(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )
இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே – இப்படி முடிந்திருந்தது.
(நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.
உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை, மாறாய் சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாகவே இருந்தது, வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.)
இனி-
ooOoo
இதை வெபர் பொருட்படுத்தியிருக்க மாட்டார். அவருக்கு பண்பாடு குறித்த அவநம்பிக்கை இருந்தது. நவீனத்துவம் குறித்து சமநிலை தவறாத மதிப்பீட்டை அளிக்கவே அவர் முயற்சித்தார். மாயமிழப்பு குறித்து பேசும்போது சமயம் சார்ந்து உலகைப் புரிந்து கொள்ளுதல் நீங்கி சமய உணர்வற்ற பார்வை உருவானதை எந்த அளவுக்கு அவர் விவரணை செய்தாரோ, அதே அளவுக்கு உலகின் குதூகலம் குறைவது குறித்த அக்கறையையும் அவர் வெளிப்படுத்தினார். வெபரைப் பொருத்தவரை, பாசிடிவிஸ்ட்டுகளும் யந்திரகதியில் செயல்படுபவர்களும் ஆதரித்த குறுகிய, ‘பயன்படு தர்க்கம்’ நவீனத்துவத்தின் இயல்பாக இருந்தது.
அறத்தையும் அர்த்தத்தையும் காட்டிலும் எண்ணிக்கையைக் கொடு தீர்மானிக்கப்படக்கூடிய தன்மையையும் செயல்திறனையும் நவீனத்துவம் மதிக்கிறது. நவீன உலகம் யந்திரத்தன்மை கொண்டது, முன்னனுமானம் செய்யப்படக்கூடியது, இங்கு மர்மமோ அதிசயமோ கிடையாது.. மாயமின்மை என்றால், “மர்மம் மிகுந்த, கணிக்கப்பட முடியாத சக்திகள் ஆட்டத்தில் இல்லை என்று பொருளாகும்; மேலும், ,கணிப்ப்பாற்றலைக் கொண்டு ஒருவன் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்றும் கோட்பாட்டு அடிப்படையில் பொருளாகும், என்று எழுதினார் வெபர்.
நவீனத்துக்கு முற்பட்ட உலகின் இயல்புகளாக இருந்ததாய்ச் சொல்லப்படும நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களின் ஒருமையை மாயமற்ற நவீனத்துவம் இழந்திருக்கிறது என்றும் வெபர் குறிப்பிடுகிறார். கலை மற்றும் சமயம் ஆகியவற்றின் அகவயப்பட்ட எல்லைகளுக்குள் நவீன மனிதர்கள் மாய உணர்வைத் தேடுகின்றனர். அவரது பார்வையில், மாயத்தின் இழப்பை நவீனத்துவத்தின் எல்லைகளுக்குள் ஈடு செய்வதாய் பகுத்தறிவற்ற வசீகரம் செயல்படுகிறது, அது காலத்தால் முற்பட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது என்றபோதும் இதுதான் நிலை. பெருந்திரள் பண்பாட்டை இவரும் இவரது சமகாலத்தவர்களும், அதிலும் குறிப்பாக ஹோர்க்ஹைமரும் அடர்னோவும், நிராகரிக்க இது ஒரு காரணமாக இருந்தது; பெருந்திரள் பண்பாடு, பிரமைத்தன்மை கொண்ட மயக்கங்களை வளர்ப்பதாய் இவர்கள் எண்ணினர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் முதல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நிலவிய வரலாற்றுக் கதையாடலின் பிரதான உறுப்புகளை வெபரின் விவரணை சுருக்கிச் சொல்கிறது. சமய நம்பிக்கையை மையமாய் கொண்ட உலகம், சமயசார்பற்ற ஒன்றாக மாறிய கதை என்று மாயமிழத்தலின் வரலாற்று இயக்கத்தை எளிமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது. கருவிப் பயன்பாட்டை முதன்மைப்படுத்தும் பகுத்தறிவு மேலாதிக்கத்தின் விளைவாகவும், அனைத்தையும் தன் உள்ளடக்கமாய் கொண்ட அர்த்தங்களையும் நோக்கங்களையும் இழந்ததன் விளைவாகவும், வசியப்படுதலை ஆனந்த நிலை என்பதிலிருந்து மயக்க நிலை என்று திருத்தி வரையறுத்ததன் விளைவாகவும், மானுட அனுபவத்தில் ஏற்பட்ட வறுமையை விவரிக்கும் வரலாறாகவும் இதைப் பேச இயலும்.
மேலைச் சிந்தனையை இது கைப்பற்றி வைத்திருந்தது ஏன் என்ற கேள்விக்கு பன்முகம் கொண்ட இந்தக் கதையாடல், நவீன புகார்கள் பலவற்றுக்கு பதிலளிக்கத்தக்க இதன் இயல்பு ஆகியவற்றைக் காரணம் கூற இயலும். இந்தக் கதையாடலுக்கு ஒரு நிகழ்த்துதன்மையும் இருந்தது; தான் முன்வைத்த சோக விவரணைகளைக் கொண்டு மனிதன் இவ்வுலகைத் தரிசிக்கச் செய்யும் ஆற்றல் இந்தக் கதையாடலுக்கு இருந்தது.
எனினும் வெபரின் சமகாலத்தவர்கள் இந்தக் கதையாடலின் மிகைப்படுத்தப்பட்ட முடிவுகளைக் கேள்விக்குட்படுத்தினர். அதிலும் குறிப்பாக, கற்பனையும், பொதுவாக அனைத்து வசிய நிலைகளும் நவீன தர்க்கத்தின் பகுத்தறிவற்ற முரண்நிலை என்ற கருத்து கேள்விக்குட்படுத்தப்பட்டது. புத்தொளிக்காலத்திலோ ரொமாண்டிக்குகளின் துவக்க காலத்திலோ தர்க்கத்துக்கும் கற்பனைக்கும் இடையில் இப்படிப்பட்ட முரண்நிலை இருப்பதாகச் சொல்லப்பட்டது கிடையாது.
பாசிட்டிவிஸ்ட்டுகள், அறிவியல் பார்வை கொண்டவர்கள், மற்றும் சில அழகியல் சார்பு கொண்டவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தகைய பார்வை முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இதன் விளைவாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், உளப்பகுப்பாய்வாளர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டியதாகியது- தர்க்கமும் கற்பனையும் முரண்பட்டவையல்ல, ஒன்றுக்கு ஒன்று துணையானவை என்று வாதிட்டனர் இவர்கள். “மாயத்தன்மையின் தத்துவம்” என்ற தலைப்பில் அவரது மறைவுக்குப்பின் தொகுக்கப்பட்ட உரைகளில் ஆர்.ஜி. கோலிங்வுட் இவ்வாறு வலியுறுத்துகிறார், “எந்தச் சமூகத்தில் கலைவாழ்வு ஆரோக்கியமாகவும் உத்வேகம் கொண்டதாகவும் இருக்கிறதோ, அங்குதான் அறிவியல் வாழ்வு தோன்ற இயலும்”
கற்பனையையும் பகுத்தறிவையும் குறித்த இத்தகைய பரந்த பார்வை, பெருந்திரள் பண்பாடு, பிரமைகள் நிறைந்த மயக்கநிலைகளின் சாக்கடையல்ல என்று உணர்த்துவதாக இருக்கிறது. தர்க்கத்தையும் கற்பனையையும் சமநிலைப்படுத்தி கருவிப்பயன்பாட்டை முதன்மைப்படுத்தும் பகுத்தறிவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய நவீன வசீகரங்களை அளிக்கவல்ல ஆதாரவளமாக இது அமையலாம்.
இந்த சமநிலையாக்கத்தை ஷெர்லாக் ஹோம்ஸ் சிறப்பாக வெளிப்படுத்துகிறார், “கற்பனையாற்றலின் அறிவியல் பயன்பாடு,” என்று தன் அணுகுமுறையை அழைக்கிறார் அவர். ஷெர்லாக் ஹோம்ஸ் குறியீட்டுத்தன்மை கொண்ட ஆளுமையாக மாறினார், இன்றும் அவர் அவ்வாறே உள்ளார் எனில் அதன் காரணம், நவீனத்துவத்தை அதற்கேயுரிய பகுத்தறிவும் மதச்சார்பின்மையும் கெடாமல் மீண்டும் வசியப்படுத்த முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டினார்- வாட்சனிடம் ஹோம்ஸ்தான் இதைச் சொல்கிறார், “இந்த உலகம் நமக்குப் போதுமானது. ஆவிகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை”.
துப்பறியும் கதைகள் என்ற புதிய இலக்கிய வகைமையைப் போலவே, அறிவியல் புனைவுகள் என்றும் புதியதாய் வெளிவரத் துவங்கின, அறிவியல் சார்புள்ள பாசிடிவிஸ்டுகள் செயற்கையாய்க் கத்தரித்துப் பிரித்த தர்க்கத்தையும் கற்பனையையும் மீண்டும் இணைப்பதை நோக்கமாய் இவ்விரு புனைவிலக்கிய வகைமைகளும் கொண்டிருந்தன. 1928ஆம் ஆண்டு ஒரு எழுத்தாளர் தன் அறிவியல் புனைவு, “அறிவியலை ஆதாரமாய் கொண்டு, அறிவியல் அளிக்கும் அத்தனை துப்புக்களையும் பரிசீலனை செய்து, அறிவியலுக்கு அந்நியமான வேறொரு விஷயத்தையும்- கற்பனை- இது சேர்த்துக் கொள்கிறது” என்று நியாயப்படுத்தினார்.
இதேபோல், ஜே.ஆர்.ஆர். டோல்கீன் மிகுபுனைவுகளுக்கு ஆதரவாக, மிகுபுனைவு என்பது “பகுத்தறிவற்ற செயல்பாடல்ல, அதற்கு ஒரு தர்க்கம் உண்டு; அறிவு எத்தனை கூர்மையாகவும் தெளிவாகவும் உள்ளதோ, அந்த அளவுக்குச் சிறப்பான மிகுபுனைவுகளை அது உருவாக்கிக் கொள்ளும்,” என்று எழுதினார் அவர்.
மேற்கண்ட உதாரணங்கள் ஒரு விஷயத்தைச் சுட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாயத்தன்மை பெருந்திரள் பண்பாட்டின் மைய இடத்தைக் கைப்பற்றி விட்டது. நவீனத்துவத்தின் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பற்ற போக்குகளுக்கு இணக்கமான தன்மை கொண்டதாய் பெருந்திரள் பண்பாட்டின் மாயத்தன்மை இருந்தது. ஆனால் மாயமிழத்தலின் கதையாடலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் கனமான கேள்விகளுக்கு தீனமாய் எதிர்வினையாற்றக்கூடிய இயல்பு கொண்டதாய் மட்டுமே நவீன மாயத்தன்மை இருந்தது. ஆனால் மாயமிழத்தலின் நவீன கதையாடலோ இதனினும் பெரிய எதிர்வினைக்குக் காரணமாயிற்று. பெருந்திரள் பண்பாட்டின் அறிவார்ந்த மாயங்கள் அதன் முகங்களில் ஒன்றுதான். புனைவுபடுத்தும் பார்வையே வலிமையான எதிர்வினையாய் இருந்தது.
1911ஆம் ஆண்டு, ஹான்ஸ் வைஹிங்கர் என்ற தத்துவவியலாளர், “The Philosophy of ‘As If’” என்ற நூலில், புனைபடுதல் என்ற சொல்லை உருவாக்கினார். நவீனத்துவம் தன்னையே பிரதிபலித்துக் கொள்வது என்றார் அவர். இந்த இயல்பின் காரணமாக, மரபார்ந்த நம்பிக்கைகளின் இடத்தைத் தற்காலிகத்தன்மை கொண்ட புனைவுகள் கைப்பற்றிக் கொள்கின்றன என்றார் அவர். இவை நடைமுறை வழிகாட்டுதல்களாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்மிக வசியங்கள் அளிக்கவல்லதாகவும் இருக்கின்றன. மயக்கமற்ற மையத்தின் ஒரு வகைப்பாடுதான் வைஹிங்கரின் புனைவுபடுதல். இங்கு, “போல” என்ற பார்வையைப் பயன்படுத்துவதன் வழியாக, நம்பிக்கையும் அவநம்பிக்கையும் எட்டி நிறுத்தப்படுகின்றன.
தன் சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வைஹிங்கர், இமானுவேல் காண்ட்டையும், அதைக் காட்டிலும் ,முக்கியமாக நீட்ஷேவையும் பயன்படுத்திக்கொண்டார். மயக்கமற்ற மாயத்தை முன்வைத்தவர்களின் முன்னோடி நீட்ஷே. தெரிந்தே நம்பப்படும் பொய்கள் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை என்று கருதினார் நீட்ஷே. “மாபெரும் பொய் அனுமானங்களே, மிகத் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தப் புனைவை நிராகரித்தல்….வாழ்வையே நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்”, என்றார் அவர். நவீனத்டுவத்துக்கு முற்பட்ட உலகின் தனித்தன்மைகளாக பொது நம்பிக்கைகள் இருந்தன என்றும், அவற்றின் இழப்பு வருந்தத்தக்கது என்றும் வெபர் நம்பினார்.
ஆனால் நீட்ஷே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன உலகம் பல்பொருள் கொண்டது, அதன் பார்வைகள் தற்காலிகத்தன்மை கொண்டவை – இதன் காரணமாகவே நவீனத்துவம் மனிதனுக்கு விடுதலை அளிப்பது, மாயத்தின் மெய்யான ஆதாரமாகவும் இருப்பது. “மீண்டும் இவ்வுலகு நமக்கு “எல்லையற்றது,” என்றாகி விட்டது. இவ்வுலகு குறித்து நாம் அளிக்கக்கூடிய விளக்கங்கள் எல்லையற்றவை என்ற சாத்தியத்தை நம்மால் நிராகரிக்க முடியாது என்று உள்ளவரை இதுவே உண்மை,” என்றார் அவர்.
எது அனைத்தையும் கடந்து உள்ளிருக்கிறதோ, அதனுள் எல்லையின்மையை மீட்டெடுத்து புனைவுபடுதலைக் கொண்டு நிறுவியதை மதச்சார்பற்ற அதியப்பாற்பட்ட நிலை என்று சொல்லலாம்.இதையே தன் பிற்கால தத்துவ உரைகளில் விட்கென்ஷ்டீனும் ஆதரித்தார். 1948ல் அவர் சொன்னபடி, “வாழ்வின் எண்ணற்ற மாறுதன்மைகள் நம் வாழ்வுக்கு அவசியமானவை”.
Fin de siècle இயக்கத்தின்போதும் அதற்குப் பிற்பாடும் புனைவுபடுதல் எண்ணற்ற வகைகளில் வெளிப்பாடு கண்டது. எஸ்தடிக்கிசத்தை முதலில் சொல்ல வேண்டும், இனிமேற்கொண்டு வாழ்வை போலி செய்வது மட்டுமல்ல கலை என்று இந்த இயக்கத்தினர் பிரகடனம் செய்தனர்- வாழ்வே கலையின் போலியாக இருக்கிறது. அதன்பின், சமய நூல்கள், மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் இலக்கியப் படைப்புகளாக வரையறை செய்யப்பட்டன. இதன்பின் பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கிற்று- ஆனால், மாத்யூ ஆர்னால்டு, 1873ஆம் ஆண்டு, தன் Literature and Dogma என்ற நூலில் இதற்கு மிகச் சிறப்பான வடிவம் அளித்தார்.
சமயங்களைப் புனைவாக வடிவமைப்பது எந்த அளவுக்கு வெற்றி பெற்றதென்றால், இருபதாம் நூற்றாண்டு பிறக்கும்போது, தெய்வநம்பிக்கை கொண்ட கிருத்துவர்களான டோல்கீன், சி.எஸ். லூயிஸ் போன்றவர்கள், அனைத்து புனைவும் சமயசார்பு கொண்டவையே என்று மறுவரையறை செய்ய வேண்டியதாயிற்று. எழுத்தாளர்கள், ஆண்டவனைப் பின்பற்றும் உப-படைப்பாளிகள். புனைவுபடுதலின் வேறு சில உதாரணங்களையும் அளிக்க இயலும் – புரட்சிக்குப் பயன்படக்கூடிய புதிய தொன்மங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும் என்று ஜார்ஜஸ் சரேல் அறைகூடல் விடுத்தார்; “நம்பிக்கை நாட்டம்” என்பதன் பிராக்மாடிக் விளைவுகள் என்ன என்று வில்லியம் ஜேம்ஸ் ஆய்வுகள் செய்தார். இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழைந்தால், இந்தப் பட்டியல் விரிந்து கொண்டே சென்று, பின்நவீனத்துவ சிந்தனைக்கு வந்து நிற்கிறது.
(தொடரும்)
நன்றி – The Immanent Frame
One comment