டேவ் எக்கர்ஸ் – ஒரு சிறு அறிமுகம்

டேவ் எக்கர்ஸ் எழுத்தாளர் மட்டுமல்ல, வெற்றிகரமாகச் செயல்படும் பதிப்பகம் ஒன்றின் நிறுவனரும்கூட. வணிக நிறுவனமாக 1998ஆம் ஆண்டு, இவரால் துவக்கப்பட்ட McSweeney’s  தற்போது லாபநோக்கற்ற அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோர இயலும்.

மக்ஸ்வீனிஸ் நிறுவனம் புத்தகங்கள், McSweeney’s Quarterly Concern என்ற காலாண்டிதழ் மற்றும் The Believer என்ற மாத இதழைப் பதிப்பிக்கிறது. இவை தவிர குழந்தைகளுக்கான நூல்கள், கவிதைப் பிரசுரங்கள் வெளியிடுவதோடு, மற்றும் மறக்கப்பட்ட கிளாசிக் நூல்களை மறுபிரசுரம் செய்கிறது. காலாண்டிதழ்களையும் சேர்த்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு புத்தக்கங்கள் எக்கர்ஸின் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முதல்நிலை எழுத்தாளர்களான Michael Chabon, Nick Hornby, David Foster Wallace முதலியோரையும் இவர்கள் பதிப்பித்துள்ளனர். அண்மையில் இவர்கள் அச்சிட்டுள்ள இசைநூல்கள் குறிப்படத்தக்கவை அதிலும் David Byrne எழுதிய “How Music Works,” என்ற நூல் விற்பனைச் சாதனை படைத்துள்ளது.

தகவல் உதவி – http://blog.sfgate.com/bookmarks/2014/10/16/mcsweeneys-to-become-a-nonprofit-publishing-house/

சர்க்கிள் நாவலை எழுதுவதற்கு முன்னும் பின்னும் டேவ் எக்கர்ஸ் எழுதியவை, “A Hologram for the King” மற்றும் “Your Fathers, Where Are They? And the Prophets, Do They Live Forever?” என்ற இரு நாவல்கள். அவற்றைக் குறித்து எக்கர்ஸ் அளித்த நேர்முகங்களின் சிறு பகுதிகள்.

A Hologram for the King நாவலில் சவூதி அரேபியாவை மிகத் துல்லியமாகச் சித்தரித்திருந்தீர்கள். நீந்தச் செல்லும்போது ஆண்களுக்கான உள்ளுடுப்புகள் அணியும் பெண் சர்ஜன் முதல் கழித்துக்கட்டப்பட்ட கைபேசிக்கு அடித்துக் கொள்ளும் அயல்தேசத் தொழிலாளிகள் வரை அனைத்தும் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. சவூதி அரேபியாவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டீர்களா? ஒரு தேசமாக அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

2010ஆம் ஆண்டு சவூதி அரேபியா சென்றேன், அங்கிருந்த காலத்தில் பெரும்பகுதியை ஜெட்டாவிழும் கிங் அப்துல்லா எகானமிக் சிட்டியிலும் கழித்தேன். போவதற்கு முன், அங்கு சென்று வந்தவர்கள், அங்கு வாழ்ந்தவர்கள் என்று பல நண்பர்களிடமும் பேசியிருந்தேன். அதனால், என்ன எதிர்பார்க்க முடியும் என்பது குறித்து ஓரளவுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அங்கு சென்றவுடன், மற்ற எதையும் விட என்னை பலமாகத் தாக்கிய விஷயம் என்னவென்று பார்த்தால், அது எவ்வளவு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணையம் வந்தது, நாளுக்கு நாள் சாட்டலைட் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது, இப்போது சவுதி அரேபிய இளைஞர்கள் மாற்றத்தை வலியுறுத்துகின்றனர். அரசர் அப்துல்லாவின் ஆட்சியில் பல முனைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.. கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இதற்கு ஒரு உதாரணம் – அங்கு பெண்களும் ஆண்களும் வெளியிலிருப்பதைவிட அதிக அளிவில் கூடிப் பழகுகிறார்கள்-, பொதுவாகவே கலைத்துறைகளுக்கு மேலும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது, அவை முன்னிருந்ததைவிட சுதந்திரமாகவும் இருக்கின்றன. சவுதி அரசின் முதல் திரைப்பட இயக்குனர் ஹைபா அல்-மன்சூர் உட்பட மூன்று இளம் கலைஞர்களுடன் அண்மையில் ஓர் உரையாடலில் பங்கேற்றேன்- மூவருமே எதிர்காலப் போக்கு குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் பத்தாண்டுகளில், காத்திரமான சீர்திருத்தங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

நாவலின் தலைப்பில் உள்ள ஹோலோகிராம், புதிய வகை ஐடி தொழில்நுட்பத்தை மட்டும் சுட்டவில்லை, மாறாக, நவீன நிதியமைப்பு ஒரு மாய பிம்பத்தின்மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டுகிறது என்று நினைக்கிறேன். முதலியத்தின் குறைகள் இப்போது தெளிவாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? கடன் வாங்கிக்கொண்டே இருக்கலாம் என்று நாம் நினைத்த ஆண்டுகளில் மெய்ம்மையும் பருண்மையும் கொண்ட ஏதோவொன்றை நாம் இழந்து விட்டோம் என்பது சரியா?

ஆலனின் வாழ்வில் உள்ள ஹோலோகிராமும் கதையில் இருக்கிறது. அவன் அதற்கான எதிர்பார்ப்புடன் வளர்ந்திருக்கிறான், அமெரிக்க தொழிலதிபராக அவன் தனக்கு குறிப்பிட்ட ஒருவகை ராஜமரியாதை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறான், ஆனால் இங்கு எல்லாம் மாறியிருக்கின்றன. இங்கு அவன் ஓரங்கட்டப்பட்டிருக்கிறான், ஆட்டத்தில் தன்னையும் இவர்கள் சேர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் இவனுக்குத் தெரியவில்லை. உள்ளூரில் பார்த்தால், ஆலன் போன்றவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அமெரிக்க கனவும் நாளுக்கு நாள் வசப்படக்கூடியதாயில்லாமல் தள்ளிப் போகிறது.. நிதி அமைப்பு, வங்கிகள், முதலீட்டாளர்கள்- இவர்களுக்கெல்லாம் ஆலன் போன்ற ஒருவனால் பிரயோசனமில்லை.

ஹோலோகிராமில் உங்கள் நடை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது; நுண்மை நிறைந்ததாய் உள்ளது, நாமறியாமலே நம்மை வசீகரிக்கிறது. உங்கள் உரைநடையை எந்த அளவுக்கு திருத்தி எழுதுகிறீர்கள்? அலங்காரமில்லாமல் எழுத வேண்டும் என்று நினவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதா?

ஹோலோகிராமுக்குத் தகுந்த தொனியை அடைய சிறிது காலம் தேவைப்பட்டது. இயல்பாகவே நான் அடர்த்தியான, மாக்ஸிமலிஸ்ட் நடையில் எழுதக்கூடியவன். ஆனால் அது இந்தப் புத்தகத்துக்கும் ஆலனின் கதைக்கும் பொருத்தமாக இருக்காது. பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட மத்திம வயதினன் அவன், எனவே நடை சிக்கனமாகவும் துல்லியமாகவும் இருந்தாக வேண்டும். உலகளாவிய நிதித்துறை பிரச்சினை குறித்து நாவல் எழுத வேண்டும் என்ற முன்முடிவோடுதான் இதை நீங்கள் எழுத ஆரம்பித்தீர்களா?

உற்பத்தித்துறையில் இருந்த ஒருவன், அவனது தொழில் தாய்வானுக்கும் சீனாவுக்கும் சென்றபின், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவன், குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று சில ஆண்டுகளாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன், நான் சிகாகோவின் வடபகுதியில் வளர்ந்தவன், ஷ்வின் சைக்கிள் உற்பத்திக்கூடம் இருந்த இடத்துக்கு அருகில்தான் வளர்ந்தேன், என் சாலையில் சிறிது தொலைவில்தானந்த அழகிய, அழிவற்ற சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற உணர்வு எனக்கிருந்தது. தொழிற்சாலை மூடப்பட்டது சிகாகோவுக்கு மன அளவில் ஒரு பெரிய அடியாக இருந்தது. அதன்பின் மிகக் குறைந்த அளவிலேயே தொழிற்சாலைகள் இங்கே இதன் அருகாமையிலோ செயல்பட்டு வருகின்றன. இது ஒரு வினோதமான விஷயம்- இந்த நகரின் துவக்ககாலம் தொட்டு, தொழிற்சாலைகளே சிகாகோவின் மைய அடையாளமாக இருந்திருக்கிறது.

ஆக, நான் இவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், ஆலன் க்ளே யார், அவன் தன் வாழ்வில் எந்த இடத்தில் நிற்கிறான் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒரு நாள் கிங் அப்துல்லா எகானமிக் சிட்டி பற்றியும் அங்கு பாலைவனத்தில் அமெரிக்க பிசினஸ்மேன்கள் அரசரைச் சந்திக்கக் காத்திருப்பதைப் பற்றியும் கேள்விப்பட்டேன். அந்த இடம் ஆலனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் என்று தோன்றியது, தான் பிரச்சினையில் இருப்பதை அறிந்திருந்தாலும் எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதை அறியாத ஒருவனுக்குச் சரியான இடமாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே அவன் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கிறான், சர்வாதிகாரி ஒருவரால் அங்கீகரிக்கப்படக் காத்திருக்க பாலைவனம் செல்கிறான். எனக்கு இது பிடித்திருந்தது; நம் பொருளாதாரத்துடன் பலமான இணைதன்மை கொண்டதாக இது இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது, அதற்கான தீர்வுகளைத் தேடி கண்ணாடியைத் தவிர எல்லா இடத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி, Elizabeth Day, The Guardian

இவ்வாண்டு பதிப்பிக்கப்பட்ட எக்கர்ஸின் நாவல் “Your Fathers, Where Are They? And the Prophets, Do They Live Forever?”. இது குறித்து குறித்து McSweeney’s இதழில் வெளிவந்த பேட்டியின் சிறு பகுதி

சர்க்கிள் வெளிவந்த ஓராண்டுக்குள் இந்த நாவல் வெளியிடப்படுகிறது. இரண்டுக்கும் பொது அம்சங்கள் உள்ளன என்று நினைக்கிறீர்களா|

சர்க்கிள் எழுதுவதற்கு முன்னரே தந்தையர்/ தீர்க்கதரிசியர் நாவலின் பெரும்பகுதி எழுதி முடித்துவிட்டேன் என்பதுதான் இதில் வினோதமான விஷயம். 2013ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு டிராப்ட் எழுதி முடித்து அதைத் தனியாய் எடுத்து வைத்திருந்தேன். இதற்கு முன் நான் செய்தது எதையும்விட, இது தனக்கென உயிர் பெற்றெழுந்தது. இதை முடித்ததும் சற்று ஆறப்போட்டுவிட்டு சிறிது காலம் சென்றபின் விருப்பு வெறுப்பற்ற சமநிலையோடு இதைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். எனவே, சர்க்கிள் முடித்தபின் இதற்குத் திரும்பினேன், கூடுதலாக அந்த ஒரு ஆண்டு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காத தெளிவுடன் இதைத் திருத்தி மீண்டும் எழுத முடிந்தது. இருந்தாலும்கூட இது வினோதமாகவும் வரம்பற்றதாகவும் இருப்பது போல்தான் இருந்தது- இதை எழுதும்போது என் கைகளில் கட்டுக்குள் வைத்துச் செய்தது போல் இருக்கவில்லை. ஏதோ ஒரு அசுரக் குழந்தை போலிருந்தது.

இந்த நாவல் ஏன் உரையாடல்களால் மட்டும் எழுதப்பட்டிருக்கிறது? இதனால் துவக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுகிறது, இவை பேசப்படும் சூழல் என்ன என்று தேட வேண்டியதாயிருக்கிறது- நாடகத்தில் மேடைக் குறிப்புகள் இல்லாதது போல். ஆனால், நாவல் முழுக்க முழுக்க உரையாடலாய் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தைத் துவக்கியபோது, உரையாடல்களால் மட்டும் எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. அடிப்படையில், தொடர் நேர்முகங்கள் அல்லது விசாரணைகள் கொண்டதாக இது இருக்கும் என்றுதான் நினைத்தேன், ஆனால் இடையிடையே வேறு விவரணைகள் வரும் என்று நினைத்தேன். ஆனால், எழுதிக்கொண்டே செல்லும்போது, கதைக்கு திசையும் பின்புலமும் அளிக்கும் வழிகள் புலப்பட்டன. ஏன், உரையாடலை விட்டு விலகாமலே, அந்த நாளின் பொழுது, தட்பவெப்பம் போன்ற விபரங்களைக்கூட சுட்ட முடிந்தது. எனவே இது ஒருவகை சவாலாக இருந்தது, நான் இந்தப் புத்தகத்தை எப்படிப்பட்டதாக எழுதுகிறேன் என்பதைத் தீர்மானிக்கும் செயல்வடிவ கட்டுப்பாடாகவும் ஆனது. உண்மையில், கட்டுப்பாடுகள் நம் எழுத்தைத் தளர்வின்றி இறுக்கமானதாக வைத்திருக்க உதவுகின்றன.

தொடர்புடைய பதிவு : கனவு நகரம் – டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்

image credit – mono.kultur

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.