கவிதை வாசிப்பு மனநிலை

நந்தா குமாரன்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதிக்கு, சுகப்பிரசவ வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு வாழைத்தார் படைக்க, 2009இல் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்பொழுது இந்தக் கவிதையின் தலைப்பும் சில வரிகளும் (மழைஉளி செதுக்கிய மேகவிக்ரஹ பிரதிஷ்டை) தோன்றின. பின் பெங்களூர் திரும்பியதும் கவிதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். இந்தக் கவிதையின் அடிநாதம் பிறப்பு / படைப்பு / ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போவது, என்பதெல்லாம் சொல்லாமலே புரியும் என நினைக்கிறேன்.

nundhaa2

கேள்வி – “கவிதை வாசிக்கப் பழகும் புதுவாசகன் மேற்கொள்ள வேண்டிய மனநிலை எத்தகையதாக இருப்பது நல்லது?
உங்கள் கவிதையை அணுகுவது / புரிந்து கொள்வது எப்படி என நாசூக்காகக் கேட்கிறீர்கள். இது குறித்துப் பேசும் முன் …

-[மைனஸ் ஒன்]1: விடுபட்ட முன்னுரை

கொந்தளிப்பிற்குச் சற்று முன் அணைக்கப்படும் எரிமலைக் குழம்பைத் தேநீராகப் பருகும் உதாசீனத்தையும், எல்லோரும் உறங்கிய பிறகு கிடைக்கும் தனிமையான அமைதியின் நிம்மதியையும், சதா கொண்டாட்டத்தின் மீதே மிதக்க விரும்பும் உயிரின் ஏக்கத்தையும், வெளிப்படுத்தும் இக்கவிதைகளின் வாசகர் படைத்தவரல்லாது வேறொருவர் என்றாகும் போது அந்தப் புதிய வாசகருக்கு இந்த மொழி-நடை சிக்கலாகவும் அதனாலேயே சவாலாகவும் அமைந்துவிடுகிறது. வாசகர் வேண்டிய அர்தத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கும் இக்கவிதைகள் நுண்புல நிலையில் இயங்குகின்றன. பலவகைப்பட்ட கவிதைகளையும் பரீட்சார்த்த ரீதியில் அணுகிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் பங்கு கொள்வதும் வெறுமனே வேடிக்கை பார்ப்பதும் அவரவர் விருப்பம். இவற்றின் மர்மங்களைத் திறக்கும் சாவிகளை வாசகரே தயாரித்துக் கொள்ளலாம். புனைவின் சுதந்திர வெளியை முழுவதும் அளந்து காட்ட முயலும் இக்கவிதைகள் படிமங்களாலும் கற்பனைகளாலும் ஒரு விநோத உலகின் இருப்பை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த வாசகரின் புத்தி பரிமாணத்தைச் சார்ந்து கிடக்கின்றன. ஒரு சித்திரமோ ஒளிப்படமோ முற்றிலும் வெளிப்படுத்தாமல் விடும் அதே ரகசிய அனுபவங்களை அமானுஷ்யமாகவோ அரூபமாகவோ இக்கவிதைகள் தருகின்றன; கனவில் நகரும் பிம்பங்களையும் பிரதியெடுத்துவிடுகின்றன.

கவிதைகளே பரவாயில்லை … சும்மா பயம் காட்டாதே என்கிறீர்களா … எனக்கே சற்று கூடுதலாகத் தான் தெரிந்தது, அதனால் தான் முன்னுரை வேண்டாம் என விட்டேன். இருண்மையான கவிதைகளை வாசிக்க எனக்குத் தெரிந்த ஒரு சூத்திரம் – புரிந்து கொள்வது என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு அணுகாமல் அனுபவித்தல் என்ற திறந்த மனதோடு அணுக வேண்டும். சுயபரிசோதனை மற்றும் நினைவுகூறல் என்ற இரு முறைகளில் கவிதைகள் எழுதப்படலாம். நினைவுகூறல் வகைக் கவிதைகளில் ஒரு வாசகர் தன்னைத் தேடிக் கண்டடைவது எளிது … ஏனெனில் அவை வாசகரின் வாழ்வு மற்றும் அனுபவங்களை ஒரு ஏக்கமான நினைவாக மீட்டுத் தரும். ஆனால் சுயபரிசோதனை வகைக் கவிதைகள் கவிஞரின் அல்லது கவிதையின் பாடுபொருளின் உட்புற அகக் காட்சிகளாக விரிபவை. அவ்வகைக் கவிதைகள் முதல் முறை வாசகரை ஒரே வாசிப்பில் உடனடியாகத் தூண்டிவிடத் தவறலாம். ஆனால் தேர்ந்த வாசகர் இது தெரிந்து தான் இதற்குத் துணிந்து தான் உள்ளே வருவார். நேரடித் தன்மை கொண்ட கவிதைகளின் அழைப்பு விடுத்தல் பாணி, அரூபக் கவிதைகளில் குறைவு தான். கதவு சாத்தித் தான் இருக்கும், திறந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும். வாசல் கதவைத் திறந்த வைத்து வாங்க வாங்க என்று எல்லாக் கவிதைகளும் சொல்லாது தான். ஆனால் நட்புணர்வோடு உங்களை அணுகும் பல கவிதைகளை இந்த மைனஸ் ஒன் தொகுப்பிலேயே காண முடியும். முற்றும் விளங்க வேண்டும் என முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முயல்வது கட்டுடைத்துப் பார்ப்பது தேவையில்லை. புரிதலை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தெரிவு ஒரு வகை புத்திசாலித்தனமே. கவிஞர் சொல்வதைத் தான் வாசகர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. தவறாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னை வந்து கேட்டால் அது அப்படி இல்லை அல்லது அப்படியும் இருக்கலாம் என்று நான் மையமாக மறுத்துவிடவும் கூடும்.

என் பரிந்துரையாக தமிழ் நவீன கவிதைகள், கவிஞர்களின் வகைமைகள், வாசிப்பு முறைகள் குறித்து விவாதிக்கும் / விவரிக்கும் பின்வரும் உரைகளை வாசித்துப் பார்க்கலாம்:

1) உலகெல்லாம் சூரியன் – கலாப்ரியா – கவிதைத் தொகுதிக்கு சுஜாதா எழுதிய முன்னுரை
2) தோற்றப் பிழை – யுவன் சந்திரசேகர் (எம்.யுவன்) – கவிதைத் தொகுதிக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய கவிதை புரியும் கணம் முன்னுரை –http://jyovramsundar.blogspot.in/2010/02/blog-post_22.html
3) அதீதனின் இதிகாசம் – பிரேம் ரமேஷ் – புத்தகத் தொகுதிக்கு யவனிகா ஶ்ரீராம் எழுதிய முன்னுரை
4) ஜென்மயில் – பிரம்மராஜன் – கவிதைத் தொகுதிக்கு ஆனந்த் எழுதிய முன்னுரை
5) கவிதைக்காக – ஞானக்கூத்தன்
6) கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் – நாகார்ஜீனன்
7) வார்த்தையின் ரஸவாதம் – பிரம்மராஜன்
8) பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=27301&url=azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post_23.html

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.