என்ன கவிதை எழுதலாம் என்று
மேஜை முன் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது
‘படார்’ என்ற ஓசையுடன் வாசற்கதவு திறக்க
கழுதை ஒன்று உள்ளே நுழைந்து,
“நீதான் கவிஞனா?” என்று என்னைப் பார்த்து கேட்டது
திகைத்திருந்த நான் தலையாட்டினேன்
“உன் புத்தகம் சுவையாய் இல்லை. சுத்த வேஸ்ட்” என்றது
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றேன்,
கவிஞனின் ஆணவத்துடன்.
“தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சாமி கும்பிடப் போகிறோமா என்ன?”
என்று கூறி பின்னங்கால்களால் மேஜையை உதைத்துச் சென்றது.
போகிறபோக்கில்,
“அடுத்த புத்தகமாவது ருசியாக இருக்கட்டும்”,
என்று சொன்னதைக் கேட்டு என் மனைவியும் மகளும்
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
image credit: Directors Notes
சபாஷ் சரியான எள்ளல்.