இருந்த ஒரு சில காகிதங்களில் கையெழுத்திடலானார். ஏற்கெனவே நான் அவருக்கு சொன்னவற்றை அவரிடம் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. ஒரிடத்தில் என்னை நிறுத்தினார். முதல் முறையாக அவர் முகத்தில் சிறு புன்னகை. நான் சொன்ன ஏதோ ஒன்று அவர் கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். அடுத்த நிமிடம் அவர் என்னை தன் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்தது.

அடுத்த நாள் நான் என் அதிகாரியை அழைத்துக் கொண்டு அதே அலுவலகத்திற்குச் சென்றேன். முந்தைய நாள் குண்டூசி குத்தப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். குண்டூசிகளை யாரோ எடுத்து உட்கார ஏதுவாய் செய்திருந்தார்கள்.

++++++

பல மாதங்களுக்குப் பிறகு அதே வாடிக்கையாளர் அலுவலகத்தின் வரவேற்பறை சுத்தமாக மாறியிருந்தது. ஜன்னல் ஏசிக்கு பதிலாக அறையின் உயரத்தில் அறை ஏசி பொருத்தப்பட்டிருந்தது. இருக்கைகள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தன. கண்களுக்கு குளிர்ச்சியாக வரவேற்பறை சுவர்கள் புது வர்ணம் பூண்டிருந்தன. வரவேற்புப் பெண்ணின் பின் புறமாக இருந்த கண்ணாடிச்சுவரில் புது டிசைன் அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குண்டூசி இருக்கை இருந்த இடத்தில் இப்போது வெறோர் இருக்கை. குளிர் பானம் வழங்கப்பட்டது. அதைக் குடித்து முடிக்குமுன்னரே உள்ளே செல்ல அழைப்பு வந்தது.

அவர் மேஜை துடைத்து வைத்தது போன்று இருந்தது. காகிதங்கள் குறைவாக இருந்தன. நான் பேசியதை விட அவர் தான் அதிகமாகப் பேசினார் பேச்சுக்கு நடுவில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக உணர்ந்தேன். ஏசி சரியாக வேலை செய்யவில்லையோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது மின்சாரம் போனது. அறை இருட்டில் மூழ்கியது. அவர் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வியர்க்கத் தொடங்கியது.

அவருக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முதல் முறையாக அவரைப் பார்க்க வந்த போது இருந்த உதவியற்ற நிலைக்கு திரும்பியது போல் உணர்ந்தேன்.

அடுத்த நாள் அதிகாரியை அழைத்துக் கொண்டு வந்த போதும் அலுவலகத்தில் மின்சாரம் திரும்பியிருக்கவில்லை. பேட்டரி விளக்கின் ஒளியில் உரையாடினோம். என் அதிகாரி பேசத்தொடங்கியதும் அறையில் அமைதி நிரம்பியது. வாடிக்கையாளரின் உதட்டில் டிரேட் மார்க் சிறு புன்னகை தாண்டவமாடத் தொடங்கிய போது எங்களுக்கெல்லாம் தேநீர் பருகத் தரப்பட்டது.

அதிகாரியின் சமயோசிதம் இல்லாவிடில் வாடிக்கையாளரை அமைதிப்படுத்த முடிந்திருக்குமா என்பது சந்தேகமே! அவர் துணையின்றி என்னால் என்ன செய்து விட முடியும்? சுய-ஐயத்துடன் வரவேற்பறை வாயிலாக வாசலை நோக்கி சென்ற போது மின்சாரம் திரும்ப வந்து அவ்வலுவலகத்தின் அறைகள் ஒளியில் குளித்தன.

+++++

இன்னும் சில காலத்துக்குப் பிறகு தேங்கிக் கிடந்த சில சிறு சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்காக அந்த அலுவலகத்துக்கு சென்ற போது முட்தாடி அதிகாரி இன்னொரு அதிகாரியை அறிமுகப்படுத்தி வைத்தார். புதியவர் ஒரு புள்ளி முடி கூடத் தெரியாமல் முகத்தை சுத்தமாக மழித்திருந்தார். அவர் உதட்டில் புன்னகை நிரந்தரமாக ஒட்ட வைத்தது போலத் தெரிந்தது. அதற்குப் பின் புதியவரை சந்திக்கச் சென்ற போதெல்லாம் அவர் என்னைத் தனியே சந்திக்கவில்லை. மற்ற நிறுவனத்தின் விற்பனையாளர்களையும் சேர்த்தழைத்து சந்திப்பதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு பட்டி மன்றத்தில் பங்கு பெற்று தன் கட்சி வாதத்தை முன்வைக்கும் உணர்வே ஒவ்வொரு சந்திப்பிலும் எனக்கு ஏற்பட்டது. முட்தாடிக்காரர் போல நெற்றி சுழிக்கும் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது.

மேஜையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் இருக்கும். ஒரே ஒரு குண்டூசிக் கூடு நிரம்பி வழியும். அதிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து பல் குத்திக் கொண்டே இருப்பார். அவர் குண்டூசியை பக்கத்தில் கிடக்கும் குப்பைக் கூடைக்குள் எறிந்தார் என்றால் சந்திப்பு சில நொடிகளில் முடிவடையப் போகிறது என்று அர்த்தம்.

முட்தாடிக்காரரின் சமயத்தில் இருந்தது போல் அடிக்கடி சென்று சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை. மற்ற நிறுவன விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று என் அதிகாரி கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார். ஒரு நாள் அவரையும் கூட்டிக் கொண்டு சென்றேன். வரவேற்பறைக்கு வந்து எங்களைத் தன் அறைக்குள் கூட்டிக் கொண்டு போனார் குண்டூசியால் பல் குத்துபவர். அன்று எங்களோடு இன்னும் இரண்டு மூன்று நிறுவனப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொண்டனர். இசை நாற்காலி விளையாடுவது போன்று மாற்றி மாற்றி ஒவ்வொருவரிடமும் உரையாடினார். என் அதிகாரி திக்குமுக்காடினார். ஒரு முகமான உரையாடல்களுக்கு மட்டும் பழக்கப்பட்ட அவருக்கு இது முற்றிலும் புதிதான அனுபவமாக இருந்தது.

வரவேற்பறை ஏசியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். தற்காலிகமாக புழுக்கம் அதிகமாகத் தெரிந்தது. என் அதிகாரி முகம் கழுவும் அறைக்கு சென்று திரும்புவதற்கு நேரம் பிடித்தது.

++++++

சில மாதங்களில் என் அதிகாரி வேலையை விட்டு சென்று விட்டார், எங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கெல்லாம் தெரியாமல் இருந்தது. குண்டூசி பல் குத்துபவரின் நிறுவன அலுவலகத்துக்கு நான் அழைக்கப்பட்டு பல நாட்கள் மாதங்கள் ஆயின. புதிதாக வேலையில் சேர்ந்த என் புது அதிகாரிக்கு எப்படியேனும் அந்த அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. குண்டூசியால் பல் குத்துபவர் தொலைபேசியில் இனிமையாகப் பேசினார் ; ஆனால் சந்திக்க நேரம் கொடுக்காமல் இருந்தார். ஒரு நாள் முன்னறிவிப்பில்லாமல் நானும் என் புது அதிகாரியும் அவரைப் பார்க்கச் சென்றோம். குண்டூசியால் பல் குத்துபவரின் பக்கத்தில் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார். என் மாஜி-அதிகாரி. ஓரிரு நிமிடங்களுக்கு ஓர் அசாதாரணமான மௌனம். என் மாஜி-அதிகாரி தான் இனிமேல் அந்நிறுவனத்தின் தொடர்பாம். எதிர்கால வியாபார வாய்ப்பு பற்றிய முடிவுகள் எல்லாம் என் மாஜி அதிகாரி தான் எடுப்பாராம். என் புது அதிகாரி அச்சந்திப்பின் போது இயல்புக்கு மாறாக சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். சந்திப்பு சீக்கிரமே முடிந்து விட்டது. பல் குத்துபவருடனான கடைசி சந்திப்பின் போது மிகவும் படபடப்புடன் இருந்த என் முன்னாள் அதிகாரியின் வழக்கமான உடல் மொழியை அன்று காண முடியவில்லை. அவருடன் சில வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்திருந்தாலும், அன்று போல் என்றும் அவர் அவ்வளவு சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. பாவம் புது அதிகாரி! வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நிறுவனம் முக்கியமான ஒரு வாடிக்கையாளரை இழக்கும்படி ஆகி விட்டது.

+++++

ஒற்றைக் குண்டூசியால் ஒரு காகிதத்தில் ஓட்டைகள் போட்டுக் கொண்டு நேரங் கழித்துக் கொண்டிருக்கையில் புதிதாகச் சேர்ந்த என் அதிகாரியின் சீட்டைக் கிழித்துவிட்டார்கள் என்ற சேதி என் காதை எட்டியது. வேலையில் சேர்ந்து குறுகிய காலமே ஆனாலும் அவருடைய உத்வேகமும் செயலாற்றலும் நிறுவனத்தின் உள் சூழலை ஓரளவு மாற்றியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த வேலை நீக்கச் செய்தி அதிர்ச்சி தந்தது. பத்து பனிரெண்டு வருடங்களாக நாற்காலி தேய்ப்பான்களாக மட்டுமே இயங்கி வரும் பிற உயர் அதிகாரிகளை அவருடைய மூர்க்கமான வேகம் நிலைகுலைய வைத்திருக்கும். என்ன காரணம் சொல்லி அவரை விலக்கினார்கள் என்று யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒரு மாதத்துக்குள் வேறொருவரை பணி நியமனம் செய்து விட்டார்கள். அவர் இன்னும் பணியில் சேரவில்லை.

என் மாஜி-அதிகாரிக்கு ஒரு நாள் மீண்டும் பாசம் துளிர்த்தது. பழைய சப்ளையரை மீண்டும் முயலுமாறு இப்போது இயக்குனராகிவிட்ட குண்டூசியால் பல் குத்துபவரின் அறிவுறுத்தலின் படி சந்திக்கக் கூப்பிடுவதாகச் சொன்னார். இந்த தொலைபேசி அழைப்பை சாத்தியமாக்கிய காரணி எதுவாக இருக்கும்? விரைவில் தெரிந்துவிடும். வேலையில் சேரப் போகும் என் புது அதிகாரிக்கு நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு அதே வரவேற்பறையில் காத்துக் கொண்டிருக்கையில் சப்ளையர் ஒருவர் எழுதுபொருட்களை ரிசப்ஷனிஸ்ட் மேஜையில் குவித்துக் கொண்டிருந்தார். குண்டூசி டப்பாவொன்றை தவறுதலாக மேஜையின் விளிம்பில் வைத்து விட அது கீழே விழுந்து மூடி உடைந்து வரவேற்பறை எங்கும் குண்டூசிகளாய்ச் சிதறின.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.