மழை மெல்லத் தொடங்குகிறது
துாறி பின் கற்களைப்போன்ற
தண்ணீர்த்துளிகளை வீசத்தொடங்குகிறது
வழமைபோல
மழை நீடித்தால் எப்படி
அதைக் கடந்து செல்வது
மழையின் அருமையையும்
கூதலின் நீண்ட ஆதரவையும்
மரங்களில் இறங்கும் அழகையும்
முணுமுணுக்கும் அதன் குடும்பப் பாடலையும்
நினைவிலேற்றி
மழையை கடந்துவிட முடியாது
அது சலிப்பை தந்துவிடும்
ஓய்ந்துவிடத் தயாராகிறது
அதை நான் விரும்பவில்லை
காத்திருக்கும் ஒருவருக்கும்
காத்திருக்கச் செய்தவருக்கும்
இடையே ஓயாமல் பெய்விக்கிறேன்
காத்திருப்பவரின் பக்கத்தில்
துாறச் செய்தும்,
மற்றப்புறத்தில் பெரும் மழையாகவும்
நீடிக்கச் செய்கிறேன்.
இருவருக்கிடையிலும்
மழை புதிய அர்த்தத்தை
துளிகளாக கொட்டுகிறது
காலங்கள் நீளுகின்றன
மழை என்ன செய்கிறதென
கண்காணிப்பதற்கு
ஜன்னலைத் திறந்து பார்க்கிறேன்
நெடுநாட்களாக மழை வராததால்
எங்கோ இருந்து எழுந்து
மழை தேடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு பூந்தோட்டம்.
திறந்து பார்த்த ஜன்னல்
நிரந்தரமானதல்ல
எப்போதாவது மாத்திரம் தோன்றுவது
இதை நீங்கள் எப்படியும் வாசிக்க முடியாது
ஜன்னல் இருந்தால்
திறந்து பார்க்கலாம் அவ்வளவுதான்.
One comment