சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லும் கலை – ‘The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century- Steven Pinker’.

இது நூல் மதிப்பீடோ, நூல் அறிமுகமோ விமரிசனமோ அல்ல. மேற்கண்ட புத்தகத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் எழுத வந்த விஷயத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டீவன் பிங்கர் எழுதிய, “The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century” என்ற புத்தகம் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி இணையமெங்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். Cognitive Scientist, Linguist என்றெல்லாம் அறியப்படுவதாலும் பொதுவாசகர்கள் படிக்கும் வகையில் அறிவியல் புத்தகங்களை எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்பதாலும் பிங்கர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

இதைப் படித்தால் நாமும் நாலு பேர் விரும்பி வாசிக்கும் வகையில் எழுத முடியாதா என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கவும் செய்கிறது. ஆனால் இதிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் ஆங்கிலத்துக்கு மட்டுமே பொருந்துபவை, இலக்கண விஷயங்களை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். இதில் நமக்கு பயன்படுவதாக பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டை மட்டும் இப்போதைக்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஸ்டீவன் பிங்கர் நாம் கற்றுக்கொள்ளவும் நம் எழுத்தின் ஒழுங்கமைவை விவாதிக்கவும் சில கருத்துருவாக்கங்களைக் கொடுக்கிறார். இவை நம் உடனடி தேவை என்று நினைக்கிறேன். ஒரு கட்டுரை எழுதும்போதும், அது தொடர்பாக கருத்து சொல்லவும் பயன்படும் ஆற்றல் கொண்ட கருவிகள் இவை.

முதலில் சொல்ல வேண்டியது, தூல உலகை விவரிப்பதையே நோக்கமாகக் கொண்ட கிளாசிக் ஸ்டைல் குறித்து அவர் சொல்லும் விஷயங்கள். நாம் ஒரு விஷயத்தை எழுதும்போது எந்த லெவலில் பேச வேண்டும் என்று- ஒரு எழுத்தாளனாக எந்த இடத்தில் நின்று கொண்டு வாச்கனுடன் உரையாட வேண்டும் என்று-, தீர்மானிக்க உதவும் விஷயம் கிளாசிக் ஸ்டைல் பற்றிய பிங்கரின் அறிமுகம். நாமும் வாசகரும், இருவரும் இந்த ஒரே தூல உலகைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு கட்டுரை எழுதும்போது, நம் வாசகர் பார்க்காத சில விஷயங்களை நோக்கி அவரது பார்வையைத் திருப்புகிறோம். அவ்வளவே.

இங்கு பார்வையைத் திருப்புவது என்று சொல்வது தற்செயலல்ல. நாம் கிளாசிக் ஸ்டைலில் எழுதும்போது, புலன்களால் உணரப்படும் புறப்போருட்களைதான் கருத்துருவாக்கங்களாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். படிமம் என்று தமிழில் சொல்வதை பிங்கர் பேசுவதில்லை என்றாலும் அது போன்ற விஷயத்தைதான் இப்படிச் சொல்கிறார்.

பல கட்டுரையாளர்கள் எதை எழுதினாலும், தம் அனுபவத்தைச் சொல்வதும், சினிமா உதாரணங்கள் தருவதும், தேர்ந்த இலக்கியவாதிகள் பட்டுத் துணி, வெட்டுக் கத்தி, புல்லின் இதழ் என்றெல்லாம் எழுதுவதும் இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான்- அறிந்தவற்றின் மொழியில் அறியாதவற்றைச் சித்தரிக்கிறார்கள். எப்போதும் முதலில் அறிந்ததே வருகிறது, அறியப்படாததும் அறிந்தவற்றின் மொழியில்தான் விளக்கப்படுகிறது. கட்டுரையின் வடிவமைப்பில் மட்டுமல்ல, வாக்கிய அமைப்பிலும் இந்தக் கொள்கை பெரும்பாலும் கையாளப்பட வேண்டியது.

இதை கிளாசிக் ஸ்டைலுக்கான சிறிய அறிமுகமாக எடுத்துக் கொள்ளலாம். பிங்கர் இதற்கு ஒரு முழு அத்தியாயமே அளித்திருக்கிறார் என்பதால் நாம் சொல்வது மிகக் குறைவு என்றறிக. ஆனால் நம் தற்போதைய தேவைக்கு இது போதும்.

இதுக்கு அடுத்தபடியாக, கட்டுரையின் வடிவம். ஒரு வெற்று கான்வாசில் படம் வரைவது போன்றது என்று எழுத்தைக் கொண்டால், நம் தூரிகை எழுதவேண்டிய கோடுகள் என்ன, நம் சித்தரிப்பில் வண்ணம் பெற வேண்டிய கோட்டுருவம் என்ன என்று கேட்டால், அது தொடர்பாக சில விஷயங்கள் சொல்கிறார்.

இவற்றில் முக்கியமான விஷயம், மனித மனம் ஒரு சமயத்தில் நான்கு விஷயங்கள்தான் மனதில் வைத்துக் கொள்ள முடியும் என்பது. அப்படியானால் ஒரு கட்டுரையில் நாலு விஷயம்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம், ஆமாம் என்று சிலர் சொல்கிறார்கள். இவரும் ஆமாம் என்றுதான் சொல்றார் – ஆனால் சொல்வது எல்லாவற்றையும் சொப்பு பொம்மை மாதிரி ஒன்றுக்குள் ஒன்று என்று நான்கு நான்காகத் தொகுத்துக் கொள்ளச் சொல்கிறார். ஒவ்வொரு தொகுப்பும் அதனுள் இன்னும் சில உபதொகுப்புகள் கொண்டதாக இருக்கலாம். நான்குதான் என்றில்லை, அது போன்ற ஒரு சிறிய தொகைக்குள் நீ கொடுக்கவிருக்கும் விஷயங்களைத் தொகுத்துச் சொன்னால் கட்டுரையைப் படிப்பவன் பிரச்சினை பண்ணாமல் படிப்பான் என்கிறார்.

பொதுவாகச் சொன்னால், கட்டுரையின் வடிவமைப்பில் ஒரு சீர்மை இருக்க வேண்டும் என்கிறார். சீராக இருக்க வேண்டும்- congruence, நாம் என்ன சொல்லப் போகிறோம், அதை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற ஒரு ஐடியா இருக்க வேண்டும், நாம் அதைச் சொல்லும் வரிசையில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். ஒற்றை வாக்கியமானாலும் சரி, முழு கட்டுரையானாலும் சரி, காட்டுக்கும் மேட்டுக்கும் பாயக் கூடாது. பத்தியின் ஒவ்வொரு வாக்கியமும், கட்டுரையின் ஒவ்வொரு பத்தியும் அடுத்ததற்குக் கொண்டு போய் விடுவதாக இருக்க வேண்டும். இவற்றுக்கு இடையில் தொடர்பு, ஒரு உறவு, ஒழுங்கு இருக்க வேண்டும். இந்த உறவு, எது எங்கு எந்த வகையில் பொருந்துகிறது என்ற சுட்டல் தேவைப்படும் இடங்களில் அளிக்கப்பட வேண்டும்.

இதில் மிகவும் முக்கியமான விஷயம், கட்டுரையின் விஷயம் என்ன என்பதில் தெளிவு இருக்க வேண்டும் – topic. இதைப்பற்றிதான் இவர் எழுதப் போகிறார் என்பது தெளிவாகப் புரிய வேண்டும், இதை எப்படி எழுதப் போகிறார் என்பதும் தெரிய வேண்டும். ஒரு வகையில் சொன்னால், இதுதான் என் ஏரியா என்று கட்டம் போட்டது போல் இருக்க வேண்டும்.

எதற்கு இதெல்லாம் என்பது எவ்வளவு சீக்கிரம் வாசகனுக்குச் சொல்லப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது – இங்கு point என்ற சொல்லை பிங்கர் பயன்படுத்துகிறார். இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்கும்படி இருக்கக் கூடாது. எதைப் பற்றி பேசுகிறோம் என்ற டாபிக் ஒன்று, அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறோம் என்ற பாயிண்ட் இரண்டாவது. இவை இரண்டும் கட்டுரையின் துவக்கத்திலேயே நிறுவப்பட வேண்டியவை. இவற்றைக் கொண்டுதான் வாசகன் தன் மனக்கண்ணில் நீங்கள் எழுதுவதைத் தொகுத்துக் கொள்ளப் போகிறான்.

தொகுத்துக் கொள்வது என்று சொன்னால், உறுதியான, தர்க்க ஒழுங்கு இருக்க வேண்டும் என்று பொருட்படுகிறது, இல்லையா? இதை பிங்கர் Congruence என்று சொல்கிறார். நீங்கள் சொல்லும் விஷயம் சீராக இருக்க வேண்டும். டாபிக்கை விட்டு காரணமில்லாமல் விலகாமல், நீங்கள் சொல்ல வரும் பாயிண்ட்டுக்கு முரண்படாமல், ஒவ்வொரு கண்ணியாக இணைத்துக் கொண்டே போக வேண்டும்.

ஐடியாக்களுக்கு இடையே உள்ள இந்த உறவுக் கண்ணிகளை congruence relationship என்று சொல்கிறார் பிங்கர். இது 1748ல், தத்துவவியலாளர் Hume எப்பொழுதோ சொன்னதுதான் என்கிறார் அவர். இந்தக் கண்ணிகள் மொத்தம் மூன்றே மூன்றுதான்- Resemblance, Contiguity in time or place, and Cause or Effect. இதை நாம் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும், இல்லையா? அப்படி ஞாபகம் வைத்துக் கொண்டால், இவற்றுக்குள் பத்து பன்னிரெண்டு உபதொகுப்புகள் அடக்கம் என்று சொல்வதை நாம் வரிசையாக கவனிக்க முடியும்.

Resemblance என்ற Congruence Relationஐ இரண்டாகப் பிரிக்கலாம் – Similarity, Contrast என்று. சாயலை நிறுவும் சொற்கள் அடுத்தடுத்த வாக்கியங்களின் துவக்கத்தில் அல்லது இறுதியில் வருவதைப் பார்க்கலாம். பரிட்சையில்கூட, write about the similarities between Egyptian and Sumerian Civilization என்று கேட்பார்கள், அல்லது, Contrast the functions of DNA and RNA என்று கேட்கலாம். இந்த ஒற்றுமை வேற்றுமைகளை, சாதக பாதகங்களை, நன்மை தீமைகளை, குறை நிறைகளை வைத்தே கட்டுரைகள் எழுதலாம், இல்லையா? இலக்கியக் கட்டுரைகளில் நாம் இதைப் பார்க்க முடியும். கொங்கு வட்டார எழுத்தாளர்கள் என்று ஒரு லிஸ்ட்; அல்லது, குற்றபுனைவு எழுத்தாளர்கள்; அல்லது, தஞ்சை மண்ணைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருவரின் எழுத்திலும் பல வேறுபாடுகள் உண்டு என்று.

Similarity ஒரு congruence relationship என்றால், Contrast அதன் இரட்டை. ஜெயமோகன் தளத்தில் எம் டி வாசுதேவன் நாயர் பற்றி ஒரு கட்டுரை http://www.jeyamohan.in/?p=61982 இடுகையிடப்பட்டுள்ளது. அவரது பாணியில், தேக வலுவற்ற ஒரு சிறுவனைப் படிமமாக நிறுவிவிட்டு, ஏறத்தாழ கட்டுரையின் இந்தப் பகுதி நெடுகவே Coherance Relationன் முதலில் குறிப்பிடப்படும் பண்பான ஒப்புமையை – resemblance- வெவ்வேறு வகைகளில் பேசிச் செல்கிறார் அவர்.

Resemblance என்ற சொல்லை ஒப்புமை என்று புரிந்து கொண்டால், அதனுடன் நேரடி தொடர்பு கொண்டவையாக உள்ள ஒற்றுமை வேற்றுமையை மட்டுமே நாம் தொகுத்துக் கொள்ள முடியும். ஆனால், எழுத்து என்பதை சித்தரிப்பு என்று சொல்வதால், semblance என்ற சொல்லைக் கொண்டு, இதில் Elaborotation, Exemplification, Generalisation, Exception என்ற நான்கு congruence relationகளையும் சேர்த்தால் மொத்தம் ஆறாகிறது. இவையெல்லாம் ஒரு விஷயத்தை எழுத்தைக் கொண்டு சித்தரிக்க உதவுகின்றனதானே, இவற்றில் Similarity, Contrast என்ற இரண்டையும் பார்த்தாயிற்று. இனி பிறவற்றையும் பார்க்கலாம்.

ஒரு விஷயத்தைப் பொதுவாகச் சொல்லி பின்னர் அதைப் பற்றி விளக்குவது elaboration- “அப்பா, என் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். தினமும் இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு, முற்றத்தில் வந்து உட்கார்ந்திருப்போம். நிறைய கதைகள் சொல்வார். நான் தப்பும் தவறுமாக சொல்லும் எல்லாவற்றையும், சரிதான் என்பது போல் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா, ”நீங்கள் அவனை கெடுத்துவிடுவீர்கள்” என்பாள். ஆனாலும் அவர், என்னிடம் என்றும் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன். அன்று இரவு படுக்கையில், ”ஏண்டா ராமாமிருதம், உன்னை அடிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமா என்ன. இரத்தம் கொட்டுகிறதடா உள்ளே” என்று சொன்னார். தினமும் சேர்ந்துதான் படுத்திருப்போம்.” – லா.ச.ரா

Elaboration போன்றதுதான் Exemplification- பொதுவாக ஒன்று சொல்லி அதற்கான உதாரணங்கள் அளிப்பது. உதாரணங்களை முதலில் சொல்லி பின்னர் பொதுமைப்படுத்துவது generalisation.

Exception என்று ஒன்றை பிங்கர் சொல்கிறார். இதில் இரு உட்பிரிவுகள் உள்ளன – பொதுவான ஒரு விஷயத்தைச் சொல்லி, பின்னர் விலக்குகளைச் சொல்வது ஒன்று; விதிவிலக்கை முதலில் சொல்லி, வழக்கைப் பின்னர் சொல்வது மற்றொன்று. சொல்லளவில் இரண்டும் ஒன்று போலவே இருக்கின்றன, இருந்தாலும் பயன்பாட்டில் வேற்றுமையுண்டு.

இத்துடன் ஹ்யூமின் சீர்மைக் கண்ணிகளில் Resemblance முடிவுக்கு வருகிறது. இனி Sequence, Causation என்ற இரண்டும்தான் உள்ளன. Congruence Relation என்பதைதான் தமிழில் சீர்மைக் கண்ணிகள் என்று எழுதுகிறேன், இது துல்லியமான மொழிபெயர்ப்பல்ல என்றாலும்கூட.

ஹ்யூமின் சீர்மைக் கண்ணி வகைமைகளில் இரண்டாவது, Contiguity in time or place: முதலில் நடந்ததைச் சொல்லி, அடுத்து நடப்பதைச் சொல்லுதல், ஒன்று. இரண்டாமது, பிந்தைய நிகழ்வைச் சொல்லியபின் முந்தையதைச் சொல்லுதல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை, ஆனால் சமயத்தில் இந்த இரு வாக்கிய அமைப்புகளில் ஏதோ ஒன்று மிகவும் பொருத்தமானதாக அமையலாம் என்று சொல்லி வைப்போம். எப்படியிருந்தாலும், இலக்கணத்தை எடுத்துச் சொல்வதென்றால் முக்கியமோ இல்லையோ, எல்லாவற்றையும் சொல்லத்தானே வேண்டும்.

ஹ்யூமின் கடைசி வகைமை, Cause and Effect. இங்கும் இரு தேர்வுகள் உண்டு, வினையைச் சொல்லி விளைவைச் சொல்வது- அல்லது விளைவைச் சொல்லி வினையைச் சொல்வது.

இதன் இன்னொரு உபபிரிவு, கொஞ்சம் சிக்கலாகத் தெரியலாம். Violated Expectation, Failed Prevention என்று இரண்டைச் சொல்கிறார். ஒன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் தேர்ந்த எழுத்தாளன் கையில் இந்த இருவகை வாக்கிய அமைப்புகளும் கட்டுரையின் குரலையே புரட்டிப் போட வல்லது என்று எதிர்பார்க்கலாம்.

தற்போதைக்கு இவ்விரண்டையும் நான் இப்படி புரிந்து கொள்கிறேன்- ஒரு நேர்மறை எதிர்பார்ப்பை நிறுவி, அது உடைவது ஒன்று. ஒரு எதிர்மறை எதிர்பார்ப்பை நிறுவி, அது தோற்பது மற்றொன்று. ஒரே வாக்கிய அமைப்பில் இப்படிப்பட்ட உத்திகள் வரும் என்பதைவிட, பத்தி பத்தியாக எழுதிச் செல்லும்போது, தடைகளை முதலில் சொல்லி, அதன்பின் அவை எப்படி வெற்றி கொள்ளப்பட்டன என்று சொல்லுவதும், அதற்கு மாறாக, முதலில் வெற்றியைச் சொல்லி, அதை அடைய எப்படி போராட வேண்டியிருந்தது என்று சொல்லுவதும் நாம் பார்க்காததில்லை.

ஹ்யூம் சொல்லாத இன்னொரு கண்ணி உண்டு என்கிறார் பிங்கர் – attribution. According to, stated that என்ற சொற்களைக் கொண்டு சொல்லப்படுவது இது. மேற்கோள்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், எண்ணங்களை ஓர் ஒழுங்குடன் சொல்வதுதான். நாம் பேசும் விஷயம் என்ன, அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறோம் என்பதில் தெளிவு இருந்தால், அதையொட்டி ஒவ்வொன்றாக எழுதிச் செல்லலாம். வாக்கியங்களுக்கு இடையேயும், பத்திகளுக்கு இடையேயும் இடையறாத இணைப்பு இருந்தால்தான் வாசகன் குழப்பமின்றி வாசித்துச் செல்ல முடியும். இவை மைய விஷயத்தோடு தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

வடிவம் என்று பார்க்கும்போது இத்தகைய ஒரு சட்டகம் கையில் இருந்தால், எங்கே விஷயத்தைச் சரியாகச் சொல்லத் தவறுகிறோம், எங்கே விஷயத்தை விட்டு விலகிச் செல்கிறோம் எனபதை உணர்வதற்கு இது ஒரு கருவியாக இருக்கும். அது மட்டுமல்ல, மாமன்னர் அலெக்சாண்டர் பற்றி வீட்டுப்பாடம் எழுதும் மாணவன், “மாமன்னர் அலெக்சாண்டர் ஒரு மாபெரும் அரசர்,” என்று எழுதிவிட்டு, “பர்ஸ்ட் லைன் எழுதிட்டேன், அடுத்தது என்ன?” என்று அவன் அம்மாவைப் பார்த்து கேட்டது போல் நாம் தவிக்க மாட்டோம் (புத்தகத்தில் உள்ள உதாரணம் இது). பிங்கர் நமக்கு அளித்திருக்கும் கண்ணிகளை நூல் பிடித்தாற்போல் தொடர்ந்து சென்று நல்ல ஒரு கட்டுரை எழுதிவிடுவோம்.

மாமன்னர் அலெக்சாண்டர் பற்றி நமக்குத் தெரிந்த விஷயத்தை எழுதினால் வீட்டுப்பாடம், தெரியாத விஷயத்தை எழுதினால் இலக்கியம். நல்ல வேளை, நம் எழுத்துக்கு மதிப்பெண் கொடுத்து பெயில் பண்ணும் இடத்தில் யாரும் இல்லை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.