‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

றியாஸ் குரானா

பதாகை –  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?

றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல.

எழுத்து எப்போதும், மாபெரும் செயற்பாடுதான். அல்லது மையச் செயற்பாடுதான். மொழிசார்ந்த அனைத்துமே மையச் செயற்பாடுதான். அது என்றுமே மாறாத ஒன்று. உதாரணங்கள் கூட சொல்ல முடியும். ஒரு சினிமாவை எடுத்துவிட்டால் அது குறித்த சிந்தனையை, ரசனையை, விமர்சனத்தை இன்னுமொரு சினிமாவினூடாக வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்தவும் முடியாது. எழுத்தினூடாகத்தான் அது குறித்து வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இசை, ஓவியம், சிற்பம், அரசியல் இப்படி எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும், அவை குறித்த விமர்சனமோ, ரசனை நிலவரமோ, இப்படி எதுவாக இருந்தாலும் மொழியால்தான் அவை குறித்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் உண்மை. இசைக்கு மற்றொரு இசையையோ, ஒவியத்திற்கு மற்றொரு ஓவியத்தையோ விமர்சனமாக முன்வைப்பதில்லை. எனவே, எழுத்து எப்போதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது.

அது மட்டுமன்றி, இன்று எழுதுபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதுபோல வாசிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் எதை எழுதிக்கொண்டுதானிருக்கிறான். அதுபோல் எதையோ வாசித்துக்கொண்டும்தான் இருக்கிறான். மற்றைய கலைவடிவங்களைவிட எழுத்தோடுள்ள உறவே ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அதிக நெருக்கமுடையது. வாழ்வே கதைகளாலானதுதான், நம்மிடம் சொல்ல ஏதோ இருக்கிறது என்பதுபோல நாம் எதையோ கேட்பதற்கும் காத்திருக்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானது. கதைகளை சொல்லவும் கேட்கவுமான அடிப்படை உந்துதல்தான் வாழ்வாக நம்மிடமிருக்கிறது. கவிதையும் அப்படித்தான்.

ஆம், நாம் நமக்கு, நமது மனதுக்கு எது தேவை எனக் கருதுகிறோமோ அதன் எழுத்து வடிவத்தையே கவிதை என அடையாளப்படுத்துகிறோம். மனம் அதிகமும் சலிப்பற்று ஆறுதலடையும் ஒரு இடமாக அதன் சிந்தனை வடிவத்தை கவிதை என்கிறோம். அதன் ஓசைவடிவத்தை இசை என்கிறோம். எழுத்து வடிவம் மாத்திரமே நம்மை சிந்திப்பதற்கு அதாவது, பொருளுருவாக்குவதற்கு இடந்தருகிறது. இந்தப் பொருளுருவாக்த்தினால்தான் மொழி பெருக்கெடுக்கிறது. சிந்தனை புதிப்பிக்கப்படுகிறது. எனவே, எழுத்தோடு தொடர்புடைய எந்தப் பணியும் விளிம்பு நிலைக்குச் செல்ல அவசியம் இருக்காது.

ஆனால், எப்படியான கதைகள், எப்படியான கவிதைகள், எந்தவகையான கட்டுரைகள் என தன்மைகளில் வேறுபாடுகள் இருக்கமுடியும். அதில் சில வகையான கதைகள் விளிம்பு நிலையில் வைக்கப்படலாம், சில வகையான கவிதைகள் விளிம்பு நிலையில் வைத்துப் அணுகப்படலாம். இந்த வேறுபாடு எப்போதும் ஒரு பிரச்சினையான ஒன்று அல்ல. எல்லாவகையான எழுத்தும் புழங்கும் ஒரு சூழுல்தான் ஜனநாயகமானது. அனைத்து வகையான எழுத்துக்களும் இருப்பதற்கான இடத்தை தக்கவைப்பதே இலக்கியத்தின் அடிப்படையான தேவைப்பாடாகும். அதே நேரம், குறித்த எழுத்துக்கள் தங்களினுள் மறைத்து வைத்திருக்கும் வன்முறை குறித்து பேசவும், அதனூடாக அந்த வன்முறையை நீக்குவதும், அதற்கு மாற்றான ஒரு நிலவரத்தை முன்வைப்பதுமே இலக்கிய அரசியலாகும் என நான் நம்புகிறேன்.

மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவது எப்போதும் மொழிதான். எந்தக் கலைவடிவமும் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்ள மொழியே நமக்கு உதவுகிறது. ஆகவே, தாக்கம் என்பதே மொழிவழியாகவே தனது இறுதி இலக்கை அடைகிறது.

கவிதை மொழியைப் புதுப்பிப்பதில்லை. ஆனால், நானும் இந்த வாக்கியத்தை பலமுறை பாவித்துதானிருக்கிறேன். தனியே அந்த வாக்கியத்தினாடாக ஒரு கேள்வி முன்வைக்கப்படும்போது, இன்னும் துல்லியமாக அதை அணுக வேண்டி வருகிறது. கவிதை மொழியைப் பெருக்குகிறது. மொழியின் அர்த்தத்தை அதன் கட்டமைப்பை கலங்கடிக்கிறது. குழப்பிவிடுகிறது. அதனாடாக வேறொரு பொருளாக்கத்தை இருப்புக்கு அறிமுகம் செய்கிறது. அதே போல மிக வேகமாக மொழியை அதன் அர்த்தக் கட்டமைப்பை பழசுபட வைக்கிறது. உதாரணமாக ” நிலா சுடுகிறது” என்று ஒரு கூற்றைக் வாசிக்க்க் கிடைத்தால், அது கவித்துவக் குடும்பத்தை சார்ந்த ஒரு கூற்று என யாரும் இலகுவில் புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்தக் கூற்று  எவ்வளவு ஆண்டுகளாக பாவிக்கப்படுகிறது என்பதினூடாக, பழசுபடுகிறது. ஒன்றை கவனியுங்கள். இந்தக் கவித்துவக் கூற்றினூடாக மொழி புதுப்பிக்கப்படுவதில்லை. கவிதை பழசுபடுகிறது. கவிதை தன்னையும் மொழியின் அர்த்தக் கட்டமைப்பையும் பழசுபடவும் செய்கிறது. இப்படிச் செய்வதினாடாகவே, புதிப்பிக்கப்பட வேண்டிய தேவையையும் நம்க்கு உணர்த்துகிறது. ஏற்கனவே உள்ள இந்தவகைக் கூற்றுக்களை மறுக்கின்ற புதிதாகப் பார்க்கின்ற கூற்றுக்களையும் கவிதையே உருவாக்குகிறது. அப்படி உருவாக்குவதினாடாக, மொழியின் ஏற்கனவே உள்ள அர்த்தங்களுடன் சேர்த்து இன்னும் புதிய அர்த்தங்ளையும் கொண்டு வந்து மொழியைப் பெருக்குகிறது. ஒன்றைப் புதுப்பித்தால், அது தனது பழைய அடையாளத்துடன் இருக்கமுடியாது. எனவே , இங்கு மொழியைப் புதுப்பித்தல் என்ற விளிப்பு ஒருவகையில் பொருத்தமற்றதுதான். மொழியைப் பெருக்குகிறது என்பதே துல்லியமான ஒரு அறிவிப்பு எனக் கருதுகிறேன்.

இன்று எழுத்தின் இடம் என்ன என்பது பற்றி மிகச் சிறிய ஒரு வியாக்கியானத்தையே செய்ய விரும்புகிறேன். சினிமா கதைகளை அதுவும் நாவல்களை ஓரங்கட்டியிருக்கிறது. பெரும் பின்னடைவை சந்திக்க வைத்திருக்கிறது. ஆனால், கவிதைகள் ஒருபோதும் அந்த நிலையை அடைய வாய்ப்பில்லை. அதாவது, கவிதை என நம்பப்படும் ஒரு அம்சம்தான், அடிப்படையில் சிந்தனையோடு (மனதோடு) தொடர்புபட்டது. மேலதிகச் சிந்தனை என்பதையே நான் கற்பனை என்று சொல்ல விரும்புகிறேன். அந்த மேலதிகச் சிந்தனைதான் கவித்துவத்தை வடிவமைக்கிறது. கவித்துவம் என்பதற்கு மிகச் சரியான ஒரு சொல்லை யாராவது என்னிடம் கேட்டால் ”மனம்” என்று சொல்வேன். அந்த மனதின் மொழிவடிவத்தை கவிதை என்கிறார்கள். அதன் சிந்தனை வடிவத்தை கவித்துவம் என்கிறார்கள். அவ்வளவுதான்.

ஆனால், எழுத்திற்கு இன்று எந்த இடமும் இல்லை. கவிதைக்கு முக்கியத்துவமில்லை. இதுபோன்ற பல அறிவிப்புக்களை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இவை, உற்பத்தியாகும் இடமும் அதற்கான நோக்கமும் முற்றிலும் வேறானது. இந்த அறிவிப்புக்கள் மிகத்துல்லியமான கணிப்பீடுகள் அல்ல. அப்படிக் கணிப்பீடு செய்யவும் முடியாது. ஆனால. இவை மிகத் துல்லியமான நம்பகமான கணிப்பீடுகள் என்பதுபோல பரப்பப்படும். இப்படிப் பரப்பப்படும் எந்த விசயத்தின் பின்னாலும் வேறு ஒரு அரசியல் செயற்படும். அது முற்றிலும் வியாபார ரீதியிலானது. சந்தையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கூற்றுகள். ஆனால், இலக்கியத்தை புரிந்து செயற்படுபவர்கள் இந்தக் கூற்றுக்களை அக்கறை கொள்ள விரும்புவதில்லை.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.