கவியின் கண் – “ஒரு காலம் வரும்”

  எஸ். சுரேஷ் –

காலத்துக்கு முந்தைய என் கவிதைகளுக்கு,
காலத்துக்கு முந்தைய என் கவிதைகளுக்கு,
கவி என்றறியாமல் எழுதிய கவிதைகளுக்கு,
ஊற்றுத்துளிகள் என தெறித்துச் சிதறியவற்றுக்கு,
விண்கலப் பொறிகள் எனச் சுடர்வனவற்றுக்கு,

உறக்கமும் நறுமுகிலுமாகிய புகலுக்குள்,
குட்டிச்சாத்தான்களாய் கிளம்பியவற்றுக்கு,
இளமையும் முதுமையும் பாடும் கவிதைகளுக்கு,
– வாசிக்கப்படாத என் கவிதைகளுக்கு!

வாங்குவதற்கு ஆளில்லாத புத்தகக்கடைகளின்
தூசுகளில் இறைந்து கிடப்பனவற்றுக்கு!
என் கவிதைகளுக்கு, அரிய வைன்கள்போல்,
அவற்றுக்கும் ஒரு காலம் வரும்

— Marina Ivanovna Tsvetaeva

“என் கவிதைகளுக்கு, அரிய வைன்கள்போல்,/ அவற்றுக்கும் ஒரு காலம் வரும்”. ஒவ்வொரு கவிஞனுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இன்றைய தகவல் உலகில்.

பல கவிஞர்களும், “யாராவது என் கவிதைகளை வாசிக்கிறார்களா?” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கக்கூடும். பல்முனை கவனச்சிதறல்கள் சாத்தியப்படும் இந்நாட்களில், எழுத்தாளர்களும் கவிஞர்களும் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்நாட்களில், “வாங்குவதற்கு ஆளில்லாத புத்தகக்கடைகளின்/ தூசுகளில் இறைந்து கிடப்பனவற்றுக்கு!”, என்று கவிதை குறித்துச் சொல்லியிருக்க முடியும். ஆனால், இன்றோ உங்கள் கவிதைகள் அநேகமாக கூகுள் தேடலின் 75ஆம் பக்கத்தில் சிக்கக்கூடும்.

வேறு சொற்களில் சொல்வதானால், உங்கள் எழுத்து இணையத்தில் எப்போதும் இருந்தாலும், வேலைக்காகுமா என்று பார்த்தால், நீங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறீர்கள்.

எனில், ஏன் எழுத வேண்டும்?

உங்கள் கவிதைச் சித்தாந்தத்தை எழுதுங்கள் என்று நண்பர் ஒருவர் வலியுருத்திக் கொண்டேயிருக்கிறார். ஏன் கவிதை எழுதுகிறேன், என் நோக்கங்கள் என்ன என்றெல்லாம் எழுத வேண்டுமாம். இதுவரை அவருக்கு பதில் சொல்லவில்லை, இங்கே சொல்லப்போவதும் இல்லை.

முன்னைவிட இப்போது, முக்கியத்துவம் முக்கியமாக இருக்கிறது. எழுதினால் மட்டும் போதாது, அது கலைப் படைப்பாக இருக்க வேண்டும். எனவே, நண்பரின் கேள்வியை வேறு சொற்களில் சொல்வதானால், கலைஞன் ஏன் கலையுள் பிரவேசிக்கிறான்? ஆக்கங்களுக்கான அவசியம் என்ன?

இந்தக் கேள்வி உள்ளார்ந்த ஒரு துணைக்கேள்வியுடன் வருகிறது – உன் கலையால் சமூகப் பயன் உண்டா?

நேரடி சமூக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய எழுத்தாளர்கள், சமூக அவலங்களையும் அரசியல் போக்குகளையும் வெளிப்படையாக விமரிசிப்பவர்கள், கலையைக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்குப் போராடுபவர்கள், தாங்கள் ஏன் கலைஞர்களாக இருக்கிறோம் என்பதை நியாயப்படுத்துவதில் இவர்களுக்குப் பிரச்சினை இல்லை. தம் கலைக்கு ஒரு நோக்கம் உண்டு என்பதை இவர்கள் அறிவார்கள். தாமிருக்கும் சமூகத்தின் குறைகளைத் தம் கலையால் களைகின்றனர். சமூகமும் தனக்குரியவர்கள் என்று இவர்களை அரவணைத்துக் கொள்கிறது.

ஆனால் தன் கலையை இன்னும் சற்றே முன்நகர்த்த வேண்டும் என்று விழையும் கலைஞன் சில சிக்கல்களை எதிர்கொள்கிறான். பலரும் காட்டமாக விமரிசிக்கும் சமூக அவலங்கள் அவனைப் பொருத்தவரை பின்னிருக்கையில் அமர்ந்து கொள்கின்றன.

கச்சிதமான வாக்கியத்தை எழுத நினைப்பவள், ராக பிரஸ்தாபத்தில் பூரணத்துவத்தைத் தொட நினைப்பவன், துல்லியமான வடிவமைப்பைத் தன் சிற்பத்தில் செதுக்க முனைபவன், ஒவ்வொரு அசைவிலும் நளினத்தை வெளிப்படுத்த விரும்பும் நடனமங்கை- இவர்களுக்கு கலையே முழுமுதல் இலக்கு.

இவர்களே, “என்னால் இந்த உலகுக்கு பயனுண்டா?”, “என் கலையை மக்கள் புரிந்து கொள்வார்களா?” என்ற கேள்வியைத் தம் மனதில் தொடர்ந்து எழுப்பிக் கொள்கின்றனர்.

இது ஒன்றும் புதிதல்ல. வழமையான, கலையா சமூக பொறுப்பா என்ற பழைய விவாதம்தான்.

ஆனால், தகவல் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும் இணைய யுகத்தில் இந்தக் கேள்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கிட்டுகிறது. முடிவற்ற வெள்ளமாய் தகவல்கள் நம்மைத் தாக்குகின்றன. இந்தத் தகவல்களை உள்வாங்க நமக்கிருக்கும் நேரமோ குறைவு. இந்தத் தகவல் வெள்ளம் பல சீரிய கலை முயற்சிகளை காண்பாரற்ற முனையில் விட்டுச் செல்கிறது – அங்கே அது கவனிக்கப்படாமல் கிடக்கிறது.

நம் காலத்து எழுத்தாளர்களுக்கு தூய கலையை எதிர்ப்பவர்களிடம் வழக்கில்லை- கணப்பொழுதில் கிட்டும் இருட்டடிப்பை நிராகரித்தே அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

முரட்டுத் தோளும் மாபெரும் அர்ப்பணிப்பும் இல்லாமல் இன்றைய எழுத்தாளன் இயங்க முடியாது – உங்கள் எழுத்தை எத்தனை பேர் வாசித்தார்கள் என்ற தகவலை இரக்கமற்ற கடமையுணர்ச்சியுடன் தரவுகள் உங்களுக்கு ஒவ்வொரு கணமும் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றன. பரந்து விரிந்த இவ்வுலகில் இரண்டு பேர் உங்கள் கவிதை இன்று வாசித்தனர் என்ற தகவலோ, கடந்த வாரம் ஏழு பேர் உங்கள் படைப்புகளைப் புரட்டிப் பார்த்தனர் என்ற தகவலோ, உற்சாகமளிப்பதல்ல.

இந்நிலையில் நீங்கள் உங்கள் அடுத்த கவிதையை எழுதுவதே அசாத்திய சாதனைதான்.

முன்பெல்லாம் உங்கள் புத்தகங்களின் சில பிரதிகள் மட்டுமே விற்றாலும்கூட, பலரும் அதை இரவல் வாங்கி வாசித்திருப்பார்கள் என்ற ஆறுதல் உங்களுக்குச் சாத்தியம். ஆனால் இன்றோ உங்களுக்குக் கிடைக்கும் விவரணைகள் சந்தேகத்துக்கு இடமற்ற துல்லியம் கொண்டவை. ஒவ்வொரு கிளிக்கும் பதிவு செய்யப்படுகிறது.

ஒரு கவிதையை, ஒரு கதையை, ஒரு பதிவை சராசரியாக எத்தனை நேரம் வாசித்தார்கள் என்பதும் எது அதிகம் வாசிக்கப்பட்டுகிறது என்பதும் இதுபோன்ற ஒவ்வொரு விஷயமும் பதிவு செய்யப்படுவதும்தான் இன்றைய நிலை. வாசகர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு ஒவ்வொரு நாளும் ஆவணப்படுத்தப்படுகிறது.

ஒரு எழுத்தாளனாக, உங்களுக்கு ஒளிந்து கொள்ள இன்று இடமில்லை.

கவிதையை நேசிப்பவர்கள் பற்றி விஸ்லாவா ஒரு கவிதை எழுதினார்:

சிலர்-
அனைவருமல்ல. பெரும்பான்மையினரல்ல, ஒரு சிலரே.
பள்ளிகளைக் கணக்கில் சேர்க்க வேண்டாம், அங்கு படித்தாக வேண்டும்,
கவிஞர்களையும் கணக்கில் சேர்க்க வேண்டாம்,
ஆயிரம் பேரில் இருவர் வாசி\க்கக்கூடும்..

லைக்-
ஆனால் நூடுல்சுடன் சிக்கன் சூப்பையும் லைக் செய்கிறார்கள்,
பாராட்டுகளையும் வண்ணங்களையும் லைக் செய்கிறோம்,
பழைய ஸ்கார்ஃபை லைக் செய்கிறோம்,
நாயைத் தட்டிக் கொடுப்பதை லைக் செய்கிறோம்.

கவிதை-
ஆனால் கவிதைதான் என்ன.
தடுமாற்றம் நிறைந்த பல பதில்கள்
இக்கேள்விக்கு விடையை அளிக்கப்பட்டிருகின்றன.
எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது, அதை விட மாட்டேன்,
நிலைநிறுத்தும் அரண் போல்.

“ஆயிரத்தில் இருவர்,” என்றார் அவர். அவர் கவிதைகளுக்கு அவ்வாறு இருக்கலாம், ஆனால் நமக்கு கோடியில்​​​ இருவர், அல்லது இன்னும் குறைவாக இருக்கலாம். முன்னர் சொன்னதுபோல், தரவுகள் பொய்ப்பதில்லை.

விஸ்லாவாகூட எது கவிதை எனபதைச் சொல்ல முடியாதவராக இருக்கிறார். “கவிதை-/ ஆனால் கவிதைதான் என்ன./ தடுமாற்றம் நிறைந்த பல பதில்கள்/ இக்கேள்விக்கு விடையை அளிக்கப்பட்டிருகின்றன./ எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது”

ஆனால் அதே வேளை, “ஊற்றுத்துளிகள் என தெறித்துச் சிதறியவற்றுக்கு,/ விண்கலப் பொறிகள் எனச் சுடர்வனவற்றுக்கு” என்று சொல்லக்கூடியவை ஸ்வெதயேவாவின் கவிதைகள்.

ஏதோ ஒரு அகவிழைவின் காரணமாக, கவிதை எழுதுவது தவிர்க்க முடியாத தேவையாகிறது. கவிஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டாக வேண்டும். கலைஞர்கள் பலரையும் போல் அவர்களும் தம் ஆக்கங்கள் வாசகர்களைச் சென்று சேர்ந்தனவா என்று கவலைப்படுகின்றனர். தாம் எழுதியது முக்கியமானதா, சமகாலத் தொடர்பு கொண்டதா என்று கவலைப்படுகின்றனர். தம் எண்ணங்களைக் கொண்டு செல்லும் வல்லமை தம் மொழிக்கு உண்டா என்று கவலைப்படுகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், கவிதை எழுதி முடித்ததும், எல்லாவற்றுக்கும் கவலைப்படுகின்றனர்.

பல கவிஞர்களும், தம் நோக்கத்தை ஒருசில வாசகர்களாவது புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றனர். சிலர், ஸ்வெதயேவா போல், “அரிய வைன்கள்போல்,/ அவற்றுக்கும் ஒரு காலம் வரும்” என்ற நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கையில்லாமல் எழுதுவதெப்படி?

அந்த நாளும் வரக்கூடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.