அணி விருந்து

 
விற்பனை அணி பொருட்காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தது. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவனான பார்த்திபன் பதட்டத்தில் இருந்தான். கடைசி நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி கிடைக்கவில்லை என்று சாவடியை நிர்மாணிக்கும் கம்பெனி கைவிரித்துவிட்டது. மும்பை நகரின் தொலைபேசி மஞ்சள் பக்கங்களைத் தேடி சிலரைத் தொடர்பு கொண்டு குளிர்சாதனப் பெட்டி வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தான். பார்த்திபனுக்கு இணையாக மூத்த விற்பனை மேலாளராக இருக்கும் ஹரி வழக்கம் போல் பட்டும் படாமலும் இருந்தான். வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்துக்காக பேசுவது தவிர நிறுவனத்தின் இதர உள் நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்வதில் அவன் துளியும் விருப்பம் காட்டியதில்லை.  ஆனாலும் சுயமுக்கியத்துவம் தேடும் வேட்கை அவனுள் சதா இருக்கும்; அப்படி இருப்பதனாலோ என்னவோ தேடுவது அவனுக்கு கிடைத்துவிடுகிறது. ஹரியின் மனநிலை கலையாமல் வைத்திருப்பதில் போஸ் அதீத கவனம் செலுத்துவார்.
 
பார்த்தி (பார்த்திபனின் சுருக்கம்) யின் மேற்பார்வையில் வேலை செய்யும் ரௌனக் வாடிக்கையாளர்களுக்கு மின்– அழைப்பிதழ்கள் அனுப்பிக் கொண்டிருந்தான். ரௌனக் வேலையில் சேர்ந்த முதல் நிறுவனம் இதுதான்; விற்பனைத் திறத்தின் முதல் படிகளை பார்த்தியிடமிருந்து கற்றதனால் ரௌனக்கிற்கு பார்த்தியின் மேல் பரிவுடன் கூடிய மரியாதை இருந்தது. பார்த்தி அளிக்கும் பணிகளை “செய்ய மாட்டேன்” என்று சொல்வதில்லை.
 

ஹரியின் துணையாக இயங்கும் அனில் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த நாள் முதல் ஒரே வாடிக்கையாளரின் மேல் மட்டும் கவனம் செலுத்துகிறான் என்ற பெயர் இருந்தது. அந்நிறுவனத்துக்கு விற்ற பண்டத்தில் ஏதோ தரக்குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக அளவற்ற பதட்டத்தில் இருந்தவன் ஒரு வாரம் முன்னதாக திடீரென தன் வேலையை ராஜினாமா செய்து விட்டான்; அது உடனே ஏற்கப்பட்ட காரணத்தால் அனிலை பொருட்காட்சிக்கு கூட்டிக் கொண்டு போக முடியாத நிலை உருவானது. பார்த்தியின், ரௌனக்கின் தலையில் எல்லாப் பணிகளும் விழுந்தன.
 
விற்பனை அணியில் மேலும் இருவர் உண்டு; சுசிதா – நிறுவனத் தலைவரும் விற்பனை அணியின் பொதுத் தலைவருமான போஸ்-சினால் நேரடியாக நியமிக்கப்பட்டவள். விமான பயணத்தில் சக-பயணியாக அமர்ந்து அறிமுகமானவள் என்று போஸ் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததை ஹரி ஒருமுறை கேட்டிருந்தான். அதற்கு பிறகு போஸ் அச்சந்திப்பை பற்றி யாரிடமும் பிரஸ்தாபித்ததாக அறிக்கை இல்லை. மாறாக, நிறுவனத்தின் வேலை நியமன ஆலோசகர் ஒருவர் வாயிலாக அறிமுகமானவர்தான் சுசிதா என்று கிளிப்பிள்ளை போல எல்லோர் காது பட உரைத்துக் கொண்டிருப்பார் போஸ்.
 
சுசிதா விற்பனை அணியின் ஓர் அங்கமாக தன்னைக் காட்டிக் கொள்வதில் விருப்பமற்று இருந்தாள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போஸ்-சின் அறைக்குச் சென்று அளவளாவிக் கொண்டிருப்பாள். இளையவர்களான அனிலையும் ரௌனக்கையும் முழுக்க முழுக்க ஹரியின், பார்த்தியின் மேற்பார்வையில் விட்டுவிட்ட போஸ், சுசிதாவைத் தன் நேரடிப் பார்வையில் வைத்துக் கொண்டது போன்ற ஒரு பாவனையைச் செய்தார். அதிகாரப்பூர்வமாக சுசிதா இருப்பது ஹரியின் நேரடி கண்காணிப்பில், ஆனால் ஹரியிடம் பேசவே பயமாக இருக்கிறது என்று சக– ஊழியர்களிடம் சுசிதா சொல்லிக் கொண்டிருந்தாள்.  
 
விற்பனை அணியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் இன்னொரு யுவதி மௌஷுமி. அவளுக்கு யார் சூப்பர்வைசர் என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. வேலையில் சேர்ந்த ஒரு வாரத்துக்கு தினமும் தன் அறைக்கு கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்த போஸ் பிறகு அவளைக் கூப்பிடவில்லை. பார்த்தி, ஹரி இருவரிடமும் வேலை சம்பந்தமான ஆலோசனைகளைச் செய்வாள். அதிகாரப்பூர்வமாக சொல்லப்படாதவரை அவளை யார் வழிப்படுத்துவது என்பதில் இரு மூத்த மேலாளர்களுக்கும் குழப்பம்.
 
வசீகரமில்லாத, முகப்பொலிவற்ற தோற்றம் கொண்டிருந்த மௌஷுமி ஆரம்பத்தில் மிகச்சாதாரணமான நடுத்தர வர்க்க உடைகளை அணிந்து கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் நவீன உடைகளை அணிந்து வருகிறாள். “விற்பனைத் துறையில் சேரும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்; அவர்களுக்கு நேரடி மேற்பார்வையாளர்கள் தேவைப்படுவதில்லை; பெரிய தலைவரின் கடைக்கண் பார்வை சதா அவர்கள் மேல் விழுந்த வண்ணம் இருக்கும்,” என்று ரௌனக் அடிக்கடி அனிலிடம் சொல்லிக் கொண்டிருப்பான்.
 
சுசிதாவும் மௌஷுமியும் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசிக் கொள்வதில்லை; இன்னது என்று வரையறுக்க முடியாத அமைதிப் போர் இருவருக்கும் நடுவில். அவ்வப்போது மௌஷுமியின் பொருத்தமில்லாத ஆடை அலங்காரத்தைப் பற்றி கேலியுடன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பாள். ஆண்களின் மேலாதிக்கம் மிகுந்த விற்பனை அணியில் இருந்த இந்தப் பெண்களுக்கிடையில் ஏனிந்த தொலைவு என்பது புரியாத புதிராகவே இருந்தது. 
 
பார்த்தி ஒரு வழியாக குளிர்சாதனப் பெட்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டான். பொருட்காட்சிக்கு முந்தைய தினம் ஒப்படைக்கப்பட்டு விடும். சாம்பிள்களையும் நிறுவனம் தயாரிக்கும் பண்டங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களையும் பேக் செய்து கொண்டிருந்தபோது போஸ் அவனருகில் வந்து ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார். பார்த்தியின் பதிலை முழுக்க கேட்காமல் அவனை இடைமறித்து “ஹரி எங்கே?” என்று வினவினார். ஹரி அழைக்கப்பட்டான். கூடவே ரௌனக்கும். 
 
வியாழன் இரவு மும்பை ஓட்டலில் பார்ட்டி பற்றி திட்டமிட்டார்கள். என்ன பிராண்ட் விஸ்கி வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பார்த்திக்கு மதுவருந்தும் பழக்கம் இல்லாததால் அவ்வுரையாடலில் தனித்து விடப்பட்டான். இளைய விற்பனை அதிகாரி ரௌனக் மும்பை வந்திறங்கியதும் விமான நிலைய மதுக்கடையில் மது வாங்கும் வேலையை ஏற்றுக் கொண்டான். பிறகு பெண்கள் மது அருந்துவார்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்குள் அங்கு ஏற்கனவே வந்து நின்றிருந்த சுசிதாவும் மௌஷுமியும் சங்கடப் புன்னகை பூத்தார்கள். சுசிதா, “நான் குடிக்கறதில்லை” என்றாள். மௌஷுமி ஒன்றும் சொல்லவில்லை. “அப்போ நீங்க ரெண்டு பேரும் பார்த்தியோட சேர்ந்து சர்க்கரைப் பாகு தண்ணி குடிங்க” என்று உதட்டைக் கோணி பேச்சு நடையில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தை வரவழைத்தார் போஸ். எல்லோரும் சிரித்தார்கள். பார்த்திக்கு சிரிப்பு வரவில்லை. பிசினஸ் கார்டு இருந்த சிறு பெட்டியை எடுத்து அட்டைப் பெட்டிக்குள் போட்டான்.
 
வியாழனன்று தொடங்கும் பொருட்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே பார்த்தியும் ரௌனக்கும் மும்பை சென்று பொருட்காட்சிச் சாவடியை நிர்மாணம் செய்யும் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஹரியும் முன்கூட்டியே வந்தால் உதவியாக இருக்கும் என்று பார்த்தி பல முறை சொல்லியும் ஹரி போஸ்-சிடம் நேராகப் பேசி வியாழன் காலை நேராக பொருட்காட்சி தொடங்கியபிறகு வந்து சேரும் ஒப்புதலைப் பெற்றிருந்தான். வடநாட்டு பண்டிகைகள் பற்றிய விபரங்கள் அதிகம் அறிந்திராத பார்த்தியிடம், “புதனன்று விஸ்வகர்மா பூஜை; நான் வீட்டில் இருப்பது அவசியம்” என்று பொய் சொல்லியிருந்தான்.
 
ரௌனக் மும்பை விமான நிலையத்தில் ஏழு வருடம் பழையதான சிறப்பு பதிப்பு விஸ்கி பாட்டிலொன்றை வாங்குகையில் பார்த்தி ஆர்வமில்லாமல் மதுக்கடைக்கு வெளியே நின்றிருந்தான்.
 
பொருட்காட்சி ஏற்பாடுகள் ஒழுங்கற்று இருந்தன. பார்த்தி சொன்னபடி கான்ட்ராக்டர் சாவடியை எழுப்பவில்லை. நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தன. சாவடிக்கு வலப்புறம் டாய்லெட் அமைந்திருந்தது. வலப்புறம் தகடுகளால் சுவர் எழுப்ப ஏற்பாட்டாளர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. பார்த்தியும் ரௌனக்கும் வாக்குவாதம் செய்து அனுமதி வாங்கினார்கள். சாவடிக்கு இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் தேவையாக இருந்தது. குளிர்சாதனப் பெட்டிக்குள் குளிர்ப் பொருட்கள் காட்சிக்கு வைப்பதாகத் திட்டம். ஏற்பாட்டாளர்கள், “இருபத்தி நான்கு மணி நேர மின்சாரத்திற்கு நீங்கள் முன்பதிவு செய்யவில்லை,” என்றார்கள். பார்த்தி இரு வாரம் முன்னர் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை தன் கைதொலைபேசியில் காண்பித்தான். ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு இருபத்தி நான்கு மணி நேர மின்சார இணைப்பு கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். குளிர்சாதனப் பெட்டி மாலை ஏழு மணி வரை வரவில்லை. வாடகைக்கு கொடுப்பதாகச் சொன்னவரை பார்த்தி பல முறை தொடர்பு கொண்டான். மாலை ஏழு மணியாகியும் குளிர் சாதனப் பெட்டி வந்தபாடில்லை. ரௌனக் தொலைபேசியில் சத்தம் போட்டு கத்தியபோது இரவு பத்து மணிக்கு கிடைக்கும் என்று பதில் வந்தது.
 
பார்த்தியும் ரௌனக்கும் ஓட்டலுக்கு வந்து செக்-இன் செய்தார்கள். ஒரு குளியல் போட்டுவிட்டு காஃபி ஷாப்பில் இரவு உணவு உண்டு கொண்டிருக்கையில் போஸ் வந்தார். இருவருக்கும் ஆச்சரியம். போஸ் அடுத்த நாள் காலையில் வருவதாகத்தான் முதலில் சொல்லியிருந்தார். “அதிகாலையில் விமானம் பிடித்து மும்பை வந்து சேர நான்கு மணிக்கே எழுந்துவிட வேண்டும்; அதனால்தான் இரவே வந்து விட்டேன். நிம்மதியாகத் தூங்கி பொருட்காட்சியில் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் பாருங்கள்,” என்றார் போஸ். மூவரும் சேர்ந்து உணவுண்டார்கள். பத்தரை மணியளவில், “பொருட்காட்சித்திடலுக்கு சென்று குளிர் சாதனப் பெட்டி வந்து விட்டதா என்று பார்க்க வேண்டும்,” என்று பார்த்தி ரௌனக்கை துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
 
திடலுக்குச் சென்றபோது குளிர் சாதனப் பெட்டி சாவடியில் இருந்தது. அது சரியாக வேலை செய்கிறதா என்று சரி பார்த்தார்கள். இருபத்தி நான்கு மணி நேர மின்சார இணைப்பு குளிர் சாதனத்துக்கு கொடுக்கப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் சாவடிகளின் வரிசைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் கம்பளத்தை விரிக்கும்வரை பார்த்தியும் ரௌனக்கும் திடலிலேயே இருந்தார்கள். அறைக்கு திரும்பியபோது மணி ஒன்று.
 
பார்த்தி அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முந்தைய தினம் ஓட்டலின் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த சாம்பிள்களை எடுத்துச் சென்று கண்காட்சிச் சாவடியின் குளிர் சாதனப் பெட்டிக்குள் அடுக்கி, சாவடியைச் சுத்தப்படுத்தி, பாம்ப்ளெட்டுகளை ஸ்டாண்டில் இட்டு வருகையாளர்களை வரவேற்கத் தயாராக நின்றபோது ரௌனக் வந்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஹரியும், மௌஷுமியும், சுசிதாவும் மும்பை விமான நிலையத்திலிருந்து நேராக பொருட்காட்சித்திடலுக்கு வந்தனர். போஸ் சிவந்த விழிகளுடன் நடுப்பகல் பனிரெண்டு மணிக்கு வந்தார்.
 
முதல் நான்கு மணி நேரம் பார்வையாளர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. விற்பனை அணி உற்சாகத்துடன் வருகையாளர்களுடன் பேசினர். விருப்பம் காட்டியவர்களுக்கு சாம்பிள்களைக் கொடுப்பதும், டேஸ்ட் செய்ய வைப்பதுமாகக் கழிந்தது. போஸ் சாவடிக்குள் இருக்கையில் அமர்ந்து கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியவாறும், பேசிக் கொண்டும் இருந்தார். சுசிதா மைய மேஜைக்கருகில் வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளை தனக்கருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் களைப்பாறச் சொன்னார். “உஹூம்” என்று தொண்டையில் சத்தமேற்படுத்தி ரௌனக் பார்த்தியிடம் வந்து “பாத்தீங்களா?” என்று மெலிதாகச் சிரித்தான். 
 
ஹரி சுறுசுறுப்பாக வருகையாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். மௌஷுமி சாவடியின் சாம்பிள்களை ஒழுங்குபடுத்துதல், சுவைக்கும் குச்சிகளைக் குப்பைத் தொட்டிக்குள் இடுதல், மைய மேசையை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்ற காரியங்களைச் செய்தவாறிருந்தாள்.
 
ஹரியும் போஸ்-சும் சாவடிக்கு வெளியே நின்றவாறு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு வாடிக்கையாளர்களைப் பற்றியதாய் அவர்களின் பேச்சு இருந்தது. மதியத்துக்குப் பிறகு பார்த்தி சூழலிலிருந்து விலகியவன் போல் காணப்பட்டான். ரௌனக் “என்ன ஆச்சு? ஏன் மூட் அவுட்?” என்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் பார்த்தி புறக்கணித்தான். சிறிது நேரம் கழித்து ஹரியும் அதையே கேட்டபோது, “மிகவும் களைப்பாக இருக்கிறது,” என்று சொன்னான்.
 
போஸ் பார்த்திக்கு அருகே வந்து நின்றபோது, “பாஸ், எனக்கு இன்று மாலை கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு; போரிவலில இருக்கற என் சகோதரன் வீடு வரை போகணும்” என்றான் பார்த்தி. போஸ், “இன்னிக்கு டீம் டின்னர் கம் பார்ட்டி இருக்கே… அத விட்டுட்டு ஏன் போகணும்? நாளைக்கு போ,” என்று சொன்னார். “சார் எனக்கு குடிக்கற பழக்கம் கிடையாது; பார்ட்டிக்கு வந்து நான் என்ன பண்ணப் போறேன்?” என்று பார்த்தி சொன்னதும். “ஒரு சீனியர் மாதிரி பேசு பார்த்தி, டீம் ஸ்பிரீட் ரொம்ப இம்பார்டென்ட். ஸோ, ஜாய்னிங் தி பார்ட்டி இஸ் எ மஸ்ட்… சேஞ்ச் யுவர் ப்ரோக்ராம்!” என்று சொல்லி நகர்ந்தார். போஸ்சின் பதில் கடுமையாகவும் நேரடியாகவும் இருந்தாலும் அவர் உதட்டின் சிறு புன்னகை மாறாமல் இருந்தது. கொஞ்சம் தள்ளி நின்று யாரேனும் அவரை நோக்கினால் புன்னகை தவழ சாதாரணதோர் உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார் என்றே நினைப்பார்கள்.
 
சுசிதாவும் போஸ்-சும் மோபைலும் கையுமாக யாருக்கோ மெசெஜ் அனுப்பியவண்ணம் இருந்தார்கள். ரௌனக்கும் சுசிதாவும் போஸ்-சும் மதிய உணவு உண்ண வெளியே சென்ற போது ஹரியும் மௌஷுமியும் வருகையாளர்களிடம் அளவளாவினார்கள். பார்த்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வெறுமனே ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.   
 
மதிய உணவிற்குப் பிறகு திரும்பி வந்த ரௌனக் “பார்த்தி ஏன் அப்செட்?” என்று போஸ் அவனைக் கேட்டதாகச் சொன்னான். அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் என்பதை அறிய பார்த்தி ஆர்வம் காட்டவில்லை.
 
பொருட்காட்சி நேரம் முடிவடைய அரை மணி நேரம் இருந்தது. சுசிதாவுக்கு பவாய் செல்ல எத்தனை நேரம் பிடிக்கும் என்று பார்த்தியிடம் கேட்டாள். முக்கால் மணி நேரம் ஆகலாம், என்று பதில் சொன்னான். “டீம் விருந்துன்னு சொன்னார் பாஸ். இவ எங்கே பிய்த்துக்கொண்டு ஓடுகிறாள்?” என்று கேட்டான் ரௌனக்.
 
போஸ் யாருடனோ போனில் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ஹரியிடம், “ஒருவரை அவசரமாகச் சந்திக்க வேண்டும்; ஒன்பது மணிக்குள்ள ஓட்டலுக்கு வந்துடறேன். எனக்காக ஓட்டல்ல வெய்ட் பண்ணுங்க…. பார்த்தி, இங்கருந்து பாந்த்ரா போக எத்தனை நேரம் பிடிக்கும்?” என்று கேட்டார். பார்த்தி, “ஒரு மணி நேரம் ஆகலாம்” என்றதும் சுசிதாவைப் பார்த்து, “உனக்கு பவாய் போகணுமில்லியா..…நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு பாந்த்ரா போறேன்” என்றார் போஸ். 
 
சுசிதாவும் போஸ்-சும் ஆறு மணிக்கு கிளம்பிச் சென்றார்கள். மைய மேஜையில் இருந்த சாம்பிள்களை குளிர்சாதனப் பெட்டியில் திரும்ப வைக்கும் பணியையும், ஸ்டேஷனரி, கட்டர் போன்ற சாதனங்களை அட்டைப் பெட்டிக்குள் திரும்ப வைக்கும் வேலையையும் மௌஷுமியிம் ரௌனக்கும் செய்து முடித்தார்கள். பொருட்காட்சித் திடலிலேயே போட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பனொருவனை சந்தித்து விட்டு ஹரி திரும்பிய பிறகு எல்லோரும் ஓட்டலுக்கு கிளம்பினார்கள்.
 
ஓட்டல் திரும்பிச் சென்றவுடன் ரௌனக்கின் அறைக்கு ஹரி வந்தான். பார்த்திக்கு இன்டெர்காமில் போன் செய்து அழைத்தார்கள். “கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்” என்று பதில் கிடைத்தது.
 
மௌஷுமி பார்டியில் சேர்ந்து கொண்டாள். மினி பாரில் இருந்த வோட்காவை எடுத்து லிச்சிப் பழச் சாற்றில் ஊற்றி குடித்தாள். ரௌனக்கும் ஹரியும் விஸ்கி பருக ஆரம்பித்தார்கள். மதுவுடன் சேர்ந்து உண்ண நொறுக்குத் தீனிகளும், தந்தூரி சிக்கன் துண்டுகளும் வரவழைக்கப்பட்டன.   சுசிதா எங்கு சென்றிருக்கக் கூடும் என்று கொஞ்ச நேரம் வம்பு பேசிக் கொண்டார்கள். மௌஷுமி இருக்கும்வரை ஹரியும் ரௌனக்கும் கண்ணியமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். போஸ்-சிடமிருந்து போன் வரவில்லை. மௌஷுமி தூக்கம் வருகிறது என்று தன் அறைக்குச் சென்றாள். ஹரியும் ரௌனக்கும் ரூம் சர்வீஸில் சிக்கன் பிரியாணியும், தந்தூரி ரொட்டியும், பன்னீர் மசாலாவும் வரவழைத்துச் சாப்பிட்டார்கள்.
 
பதினோரு மணிக்கு கேப்-டிரைவர் ஒருவன் போன் செய்து போஸ் சாரின் இரண்டு கைத்தொலைபேசிகளிலும் சார்ஜ் போய் விட்டதால் அவரால் போன் செய்ய முடியவில்லை; அவர் பாந்த்ராவிலேயே சாப்பிட்டு விட்டதாகவும் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது என்றும் தகவல் சொன்னான். ரௌனக் “ஹாஹா,” என்று சிரித்தான். “பார்த்தி சாரை ரொம்ப மோசமா ட்ரீட் பண்ணிட்டாரு போஸ்; அந்த கோபத்துலதான் பார்த்தி சார் நம்ம ரூமுக்கு வராமே தன்னோட ரூமுலயே இருக்காரு போல” என்று ரௌனக் சொன்னதும், “போஸ் பாஸ் எப்பவுமே அப்படித்தான்” என்றான் ஹரி. பிறகு ஹரி இன்டெர்காமில் பார்த்தியை தொடர்பு கொள்ள முயன்றான். இன்டெர்காமில் ஒரு பதிலும் இல்லை.
 
பாட்டிலில் விஸ்கி கொஞ்சம்தான் பாக்கியிருந்தது. அறையின் காலிங் பெல் ஒலித்தது; பார்த்தி அறைக்குள் நுழைந்தான். “விஸ்கி மிச்சம் இருக்கா?” என்று கேட்டான். ரௌனக், “என்ன பாஸ் சொல்றீங்க? நீங்களா கேக்குறது?” என்று ஆச்சரியப்பட்டான். “ஹரி, எனக்கு மிக்ஸ் பண்ணிக்குடு”. பார்த்திக்கு ஹரி மிக்ஸ் பண்ணிக் கொடுத்தான். “என்ன பாக்கறீங்க…. டீம் பார்ட்டி போயிட்டிருக்குப்பா” என்றபடி கோப்பையை தன் வாய்க்குள் கவிழ்த்தினான் பார்த்தி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.