கடற்கரை – சோபியா தி மெலொ ப்ரெனர் ஆந்த்ரிஸன்
கடந்து செல்லும் காற்றில் பைன் மரங்கள் முனகுகின்றன
வெயிலடிக்கிறது மண்ணில், கற்கள் சுடுகின்றன
உலகின் விளிம்பில் உலவுகின்றனர் விசித்திர கடற்கடவுளர்
உப்புப் பொருக்கிட்டு, மீன்களைப் போல் மின்னுகின்றனர்
வானின் ஒளியினுள் கற்களைப் போல்
திடீரென்று காட்டுப் பறவைகள் வீசப்பட்டு
செங்குத்தாய் உயர்ந்து மரணிக்கின்றன
அவற்றின் உடல்களை வெளி எடுத்துக்கொள்கிறது
ஒளியைத் தகர்க்க அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
அவற்றின் புருவங்களில் தூண்களின் அலங்காரம்
பாய்மரத் தொல்நினைவு
பைன்களில் ஆடிக் கொண்டிருக்கிறது.
(from “Marine Rose : Selected Poems”, Sophia de Mello Breyner, translated by Ruth Fainlight, Published by Black Swan Books, Redding Ridge, CT, 1988. கவிதையின் ஆங்கில மூலம் இங்கிருக்கிறது.)
முன்னொரு பதிவில், கலை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் தகவல் தொடர்பும் ஒன்று என்று எழுதியிருந்தேன். மாபெரும் கலைஞர்கள் கலையைக் கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.
மனிதர்களுக்கிடையே துல்லியமான உணர்வுப் பரிமாற்றம் என்பது மிகவும் கடினமான விஷயம், சஹ்ருதயர்கள் மட்டுமே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலைஞர்கள் தங்கள் படைப்பைப் புரிந்து கொள்ளக்கூடியாவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் மாபெரும் கலைஞர்கள் தங்கள் கற்பனையின் எல்லையைக் குறுக்க எதையும் அனுமதிப்பதில்லை. கலைத்தேடல், காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது.
எனினும் கலைஞர்கள் சரியான இடத்தில் தலையசைத்தும், அதன் அழகைக் கண்டு திகைத்தும், கண்ணீர் சிந்தியும் படைப்பைப் பெருமைப்படுத்தும் சஹ்ருதயர்களுக்காகக் காத்திருக்கின்றனர், கலைஞனின் மறைவுக்குப் பின்னும் கலையின் தேடல் தொடர்கிறது.
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு கலையும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன, மொழியே இலக்கியத்தின் சவால். உருவங்களற்ற உணர்வுகளை புலனனுபவ மொழியைக் கொண்டு வெளிபடுத்துவது எவ்வாறு? சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட பொருளுண்டு, அவை தொடர்பான வேறு அர்த்தங்களுமுண்டு என்பது எழுத்தாளனுக்கு உதவியாக இருக்குமென்றாலும், அனுபவத்தை வெளிப்படுத்தும்போது அவற்றின் போதாமையை அவன் உணர்கிறான்.
யதார்த்தத்துக்கு உருவம் கொடுப்பதே ஒரு பெரிய விஷயம். ஏனெனில் எது யதார்த்தம் என்ற கேள்வியை முதலில் எதிர்கொண்டாக வேண்டும். இங்கு நான் தத்துவ விசாரணை செய்யும் தகுதி எனக்கு இல்லை. குரோசோவாவின் புகழ்பெற்ற ரஷோமொன் சித்தரித்ததுபோல், பார்வையாளரின் வண்ணங்களில் தோய்ந்தே யதார்த்தம் வெளிப்படுகிறது. சம்பவமொன்றை நான்கு பேர் காணும்போது, நாலாவிதமான அனுபவங்களுக்கு அது இடம் கொடுக்கிறது. எனவேதான், எதார்த்தத்தை எதிர்கொள்ளும் பல எழுத்தாளர்களும் அதன் இயல்பு இன்னதென்று உணர்ந்தவர்களாக தங்களுக்கே உரிய வகையில் அதைக் கையாள்கின்றனர்.
சென்ற வாரம் ‘பீட்டர்ஸ்பெர்க்” என்ற ஆந்த்ரை பெலியின் நாவலைக் குறிப்பிட்டேன். யதார்த்தத்தின் அடுக்குகளை எழுத்தில் பதிவு செய்யும் முயற்சிக்கு நல்ல ஒரு உதாரணம் அது. பெங்குவின் கிளாசிக்ஸ் வெளியிட்ட அந்த நூலின் முன்னுரையில், ஆடம் திர்வெல், “எண்ணற்ற தளங்கள் கொண்ட கார் பார்க் போல், யதார்த்தம் பல அடுக்குகள் கொண்டது என்கிறது பீட்டர்ஸ்பெர்க். ஆம், முடிவற்ற காலத்தின் நோக்கில் சித்தரிக்கப்பட்டிருக்கும் நாவல் அது,” என்கிறார். மேலும், “நாம் யதார்த்தத்தை நேரடியாக உணர்வதில்லை. ஒவ்வொரு யதார்த்த தரிசனத்துக்குப் பின்னும் ஓர் ஆதர்ச உருவம் இருக்கிறது. பருவுலகின் இந்த நெகிழ்தன்மையை பெலி விவாதிக்க விரும்பினார்,” என்கிறார் அவர்.
இந்த முன்னுரையின் வேறொரு பத்தி குறிப்பிடத்தக்கது: “1909ஆம் ஆண்டு எழுதப்பட்ட, “சொற்களின் மாயம்” என்ற கட்டுரையில் பெலி, “விழிப்புணர்வுநிலையின் பிரதான வெற்றியென்பது ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக் கொண்டதில்தான் உள்ளது. ஏனெனில், ஒளியில் ஓர் புத்துலகம் படைக்கப்படுகிறது, அதன் எல்லைகளுள் நான், யதார்த்தத்தைப் படைத்தவனாய் என்னை உணர்கிறேன்,” என்று எழுதுகிறார். மொழியின் புதிய யதார்த்தத்தையே பெலி தொடர்ந்து பேசுபொருளாய்க் கொள்கிறார். சாமானிய தத்துவத்தின் எதிரெதிர் இருமைகளை அழிப்பதில் அவர் தேர்ச்சி கொண்டிருந்தார்”, என்று இந்த முன்னுரையில் .ஆடம் திர்வெல் எழுதுகிறார்.
லாரன்ஸ் டரல், “அலெக்ஸாண்ட்ரியா க்வார்டட்” என்ற தொகுப்பிலுள்ள நான்கு புத்தகங்கள் எழுதியவர். பல்பார்வையில் வெளிப்பாடும் எதார்த்தத்தையே இந்த நூல்களும் பேசுகின்றன. டர்ரலின் பார்வை குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள குறிப்பு இங்கு பொருத்தமாக இருக்கிறது: “பால்தஸாரின் முன்னுரையில் டரல் விளக்குவதுபோல், நான்கு நாவல்களும் சார்பியலை விவாதிக்கின்றன. காலவெளியின் இடையறாத்தன்மையையும், அனுபவத்துக்கும் அதன் புற ஆதாரத்துக்குமுள்ள உறவையும் கேள்விக்குட்படுத்த,காதல் குறித்த நவீன உணர்வுகளைக் கருப்பொருளாய் கொள்கின்றன. இந்தத் தொடரின் முதல் மூன்று நாவல்களும் குறிப்பிட்ட தொடர் சம்பவங்களை வரிசை மாறாமல் வெவ்வேறு பார்வைகளில் வெளிப்படுத்துகின்றன. ஓரே குறிப்பிட்ட நிகழ்வுத் தொகுதியை பல்வகைப்பட்ட தனித்துவம் கொண்ட பார்வைகளில் காண்பது சாத்தியமாகிறது. நான்காம் புத்தகம், காலவரிசையில் நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது”. ஓரே நிகழ்வுகளை வெவ்வேறு பார்வைகளில் பார்க்கிறோம் என்பது மட்டுமல்ல, காலவரிசையில் அதே நிகழ்வுகளுக்கு உள்ளாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.
மனித மனதில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்க ஜேம்ஸ் ஜாய்ஸ், வர்ஜினியா வுல்ஃப் போன்றவர்கள் நனவோடை உத்தியைக் கையாண்டனர். ஓரே ஒரு குவிமையம் கொண்ட கதையைச் சொல்வதற்கு மாறாக, நனவோடை நாவல்கள், கதைசொல்லியின் தடுமாறும் எண்ணங்கள்வழி விரிகின்றன. ஒருவன் ஷார்ஜா செல்வதற்காக டிக்கெட் எடுக்கும்போது யோசிக்க ஆரம்பிக்கிறான் என்றால் அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் ஆடிய அந்த அருமையான ஆட்டம் அவன் நினைவுக்கு வருகிறது, அதன்பின் நூறாவது சதம் அடிக்க சச்சின் எத்தனை பாடுபட்டான் என்பதை அவன் நினைத்துப் பார்த்துவிடுத, ஸ்வச்பாரத் இயக்கத்துக்கு சச்சன் ஆதரவு தெரிவிப்பதன் வழியாக, மோடி எப்படி இந்திய அளவில் பெருமளவு ஆதரவு பெற்ற தலைவரானார் என்ற கேள்விக்கு அவன் பயணிக்கலாம். விஷயம் புரிகிறது என்று நினைக்கிறேன். இந்த உத்தி ஜாய்ஸின் யூலிசஸ்ஸில் வெற்றி பெறுகிறது, ஆனால் பின்னகன்ஸ் வேக் நாவலில் அலுப்பாய் இருக்கிறது (ஜாய்சைக் காட்டலும் திறமை குறைந்த எழுத்தாளர்கள் கைகளில் இந்த உத்தி வாசகர்களைக் காயப்படுத்தும் ஆயுதமாகிறது).
கடந்த காலம் குறித்த நினைவுகளில் உள்ள சீரற்ற தொடர்பை உணர்த்த நான்லீனியர் கதைசொல்லல் நல்ல ஒரு உத்தியாக இருக்கலாம். பாக்னரின் “ஆப்சலோம் ஆப்சலோம்” என்ற நாவலில் அவர் காலவரிசையை இஷ்டத்துக்கு திரிக்கிறார். சொல்லப்போனால், நாவலைப் புரிந்து கொள்ள உதவியாக நூலின் முடிவில் நாவலின் நிகழ்வுகள் வரிசைக்கிரமாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. (நாவலை கவனமாக வாசிப்பவர்களுக்கு அது தேவைப்படாது).
ரஷோமொன் போலவே வேறு பல திரைப்படங்களும் யதார்த்தத்தின் நெகிழ்வுத்தன்மையை விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கின்றன. யதார்த்தம் கனவு போன்ற ஒரு மனநிலையில் தோய்ந்து பார்வையாளரை கலக்கமும் புத்துணர்வும் நிறைந்த உணர்வில் ஆழ்த்தும் டேவிட் லிஞ்ச்சின், “முல்லோலாண்ட் ட்ரைவ்” ஒரு மிகச்சிறந்த உதாரணம். மெய்யும் பொய்யுமாய் ஒரு கலவையை அளித்து, அதன் சிக்கலை விடுவித்து, நமக்கான யதார்த்தத்தை நாமே உருவாக்கிக் கொள்ளச் செய்கிறார் லிஞ்ச். மெய்யின் மெய்ம்மையையும் பொய்யின் புனைவுத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தும் “ஆடிஷன்” என்ற ஜப்பானிய திரைப்படமும் குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் தமக்கான யதார்த்தத்தை உருவாக்கிக் கொள்வதை, “க்வைடான்” என்ற மற்றொரு ஜப்பானிய திரைப்படத்தில் காண்கிறோம்.
உணர்வுகள் மற்றும் சம்பவங்களின் யதார்த்தத்தைத் தாம் உணர்ந்தவாறே சில எழுத்தாளர்கள் விவரிப்பதுபோல், வேறு சிலர், தாம் கண்ட காட்சிகளின் சித்தரிப்பில் வாசகர்களையும் இடம்பெறச் செய்வது போல் எழுதுகின்றனர். இயற்கையின் அழகை விவரிக்கும் கவிதைகள் ஏராளம். வோர்ட்ஸ்வர்த் கவிதைகள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பன் வைத்தாய்’ என்று பல உதாரணங்கள் சொல்ல முடியும். கவிஞன் சொற்களைக் கொண்டு சித்திரம் தீட்டுகிறான், ஒரு ஓவியனைப் போலவே.
கவிதை வடிவ வளர்ச்சியில், காட்சி வர்ணனை மட்டும் போதாது எனபதை கவிஞர்கள் உணர்ந்தனர். சித்தரிப்பில் கவிஞனும் இடம் பெற வேண்டும், அழகு விவரணைகள் பிற கவலைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று உணர்ந்தனர். சோபியா தி மெலோவின் இந்தக் கவிதை அதற்கு நல்ல ஒரு உதாரணம். கவிதையில் உள்ள படிமங்கள் தனித்து நிற்கின்றன- பறவை இருந்த இடத்தை வெளி எடுத்துக்கொள்வது அப்படிப்பட்ட ஒன்று. நம் பார்வையை விட்டு ஒரு பறவை மறைவது என்பது வேறு, இது வேறு. கவிதையின் இறுதி வரி, அதை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
கண் காணாத உண்மையை கவி சொல்கிறாள். பைன் மரங்கள், பறவைகள், அலைகள்: கவிஞர்களின் பார்வையில் இவையனைத்தும் வேறு வண்ணங்கள் பெறுகின்றன. தொடர்பாடலில் மொழி ஒரு தடையாய் இருக்கக்கூடும் என்றாலும், நல்ல ஒரு கவிஞரின் கையில் அது யதார்த்தத்தைக் கடந்து செல்லும் கருவியாகிறது- இல்லாத உலகங்களின் சித்தரிப்பு சாத்தியமாகிறது.
ஓவியர்கள் என்னதான் முயன்றாலும் சொற்சித்திரங்களின் செறிவைத் தொட முடியாது. ஏனெனில், நம் கற்பனையைக் காட்டிலும் மகத்தான ஓவியன் கிடையாது, மாபெரும் கவிஞர்கள் நம் கற்பனையைக் கிளர்த்துகின்றனர்.
image credit: http://noticias.up.pt/poesia-de-sophia-de-mello-breyner-na-casa-andresen/