நீங்கள் எழுத்தாளராவதற்கான காரணம் என்ன?
எழுத்தாளராகும் விருப்பம் சிறு வயதில் எனக்கு இருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்கும் ஆசை இருந்தது. பள்ளியில் என்னால் எல்லாரையும் போல் இருக்க முடியவில்லை: என் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கொண்டவளாக இருந்தேன், ஏராளமாய் படித்தேன் – எனக்கு பத்து வயதாகியிருந்தபோது, என் அம்மா Complete Works of Shakespeare வாங்கிக் கொடுத்தார், அது என்னை முழுமையாய் வசீகரித்துக் கொண்டது. ஆனால், அதன்பின் எல்லாம் மாறிவிட்டது: அம்மா என் அப்பாவைவிட்டுப் பிரிந்து, வேறொரு புதிய ஊருக்கு எங்களை அழைத்துச் சென்று எங்கள் பெயர்களை மாற்றிவிட்டார். அங்கு நான் மானுடவியல் ஆய்வாளர் போல் நடந்து கொள்ளத் துவங்கினேன், இந்த ஊரின் வினோத மத்திய வர்க்க மக்களைக் கூர்ந்து கவனித்து அவர்களைப பற்றி கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். தனியாய் நெடுந்தொலைவு பள்ளி நடந்து செல்லும் வழியில், தென்படும் பொருட்களை எனக்கு நானே விவரித்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டேன், அவற்றுக்குத் துல்லியமாய் பொருந்தும் சொற்களை அறிந்துகொள்ள முயற்சித்தேன்.
நீங்கள் எப்படி எழுதத் துவங்கினீர்கள்?
என் இருபதுகளில் இருந்த என்டோமெட்ரியாஸிஸ் நிலை மருத்துவர்களால் சரியாகக் கண்டறியப்படவில்லை, அதனால் எப்போதும் வலியில் அவதிப்பட்டேன். உடல்நிலை குணமடைவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், எனக்கென ஒரு பணி வேண்டும் என்று முடிவு செய்தேன் – எழுத்து- உடல்நிலை சரியாக இல்லாத நிலையிலும் என்னால் எழுத்துப்பணியைத் தொடர முடியும். எனவே சமூகநலப் பணியைக் கைவிட்டு, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் துணி விற்க ஆரம்பித்தேன், மாலைப் பொழுதுகளிலும் வார இறுதி நாட்களிலும் பிரெஞ்சுப் புரட்சி பற்றிய என் நீண்ட வரலாற்று நாவலை எழுதினேன் (A Place Of Greater Safety என்ற அந்த நாவல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பதிப்பிக்கப்பட்டது).
என் கணவருக்கு போட்ஸ்வானாவில் வேலை கிடைத்தபோது, நானும் என் புத்தகத்தை அங்கு கொண்டு சென்றேன். ஹோம் லீவ் கிடைக்கும் சமயத்துக்குள் பிழை திருத்தப்பட்ட பிரதியைத் தயார் செய்ய நான் வேகமாக வேலை செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, என்னிடமிருந்த சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டரில் அதன் கைப்பிரதியை தட்டச்சு செய்தேன். இது என் நோய்மைக்கு எதிரான ஓட்டப்பந்தயமாக இருந்தது- நாங்கள் இங்கிலாந்து திரும்பியதும் கடினமான ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
நீங்கள் நாவல் எழுதும் முறை என்ன?
பிளாட், கதையமைப்பு போன்ற விஷயங்கள் தாமாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிட முயற்சிக்கிறேன். புனைவெழுத்தின் மிகப்பெரும் பகுதி பாதி அறிந்தும் அறியாமல் செய்யப்படுவது, ஏன், நனவிலி நிலையில் செய்யப்படுவது என்றுகூட சொல்லலாம். எனவே சிறிய ஒரு காட்சியைச சித்தரிப்பேன், அதன்பின் வேறொரு சிறிய காட்சியைச் சித்தரிப்பேன், இன்னும் எவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்றெல்லாம் நினைப்பதைத் தவிர்க்க முயற்சிக்கிறேன்.
நான் போகும் இடங்களுக்கு சிறிய நோட்டுப்புத்தகங்கள், அல்லது புதிய தபாலட்டைகள் கொண்டு செல்வேன், எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தில் பயன்படக்கூடிய சொற்றொடர்கள், பெயர்கள், புதிய விஷயங்களை அவற்றில் குறித்து வைத்துக் கொள்வேன். ஓரளவுக்கு இதுபோல் சேர்ந்தபின், அவற்றை கார்க்கால் ஆன ஒரு பெரிய நோட்டிஸ் போர்டில் ஏதோ ஒரு வரிசையில் பின்னூசி கொண்டு செருகி வைப்பேன். இந்தத் துண்டங்களையொட்டி எண்ணங்கள் வளரும், அவற்றை வைத்து நான் ஒரு பத்தி எழுதலாம், அல்லது பின்கதை எழுதலாம், அல்லது ஒரு பாத்திரத்தைப் பற்றி, ஒரு உரையாடல் துணுக்கு என்று ஏதேனும் எழுதி, அதனுடன் தொடர்புடைய அட்டையின் பின்புறம் அதைச் செருகி வைக்கிறேன். இவ்வாறாக படிப்படியாக ஒரு வரிசை உருவாகிறது, அப்போது அத்தனை அட்டைகளையும் அகற்றி, கதையோட்டத்துக்கு ஏற்ற வரிசையில் மீண்டும் குத்தி வைக்கிறேன்.
சில வாரங்களுக்குப் பின்னர் எல்லாமே ரிங் பைண்டர் ஒன்றினுள் தொகுக்கப்படுகிறது, இது புத்தகத்தின் முதற்கட்ட வரைவு வடிவமாக உருவாகிறது.
நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த நாள் வழக்கமாக எபப்டியிருக்கும்?
இரண்டு ஆண்டுகளாக நான் The Artists’ Way மற்றும் Dorothea Brande எழுதிய Becoming a Writer என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டபடி காலை வேளைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுதான் மிகச் சிறந்த எழுத்துமுறையாக இருக்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் என் நோட்டுப் புத்தகத்தை எடுக்கிறேன், நான் கண்ட கனவுகளை அதில் எழுதுகிறேன், முந்தைய தினம் நடந்தவற்றையும் எழுதுகிறேன், அதன்பின் உண்மையான என் எழுத்து வேலையை உடனடியாகத் துவக்கிவிடுகிறேன், அது புதிய ஐடியாக்களாக இருக்கலாம், அல்லது நாவலின் காட்சிகளாக இருக்கலாம், அல்லது அப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைப் பணியாக இருக்கலாம். பேனா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் விஷயம், தயக்கமில்லாமல் எழுத வேண்டும், நல்லது கெட்டது என்று எந்த முடிவும் செய்யாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் விஷயம்.
அதை முடித்தபின் என் நிர்வாகப் பணிகளைச் செய்கிறேன், அன்று சில சமயம் மீண்டும் எழுதினாலும் எழுதக்கூடும். பொதுவாக வார இறுதி நாட்கள் இன்னும் தீவிர உழைப்பைக் கோருவதாக இருக்கும்- இதுவரை எழுதிக் கொண்டிருந்ததை அப்போதுதான் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வருவேன். ஓய்வு நாட்கள் என்று எதுவும் எடுத்துக் கொள்வதில்லை.
எழுத்து உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா அல்லது வாதையாக இருக்கிறதா?
விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாக இருக்கிறது, முடிவு காணப்படாத ஏதோ ஒரு இறுக்கமான மனநிலையில்தான் எப்போதும் இருக்கிறேன். Wolf Hall எழுதும்போது, இந்தக் காட்சியை எழுத வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வார இறுதியையும் துவக்குவேன். அதுவரை எழுதி வைத்திருந்த அத்தனை குறிப்புகள், தரவுகளையும் முழுமையாய் வாசிப்பேன். சனிக்கிழமை மாலை வரும்போது பார்த்தால் எனக்கு முழுமையாய் வெறுத்துப் போயிருக்கும், அதன் நுண்மை கைமீறிப் போயிருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதில் என் முகத்தில் அவ்வளவு பெரிய சிரிப்பு வர ஆரம்பித்திருக்கும் – காரணம், சிக்கலைத் தீர்த்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தச் சித்திரவதை மறுபடியும் ஆரம்பித்துவிடும்.
உங்கள் எழுத்தாளுமை பல வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது- சிறுகதைகள், சரித்திர நாவல்கள், சுயசரிதை -, பல்வேறு காலகட்டங்களையும் இடங்களையும் தொகுத்திருக்கிறது. உங்கள் நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உங்கள் படைப்பை ஒன்றிணைக்கும், அதைக்கடந்து விரியும் பேசுபொருள் ஒன்று இருக்கிறது என்று உணர முடிகிறதா?
நான் எழுதிய எல்லா புத்தகங்களும் ஒரு வகையில் ரசவாதம் போன்றவைதான் என்று என்னளவில் கருதுகிறேன். நான் ஒரு கத்தோலிக்காக வளர்ந்தேன், அதைவிட்டு வெளியே வருவது என்பது மிகக் கடினமான விஷயம். ஆதர்ச உலகில், எழுத்தாளர்கள் அனைவருக்கும் கத்தோலிக்க குழந்தைப்பருவம் இருக்கும், அல்லது அதைப் போன்றே ஏதோவொன்றை உங்களுக்குச் செய்யும் சமயம் சார்ந்து இருந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் பார்க்கும் இந்த உலகம் உண்மையல்ல, நாம் காணும் காட்சிகளுக்கு அப்பால் வேறொரு யதார்த்தம் இருக்கிறது என்றும் அதுவே இன்னும் முக்கியமான யதார்த்தம் என்றும் கத்தோலிக்க சமயம் மிகச் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்து விடுகிறது.
என் கற்பனை உருவாகிக் கொண்டிருந்த வயதில் எனக்கு கத்தோலிக்க கோட்பாடுகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. பொருண்மைமாற்றக் கோட்பாடு (transubstantiation)- ஒரு பொருள் வெளிப்பார்வைக்கு உள்ளபடியே இருக்கும்போதும் கணப்போதில் அது வேறொன்றாக மாறக்கூடும் என்ற சிந்தனை- மிகவும் சக்திவாய்ந்த ஒன்று, அது மாற்றம் நிகழும் கணத்தையும் மாற்றத்தின் தன்மையையும் கூர்ந்து கவனிக்க வைக்கிறது; இன்னும் ரொட்டித் துண்டு போலிருக்கும் வஸ்து மெய்யாகவே கடவுளின் உடலாக மாறிய கணம் எது என்ற கேள்வியைக் கூர்ந்து நோக்க வைக்கிறது. ஒன்று முழுமையாகவே வேறொன்றாக இருக்க முடியுமென்பதும், நமக்குப் புலப்படும் இந்த உலகம ஒரு வகை கானல் நீர் என்பதும் சக்தி வாய்ந்த, மிக மர்மமான கருத்துருவாக்கம், இப்படிப்பட்ட சிந்தனைகளை ஒரு குழந்தையின் மூளைக்குள் புகுத்தும்போது, அவை தம வேலையைச் செய்கின்றன.
அரசியல் புரட்சி நிகழும் காலகட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட In A Place of Greater Safety, என்ற நாவலில், “நாம் திரும்பிச் செல்ல முடியாத கட்டத்தை அடையும் கணம் எது?” என்ற கேள்வி எழுப்புகிறேன். அதன் பிரதான பாத்திரங்கள் மூன்றையும் கொண்டு, “வாழ்க்கை தீர்மானமாக மாற்றமடையும் கணம் உண்டா, அதற்கு முன் நீ யாராக இருந்தாயோ அந்த நிலைக்கு இனி திரும்பவே முடியாது என்ற கட்டத்தைத் தொடும் கணம் எது?” என்ற கேள்வி எழுப்புகிறேன். அந்தப் பாத்திரங்களில் ஒன்றான, Camille Desmoulinsஐப் பொறுத்தவரை இதற்கான பதில், ஆம், என்று நினைக்கிறேன், ஆம் பொருண்மைமாற்றம் நிகழும் கணம் ஒன்றுண்டு. ஒரு நொடியில் அவன் புகழ் பெற்றவனாகி விடுகிறான், அதன் பின்னும் அவன் கமீல் போலவே இருக்கிறான், நடக்கிறான், பேசுகிறான், ஆனால் அவன் கமில் அல்ல, இப்போது வேறொருவனாகி விட்டான். இப்போது இதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுகிறது- ஒருவன், தன மனஉறுதியைக் கொண்டு எப்படி வேறோன்றாகவோ வேறோருவனாகவோ தன்னை மாற்றிக் கொள்ள முடியும்? அபரித மனவலிமை கொண்டவர்கள் என்னை வசீகரிக்கின்றனர். An Experiment in Love என்ற நாவலில், கார்மல் மக்பெய்னுக்கு இது இருக்கிறது, A Place of Greater Safety நாவலில் ரோபஸ்பியருக்கும் இது உண்டு, Wolf Hall நாவலில் தாமஸ் க்ரோம்வெல்லும் மனவலிமையுள்ள மனிதர்தான். இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொருவரின் உத்வேகமும் தனிநபர புரட்சிக்கு காரணமாகிறது. இந்தப் புரட்சியை ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருந்தாக வேண்டும்.
புலப்படும் உலகுக்கு அப்பாலுள்ள மர்மம் உங்கள் புனைவுகளூடே செல்லும் சரடாக இருக்கிறது. Fludd நாவலில், பாரிஷுக்கு வந்திருக்கும் அந்நியனை மர்மம் சூழ்ந்திருக்கிறது, Beyond Black நாவலில் இது இன்னும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஒரு குழந்தையின் பார்வையில் ஃப்ளுட் எழுதப்பட்டது, எனவே அதில் சர்வசாதாரணமாக அதிசயங்கள் நிகழ்கின்றன, மிகச் சாதாரண விஷயங்கள் அதிசயம் போல் தோன்றுகின்றன. குழந்தைகளுக்கு எதுவெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது என்பதைப் பற்றிய நாவல் அது. அந்த மனநிலையைக் கைப்பற்றும் விருப்பத்துடன் அதை எழுதினேன், அது இயல்பாகவே வந்தது என்பதுதான் உண்மை. நேரடியாக ஹாட்ஃபீல்டின் உலகினுள் புகுந்தேன், அதன்பின் அனைத்தும் முழங்கால் உயரப் பார்வையில் பார்ப்பது போலிருந்தது.
புலப்படும் உலகுக்கு அப்பால் உள்ள மர்மம்தான் Beyond Black நாவலின் மையப்புள்ளி என்று நிச்சயமாகச் சொல்லலாம், அதில்தான் இந்த விஷயத்தை நான் வெளிப்படையாக விவாதிக்கிறேன்- நாம் காண்பது போலிருப்பதுவா இந்த உலகம், அல்லது இணைபுள்ளிகள் கொண்ட பல்வேறு யதார்த்தங்கள் உண்டா? இரண்டாம் கருத்து என் விருப்பத்துக்குரியது, ஆனால் இதையெல்லாம் எச்சரிக்கையாகப் பேச வேண்டும், நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாகத் தெரியக்கூடாது மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றி தலைக்குள் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பல்வேறு யதார்த்தங்களைப் பற்றிய உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. ஓய்வற்ற, அச்சுறுத்தும் இந்தச் சிந்தனை ஃப்ளுட் நாவலுள் புகுந்தது, பியாண்ட் ப்ளாக் நாவல் முழுமையாகவே இதில் தோய்ந்திருக்கிறது.
அமானுடத்தின் மெல்லிய கூர் என் புத்தகங்கள் அனைத்திலும் உண்டு, மறைவில் உள்ளது என்ன என்பது பற்றிய தொடர்முனைப்பு, பூட்டப்பட்ட அறையில் என்ன இருக்கிறது என்ற கேள்வி. பூட்டப்பட்ட அறை அகத்தின் பகுதியாக இருக்கக்கூடும்; நம் கற்பனையில் நாம் உள்நுழைய அஞ்சும் பகுதியாகவும் இருக்கக்கூடும்.