ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்கா கொண்டு போனாலும் அப்படித்தானாம்!

இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாட்ரிக் மோடியானோ குறித்து நியூ யார்க்கர் இதழில் வோஹினி வரா எழுதியுள்ள கட்டுரை நாம் நினைப்பதற்கு மாறான சில விஷயங்களைப் பேசுகிறது-

அமெரிக்கர் அல்லாத எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும்போது பெரும்பாலும், அமெரிக்காவில் உள்ள வாசகர்கள், அதிலும் குறிப்பாக பரவலான வாசிப்பும் உலகளாவிய பார்வையும் கொண்டவர்களும்கூட, யார் இது என்று விழிப்பது ஏன்?

இதற்கு பலவிதமான பதில்கள் உண்டு. ஆனால் அதிக அளவில் சொல்லப்படுவது, அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மொழியாக்க நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன என்ற பதில். சென்ற ஆண்டு கதை, கவிதை, நாடகம் என்ற வகைமைகளில் ஏறத்தாழ அறுபதாயிரம் புத்தகங்கள் வந்தன. அவற்றில் ஐநூற்று இருபத்து நான்கு நூல்கள் மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று ரோசஸ்டர் பல்கலைகழகத்தால் நிர்வகிக்கப்படும் த்ரீ பர்சண்ட் இணையதளம் சொல்கிறது. 2008ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய தகவல்களை இத்தளம் மிக கவனமாகச் சேகரித்து வருகிறது. தேசவாரியாகவும், காலவரிசைப்படியும் இந்த விவரங்களை அட்டவணைப்படுத்தவும் செய்கிறது (பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் முதலிய ஐரோப்பிய தேசங்களின் நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன).

இந்தப் புத்தகங்களை வெளியிடுபவர்கள் யார் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விஷயம். சென்ற ஆண்டு டால்கி ஆர்சைவ் என்ற சிறு பதிப்பகமே மிக அதிக அளவில் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பதிப்பித்தது. பொதுவாகவே, யூரோப்பா எடிஷன்ஸ், சீகல் புக்ஸ், ஆர்சிபெலாகோ, ஓப்பன் லெட்டர் போன்ற சிறுபதிப்பகங்களே மொழியாக்க நூல்களை அதிக அளவில் வெளியிடுகின்றன (அமேசானின் அமேசான்கிராசிங் என்ற பதிப்பச்சு இரண்டாமிடம் வந்தது ஒரு விதிவிலக்கு). ஃபரார், ஸ்ட்ராஸ் அண்ட் ஜிரோ மற்றும் நோஃப் போன்ற பெரிய பதிப்பகங்கள் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன.

ஒரு வகையில் இது முக்கியமான் விஷயம். காரணம், ஒரு புத்தகம் பற்றிய விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதற்கும் அந்த நூலை எழுதியவர் பெயர் பரவலாக அறியப்படுவதற்கும் நேரடி உறவு இருக்கிறது. 2009ஆம் ஆண்டு, மேரி என்டியே என்ற பிரெஞ்சு எழுத்தாளர், மிகவும் மதிக்கப்படும் ப்ரி கோன்கோ விருது வென்றார். அந்த புத்தகம் நோஃப் என்ற அமெரிக்க பதிப்பாளரின் கவனத்தை ஈர்த்தது. 2012ஆம் ஆண்டு அதை “Three Strong Women,” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதன் மதிப்பீட்டை டைம்ஸ் நாளிதழில் படித்த நினைவிருக்கிறது (“மானுட துயரின் தீவிர நிலைகளை ஆய்வுக்குட்படுத்த அஞ்சாத நாவலாசிரியரின் நுண்மையான படைப்பு”), அந்த நூலை நான் வாசித்ததும் நினைவிருக்கிறது. எதையும் தவிர்க்காமல், முழுக்க முழுக்க புதிய வகையில் எழுதப்பட்ட புத்தகம் அது. அவரது அடுத்த புத்தகம் மொழிபெயர்க்கபப்ட ஆவலுடன் காத்திருந்தேன்.

ஓப்பன் லெட்டர் பதிப்பாளர் சாட் போஸ்ட் சென்ற வியாழக்கிழமையன்று அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அடுத்த நூலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மூன்றாவது நூல் அடுத்த மாதம் வரவிருக்கிறது – இரண்டையும் டூ லைன்ஸ் என்ற சிறு பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது. இந்த இரு நூல்கள் பற்றியும் நான் எதுவம் கேள்விப்பட்டதில்லை- டைம்ஸ் மதிப்பீடு எதுவும் கிடையாது, நான் வாசிக்கும் புத்தகங்களில் எந்த விளம்பரமும் வரவில்லை. இவற்றில், நோஃப் பதிப்பகத்தின் “Three Strong Women” என்ற நாவலுக்கு குட் ரீட்ஸ் தளத்தில் எண்ணூற்று எண்பத்து-ஒரு மதிப்பீடுகள் இருக்கின்றன, ஆனால் சிறுபதிப்பகம் சென்ற ஆண்டு பதிப்பித்த நாவலுக்கு முப்பத்து ஆறுதான்.

“பெரிய அளவில் மார்க்கெட் செய்ய எங்களிடம் பணமில்லை – அதிலும் குறிப்பாக, எழுத்தாளருக்குச் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால் அது கடினம்தான்,” என்று விளக்கினார் போஸ்ட். “அப்படியே அவர்கள் நல்ல ஆங்கிலம் பேசினாலும், அவர்களை அமெரிக்காவெங்கும் அழைத்துச் செல்ல மிகவும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியும்கூட பிரமாதமாய் விற்பதில்லை. நூல் அறிமுகச் சந்திப்புக்கு ஐந்து பேர் வருவார்கள், அங்கே போக ப்ளேன் டிக்கெட்டுக்கு மட்டும் எண்ணூறு டாலர் செலவு செய்திருப்போம்”

பெரிய அளவில் திட்டமிடுவதில்லை என்பதும் குறைவாக விளம்பரம் செய்ய ஒரு காரணம். சிறு பதிப்பாளர்கள் வேற்றுமொழி நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்ய கிட்டதட்ட ஐயாயிரம் டாலர்கள் அட்வான்சாகக் கொடுக்கிறார்கள். அந்தப் புத்தகங்கள் ஐயாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பதில்லை. இந்த அச்சகங்கள் லாப நோக்குடன் நடத்தப்படுபவை அல்ல, பல்கலைக்கழக நிதியுதவி பெறுபவையாகவும் இருக்கலாம். அதனால், நிதிக்கொடைகளைக் கொண்டு இயங்க முடியும். புத்தக விற்பனையை மட்டுமே நம்பி இவை இருப்பதில்லை.

ஆனால் பெரிய பதிப்பாளர்கள் அளிக்கும் அட்வான்ஸ் தொகை, ஐந்து, ஆறு அல்லது ஏழு இலக்கங்களையும் எட்டுகிறது. விற்பனையும் அந்த அளவுக்கு இருக்கிறது. அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியும். அவை லாப நோக்கு கொண்ட முதலீட்டாளர்கள் உள்ள, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, நிறுவனங்களால் நடத்தப்படும் பதிப்பகங்களாக இருக்கும். பிரம்மாண்டமான விற்பனைச் சாதனை படைக்கும் வாய்ப்பு இல்லாத புத்தகங்களில் முதலீடு செய்ய இவர்கள் தயங்குகின்றனர் (இதுவும் சிக்கலான விஷயம்தான்- இவர்கள் ஏன் அதிக அளவில் மொழியாக்க நூல்களைப் பதிப்பிப்பதில்லை என்று கேட்டால், அதிக அளவில் அவை விற்பனையாவதில்லை என்ற பதிலும், அதிக அளவில் விற்பனையாகாதது ஏன் என்று கேட்டால் அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுவதில்லை என்ற பதிலும் கிடைக்கும்).

இதற்கு விதிவிலக்குகள் உண்டு. சுவீடனைச் சேர்ந்த கிரைம் எழுத்தாளர் ஷ்டீக் லார்சன் இறந்தபின் அவரது நாவல்களைப் பதிப்பிக்க நோஃப் நிறுவனம் தீர்மானித்தது. “இவற்றின் செறிவும் தொனியும் கூறுமொழியின் வேகமும் எவரையும் வசீகரிக்கும்,” என்று ஒரு பதிப்பாசிரியர் கணித்ததுதான் இதற்கு காரணம் என்றார் நோஃப் நிறுவனத்தில் வைஸ் பிரசிடெண்டாக இருக்கும் பால் போகார்ட்ஸ். இந்த நிறுவனம்தான் ஓரான் பாமுக், ஜாவியர் மாராய்ஸ் மற்றும் பலரைப் பதிப்பிக்கிறது. ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து பதிப்பிக்கும்போது தான் இந்தக் கேள்வி கேட்டுக் கொள்வதாய் அவர் விளையாட்டு போல் சொன்னார்- “ஆங்கிலம் பேசுவார்களா? வழுவழுப்பான அட்டை போட்ட பத்திரிக்கையில் போட்டோ போட்டால் நன்றாக இருப்பார்களா? எப்போதாவது நோபல் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?”

௦௦௦

மோடியானோவுக்கு அறுபத்து ஒன்பது வயதாகிறது. பிரெஞ்சு எழுத்தாளர். 1969ஆம் ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். பிரான்சில் பிரபல எழுத்தாளர். இவரது பல புத்தகங்கள் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று எழுபதுகளிலேயே நோஃப் நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் அதன்பின் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. பின்னர் அவரது மூன்று புத்தகங்களை டேவிட் ஆர் கோடினின் சிறுபதிப்பகம் வெளியிட்டுள்ளது. மோடியானோவின் நாவல்களில் பெயர்பெற்ற மிஸ்ஸிங் பர்சன் நாவலை இவர்கள்தான் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் பிரெஞ்சு மூலநூல் 1978ல் ப்ரி கோன்கோ விருது பெற்றுள்ளது.

மோடியானோவை முதன்முதலில் பதிப்பித்து “இருபத்தைந்து ஆண்டுகள் ஆனபின்னும் அவரது புத்தகங்கள் இன்னும் இந்த அலமாரியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்பது சோகமான ஒரு நகைமுரண்,” என்கிறார் அவர். மோடியானோவின் மூன்று நூல்களுக்கு மொழிபெயர்ப்பு முன்தொகையாக ஒவ்வொன்றுக்கும் ஐந்தாயிரம் டாலருக்கும் குறைவாகவே அவர் தந்திருக்கிறார். நோபல் பரிசு அறிவிப்புக்கு முன், இவை ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பிரதிகள் மட்டுமே விற்றிருக்கின்றன. கோடின் தன்னாலான அளவு விளம்பரம் செய்திருக்கிறார், ஆனால், மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி மதிப்பீடு செய்ய பெரிய பத்திரிக்கைகள் நாளுக்கு நாள் குறைந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றன என்கிறார் அவர்.

மோடியானோவின் புத்தகங்களை அச்சிடுவதை கோடின் நிறுத்திவிட்டார். இருந்தாலும், மிஸ்ஸிங் பர்சன் நாவலின் நூற்று அறுபத்து நான்கு பிரதிகள் இன்னும் விற்பனையாகவில்லை, ஹனிமூன் நாவலில் நானூற்று அறுபத்து ஒன்பது பிரதிகளும், காதரின் செர்டிட்யூட் நாவலின் முந்நூற்று எழுபது பிரதிகளும் தேங்கிக் கிடக்கின்றன. “நோபல் பரிசு இல்லாத பட்சம் முன்னூறு ஆண்டுகளில் இந்த மோடியானோ புத்தகங்களை விற்றுத் தீர்த்திருப்போம் என்று நினைக்கிறேன்,” என்கிறார் அவர். “இந்த நாட்டில் இதெல்லாம் வாங்க ஆளில்லை”. ஆனால் இப்போது, ஆயிரக்கணக்கான பிரதிகளைக் கூடுதலாக அச்சிடுகிறது இந்த நிறுவனம். இரண்டு வாரங்களில் எல்லாம் தயாராகிவிடும்.

விருது குறித்து கோடின் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இவரது இன்னொரு எழுத்தாளர் ஒருவரும் 2008ல் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்: “அனுபவத்திலிருந்து இதைச் சொல்ல முடியும். உங்கள் எழுத்தாளர்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கச் சிறந்த வழி, அவர்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதுதான்”. ஆனால் 2008ல் நோபல் பரிசு வென்ற எழுத்தாளரின் புத்தகங்களை விற்ற அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, நோபல் பரிசுக்குப் பின் நிகழும் பரபரப்பான விற்பனை மெல்ல மெல்ல அடங்கிவிடும். அதற்குள் ஆறு, அல்லது ஏழாயிரம் பிரதிகள் விற்பனையாகும் என்று கணிக்கிறார் கோடின். “நோபல் பரிசு கிடைத்தால் மட்டும்தான் இவர்கள் கவனம் பெறுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் சோகமாக இருக்கிறது. அப்புறம் பார்த்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், யாரும் இந்தப் புத்தகங்களை நினைத்துப் பார்க்கப்போவதில்லை, மோடியானோவுக்கு நோபல் பரிசு கிடைத்ததை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்ளப்போவதில்லை. அதுதான் வருத்தமான விஷயம்,” என்கிறார் அவர்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.